திருடன்



-சி.முருகேஷ் பாபு

காலையில் வழக்கம்போல வாக்கிங் புறப்பட்டேன். எப்போதுமே டிராக் சூட், ஷூ எல்லாம் அணிந்த பிறகு பர்ஸில் இருந்து பத்து ரூபாய் எடுத்து பையில் வைத்துக் கொள்வேன். ஒருவேளை வழியில் கிறுகிறுப்பு வந்துவிட்டால் ஒரு சோடா வாங்கவாவது பணம் வேண்டுமே? இதுவரை அப்படியொரு சூழல் வந்ததில்லை என்பதால் பத்து ரூபாய்க்கு சோடா கிடைக்குமா என்பது பற்றிக்கூட யோசித்ததில்லை. டிராக் சூட் போல, ஷூ போல பத்து ரூபாய் என்பதும் வாக்கிங் வஸ்துக்களில் ஒன்றாகிவிட்டது.

அந்தவகையில் பத்து ரூபாயை எடுக்கலாம் என்று ஃப்ரிட்ஜின் மேல் இருந்த பர்ஸை எடுத்தபோது கொஞ்சம் உள்வாங்கி இருந்தது. முந்தைய தினம்தான் ஏடிஎம்மில் இருந்து மூவாயிரம் ரூபாய் எடுத்திருந்தேன். மகனுக்கு செருப்பு வாங்க முந்நூறு ரூபாய் எடுக்கப் போனபோது தவறுதலாக ஒரு பூஜ்யத்தை அழுத்திவிட, அந்த மெஷின் மூவாயிரத்தைக் கொடுத்துவிட்டது. பையனுக்கு பிடித்த செருப்பு கிடைக்கவில்லை. அதனால் மூவாயிரமும் பர்ஸில் அப்படியே இருந்தது.

ராத்திரி பர்ஸைப் பார்த்த மனைவி, ‘இவ்ளோ பணத்தைத் தூக்கிட்டு அலையாதீங்க… யாராச்சும் தேடி வந்து கடன் கேட்பாங்க… நீங்களும் தூக்கி கொடுத்துருவீங்க… ஒழுங்கா என்கிட்டே கொடுத்திடுங்க’ என்று சொல்லியிருந்தாள். ஒருவேளை ராவோடு ராவாக எடுத்து வைத்துவிட்டாள் போலிருக்கிறதே என்று நினைத்தபடியே பர்ஸை எடுத்த இடத்தில் வைத்தேன்.

அப்போதுதான் கவனித்தேன்… பர்ஸ் பக்கத்திலேயே ஃப்ரிட்ஜ் மீது வைத்திருந்த மோதிரத்தையும் காணவில்லை. தீபாவளிக்கு என்ன போடுவீங்க என்று கேட்டபோது வடை, குலோப்ஜாமூன் எல்லாம் போடுவோம் என்று ஜோக் அடித்த மாமனாரை மிரட்டி வாங்கிய ரெண்டு பவுன் மோதிரம். என்னுடைய முதல் எழுத்தையும் மனைவியின் முதலெழுத்தையும் (ஆதாரமாம்!) தாங்கிய அந்த மோதிரத்தை இரவு நேரங்களில் கழற்றி வைத்துவிட்டு உறங்குவது வழக்கம்.

ஃப்ரிட்ஜ் மேலே தேடினேன். எங்கேயும் காணவில்லை. எங்காவது விழுந்திருக்குமோ என்று சுற்றும் முற்றும் ஆராய்ந்தேன். அப்போதும் கிடைக்கவில்லை. இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் என் மனைவி வீட்டில் போட்ட மோதிரத்தோடு சேர்ந்து என் அம்மா போட்ட மோதிரமும் காணாமல் போயிருந்ததுதான். நான் இப்படி அலட்சியமாக வைத்திருப்பதைக் கண்ட என் மனைவி எல்லாவற்றையும் எடுத்து உள்ளே வைத்திருப்பாளோ என்று ஒருகணம் தோன்றியது. உறங்குபவளை எழுப்பி குழப்ப வேண்டாம் என்ற முடிவோடு கடமையை ஆற்ற வாக்கிங் புறப்பட்டேன்.

நடையில் கவனம் வைக்கமுடியவில்லை. மனைவி எடுத்து உள்ளே வைத்திருக்கலாம் என்ற சின்ன நம்பிக்கை இருந்தாலும் மனம் நாலா திசையிலும் அலைந்தது. கூடவே பத்து ரூபாய்கூட பையில் இல்லாமல் வந்துவிட்டோம்… மயக்கம் கியக்கம் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற படபடப்பு வேறு! சமாளித்து வாக்கிங்கை முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது, ‘‘என்னங்க… மொத்த காசையும் வாக்கிங் போறப்ப எடுத்துட்டுப் போயிட்டீங்களா என்ன… காய்கறிக்காரன்கிட்டே முளைக்கீரை வாங்கிட்டு பர்ஸைப் பார்த்தா காலியா இருந்துச்சு…’’ என்ற மனைவியின் குரல் அடிவயிற்றைக் கலக்கியது.

‘‘பர்ஸுல இருந்த பணத்தை எடுத்து பீரோல வெச்சுட்டேனு நினைச்சேன்… என்னைக் கேட்கிறே? அதோட மோதிரங்களையும் காணோம்!’’ ‘‘என்னது… எங்கப்பா போட்ட மோதிரத்தைத் தொலைச்சுட்டீங்களா…?’’ ‘‘எங்கம்மா போட்ட மோதிரத்தையும்தான்!’’ என்று நான் சொன்னது அவள் காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை. அந்த மோதிரத்துக்காக அவளுடைய அப்பா எப்படியெல்லாம் ரத்தம் சிந்தி உழைத்தார், எத்தனை நாள் ஓவர் டைம் பார்த்தார், எத்தனை சீட்டு கட்டினார் என்றெல்லாம் அளந்துவிட்டு, ஃப்ரிட்ஜை நோக்கி போனாள். ஒரு தேர்ந்த புலனாய்வு அதிகாரியின் நடையைப் போலிருந்தது அவளுடைய நடை.

ஃப்ரிட்ஜ் அருகே இருந்த ஜன்னல் கொக்கி விடுபட்டிக்க, அந்தக் கதவு சும்மா சாத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒரு சீப்பை எடுத்து கதவை லேசாகத் திறந்து பார்த்தாள். கைரேகையை அழிந்துவிடக் கூடாதாம்! பின்வீட்டில் இருந்து பால்கனி விளக்கு வெளிச்சம் என் வீட்டு ஃப்ரிட்ஜ் மீது தெளிவாக விழுந்தது. ‘‘ஆக, திருடன் இந்த ஜன்னல் கதவை லேசாத் திறந்து பார்த்திருக்கான்…

நீங்க பப்பரப்பானு எல்லாத்தையும் ஃப்ரிட்ஜ் மேல வெச்சிருந்திருக்கீங்க… அவன் லட்டு மாதிரி அள்ளிக்கிட்டு போயிட்டான்… உங்க அஜாக்கிரதையால ஒரு மோதிரமும் மூவாயிரம் ரூபா பணமும் போச்சு…’’ இப்போதுகூட எங்கம்மா போட்ட மோதிரத்தை அவள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ‘‘போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கவா..?’’ ‘‘பயனில்லை... ஆனாலும் கொடுத்துப் பாருங்க…’’

குளித்து உடைமாற்றி புறப்பட்டேன். புகார் கொடுக்க வசதியாக கையோடு ஒரு வெள்ளைத் தாளும் வீட்டு விலாசத்துக்கு அடையாளமாக ரேஷன் கார்டையும் எடுத்துக் கொண்டேன். காவல் நிலைய வாசலை அடைந்ததும் களைப்போடு வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த எஸ்.ஐ. என்னைப் பார்த்து சிவந்த கண்களால் என்ன என்பது போல சைகை செய்தார்.

‘‘நகை, பணம் திருட்டு போயிடுச்சு...’’ ‘‘உள்ள போய்ச் சொல்லுங்க…’’  வண்டியை உதைத்தார். உள்ளே நடந்தேன். என்ன ஏதென்றுகூடக் கேட்காமல் ‘உட்காருங்க’ என்றார் உள்ளே இருந்த எஸ்.ஐ. அந்த நேரத்தில் டீ கொண்டு வந்த பையன் ஒரு டீயை அவர் டேபிளில் வைக்க, ‘‘சாருக்கு ஒரு டீ குடு’’ என்றார். இத்தனை அன்பாக விசாரிக்கும் போலீஸ் ஸ்டேஷன் தமிழகத்தில் இருக்கிறதா? ஆச்சரியமாக இருந்தது.

தன் டீயைக் குடித்து முடித்துவிட்டு என்ன விஷயம் என்று அந்த எஸ்.ஐ கேட்க, தலைசுத்தல் வந்தா சோடா வாங்கறதுக்கு பத்து ரூபாய் எடுத்துக் கொண்டு வாக்கிங் செல்லும் பழக்கத்தில் தொடங்கி எல்லா விஷயத்தையும் கோர்வையாகச் சொல்லி முடித்தேன். ‘‘அடடா… கவனமா இருக்க வேணாமா? இதுக்குதான் நாங்க ஜன்னல் ஓரமா வேல்யூவபிள் திங்ஸை வைக்காதீங்கனு சொல்லிகிட்டே இருக்கோம்.

ஒரு புகார் எழுதிக் கொடுங்க. விசாரிக்கிறோம். எந்த ஏரியா?’’ சொன்னதும், ‘‘அது கிருஷ்ணா நகர் போலீஸ் லிமிட்ல வரும். நீங்க அங்கேதான் புகார் கொடுக்கணும்…’’ அப்போது ரோந்து புறப்பட்ட இரு காவலர்கள் எஸ்.ஐ.யிடம் சொல்லிவிட்டுப் போக வந்தார்கள். ‘‘சார் வீட்டுல நகை, பணம் மிஸ்ஸிங். ஆனா, சார் வீடு நம்ம லிமிட்ல இல்லை. கிருஷ்ணா நகர் ஸ்டேஷன் லிமிட். அதான் அங்கே போகச் சொல்லியிருக்கேன்…’’ என்றார்.

அந்த இருவரும் எந்தத் தெரு என்று விசாரித்தார்கள். சொன்னதும், ‘‘முந்தின தெரு வரைக்கும் நம்ம லிமிட். உங்க தெருவிலே இருந்து கிருஷ்ணா நகர் லிமிட். அங்கே போய்ப் பாருங்க…’’ என்று என்னிடம் சொல்லிவிட்டு, புறப்பட்டார்கள். இத்தனை அன்பான ஆட்களை ஒருசேர ஒரு போலீஸ் ஸ்டேஷனில் பார்த்தபோது அவர்கள் லிமிட்டில் வீடு எடுத்து நகை பணத்தைத் தொலைத்திருக்கலாமோ என்று தோன்றியது. சின்ன மனவருத்தத்தோடு கிருஷ்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன்.

என்ன ஆச்சரியம்… அதே அன்பு இங்கும் வழிந்து ஓடியது. ‘‘விலாசத்தைச் சொல்லுங்க… ரவுண்ட்ஸ் போன கான்ஸ்டபிள்ஸ்கிட்டே சொல்லிடலாம்’’ என்று எஸ்.ஐ கேட்க, கடகடவென்று சொன்னேன். உடனே அவர் அதை மைக்கில் அறிவித்தார். ‘‘போன் நம்பர் குடுத்துட்டுப் போங்க. புடிச்சுடலாம். உழைச்சு சம்பாதிக்கற காசு வீண்போகாது...’’ மனதுக்கு நிறைவாக இருந்தது. வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது மனைவியின் அழைப்பு. செல்போனை எடுத்து ‘என்ன?’ என்றேன்.

‘‘வீட்டுக்கு விசாரணைக்கு போலீஸ் வந்திருக்காங்க…’’ வண்டியின் வேகத்தை அதிகமாக்கி வீடு வந்து சேர்ந்தேன். காலையில் நான் பார்த்த அந்த ஸ்டேஷன் போலீஸார் இருவரும் மனைவியிடம் விசாரணை செய்தபடி சம்பவ இடத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில் கிருஷ்ணாநகர் போலீஸாரும் வயர்லெஸ் மைக்கில் தகவல் கிடைத்து வந்து விட்டார்கள். இவர்களும் தங்கள் பங்குக்கு சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்கள்.

பிறகு நால்வரும் கூடிப் பேசினார்கள். கோணி வைத்துக் கொண்டு குப்பை பொறுக்குபவர்கள், ஜோசியம், குறி சொல்கிறேன் என்று சுற்றுபவர்கள், எலி பிடிக்க, காக்கா பிடிக்க வரும் குறவர் கூட்டம் இப்படி யாரேனும்தான் பணத்தை எடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று தங்கள் பேச்சின் முடிவில் தீர்மானம் எடுத்துவிட்டு ஆளுக்கொரு திசையில் கலைந்து சென்றார்கள்.

அடுத்த சில தினங்களில் கிருஷ்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் என்னைத் தெரியாதவர்களே இல்லை என்னும் அளவுக்கு அவர்களோடு நெருக்கமாகி விட்டேன். குப்பை பொறுக்குபவர்கள் என நாலைந்து பேரை அழைத்து வந்திருந்தார்கள். ‘‘சார்… இவங்கள்ல யாராச்சும் உங்க தெரு பக்கமா சுத்தினாங்களா? அடையாளம் தெரியுதா..?’’ இதேபோல குறவர்கள், குறி சொல்பவர்கள், புளி விற்பவர்கள், புளிச்ச கீரை விற்பவர்கள் என்று பலரையும் அழைத்து வந்து காட்டினார்கள்.

என்னால் யாரையும் உறுதியாக அடையாளம் காட்ட முடியவில்லை. அடுத்தநாள் காலையில் நான் வாக்கிங் சென்றுவிட்டு திரும்பும்போது தினசரி ரோந்து செல்லும் இரு காவலர்களும் எதிரில் வந்தார்கள். ‘‘என்ன சார்… மாமூல் வாழ்க்கைக்கு வந்துட்டீங்க போல இருக்கு?’’ ‘‘ஆமாம் சார்… அது கிடைக்கறப்ப கிடைக்கட்டும்...’’ ‘‘ஒரு விஷயம் உங்ககிட்டே சொல்லணும், சொல்லணும்னு நினைச்சுகிட்டே இருந்தோம்.

பொதுவா பணம் காணாமப் போனா கிடைக்காது. ஏன்னா, உடனே செலவழிச்சுருவாங்க. நகைன்னா புடிக்க வாய்ப்பிருக்கு. அதையும் இப்ப உருக்கிடுறாங்க. இப்பகூட பாருங்க… போன வாரம் ஒரு களவாணியப் புடிச்சோம். கொஞ்சம் உருக்குன தங்கத்தை வெச்சிருந்தான். ஆனா, யாரு நகை எதுனு தெரியாம எப்படி ரிட்டர்ன் பண்றதுனு அவனை ரிமாண்ட் பண்ணுனதோட கேஸை முடிச்சுட்டோம்…’’ ‘‘சார்… இப்படிச் செய்தா என்ன…’’ சுற்றிலும் பார்த்துவிட்டு என் யோசனையை சொன்னேன். ‘‘அந்த ஒன்றரைப் பவுனை எனக்கு கொடுத்திருங்க. வேணா அரைப் பவுன் காசை உங்களுக்கு கொடுத்துடுறேன்…’’ மூவரும் டீ குடிக்கச் சென்றோம்.                         

பைரவருக்கு ஆபரேஷன்!

கலிஃபோர்னியாவின் போர்ட்வில்லேவின் ‘பிகாசோ’தான் இந்த வார சோஷியல் மீடியா ஹாட் கேக். ‘இது’ ஓவியர் அல்ல. பிறப்பு குறைபாடால் தாறுமாறு தாடையுடைய நாய். விரைவில் அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கும் பிகாசோ மற்றும் அதன் சகோ பாப்லோவையும் ஒருசேர தத்தெடுக்க ஐஎஸ்டிகள் பறக்கின்றன!

இது மிட்டாய் சுறா!

திருட்டிலும் அப்டேட் தேவைதானே? நியூசிலாந்தில் சுறா மீன் ட்ரெஸ்ஸில் பெட்ரோல் பங்க் சூப்பர் மார்க்கெட்டில் கெத்தாக நுழைந்த இருவர், லம்பாக மிட்டாய்களை லவட்டிச் சென்றுவிட்டனர். இந்த மிட்டாய் திருடர்களை எப்படி பிடிப்பது என போலீசார் லாலிபாப் சப்பியபடி யோசித்து வருகின்றனர்!

அந்தரத்தில் விளையாடு!

சாலையில் உங்கள் தலைக்கு மேல் ஒருவர் திடீரென டர்புர்ரென பைக் ஓட்டினால் பீதியாகாதா? அதேதான். கலிஃபோர்னியாவில் ஃப்ரீவே ரோட்டில் அந்தரத்தில் வண்டி ஓட்டும் வீடியோவை பதிவு செய்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் கைல் காட்சான்ட்ரிஸ். உடனே களத்திலிறங்கிய போலீஸ், ‘இது ஆபத்தான விளையாட்டு. வேண்டாம்’ என எச்சரித்துள்ளது.

எரிமலையோடு சேஸிங்!

இத்தாலியில் சிசிலியிலுள்ள மவுண்ட் எட்னா எரிமலை குமுறல் ரெகுலர் நியூஸ். ஆனால், அந்த ரணகளத்திலும் அதை சேஸ் செய்தால்..? பிரேக்கிங் நியூஸ்! எரிமலை பொங்கும்போது சரியும் பாறைகளில் பனியில் சறுக்குவது போல் சறுக்கி சேஸிங் சாகசம் புரிந்திருக்கிறது ஓர் இளைஞர் படை. உடம்பை பார்த்துக்குங்க ராசா!