மொட்ட சிவா கெட்ட சிவா



-குங்குமம் விமர்சனக்குழு

பொறுக்கி போலீஸ் திருந்தி, மக்கள் போலீஸாக மாறுவதே ‘மொட்ட சிவா கெட்ட சிவா’! சகலவிதமான ஊழல்களையும், அதிரடிகளையும் செய்து சம்பாதிக்கிறார் லாரன்ஸ். தலைநகருக்கு வந்து இன்னும் சம்பாதிக்க ஓர் அமைச்சரை இக்கட்டிலிருந்து அதிரடி ஆக்‌ஷனில் விடுவிக்கிறார். விதவிதமாகக் கொள்ளை அடிக்க, சக போலீஸாருக்கு கட்டளைகள் பிறப்பிக்கிறார்.

இவ்வளவு கெட்டவரான லாரன்ஸ், மீண்டும் நல்லவனாகி ரவுடிகளை ஆக்‌ஷனில் போட்டுத் தள்ளி அள்ளிக் கட்டுவதுதான் கிளைமாக்ஸ். கெட்டவன் நல்லவனாகிற இரண்டு வரி ஸ்டேட்டஸ் கதையை ஊதியே நெருப்பாக்கியிருக்கிறார் டைரக்டர் சாய்ரமணி. ‘பட்டாஸ்’ தெலுங்கு சினிமாவிற்கு தமிழ் வர்ணம் அடித்தாலும் ஆங்காங்கே அடிக்கிறது தெலுங்கு வாசனை.

அடிதடி, கலாட்டா, மகிழ்ச்சி, அதிர்ச்சி, கோபம், காதல் என எதிலும் துடிப்புடன் இருப்பதில் லாரன்ஸ் எப்போதும் பொருந்திப் போகிறார். ஆனால், தியேட்டரை விட்டு வெளியேறிய கணத்தில் இவ்வளவு பெரிய படத்தில் நிஜம் எங்கேயாவது நடந்திருக்கிறதா என முட்டி மோதுகின்றன சந்தேகங்கள். ஆக்‌ஷனில் போட்டுத் தள்ளுவதோடு, கெட்ட ஆட்டம் ஒன்றிற்கு மூன்றாக போட்டு ஆடித் தள்ளுவதில் மனிதர் பக்கா! அவ்வளவு உயர அசுதோஷ் ராணாவை நேரிலே வைத்து சலம்பும்போது லாரன்சின் கொடி பறக்கிறது.

இறங்கி அடித்திருக்கிறார் நிக்கி கல்ராணி. எக்கச்சக்க கிளாமரில், கூச்சத்திற்கு விடை கொடுக்கும் நெளிவு சுளிவுகளில் இளமை. ஒரே ஒரு ஆட்டம் போட்டாலும் லட்சுமிராய் அந்த உயரத்திற்கு, அந்த ஆட்டத்திற்கு அட்டகாச ஃபிட். செம ஜில். ஆறடிக்கு மேலான அசுதோஷ் ராணா அட்டகாசம். ஆனால், தமிழ்த்தனம்தான் ஒட்டமாட்டேன் என்கிறது.

தம்பி ராமையா, விடிவி கணேஷ், சாம்ஸ், மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன் இருந்தாலும் கூடவே லாரன்சும் காமெடிக்கு கை கொடுக்கிறார். அடுத்தடுத்து வருகிற அத்தனை சீன்களையும் வரிசையாக சொல்லி விடலாம். ஆனாலும் உட்கார்த்தி வைப்பதுதான் ஆச்சர்யம். சத்யராஜ் கமிஷனராக வந்தாலும், ஏஎஸ்பி லாரன்சுக்கு அடங்கிப் போகிறார். அப்புறம் மகன் - அப்பா என சென்டிமென்ட் ட்ரிப்பில் கதை போய்விடுகிறது.

சத்யராஜுக்கு ஊதித் தள்ளி விடக்கூடிய கதாபாத்திரம். அவ்விதமே செய்கிறார். சர்வேஷ் முராரி காமிரா விறுவிறு சுறுசுறு. ஆட்டம் பாட்டம், ஆக்‌ஷன் என்றால் மட்டும் அந்தக் கேமிராவிற்கு கொண்டாட்டம்தான். வஞ்சனையே இல்லாமல் குத்துப் பாடல்களை மட்டுமே தந்திருக்கிறார் அம்ரிஷ். ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதுதான் சுகம் சுகம்’ பாட்டு ரீமிக்ஸ்... மெல்லிசை மன்னரின் ஆவி மன்னிக்காது. காய்ச்சி எடுக்கும் கமர்ஷியல் ஆக்‌ஷன்!