தடுப்பூசி அவசியம்!



தடுப்பூசி பிரச்னை

- நா.கதிர்வேலன்

‘‘பொதுவாக எப்போது தடுப்பூசி போட்டுக் கொண்டோம், எப்போது குழந்தைக்குத் தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து போட்டோம் என்று நம்மிடம் கேட்டால் ஞாபகம் இருப்பதில்லை...’’ என்ற டாக்டர் எழிலன், தொடர்ந்தார்.

‘‘பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, மணிபர்ஸ் இவைகளை பத்திரப்படுத்துகிறோம். தடுப்பூசி போட்ட விபரங்கள் நமக்கு முக்கியம் என்று தோன்றாது. மேலை நாடுகளில் இதற்கான விவரங்களை மக்கள் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள். சில முக்கிய வெளிநாடுகள் தங்கள் நாட்டிற்கு அயல்நாட்டவர் வரும்போது, சில குறிப்பிட்ட தடுப்பூசிகளை போட்டுக் கொண்டே வர வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

எதிர்கால நலன் கருதி எல்லோருக்கும் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கி விட்டார்கள். சிலருக்கு அதனால் மயக்கம் போன்ற சிறு உடல் நலிவுகள் வந்திருக்கலாம். அதற்கு அவர்களுக்கு முன்பிருந்த உடல் உபாதைகள் காரணமாக இருக்கலாம். பரவலாக மக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடும்போது மிகச் சில தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

அரசாங்கம் இதை கட்டாயப்படுத்தும்போது மக்களின் நல்வாழ்விற்கான அக்கறை அவர்களுக்கு இருக்கிறது என நம்ப வேண்டும். ஏனெனில், தவறு நேர்ந்து விட்டால் அதற்கு அவர்கள் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும். அதனால் இந்த விஷயத்தில் அரசின் நோக்கத்தை தவறாகப் பார்க்க வேண்டாம். என்னைப் பொறுத்தவரை இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வது, அதற்கான அட்டைகளை சேகரித்து வைத்துக் கொள்வது ஆகியவை எல்லாம் அவசியம்...’’ என்கிறார் டாக்டர் எழிலன்.