இந்திய கடல்சார் படிப்புகளுக்கு வித்திட்டவர்!



தமிழ்நாட்டு  நீதி மான்கள் - 22

கோமல் அன்பரசன்

பி.எஸ்.சிவசாமி அய்யர் அரசாங்கம், ஆள்வோர் மனநிலை எல்லா காலங்களிலும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது. இதற்கான சான்றுகளை வரலாறு பல இடங்களில் திரும்பத் திரும்ப நமக்கு சுட்டிக்காட்டுகிறது. ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது நடந்த அப்படியொரு சம்பவம்தான் இது.

பிரிட்டிஷ் - இந்திய அரசாங்கம் தமக்கு வழங்க வேண்டிய பணத்தைக் கேட்டு ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அவருக்கு பணம் வழங்குவதற்கான கால வரையறை முடிந்து போய்விட்டது. அதனை காரணம் காட்டி பணம் வழங்க வேண்டிய அவசியமில்லை என்று அரசு அதிகாரிகள் வாதிட்டனர். எனினும் இந்த வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைப்பதற்கு அப்போதைய அரசு தலைமை வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

‘இது நியாயத்திற்கு முற்றிலும் புறம்பானது; ஓர் அரசாங்கம் இத்தகைய மனசாட்சியற்ற குதர்க்கமான வாதங்களை வைக்கக் கூடாது. இதில் தர்மமில்லை...’ என்று அடித்துச் சொல்லி ஆட்சியாளர்களின் மண்டையில் ஓங்கி அடித்தவர் பி.எஸ்.சிவசாமி அய்யர். பெரிய நிறுவனமோ அல்லது பின்புலமோ இல்லாத சாதாரண மனிதனுக்கு நடக்கவிருந்த அநீதியைத் தடுத்து நிறுத்தியதைப் போலவே வெள்ளையர் ஆட்சியில் எண்ணற்ற சாதனைகளைப் புரிந்தவர் சிவசாமி.

தஞ்சாவூருக்குப் பக்கத்திலுள்ள பழமனேரி கிராமத்தில் சுந்தரமய்யரின் மகனாக 1864 பிப்ரவரி 7ல் பிறந்த சிவசாமியின் மூதாதையர்கள், மாமன்னன் ராஜேந்திர சோழனிடம் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள். சென்னை மாநிலக்கல்லூரியில் பட்டமும், அதன் பிறகு சட்டமும் படித்த அவர் 21 வயதிலேயே வக்கீல் தொழிலில் இறங்கினார். முதல் தலைமுறை வக்கீல் முட்டி மோதிதான் மேலே முளைத்து வர வேண்டும் என்பதுதானே எல்லா காலத்திலும் விதி. அதற்கு சிவசாமி அய்யரும் விலக்கல்ல.

வார்த்தைகளை நிறுத்தி, நிதானித்து, அளந்து பேசுவதைத் தன் பாணியாக ஏற்படுத்திக் கொண்டார். அதே நேரத்தில் அவை அர்த்தச் செறிவு நிறைந்ததாகவும் இருக்கும். அன்றைக்கு உச்சாணிக் கொம்பில் இருந்த வெள்ளைக்கார பாரீஸ்டர்கள் கடைப்பிடித்த தொழில் உத்திகள், கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றைக் கூர்ந்து கவனித்து அவற்றைத் தமக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டார்.

இதனால் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கட்சிக்காரர்கள் என எல்லாத் தரப்பினரிடமும் சிவசாமி அய்யருக்கு தனி செல்வாக்கு உருவானது. வாதாடும் வழக்கிற்கு ஆதரவான பழைய தீர்ப்புகளை, உத்தரவுகளைத் தேடி எடுத்து வாதிடுவதுதான் வழக்கமாக வழக்கறிஞர்கள் செய்யும் பணி. ஆனால், தான் கையிலெடுக்கும் வழக்கிற்கு ஆதரவான மட்டுமல்ல;

எதிரான நீதிமன்ற ஆணைகளையும் கூட விரல் நுனியில் வைத்திருப்பார் சிவசாமி. எதிர்த் தரப்பில் அவற்றை முன்வைக்கும்போது பதிலடி கொடுப்பதற்குத் தயாராக இருப்பார். ‘ஆமாம்… அப்படியொரு தீர்ப்பு இருக்கிறது. எனினும் அத்தீர்ப்பு வழங்கப்பட்ட சூழல் வேறு; இந்த வழக்கில் உள்ள அம்சங்கள் வேறு...’ என அவர் வாதத்தால் நிறுவும் போது, நீதிமன்றம் நிசப்தமாகும். ‘இவர் சொல்வது நியாயம்தானே’ என்று நீதிபதியும் முடிவுக்கு வருவார்.

நிலையான வளர்ச்சியின் மூலம் பெயரெடுத்த சிவசாமி, சங்கரன் நாயருக்குப் பிறகு 1907ல் சென்னை மாகாணத்தின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 43 வயதில் இத்தகைய பெரிய பொறுப்பு கிடைத்தது என்றால், அவர் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும்? அதிலும் ஆங்கிலேயர் ஆதிக்கம் நிறைந்த காலத்தில் இது அசாத்தியமானது.

அதன் பிறகு சிவசாமியின் அறிவுத்திறனும் ஆற்றலும் வேகமாகப் பரவியது. சென்னை சட்ட மேலவையின் உறுப்பினராக (எம்.எல்.சி) 3 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது சிக்கலான காலகட்டங்களில் அரசுக்கு சரியான யோசனைகள் சொல்பவராகத் திகழ்ந்தார். பிரிக்கப்படாத அன்றைய சென்னை ராஜதானியை ஆட்சி செய்த ‘கவர்னர்ஸ் எக்சிகியூட்டிவ் கவுன்சில்’ என்கிற சக்தி வாய்ந்த அமைப்பில் உறுப்பினராக (இப்போதைய அமைச்சர் பதவிக்கு இணையானது) இருந்தார்.

அப்போது கவர்னராக இருந்த லார்டு பென்ட்லண்ட் பிரபுவுக்கு இந்தியர்கள்  என்றாலே வேப்பங்காயாகக் கசக்கும். கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் எடக்கு மடக்காக எதாவது செய்து கொண்டே இருப்பார். அப்படித்தான் முதல் உலகப் போர்க் காலத்தில், கழுத்தை நெரிக்கும் பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவர முயன்றார். அதற்கெல்லாம் வேகத்தடை போல இருந்த சிவசாமி, துணிச்சலாக எதிர்த்துக் குரல் எழுப்பினார்.

மாகாண அளவிலான பதவியில் 5 ஆண்டுகள் இருந்த அவர், பின்னர் தேசிய பொறுப்புக்குப் போனார். இப்போதைய நாடாளுமன்றம் போல டெல்லியில் இருந்த ‘இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சில்’ உறுப்பினரானார். 3 ஆண்டுகள் இப்பொறுப்பில் இருந்தபோது சபைக்கூட்டங்களில் சிவசாமி அய்யரின் பேச்சுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன.  அரசியலில் மிதவாதியாக இருந்தாலும், மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தார்.

‘மக்களுக்காகத்தான் சட்டங்களே தவிர, சட்டங்களுக்காக மக்கள் இல்லை...’ என்பதைப் பல முறை வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார். ராணுவத்தைப் பற்றி மிகுந்த அக்கறையோடு பல கேள்விகளை மன்றத்தில் பதிய வைத்த சிவசாமி அய்யர், என்றைக்கும் நாம் நினைவு கூரத்தக்க வகையில் சாதனை ஒன்றையும் நிகழ்த்தினார். இந்தியாவில் கடல் வணிகம் பெரும் இடத்தை இன்றைக்குப் பெற்றிருக்கிறது. கப்பல் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை உருவாக்குவதற்கான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன.

1922ல் சிவசாமி அய்யர் கொண்டு வந்த தீர்மானமே இதற்கெல்லாம் மூல வித்தாக அமைந்தது. ஐந்து அம்சங்களைக் கொண்ட அத்தீர்மானத்தில், இந்திய கடல் வணிகத்தை மேம்படுத்தி, கப்பல் பொறியாளர்கள், உயர் அதிகாரிகள் பணியிடங்களில் இந்தியருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்; அதற்காக இந்தியாவில் கல்வி நிறுவனங்களைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

தொலை நோக்குப் பார்வையோடு சிவசாமி கொண்டு வந்த தீர்மானத்தை ஓராண்டு கால இழுத்தடிப்புக்குப் பிறகு, ஏற்க மனமின்றி ஆங்கிலேய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அதன்பிறகும் தொடர்ந்து போராடி தன் கோரிக்கையை வென்றடுத்தார். இன்றைக்கு கடல்சார் படிப்புகளைச் சொல்லித்தரும் நிறுவனங்களும், அவற்றில் பயிலும் மாணவர்களும் மறக்கக்கூடாத பெயர் சிவசாமி அய்யர்.

கல்வித்துறையின் மீதும் அளவில்லாத ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். அதிலும் கட்டுப்பெட்டித்தனத்தை உடைத்தெறிந்துவிட்டு, பெண்கள் படிக்க வேண்டும் என்பதைத் தீவிரமாக வலியுறுத்தி வந்தார். சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் வாரணாசி இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தராகவும் சில காலம் பணியாற்றினார்.

தமது சொத்துக்களின் பெரும்பகுதியை, தஞ்சை திருக்காட்டுப்பள்ளியிலுள்ள உயர்நிலைப்பள்ளிக்கும், சென்னை மயிலாப்பூர் லேடி சிவசாமி பெண்கள் பள்ளிக்குமே கொடுத்தார். நிர்வாகவியல், சட்டம், ஆங்கிலேயர் ஆட்சி,  இந்து மதச்சிறப்புகள் போன்றவற்றைப் பற்றி சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். ‘எவல்யூஷன் ஆஃப் இந்து மாரல் ஐடியல்ஸ்’ என்ற தலைப்பிலான இவரது கொல்கத்தா பல்கலைக்கழக பேச்சு பிரபலமானது.

சிறந்த நூல்களையும் எழுதியுள்ளார். இந்திய நூலகவியலின் தந்தையான சீர்காழி எஸ்.ஆர்.ரங்கநாதனுடன் சேர்ந்து இவர் எழுதிய ‘ஃபைவ் லாஸ் ஆஃப் லைப்ரரி சயின்ஸ்’ என்ற நூல் முக்கியமானது. தீவிர சமஸ்கிருத ஆதரவு, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரம் போன்றவற்றால் விமர்சனத்திற்கு ஆளானாலும் தன்னளவில் சிறந்த பண்பியல்புகள் கொண்ட மனிதராகத் திகழ்ந்தார்.

மேலை நாட்டு நாகரிகத்தை ஏற்றுக்கொண்டாலும், அதனால் நம்முடைய பழமையான கலாசாரம் பாழ்பட்டுப் போய்விடக்கூடாது என்பதில் அக்கறையானவராக இருந்தார். ‘சர்’, ‘இந்தியாவின் நட்சத்திரம்’ போன்ற பட்டங்கள் அவருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டன. மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் (அப்போதைய எட்வர்ட் எலியட்ஸ் சாலை) மாளிகை போன்ற வீட்டில் வாழ்ந்த சிவசாமி அய்யர், 82 வது வயதில்  காலமானார்.

அவருக்கு குழந்தைகள் இல்லாததால், சொத்துகள் ஆயிரக்கணக்கான பிள்ளைகளின் கல்விப்பணிக்குப் பயன்பட்டன. பல ஆண்டுகளுக்குப் பிறகு மயிலாப்பூரில் அவர் வாழ்ந்த பகுதியில் இருந்த சல்லிவன்ஸ் கார்டன்ஸ் சாலையின் பெயர் மாற்றப்பட்டு, ‘சர்.பி.எஸ்.சிவசாமி சாலை’ ஆனது. வக்கீலாக, நிர்வாகியாக, கல்வியாளராக ஒளி வீசிய ‘பழமனேரி சுந்தரம் சிவசாமி அய்யரின்’ புகழ் எப்போதும் சுடர் விடும்.

(சரித்திரம் தொடரும்...)

ஓவியம்: குணசேகர்

மாலை நேர வகுப்புகள்

அந்தக் காலத்தில், சென்னை சட்டக்கல்லூரியில் புகழ் பெற்ற வழக்கறிஞர்கள் மாலை நேரத்தில் வகுப்பெடுப்பார்கள். நடைமுறை சட்ட அறிவை மாணவர்கள் பெறுவதற்கு இத்தகைய வகுப்புகள் அரிய வாய்ப்பாக அமைந்தன. மூத்த வழக்கறிஞர்களும் இதனை பெரும் கடமையாக நினைத்துச் செய்தனர். அவர்களில் சிவசாமி அய்யரும் ஒருவர். வழக்குகள் குவிந்து, பரபரப்பான வழக்கறிஞராக ஆனபின்னும் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பெடுப்பதில் அவர் மிகுந்த அக்கறை காட்டினார்.

அந்த இளைஞர்…

திறமையுள்ளவர்களை சிவசாமி அய்யருக்கு ரொம்பவும் பிடிக்கும். அத்தகையோருக்கு பணமோ, இன்ன பிற உதவிகளோ தயங்காமல் செய்வார். சிவசாமியிடம் அறிமுகமான இளைஞர் ஒருவர், சட்டம் படித்து தொழில் பழகுநராக இருந்தவர். சட்டத்தில் ஆழ்ந்த அறிவும், திறமையும் கொண்டிருந்த அவர், வக்கீலாக பதிவு செய்ய பண வசதியில்லாமல் நாட்களைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார்.

ஒரு நாள், இதனை அறிந்த சிவசாமி, உடனே பெரிய தொகைக்கு காசோலை கொடுத்து, வழக்கறிஞராக பதிவு செய்ய வைத்தார். கூடவே அவரை தன் ஜூனியராகவும் வைத்துக்கொண்டார். பிற்காலத்தில் சட்ட மேதையாகி, இந்திய பார் சட்டங்களை உருவாக்கிய ஆற்றலாளராகத் திகழ்ந்த எஸ்.வரதாச்சாரிதான் அந்த இளைஞர்!

புத்தகக் காதல்

தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கு கற்றிருந்த சிவசாமி, ஆயிரக்கணக்கான புத்தகங்களை வைத்திருந்தார். அவற்றைப் படிப்பதிலும் முறையாகப் பராமரிப்பதிலும் ஆர்வமுள்ளவர். புத்தகங்களைச் சரியாகக் கையாளாவிட்டால் கடுமையாக கோபித்துக் கொள்வார். நண்பர்களாக இருந்தாலும் அதில் சமரசம் கிடையாது. அதேபோல ஆங்கிலத்தைச் சரியான உச்சரிப்போடு பேசாதவர்களைப் பார்த்தாலும் அவருக்கு கோபம் வரும். எல்லோரிடமும் சுமுக உறவு கொண்டிருந்தாலும் ‘சில்வர் டங்’ சீனிவாச சாஸ்திரி, சமஸ்கிருத மேதை குப்புசாமி சாஸ்திரி போன்றோருடன் மிக நெருங்கிய நட்பு பாராட்டினார்.