மகள் பொறி



-தி.பரமேஸ்வரி

வெற்றுத்தாளைத் தரையில் விரித்து
ஒற்றைக்கால் மடக்கி
நாக்குநுனி வெளித்தள்ளி
காலம் கடந்தவள்
வீடு வரைகிறாள்
நான் அதற்குள் அமர்ந்தேன்

கீற்றுச் சிரிப்புடன் குளமொன்று
வரைந்து சுற்றிலும் சிறுசெடிகளை
அமர்த்தினாள்
நான் நீந்தத் தொடங்கினேன்

சரசரவென்று மலையொன்றை
எழுதிப் பாறைகளைச் செருகி
வண்ணம் தீட்டினாள்
ஈரம் காயாதபோதும்
மேலேறினேன்

அவளோரக் கண்களின்
குறுகுறுப்பை
குறுநகையின் மர்மத்தை அறியாது
பாடலொன்றை முணுமுணுத்தபடி
உச்சியை அடைந்தேன்
தயங்கிக் கடக்கும் மேகத்தை நான்
ரசித்துக் கொண்டிருக்கையில்

நீ
அழிப்பானை எடுத்துக் கீழிருந்து
அழிக்கத் தொடங்கினாய்

என் செல்ல முயல்குட்டி
இப்போது உச்சிமட்டும்
மிச்சமிருக்கும்
மலையின் எந்தப் பக்கத்திலிருந்து
நான் குதிக்கட்டும்?