ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 18

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே முதல்வராகும் தகுதியுடையவர். இதுவே, இந்திய ஜனநாயகத்தின் நடைமுறை என்று சட்டம் சொல்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்றோ, தேர்ந்தெடுக்கப்பட்டபின் அவர்களின் சுயரூபம் தெரியவந்தால் அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ளலாம் என்றோ அது சொல்லவில்லை.

இதன்  காரணமாக யார் யாரோ முதல்வர் ஆகும் தகுதியைப் பெற்றுவிடுகிறார்கள். யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்பது ஜனநாயகத்தின் சிறப்பாகக் கருதப்படும் அதே வேளையில் ஜனநாயகத்தின் சிக்கலாகவும் அது அமைந்திருப்பது தவிர்க்கமுடியாதது. இதுவரை இந்திய ஜனநாயகத்தின் மீது கேள்வி எழுப்பாத தமிழர்கள் சமீபகாலங்களில் அதுகுறித்து ஆழ்ந்து சிந்தித்து விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

நாங்கள் யாரை முன்நிறுத்தி வாக்களித்தோமோ அவர் மரணமடைந்துவிட்டால் உருவாக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்துவிடவேண்டும் என்று கூக்குரலிடுகிறார்கள். முன்னெப்போதையும்விட தற்போதைய தமிழக அரசியல் களத்தில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் அவர்களுக்கு அளவில்லாத அச்சத்தையும் நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

மக்கள் ஒருமுறை விரும்பி வாக்களித்துவிட்டால் அதன் பின் ஐந்தாண்டுகளுக்கு கேள்வியே கேட்கமுடியாது என்னும் நிலை ஜனநாயகத்தின் சாதகமா பாதகமா என்று யூகிக்க முடியவில்லை. ஏழு மாதத்தில் மூன்று முதல்வர்கள். இந்த நிலையில் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் அமைச்சரவை எத்தனை காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் எனச் சொல்வதற்கில்லை.

ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் சிறையிலிருக்கிறார். சிறையிலிருக்கும் பொதுச்செயலாளரின் ஆலோசனைப்படி ஆட்சி நடக்கிறது. அவர் சிறையில் இருப்பது தேச நலனுக்காக நடத்திய போராட்டத்திற்காக அல்ல. வருமானத்திற்கு அதிகமாக முந்தைய ஆட்சியில் சொத்து சேர்த்ததற்காக. அமைச்சரவை ஜனநாயக நடைமுறைப்படி ஆட்சிக்கட்டிலில் ஏறியிருந்தாலும் எப்போது இறங்குமோ என்னும் அச்சம் மக்களிடம் பற்றிக்கொண்டிருக்கிறது.

இந்த அச்சத்தையும்அதிருப்தியையும் போக்கக்கூடிய வழிகள் சட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. கட்சியை வழிநடத்தும் பொறுப்பை வகித்த ஒருவரே ஆட்சியை வழிநடத்தும் அருகதையுடையவர் என மக்கள் நம்புகிறார்கள். நிர்வாகம் என்பது கோப்புகளில் கையெழுத்து போடுவது மட்டுமில்லை. ஒரு முதல்வர், விரைந்து முடிவெடுத்து சகல துறைகளையும் செயல்படவைக்கும் செயல் ஊக்கியாக இருக்கவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.

தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கேள்விகேட்கும் அதிகாரமுடையவராக முதல்வர் இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். அது சட்டத்தால் வரையறுக்கப்படவில்லை. முதல்வரின் வேலை என்ன என்பதை மக்களாக புரிந்துகொண்டதிலிருந்து உருவான சித்திரம். இந்த சித்திரத்தை ஏற்கனவே முதல்வர்களாக இருந்தவர்களே அவர்களுக்கு வடித்துக்கொடுத்தார்கள்.

ஒருவர் போல் இன்னொருவர் இல்லை என்றாலும்கூட தனித்தன்மை வாய்ந்தவர்களாக நம்முடைய முந்தைய முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் நீங்கலாக நம்முடைய முதல்வர்கள் அத்தகைய ஆளுமை பொருந்தியவர்களாக இருந்திருக்கிறார்கள். அகில இந்திய அளவில் தங்கள் ஆளுமையினால் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களாக அறியப்பட்டிருக்கிறார்கள்.

சிந்தாந்த ரீதியிலும் செயல்பாட்டிலும் அவர்கள் உருவாக்கித் தந்த சித்திரத்தை இழக்க மக்களுக்கு மனமில்லை. ஏற்கனவே இருந்த தலைவர்களும் முதல்வர்களும் கட்சியாலும் கொள்கையாலும் வேறுபட்டு இருந்தாலும் அவர்கள் தங்கள் தகுதிகளை தக்க சமயத்தில் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த சி.என்.அண்ணாதுரை ஆட்சிப் பொறுப்பேற்று ஐம்பதாண்டுகள் ஆகும் இத்தருணத்தில், ஒரு முதல்வர் எப்படி இருக்கவேண்டும் என எண்ணும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தமிழர்களாகிய நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். இக்காலகட்டத்தை திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சி என்றும், ஊழல்வாதிகளின் கையில் ஆட்சியும் அதிகாரமும் சிக்குண்டு கிடக்கின்றன என்றும் பலரும் பலவாறாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

இதில் என்ன வேடிக்கை என்றால் நம்முடைய தலைவர்களிலும் முதல்வர்களிலும் முன்மாதிரிகளாக அநேகம்பேர் இருந்திருக்கிறார்கள் என்பதுதான். இவ்வளவு பெருந்தகைகள் இருந்தும்கூட நம்மால் இன்றைக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் சர்ச்சைகளுக்கு முடிவுகட்ட இயலவில்லை. எல்லாத் தகுதிகளையும் பெற்ற ஒருவர்தான் முதல்வராக முடியும் என்று சட்டமோ மரபோ வரையறுக்கவில்லை.

ஆனால், நம்முடைய எதிர்பார்ப்புகள் சட்டத்தையும் மரபையும் மீறியதாக இருக்கின்றன. காரணம், யார் யாரெல்லாம் அமர்ந்திருந்த இருக்கை என்று சிலாகிக்கும் அளவுக்கு நம்முடைய முந்தைய முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக, ஓமந்தூரார். சுதந்திர இந்தியாவின் முதல் சென்னை மாகாண முதல்வராகப் பதவி வகித்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார், ஓமந்தூரார் என்றே அறியப்படுகிறார்.

எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர் முதல்வராகப் பதவியேற்ற பிற்பாடும்கூட தன்னை ஒரு விவசாயியாகக் காட்டிக்கொள்ளவே விருப்பப்பட்டிருக்கிறார். இறுதிவரை எளிமையும் நேர்மையுமாகக் காட்சியளித்த அவர், ஆட்சிபுரிந்தது வெறும் இரண்டே இரண்டு ஆண்டுகள்தான். ஆனால், அந்த இரண்டு ஆண்டுகளை விட்டுவிட்டு தமிழக அரசியலை எழுத முடியாது என்னும் நிலையை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலிலதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவருக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றனவா எனும் ஐயம் எல்லாமட்டத்தினராலும் எழுப்பப்படுகிறது. அவர் மறைந்துவிட்டாலும்கூட அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சிக்கல் இருப்பதாக அவரால் அடையாளங் காட்டப்பட்ட வர்களே சொல்லிவருகிறார்கள்.

உண்மையை அறிய விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்பதுவரை அவ்விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், அதே முதல்வர் பதவியை வகித்த ஓமந்தூரார் உடல் சுகமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தனக்கு எந்தவிதமான சிறப்பு சிகிச்சையும் அளிக்கப்படக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்.

உடல் நலமில்லாமல் சென்னை பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மருத்துவர்களுக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்திருக்கிறார். முதலாவது நிபந்தனை, எல்லா மக்களுக்கும் கொடுக்கப்படுகின்ற மருந்துகளும் கவனிப்பு முறைகளும்தான் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும். எனக்கென்று தனியாக மருந்துகளோ கவனிப்புகளோ கூடாது; வெளி நாட்டிலிருந்து மருந்துகளோ மருத்துவர்களோ வரவழைக்கக்கூடாது.

இரண்டாவது நிபந்தனை, எனக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் சிகிச்சை முடிந்தபிறகு என்னிடம் வந்து எந்த சலுகையும் கேட்கக்கூடாது. இரண்டு நிபந்தனைகளுக்கும் மருத்துவக்குழு ஒப்புதல் அளித்த பிறகே மருத்துவமனையில் சேர சம்மதித்திருக்கிறார். தான், மக்களிடமிருந்து எந்தவிதத்திலும் தனிமைப்பட்டுவிடக் கூடாது என்னும் எண்ணமுடையவராக அவர் இருந்திருக்கிறார். பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையினால்தான் தானும் கவனிக்கப்படவேண்டும் என அவர் விரும்பியிருக்கிறார்.

மக்கள் பிரதிநிதியாக தன்னை வரித்துக்கொண்ட ஒருவர், மக்களில் ஒருவராகத் தன்னையும் கருதிக்கொள்வதில் உள்ள மகோன்னதத்தை உணர்ந்தவராக அவர் இருந்திருக்கிறார். தவிர, நம்முடைய அரசு பொது மருத்துவமனைகளின் சிகிச்சைமுறைகளில் நம்பிக்கையுடையவராகவும் அவர் இருந்திருக்கிறார். அதிகாரமிருக்கிறது என்பதற்காகவோ பணமிருக்கிறது என்பதற்காகவோ தான் ஒரு விசேஷ ஜந்து என்று அவர் தன்னைக் கருதிக்கொள்ளவில்லை.

இன்றைக்கு செய்தித்தாளைப் பிரித்தால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் சுட்டுக்கொல்லப்படுவதும் தலைப்புச் செய்தியாக இருக்கிறது. கேள்விகேட்க நாதியற்றவர்களாக தமிழக மீனவர்கள் நிறுத்தப்படுகிறார்கள். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் அவர்கள் வீடு திரும்புவார்களா என்பதற்கு உத்தரவாதமில்லை. மீனை அவர்கள் பிடிப்பார்களா, இல்லை இலங்கை கடற்படை அவர்களைப் பிடித்துப்போகுமா என்னும் நிலைதான் நிலவுகிறது.

மீன்வளத்துறை அதிகாரிகளோ மந்திரிகளோ இந்த அசம்பாவிதங்களை தடுக்கக்கூடியவர்களாக இல்லை. மாறாக, நம்முடைய மீனவர்கள் எல்லைதாண்டிப் போய் மீன்பிடிப்பதால்தான் இப்படியெல்லாம் நடக்கின்றன என்கிறார்கள். மீன்வர்களைக் கேட்டால் மீன் இருக்கும் இடத்தில்தானே வலையை வீசமுடியும் என பதிலளிக்கிறார்கள். ஓமந்தூரார் காலத்திலும் மீன் வளத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.

உணவுப் பற்றாக்குறை நிலவிக்கொண்டிருந்த அச்சூழலில், கடலில் மீன் வளத்தைப் பெருக்க வேண்டும் என அதிகாரிகளை அழைத்து ஓமந்தூரார் கோரிக்கை வைக்கிறார். கடல் வளத்தை பன்மடங்காக்க, ‘ப்ளூ ரெவல்யூசனை’ உருவாக்க வேண்டும் என்பது அவர் திட்டமாயிருக்கிறது. அதுகுறித்து அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

அப்போது மீன் வளத்துறை இயக்குநராக இருந்த அப்பாஸ் கலிலீ, ‘அது அவ்வளவு எளிதன்று. கடல் என்றால் அதில் எல்லா இடங்களிலும் மீன் கிடைத்துவிடாது’ என அலட்சியமாக மறுத்துவிடுகிறார். ‘ஆம், கடலிலும் ‘கான்டினன்டல் ஷெல்ஃப்’ என்று குறிக்கப்படும் பகுதிகள் மட்டும்தான் மீன்பிடிக்க ஏற்றன. அதற்கும் நார்வே போன்ற நாடுகளில் பல புதிய முறைகளை கையாளுகிறார்கள்’ என ஓமந்தூரார் சொல்லியதும் கலிலீ வாயடைத்துப்போயிருக்கிறார்.

சைவ உணவை மட்டுமே உட்கொண்ட ஓமந்தூரார், அசைவ உணவு மூலமாவது மக்களின் உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்க முயன்றிருக்கிறார். ஐ.சி.எஸ் படித்த அதிகாரிகளால் யோசிக்க முடியாதவற்றைக்கூட பட்டிக்காட்டு முதலமைச்சர் என்று சொல்லக்கூடிய ஓமந்
தூரார் யோசித்திருக்கிறார்.

(பேசலாம்...) 

ஓவியங்கள்: மனோகர்