இன்னும் 3 பூமிகள்! உலகையே புரட்டிப் போடும் நாசாவின் கண்டுபிடிப்பு
-ச.அன்பரசு
பூமியிலுள்ள ஏழு அதிசயங்களை விட நாசா அமர்க்களமாகக் கண்டுபிடித்துள்ள இந்த விண்வெளி அதிசயம்தான் இன்றைய சயின்ஸ் உலகின் ஹாட் மேட்டர். பூமியைப்போலவே மூன்று கிரகங்களை விண்வெளியில் நாசா கண்டறிந்துள்ளது. சூழல் மாசுபாடு, வறட்சி, ஹைட்ரோ கார்பன், அரிசி, உளுத்தம் பருப்பு தட்டுப்பாடு என அனைத்துக்கும் பிளட் பிரஷர் எகிற சாலையில் நின்று போராடி வரும் நமக்கே இதுபோன்ற செய்தி நன்னாரி சர்பத்தாக இனித்தால், கார்பன் டை ஆக்சைடை உலகிற்கே எக்ஸ்போர்ட் செய்துவிட்டு எஸ்கேப் ஆக இடம் பார்க்கும் அமெரிக்கர்களுக்கு மகிழ்ச்சி பொங்காதா?
 நாசா தன் டெலஸ்கோப் மூலம் கண்டுபிடித்துள்ள TRAPPIST-1 என்ற நட்சத்திரத்தைச் சுற்றிவரும் 7 கோள்களைக் கொண்டுள்ள குடும்பத்தில் 1E - 1G வரையுள்ள 3 கோள்கள் மட்டும் பூமியைப் போலவே காட்சி தருகிறதாம். இதற்கு பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் (235 ட்ரில்லியன் மைல்கள்!) தொலைவிலுள்ள டிராப்பிஸ்ட் நட்சத்திரம் நம் சூரியனைப் போல் அதிக வெப்பமின்றி இருப்பதும் ஒரு காரணம்.
கோள்களின் வட்டப்பாதை மிக நெருக்கமாக இல்லாததால் 3 கோள்களில் நீர் இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் டேட்டா வாக்கு. ‘‘இப்போது கோள்களின் நிலப்பரப்பிலுள்ள வேதியியல் தன்மைகளை ஆராய்ந்து வருகிறோம்...’’ என ஆர்வம் மிளிர சொல்கிறார் வானியலாளரான நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஐக்னாஸ் ஸ்நெல்லன்.
 நிலவெனும் கனவு! விண்வெளியில் புதிய பூமியைத் தேடும் மிஷனை அமெரிக்கா 1961ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. 1970க்குள் சோவியத் ரஷ்யாவை ஓவர்டேக் செய்து நிலவை நாம் தொட்டே ஆகவேண்டும் என இந்த திட்டத்தின் ஆக்ஸிலேட்டரை முடுக்கியவர் அன்று அமெரிக்க அதிபராக இருந்த ஜான் கென்னடி. ஆனாலும் சோவியத் ரஷ்யா, ‘லூனா’ விண்கலம் மூலம் முந்திக்கொண்டது.
1968ம் ஆண்டு டிசம்பரில் பில் ஆண்டர்ஸன் தலைமையிலான மூன்று ஆராய்ச்சியாளர்கள் நிலவின் வட்டப்பாதையில் லேண்டாகி ‘அப்பல்லோ 8’லிருந்து எடுத்த பூமியின் புகைப்படம் இன்றும் பார்க்கப்படும் அதிசயம். இந்தப் பயணம்தான் மனிதர்களை முதன்முதலில் மற்றொரு உலகிற்கு அழைத்துச் சென்ற வரலாற்றுச் சாதனைப் பயணமும் கூட.
இப்போதைய ட்ராப்பிஸ்ட் கோள்களைக் கண்டறியும் டெலஸ்கோப்புகள் சிலி, ஹவாய், தென் ஆப்பிரிக்கா, மொராக்கோ, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. பெல்ஜியத்தின் லீஜ் பல்கலையின் வானியலாளரான மைக்கேல் கில்லன் இக்குழுவுக்கு பொறுப்பேற்றிருக்கிறார்.
கோள்கள் எத்தனை? 1995ம் ஆண்டு வரையிலும் சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களின் எண்ணிக்கை 9. பின் சிறிய ப்ளூடோவைக் கழித்தபோது எண்ணிக்கை 8 ஆனது. ஆனால், சூரிய மண்டலம் தாண்டியுள்ள பல்வேறு கோள்களை ஸ்பேஸ் டெலஸ்கோப்புகள் காட்டிக்கொடுக்க, கோள்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே வந்தது. அந்த வகையில் 50 ஒளி ஆண்டுகள் தொலைவில் வியாழனின் சைசில் ‘51 பேகாஸி பி’ என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு நாசாவின் கெப்ளர் ஸ்பேஸ் டெலஸ்கோப் நிறுவப்பட்டபின் கண்டறியப்பட்ட கோள்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தொட்டது!
கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? பிரகாசமான நட்சத்திரத்தை வட்டப்பாதையில் கோள்கள் கடக்கும். இதன் காரணமாக நட்சத்திரத்தில் ஒளி மங்கி குறையும். இதை ‘ட்ரான்சிட்’ என்பார்கள். மங்கலாகும் டிகிரி அளவின் மூலம் கோளின் அளவை கணிக்கலாம். நட்சத்திரத்திற்கும் அதனை வட்டப்பாதையில் சுற்றிவரும் கோளுக்கும் இடையில் செயல்படும் ஈர்ப்புவிசை ஏற்படுத்தும் அதிர்வுகளின் (wobble) மூலம் கோள்களைக் கண்டறியலாம்.
பால்வெளியிலுள்ள 300 பில்லியன்களுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை குறைந்தபட்சம் ஒரு கோளேனும் சுற்றிவரும் என்பது வானியலாளர்களின் நம்பிக்கை. இதுவரை பால்வெளியில் கண்டறியப்பட்ட கோள்கள் எதுவும் பூமியின் விட்டத்தை விட 1.6 மடங்கு கூட பெரிதில்லை. புதிய கோள்களில் நட்சத்திரத்திலிருந்து ஒளி பெற்று, வேதியியல் வினைகள் நடைபெற ஏதுவாக ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன் இருந்தால் கூட போதும்தான்.
எனவேதான் இப்போதைய கண்டுபிடிப்பு பற்றி குறிப்பிடும்போது, ‘‘செவ்வாய், வெள்ளி போன்ற கோள்களை விட இக்கோள் பெருமளவு மாறுபட்டது. இது நாம் வாழும் பூமி போன்றது!’’ என சந்தோஷத்தில் குதிக்கிறார் வானியல் இயற்பியலாளர் நடாலியா படால்ஹா. ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் (1990) மூலம் ட்ராப்பிஸ்ட்-1 கோள் மண்டலத்தில் உள்ள கோள்கள் ஹைட்ரஜன் வாயுவிலான மினி நெப்ட்யூன்களாக மாறிவிடக்கூடாது என குலசாமியை வேண்டியபடி விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதற்கடுத்து ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளின் கூட்டுறவில் 8.7 பில்லியன் டாலர்கள் செலவில் தயாரான ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பை (விண்வெளியிலுள்ள நிறமாலை ஆய்வு) 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் நாசா விண்ணில் செலுத்தப் போகிறது! கைகளை பரபரவென தேய்த்தபடி உலகமே இது உறுதியாவதற்காக காத்திருக்கிறது.
அறிந்தும் அறியாமலும்!
* அடர்த்தியின் அடிப்படையில் ட்ராப்பிஸ்ட் நட்சத்திர மண்டல கோள்கள் அனைத்தும் பாறைக்கோளங்கள். * ட்ராப்பிஸ்ட் 1 நட்சத்திரத்தின் தன்மை சூரியனிலிருந்து மாறுபட்டது. எனவே சுற்றிவரும் கோள்களில் நீர் இருக்கலாம். * ட்ராப்பிஸ்ட் 1 நட்சத்திர மண்டலத்திலுள்ள மொத்த கோள்களின் வட்டப்பாதையை 1 - 20 நாட்களில் சுற்றி வந்துவிடலாம். இக்கோள்களை நமது சூரியமண்டலத்திலுள்ள புதனின் வட்டப்பாதையில் உள்ளடக்க முடியும். * குறிப்பிட்ட அச்சில் நின்று இந்த நட்சத்திரத்தை வட்டப்பாதையில் சுற்றிவரும்போது நம் கண்ணுக்குத் தெரிவது கோளின் ஒரு பகுதி மட்டுமே. மறுபகுதியில் இருளாக அல்லது பகலாக இருக்கலாம். * 1990ம் ஆண்டில் சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்த கோள்கள் - 3,600. * இப்போதைய வெளிக்கோள்களின் அளவு - 100 பில்லியனுக்கும் அதிகம். * பூமியின் அளவுள்ள கோள்கள் - 18.
|