நிசப்தம்



-குங்குமம் விமர்சனக்குழு

தமிழ் சினிமா இன்னும் பெருமிதம் கொள்ள ஒரு படம் ‘நிசப்தம்’. இளம்பெண்களுக்கான பாதுகாப்புக்குக் கொஞ்சமும் உத்திரவாதம் இல்லை. இன்னும் மோசமாக பெண் குழந்தைகளும் எப்படி இந்த வல்லுறவுக்கு ஆளாகிறார்கள் என்பதே கதைக் கரு. வெறும் ஆக்‌ஷனும், காமமும், கேளிக்கையும் மட்டுமே அதிகம் புழங்கும் சினிமாவில் விழிப்புணர்வுக்கு வரவேற்பு குடை விரித்ததற்கு மைக்கேல் அருணுக்கு பூங்கொத்து!

அஜய்யும், அபிநயாவும் மனமொத்த தம்பதிகள். அவர்களது மகள் சாதன்யா பள்ளிக்குப் போய்க் கொண்டிருப்பதிலிருந்து தொடங்குகிறது கதை. ஒரு மழைநாளில் பள்ளிக்கு போகும்போது வக்கிரம் பிடித்த ஒருவனின் கண்ணில்பட நடக்கக் கூடாதது நடக்கிறது. இறுதியில் சாதன்யா சகஜ நிலைக்குத் திரும்பினாளா, தர்மசங்கடமான பெற்றோர்களின் நிலை என்ன என்பதே உலுக்கி எடுக்கும் இறுதி நிகழ்வு.

மிக மிக எளிமையான ட்ரீட்மென்ட். ஆனால், அவ்வளவு வலிமையான உணர்வுகள். சாதன்யாவின் அப்பாவாக அஜய். கேரக்டருக்கு அப்படியே பொருத்தம். குழந்தை தவிர்க்க முடியாமல் இந்த நிலைக்கு ஆளானபிறகு, தன் நிலைக்குத் திரும்புவது, கொந்தளித்து எழுவது, சூழ்நிலையைப் புரிந்துகொள்வது, மகளை மீட்பது என அச்சு அசல் அப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார்.

எப்போதும் கண்ணில் பெரும் சோகத்தோடு, அப்பாவைப் பார்க்கவே மனம் கொள்ளாமல் மகள் முகத்தை மறைக்கும் வேளையில் அழுது, அரற்றி, உயிர் துடிக்கும் வகையில் துடிப்பது மாஸ்டர்பீஸ்! மனைவியாக அபிநயா நல்ல தேர்வு. ஆரம்பத்தில் அழுது துடிப்பவர், பின்பு சூழலை அனுசரித்து யதார்த்தத்திற்குத் திரும்பி, மகளை பழைய நிலைக்குத் திருப்புவது அழகு.

அஜய்க்கு துணை நிற்கும் பழனி, ஹம்சா, சாதன்யாவின் பள்ளித் தோழர்கள், உளவியல் நிபுணராக ருத்து என அத்தனை பேரும் அழகான தேர்வுகள். படம் முழுக்க இதயம் தொடும் வசனங்கள் பெரிய பலம். ‘நீங்க ரெண்டு பேரும் பிஸியாக இருப்பீங்கனுதான் 100க்கு போன் பண்ணிச் சொன்னேன்’ என நடந்த சம்பவத்திற்குப் பிறகு சாதன்யா பேசும்போது மெல்லிய இதயங்கள் உருகிக் கரைந்துவிடும்.

எவ்வளவு கொடியவர்களுக்கும் நீதி வளைந்து கொடுக்கத் தயாராகவும், அவர்களுக்கான நியாயங்களும் இருக்கின்றன என்பதைக் காட்டிய விதத்திலும் இயக்குநர் முத்திரை பதிக்கிறார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் பொதுவாழ்வின் மீதான அக்கறை தொனிப்பதற்கு கூடுதல் வணக்கம்! மறைந்த நா.முத்துக்குமாரின் பாடல்கள் நுண்ணிய உணர்வில் நெகிழ்த்துகின்றன.

நமக்கு அருகில் இருக்கிற வீட்டில் இத்தனை சம்பவங்கள் நடப்பது போன்ற நெருங்கிய உணர்வை ஏற்படுத்துகிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் எஸ்.ஜே. ஸ்டார். ஒவ்வொரு பதற்ற வேளையிலும்அறிமுக இசையமைப்பாளர் ஹான் ஜஸில் தன் கடமையை அற்புதமாகச் செய்கிறார். மனிதம் பேசும் படம்... நம் சிறார்களின் பாதுகாப்பை பேசும் ‘நிசப்த’த்திற்கு ஒரு ராயல் சல்யூட்!