டுவிட் போடு... லட்சங்களை அள்ளு!



இன்று நகரில் ஒருவர் வாழ்கிறார் என்றால் அதற்கு ஆதாரம் ஆதார் அட்டை அல்ல! மாறாக அவரது டப்ஸ்மாஷ் வீடியோவும் டுவிட்டர் அக்கவுண்டும் மட்டுமே! டுவிட்டரில் பிரபலங்கள் முதல் பிளாட்பார்ம்வாசிகள் வரை, தானாக சேர்ந்த கூட்டத்தைக் கொண்டு க்ளோபல் லெவலில் காலரைத் தூக்கிவிட்டு கலக்கி வருகிறார்கள். இன்றைய செல்ஃபி யுகத்தில் இப்படியொரு ரசிகர்கள் படை சாத்தியமா?

யெஸ். ஷ்யூராக கரன்சி கொடுத்தால் அனைத்தும் சாத்தியம்தான். பிறகு, சோஷியல் மீடியாவில் நீங்கள்தான் தெறிக்க வைக்கும் ஃபாலோயர்ஸின் மாஸ் மகாராஜா! குழப்பமாக இருக்கிறதா? பொட்டில் அறைந்தது போல் உண்மையை சொல்லிவிடுகிறோம். சமூக வலைத்தளங்களில் உங்களுக்கு எத்தனை ஃபாலோயர்ஸ் இருக்கிறார்களோ அவ்வளவு பணத்தை நீங்கள் சம்பாதிக்கலாம்!

யெஸ். யெஸ். யெஸ். இன்றைய தேதியில் டுவிட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பவரும் அலுவலகத்துக்கு சென்று மாத ஊதியம் பெறுவது போலவே சம்பளம் வாங்குகிறார். அதுவும் ஆயிரம், லட்சங் களில்! கால்களையே நகர்த்தாமல் 5 ஓவருக்குள் அதிரடி காட்டும் கிரிக்கெட் வீரர் சேவாக் நிறைய பேசுபவரல்ல என்ற நியூசெல்லாம் பழசு. இன்று டுவிட்டரின் பீட்டர் ராஜாவே வீருதான்.

எப்படி? ஏ டூ இஸட் பிரச்னைகளுக்கு ஸோல்டர்களை தூக்கி அவர் போடும் ஆக்ரோஷ அக்கறை கமெண்டுகள்தான் இன்றைக்கு செம ஹாட். இதன் மூலமாகவே, அவர் 30 லட்சம் சம்பாதித்துள்ளார். அதுவும் 6 மாதங்களில்! இதற்காக வீரு செய்ததெல்லாம் பிராண்டிங்தான்.

எப்படி? கடந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் சீரிஸில், மேன் ஆப் தி மேட்ச் விருது பெற்ற ரவீந்திர ஜடேஜாவைப் பாராட்டிய சேவாக், தன் டுவிட்டர் தளத்தில், ‘‘ப்ரோ... 2000 ரூபாய்க்கு சில்லறை கிடைக்காமல் தவிக்கிறேன். உன்னுடைய பேடிஎம்மிலுள்ள ஒரு லட்ச ரூபாயை என்னுடைய கணக்குக்கு மாற்றித்தாயேன் ப்ளீஸ்!’’ என டுவிட்டிய சாதுரிய 140 பிராண்டிங் வார்த்தைகள்தான் பணம் கொட்டும் மந்திரம்.

ஃபாலோயர்ஸ் தேவை!
சேவாக் போன்ற செலிபிரிட்டிகளைக் கடந்து டுவிட்டரிலுள்ள பலரும் தமது பிராண்டிங் திறமையைப் பொறுத்து செமையாக கல்லா கட்டுகிறார்கள். ‘‘சோஷியல் மீடியாவில் காசு பார்க்க நம் கணக்கை நிரந்தரமாக தொடரும் ஃபாலோயர்கள் அவசியம் தேவை...’’ என்று நமக்கு பிஸினஸ் பாடம் சொல்லும் காமெடியன் கரன் தல்வார் 2010ல் தொடங்கிய டுவிட்டர் கணக்கை ஒரு கோடிப் பேர் பின்பற்றுகின்றனர். இந்த இடத்தில் ஒரு வினா எழும். பிரபலங்களை பலரும் ஃபாலோ செய்வார்கள். மற்றவர்கள் என்ன செய்வது?

சிம்பிள். கோயம்பேடு மார்க்கெட் போல ரேட் பேசி ஃபாலோயர்களை சல்லிசாக வாங்கலாம்! ‘‘நிறுவனத்தை தொடங்கிய 3 ஆண்டுக்குள் 100% வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். பீஸ் கட்டினால் போதும். ஃபாலோயர்களை உருவாக்குவது, லைக்ஸ் போடுவது அனைத்திற்கும் நாங்கள் பொறுப்பு!’’ என பெருமிதமாக சிரிக்கிறார் தினேஷ்குமார். இவரைப் போலவே பலரும் இந்த ‘ஃபாலோயர்ஸ்’ பிசினஸை செய்து வருகிறார்கள்! 

ஓகே. ரேட் எப்படி பிக்ஸ் செய்வது?
டுவிட்டரில் 25,000 நபர்களுக்கு ரூ.12 ஆயிரம். ஃபேஸ்புக்கில் 15,000 நபர்களுக்கு ரூ.10 ஆயிரம். யூ டியூபில் 1 லட்சம் நபர்களுக்கு ரூ.6 ஆயிரம்... என்பது பிராக்டில் மார்க்கெட் நிலவரம். இந்த பேக்கேஜ் கையை கடிக்கிறதா? தனித்தனியாக ஃபாலோயர்களை வாங்குவது உங்கள் சமர்த்து.

போலிகள் ஜாக்கிரதை!
டூப்புகளின் சூறாவளியில் பிராண்டிங் செய்ய பணம் கொடுக்கும் ஸ்பான்சர்களின் நிலை என்ன? ‘‘நான் சோஷியல் மீடியா ஆய்வாளர் என்பதால், ஃபாலோயர்கள் உண்மையா போலியா என எளிதாக கண்டுபிடித்து விடுவேன். நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிந்த பிறகு டுவிட்டர் கணக்கில் லைக்குகள், ஃபாலோயர்ஸின் எண்ணிக்கை இன்ஸ்டன்டாக சரிந்தால் அது போலி.

தன்னை பிரபலமாக காட்டிக்கொள்ள சிலர் அப்படி செய்வார்கள்...’’ என உறுதியாகப் பேசுகிறார் பிரபல நிறுவனங்களின் மார்க்கெட்டிங் குருவான சாகர் தால்ரெஜா. இதுதவிர, டுவிட்டர் ஆடிட், ஃபேக் ஃபாலோயர் ஆகிய தளங்கள் போலிகளைக் கண்டறிய உதவுகின்றன. இதில் பணம் செலுத்தி துல்லிய தகவல்களைப் பெறலாம்.

ஜாலி எழுத்தில் கைமேல் காசு!
போலிகள் கடந்து ஜாலியாக டுவிட்டரில் எழுத வந்து காசு மழையில் நனைபவர்களும் இங்கு எக்கச்சக்கம். பல்வேறு ரெசிபிகள் குறித்து எழுதும் வலைப்பூ பதிவரான ஷிவேஸ் பாட்டியா, தில்லி இந்து கல்லூரியின் இளங்கலை மாணவர். இவரது அற்புதமான படங்களுடனான பரபர ரெசிபி பதிவுகளைப் பலரும் சுடச்சுட பார்க்கத் தொடங்க, தனது ஒரு பதிவுக்கு (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர்) மட்டும் ரூ.15 ஆயிரம் சம்பாதிக்கிறார்.

உணவு குறித்த எந்த பிராக்டிகல் டிகிரியும் இல்லாமலே பிரிட்டானியா, டெல் மான்டே ஆகிய நிறுவனங்களின் ரெசிபி டெவலப்பர் ஷிவேஸ்தான்! ‘‘சில சிம்பிள் ட்ரிக்குகள் இதில் உள்ளன. விளம்பரம் என்பதற்காக நீங்கள் அதிகம் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டியதில்லை...’’ என அசத்தலாக பேசும் சந்தன் கன்னா, ஒரு போட்டோ ஜர்னலிஸ்ட். இவர் பதிவிடும் இன்ஸ்டாகிராமின் ஒரு பதிவுக்கு ஆப்பிள் நிறுவனம் ரூ.20 ஆயிரம் தருகிறது. காரணம், இவரது புகைப்படங்கள் ஐபோனில் மட்டுமே யுனிக்காக எடுக்கப்படுபவை.

டூப் எழுத்தாளர்கள்!
பிரபலங்கள், அரசியல்வாதிகள், சாமியார்கள் என அனைவரும் இன்று சோஷியல் மீடியாவில் கருத்து கந்தசாமியாக உலா வருகின்றனர். எப்படி சாத்தியம்? பிரபலங்களின் பெயரில் எழுதுவது 100% முகமறியாத எழுத்தாளர்கள்தான். ‘‘யாருக்கு எழுதுகிறோமோ அவர்களைக் குறித்து தெரிந்து கொண்டு எழுதுவது என் பலம். கைஃப் உடற்பயிற்சியாளர், சிறந்த பீல்டர் என்றால் அவர்களது டுவிட்டும் அதேபோல இருக்க மெனக்கெடுவோம்...’’ என சமர்த்தாக பேசும் அம்ரிதான்சு குப்தா, குத்துச்சண்டை பிரபலம் விஜேந்தர்சிங், கிரிக்கெட் வீரர் முகமது கைப் ஆகியோருக்கான டுவிட்டர் எழுத்தாளர்!

பிரபலங்களின் மவுசைப் பொறுத்து டுவிட் எழுத்துக்களுக்கு ரூ.2 லட்சம் வரை இந்த டூப் எழுத்தாளர்கள் பெறுகிறார்கள். ‘‘மாற்றங்களுக்கு ஏற்ப அக்ரிமெண்ட் செய்துகொள்ளும் சினிமா, அரசியல் பிரபலங்கள்... கருத்தை எழுதிக்கொடுத்து அதை சரியான வார்தைகளில் எழுதவும் சொல்வார்கள்...’’ என்கிறார் சமூக வலைத்தள டூப் எழுத்தாளர் பினாகி கோஸ்.

பிரபலங்களின் பெயரில் இப்படி எழுதுவது சரியா?
‘‘டாக்டர் தன் அசிஸ்டெண்டுகளை வைத்து ஆபரேஷன்களை செய்வதில்லையா? சினிமா இயக்குநர் தன் உதவியாளர்களை வைத்து படமெடுக்க அனுமதிப்பதில்லையா... அப்படித்தான் இதுவும்...’’ என லாஜிக் நூல் பிடித்து பேசுகிறார் பினாகி கோஸ். ஆக, பிரபலத்தை நம்பி லைக் பட்டன் அழுத்தும் அசல் ரசிகன்தான் இந்த வணிகத்தின் உண்மையான இரை!                                
டுவிட்டர் ஹிஸ்டரி!

சான்ஃபிரான்சிஸ்கோவில் 2006ம் ஆண்டு டுவிட்டரை உருவாக்கிய ஜேக் டோர்ஸி தன் நண்பர்களான இவான் வில்லியம்ஸ், பிஸ் ஸ்டோன் ஆகியோரோடு இணைந்து குறுஞ்செய்திகளை பகிரும் தளமாகவே இதை உருவாக்க நினைத்தார். அன்றைய ட்ரெண்ட் படி முதலில் வைத்த பெயர் ‘twttr’. பின் இதனை Twitter ஆக மாற்றியவர் நோவா கிளாஸ்.

டுவிட்டரில் ஜேக் டோர்ஸி அனுப்பிய முதல் மெசேஜ், ‘just setting up my twttr’. 160லிருந்து 140 எழுத்தாக டுவிட்டை சுருக்கியதுதான் இதன் பலம். இப்போது உலகம் முழுவதும் 31.9 கோடி பயனர்கள் ஆக்டிவாக டுவிட் செய்து வருகின்றனர். கடந்தாண்டின் நிலவரப்படி ஆண்டு வருமானம் ரூ. 250 கோடி!