ஏன் தடுப்பூசி போட வேண்டும்?



-பேராச்சி கண்ணன்

தடுப்பூசி பிரச்னை

தமிழகத்தின் இப்போதைய ஹாட் டாபிக் மீசல்ஸ் ரூபெல்லா (MR)! தட்டம்மைக்கான இந்தத் தடுப்பூசியைப் போடலாமா? வேண்டாமா? என்பதில் நிறைய குழப்பங்கள். இதனை அவசரமாக ஏன் போட வேண்டும்? ஏற்கனவே MMR இருக்கும் போது இந்தப் புதிய தடுப்பூசிக்கு அவசரம் என்ன? இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து வேறு பல நோய்களுக்கு வித்திடும் என்றெல்லாம் தகவல்கள் உலவுகின்றன. உண்மையில், ஒரு மனிதனுக்கு தடுப்பூசி ஏன் அவசியம்? தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையின் மூளை முதுகுத் தண்டு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் புருனோவிடம் பேசினோம்.

ஏன் தடுப்பூசி போட வேண்டும்?
நம் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பை அளிக்கும் செல்கள் இருக்கின்றன. ஆனால், அவை ஒரு நோய்க் கிருமியைப் பார்த்தபிறகுதான் செயல்பட ஆரம்பிக்கும். நோய் தாக்குதலின் போது இவை முதலில் செயல்பட ஆரம்பித்தால், அந்த நோயானது பரவி உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே, நமது நோய் எதிர்ப்பு செல்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியே தடுப்பூசி.

தடுப்பூசி என்பது நோய்க் கிருமியின் செயலிழந்த ஒரு பகுதியே ஆகும். இந்தச் செயலிழந்த பகுதியால் மனிதனின் உடலில் நோயைத் தோற்றுவிக்க முடியாது. ஆனால், இந்த செயலிழந்த பகுதியைப் பார்த்து நமது செல்கள் தயாராகி விடும். பிறகு என்றாவது ஒரு நாள் கிருமி வந்தால், அதனை அழிக்க முடியும். உதாரணத்துக்கு, காவல்துறையில் துப்பாக்கி பயிற்சி உள்ளது அல்லவா!

அதே போல் நமது நோய் எதிர்ப்பு செல்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிதான் தடுப்பூசி. போலியோவால் கால் முடமாகாமல் தடுக்க, தட்டம்மையால் பார்வையிழக்காமல் தடுக்க, ருபல்லாவினால் செவிடாகாமல் தடுக்க, பொன்னுக்கு வீங்கியால் மலடாகாமல் தடுக்க, டிப்தீரியா, டெட்டனஸ், ரேபிஸ் ஆகிய நோய்களால் உயிர் இழக்காமல் தடுக்க கட்டாயம் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

இந்தத் தடுப்பூசிகளால் முழுவதுமாக நோய்கள் நீங்கிவிட்டதா?
இல்லைதான். ஆனால், அவற்றால் இறப்பவர்களின் சதவீதம் பெருமளவு குறைந்துள்ளது. உதாரணத்திற்கு, தட்டம்மையால் கடந்த பத்து வருடங்களில் பார்வையிழந்தவர்கள் யாருமில்லை. போலியோவால் (இளம்பிள்ளை வாதம்) கடந்த பத்து வருடங்களில் ஊனமானவர்களும் இல்லை.

இதெல்லாம் தடுப்பூசியால் மட்டுமே சாத்தியமானது. தடுப்பூசி போடப்படவில்லை என்றால் மீண்டும் ஊனமாகவும், பார்வையற்றவர்களாகவும், கேட்கும் தன்மையற்றும், வாய் பேச முடியாதவர்களாகவும் நிரம்பிய சமூகமாக நாம் மாறி விடுவோம். சரி, புதிதாக நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதனால், தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா?

ஆமாம். ஒரு நோய் முற்றிலும் கட்டுப்பாட்டிற்குள் வந்தால்தான் அந்த நோய்க்கான தடுப்பூசி தேவை இருக்காது. உதாரணமாக, பெரியம்மை நோய்க்கு 1970களில் தடுப்பூசி போட்டார்கள். இன்று போடுவதில்லை. இறுதியாக, MR தடுப்பூசியில் சில குழப்பங்கள் பெற்றோருக்கு உள்ளன. ஏற்கனவே, MMR தடுப்பூசி போடப்பட்டிருக்கிற குழந்தைக்கு மீண்டும் இந்தத் தடுப்பூசி கொண்டு வரப்படுவதன் அவசியம் என்ன? இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

தடுப்பூசி போடப்படுவதில் பல வகைகள் இருக்கின்றன. அதிலொன்று வயதின் அடிப்படையில் போடப்படுவது. இரண்டாவது, ‘பல்ஸ்’ அடிப்படையில் கொடுப்பது. அதாவது, அந்தச் சமூகத்தில் இருக்கும் அனைவருக்கும் ஒரே நேரம் அளிப்பது. உதாரணத்திற்கு, வயதின் அடிப்படையில் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படும்.

அதேநேரம், அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நாளில் பல்ஸ் போலியோ சொட்டு மருந்தும் கொடுக்கப்படுகிறது. இந்த வரிசையில், ஏற்கனவே MMR தடுப்பூசி வயதின் அடிப்படையில் அளிக்கப்பட்டிருந்தது. இப்போது, ‘பல்ஸ்’சின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி 1983ல் இருந்தே தமிழகத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.