தம்பிங்களா... என் மகனை உங்ககிட்ட ஒப்படைக்கறேன்...



-மை.பாரதிராஜா

நெகிழும் அப்பா, வணங்கும் மகன்! தம்பிராமையா வீட்டிலிருந்து புது ஹீரோ ரெடி. வாரிசு நடிகர்கள் வரிசையில் லேட்டஸ்ட் வரவு அவரது மகன் உமாபதி. கே.கே.நகரில் உள்ள தம்பிராமையாவின் அலுவலகம்தான் உமாபதிக்கு விசிட்டிங் கார்டு. ‘‘கிராமத்துல எங்க அப்பாவைச் சுத்தி எப்பவும் ஒரு கூட்டம் இருக்கும். அவரைச் சுத்தி இருக்கறவங்களை வசீகரிக்கற மாதிரி பேசுவார். அவரை மாதிரியே நமக்கும் ஒரு கூட்டம் சேரணும்னா நம்மகிட்டயும் எக்ஸ்ட்ராவா ஏதாவது தகுதி வேணும்னு நிறைய கவிதைகள் எழுதினேன்.

இப்ப என் பையன்கிட்டேயும் ஒரு சினிமா கனவு இருக்கு. ‘அப்பா’ படத்துல சமுத்திரக்கனி கேரக்டர் மாதிரிதான் ரியல்ல என் கேரக்டர். பையனோட ஆசைக்கு குறுக்கே நிற்கிற கண்டிப்பான அப்பாவா எப்பவும் நான் இருந்ததில்லை...’’ முகம் நிறைய புன்னகைத்த தம்பிராமையா, ‘‘மை சன்... ப்ளீஸ் கம்...’’ என அடுத்த ரூமில் இருந்த உமாபதியை இன்டர்காமில் அழைத்தார்.

‘‘இவர் கதை நாயகனாக அறிமுகமாகிற படம், ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. தமிழ் ரசிக மகாஜனங்ககிட்ட என் பையனை ஒப்படைக்கிறேன்... எனக்கு ஆதரவும் அன்பும் காட்டற மாதிரி இனி இவரையும் நீங்க அரவணைக்கணும்...’’ கையெடுத்துக்கும்பிட்டபடி மகனின் தோளில் கைபோடுகிறார். கூச்சத்துடன் உமாபதி பேசத் தொடங்கினார். ‘‘அப்ப சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் வீட்டுல வாடகைக்கு இருந்தோம். இயக்குநரா ஜெயிக்க எங்கப்பா போராடிக்கிட்டிருந்த காலகட்டம் அது.

அவரோட சினிமா நண்பர்கள் நிறைய பேர் அவரை பார்க்க வருவாங்க. யாராவது ஸ்டில் கேமரா கொண்டு வந்தா ஹேப்பியாகிடுவேன். உடனே மாடிக்கு அழைச்சிட்டு போய் போட்டோஷூட் பண்ணுவேன். எங்க சித்தப்பாக்கள் வெளிநாட்டுல வேலை பார்த்திட்டிருந்தாங்க. அவங்க எனக்காகவே விதவிதமான காஸ்ட்யூம்கள் வாங்கி அனுப்புவாங்க. அந்த டிரெஸ்லதான் போட்டோஸ் எடுத்து அப்பாகிட்ட காட்டுவேன்.

இப்படி எனக்கு சினிமா ஆசை இருக்குதுனு ஸ்கூல் படிக்கும் போதே அப்பாகிட்ட உணர்த்திட்டேன்...’’ தன்னைப் போலவே கைகளைக் கட்டிக்கொண்டு பவ்யமாகப் பேசும் மகனை பாசத்துடன் பார்த்தபடி தம்பிராமையா சிரித்தார். ‘‘என் மகள் விவேகாகிட்டயும் இவர்கிட்டயும் சின்ன வயசுல நான் சொன்ன விஷயம் இதுதான். ‘நான் பத்துகாசு சம்பாதிச்சாலும் அதுல மீதி இருந்தா உங்களுக்குத்தான் வச்சுட்டு போவேன். ஆனா, அது முக்கியமல்ல.

நீங்க ஏதாவது பெரிய அளவுல சாதிக்கணும். இது fast world. அதனால நீ யார்னு உன்னை நினைக்கறப்ப உனக்கு பெருமை தரக்கூடிய விஷயத்தை பண்ணிக்கோ’னு சொன்னேன். இவர் என்ஜினீயரிங் முடிச்சதும் மேற்கொண்டு எம்பிஏ படிக்க இவரை லண்டன் அனுப்பலாம்னு என் தம்பிங்க ஆசைப்பட்டாங்க...’’ மகனை ஏறிட்டுப் பார்த்து தம்பிராமையா சொல்ல... மேலும் கீழுமாகத் தலையாட்டியபடியே உமாபதி தொடர்ந்தார்.

‘‘ஸ்போர்ட்ஸ், டான்ஸ் / மியூசிக் கிளாஸ்னு எல்லாத்திலும் நானாதான் பிராக்டீஸ் பண்ணினேன். ‘நீ அதை கத்துக்கோ... இதைக் கத்துக்கோ’னு எங்க அப்பா ஒருநாளும் சொன்னதில்லை. பாடல் எழுதவும், இசையமைக்கவும்தான் எங்க அப்பா சினிமாவுக்கு வந்தார். இவ்வளவு பெரிய ட்ராவல் அவரே எதிர்பார்க்காத ஒண்ணு. அப்பா ஒரு ரைட்டர். நேஷனல் அவார்ட் வாங்கின ஆக்டர். எல்லாரையும் சகட்டு மேனிக்கு கலாய்க்கற ரோல் பண்றார்.

அதனால எனக்கு பொறுப்பு அதிகமா இருக்கு. அப்பாவுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்துடக் கூடாதுன்னு கவனமா இருக்கேன். யுகபாரதி அண்ணாதான் என்னோட சினிமா குரு. ‘தம்பி அந்தக் கம்பெனில ஹீரோ தேடுறாங்க. பக்கத்து வீட்டு பையன் லுக் ஹீரோதான் வேணும்னு எதிர்பாக்கறாங்க. நீ முயற்சி பண்ணு. கிடைக்கும்’னு சொன்னார்.

அப்படித்தான் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ கிடைச்சது. அப்பாவும் பிரபு சாலமன் அங்கிளும் சேர்ந்தே கதையைக் கேட்டாங்க. ‘உங்க பையனுக்கு டான்ஸ் நல்லா வருது. இது மியூசிக்கல் சப்ஜெக்ட். கரெக்ட்டா இருக்கும்’னு பிரபுசாலமன் அங்கிள் சொல்லி இந்தக் கதையை ஓகே பண்ணினார்...’’ என்றபடி அப்பாவின் முகத்தைப் பார்க்கிறார். தம்பிராமையாவின் முகம் பிரகாசமாகிறது.

‘‘எல்லா விஷயத்திலும் இவர் கரெக்டா இருக்கார். மனசையும், உடலையும் சுய ஒழுக்கத்தோட வச்சிருக்கிறார். சினிமாவுக்கு சிறப்பான தகுதி அதான். அதனாலதான் ‘போலாம் ரைட்’னு பச்சைக்கொடி காட்டினேன்...’’ பொறுப்பான அப்பாவாக சொன்னவர், ‘‘தம்பி... உங்க படத்தைப் பத்தி இப்ப சொல்லுங்க...’’ என உமாபதியிடம் வாஞ்சையோடு சொல்கிறார்.

அவ்வளவுதான். உற்சாகமாகிறார் உமாபதி. ‘‘ஒரு கிடார் காணாமப் போயிடும். அதைச் சுத்தி நடக்கற சம்பவங்கள்தான் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தோட கான்செப்ட். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மாதிரி இதுவும் காமெடி ஜானர். எழுதி இயக்கியிருக்கிற ஆர்.இன்பசேகர் சார் பிச்சு உதறியிருக்கார். இமான் சாரோட பாடல்கள் ஆல்ரெடி ஹிட். யுகபாரதி அண்ணனும் சேர்ந்து கலக்கியிருக்காங்க.

தெலுங்கில் நாலு படங்களில் நடித்த ரேஷ்மா ரத்தோர், இதுல ஹீரோயின். நடிக்க வர்றப்ப அவங்களுக்கு தமிழ் தெரியாது. ஆனா, இப்ப பேச கத்துக்கிட்டாங்க. கருணாகரன், நரேன், மனோபாலா, பாண்டியராஜன்னு படத்துல நிறைய பேர் அசத்தியிருக்காங்க. ‘குக்கூ’ பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு சிறப்பா வந்திருக்கு.

‘Hard work never fails’னு அப்பா அடிக்கடி சொல்லுவார். 45 வயசுக்கு மேலதான் அப்பா சாதனை பண்ணியிருக்கார். என்னோட சின்ன வயசுல இருந்து அவரோட போராட்டங்களை பார்த்துகிட்டிருக்கேன். ‘தனிஒருவன்’ல அவரோட கதாபாத்திரம் ரொம்ப பிடிக்கும். யுனிக்கான கேரக்டர். ‘கும்கி’ படத்துல அவரோட காமெடி ஆல் டைம் ஃபேவரிட். ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ ரிலீஸுக்கு ரெடியாகிடுச்சு.

அடுத்தும் ஒரு படம் நடிச்சு முடிச்சாச்சு. ‘தேவதாஸ் 2017’. அதோட ஷூட்டிங் முடிஞ்சு, போஸ்ட் புரொடக்‌ஷன் போகுது...’’ என உமாபதி சந்தோஷப்பட... கண்களை மூடி சில நொடிகள் அமைதியாக இருந்த தம்பிராமையா தொடர்ந்தார். ‘‘தம்பியோட ரெண்டு படத்து ஷூட்டிங்குக்கும் நான் போகலை. ஸ்கிரிப்ட் பேப்பர் வாங்கிக் கூட பார்க்கலை.

ஆனா, மூணாவது படத்துல இவரோட சேர்ந்து நடிக்கணும்னு ஒரு தகப்பனா நான் ஆசைப்படறேன். நாங்க சேர்ந்து நடிக்கிறதுக்கு தகுந்தா மாதிரி கதையும் ரெடி பண்ணிட்டேன். இதைவிட பெட்டரான கதை கிடைச்சா அதை செய்வோம். சினிமா ஒரு மேஜிக். ஆனா, வாழ்க்கை தியரி வேற... நடைமுறை வேற.

நான் இருக்கிறப்ப இவர் சில தவறான முடிவுகள் எடுத்துட்டா... உடனே அதை திருத்தி கை தூக்கிவிட்டுடுவேன். நான் இருக்கிறப்ப இவர் தடுமாறினா பரவாயில்லை. ஆனா, நான் இல்லாதப்ப தடுமாறிடக் கூடாது. எப்பவும் வெற்றி நேற்றுக்குத்தான் சொந்தம். தோல்விதான் நாளைக்கு சொந்தம்.

இதான் எதார்த்தம். என்னோட குலதெய்வம், என் அப்பா, அவரோட குருநாதர் மைக்கேல்பிள்ளை... இப்படி எல்லாரோட ஆசீர்வாதமும்தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கு. இதே ஆசீர்வாதம் என் மகனையும் ஓர் இடத்துக்கு உயர்த்தும்னு நம்பறேன். இனி இவரைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு உங்களோடது. உங்க ஆசி எப்பவும் என் மகனுக்குத் தேவை...’’ என்றபடி தழுதழுக்கும் தம்பிராமையாவைப் பாசத்தோடு அணைத்துக் கொள்கிறார் உமாபதி.                            

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Behind the scenes..

* முழுக்க முழுக்க சென்னையில் நடக்கும் கதை. மொத்தம் 60 நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். கேரளா, ஹைதராபாத்தில் பாடல்களைப் படமாக்கி இருக்கிறார்கள்.
* படத்தின் தயாரிப்பாளர் சிவ ரமேஷ்குமாருக்கு இதுதான் முதல் படம். அறிமுக இயக்குநர் ஆர்.இன்பசேகர் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் நேரடியாக டைரக்டராகி இருக்கிறார்.
* இமானின் இசையில் ஸ்ரேயா கோஷல், சங்கர் மகாதேவன், வந்தனா சீனிவாசன், ஹரிச்சரண் என பலரும் பாடியிருக்கிறார்கள்.