சுகுமாரன் 60



நா.கதிர்வேலன்

‘‘என்ன... இன்டர்வியூவா! சும்மா வாங்க பேசலாம்... பேட்டியா அமைந்தால் வைச்சுக்கலாம்...’’ நிதானமாகப் பேசுகிறார் கவிஞர் சுகுமாரன். அறுபதைத் தொடுகிற இளைஞர். நா.சுகுமாரன் என்ற ‘பிராண்ட் நேம்’ தமிழ்க் கவிதை கொண்டாடும் அடையாளம். புத்தகங்களின் பளு தாங்காது புவியீர்ப்பு விசைக்கு அதிகமாகவே வளைந்து கொடுத்திருக்கின்றன அலமாரியின் அடுக்குகள். அந்தக் கனம் சுகுமாரனின் வார்த்தைகளிலும்! அந்தப் புன்னகை, சமயங்களில் வெளிப்படையான சிரிப்பு... பூரண  அனுபவம்தான்!

இன்னிக்கும் ‘கோடை காலக் குறிப்புகள்’ தந்த அனுபவத்தை மறக்க முடியலை. நிறைய கவிஞர்கள் வளர்ந்த இடம் அது...
அப்ப இருந்த தலைமுறை சமூக வாழ்க்கையிலும் தனி வாழ்க்கையிலும் கொந்தளிப்பா இருந்த காலகட்டம். படைப்பு இலக்கியங்களிலும், திரைப்படங்களிலும் கோபக்கார இளைஞன்னு ஒருத்தன் அப்ப இருந்தான். நுண்ணறிவு அதிகம் விரும்பியதால் வந்த கோபம் அது. இதில் அதைத்தான் வெளிப்படுத்தியிருக்கேன்.

அந்த அனுபவம் எல்லாமே மனிதர்கள் கடந்து வந்த மானுடவெளிதான். நான் உயிர்ப்பா இருக்கேன்னு சொல்லிக்கிட்ட அடையாளம்தான் அந்தக் கவிதைகள். கவிதையில் அகம், புறம்னு ரெண்டு இருந்தது. அந்த இரண்டுக்கும் நடுவில் கண்ணுக்குத் தெரியாத பெரிய இடைவெளி இருந்தது. அதை நிரப்பணும்னு ஆசை. புழக்கத்தில் இருக்கிற மொழிதான் உயிர்ப்புள்ள மொழின்னு நம்பினேன். அதை செழுமைப்படுத்தினாலே கவிதை சாத்தியம்னு நினைச்சேன். அப்படியே உரைநடையின் சாரத்தை சொல்லக்கூடிய கவித்துவம் ஏற்றின மொழியை முயற்சி செய்தேன். அப்படியும் இன்னும் எழுத்தில் முழுமை அடைந்த பாடில்லை. முழுமைக்கு முடிவு இருக்கா?

ஆச்சர்யம் என்னன்னா... உங்க மொழிபெயர்ப்பு. ‘பாப்லோ நெரூதா’, ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’, ‘பட்டு’... அவ்வளவு உயிர்ப்பு...
இது தற்செயலானது. நான் மிகவும் விரும்பின, தோய்ந்து படித்த நூலை என் சக நண்பனுக்கு, வாசகனுக்கு கொடுக்கணும் என்பது மட்டுமே நோக்கம். என் மொழியில் அதைச் செய்ய முடியுமான்னு பார்க்கிறது, அதனால் என் மொழிக்கு ஒரு வலுவைச் சேர்ப்பதுன்னு நினைத்து செய்தது.

வெறுமனே அதை தொழில் முறையான பயிற்சியாக இல்லாமல், கிட்டத்தட்ட வேற முயற்சித்திருக்கேன். பாப்லோ நெரூதாவின் கவிதையை நானே தமிழில் எழுதினால் எப்படியிருக்கும் என்ற கனவுதான் அப்போது இருந்தது. அதில் முழுக்க வெற்றி பெற்றேனான்னு தெரியாது. இது ஒரு சிறு உரையாடலைத் தொடர்வதற்கான விஷயம்தான். ‘இந்தப் புத்தகம் படிச்சேன். ரொம்ப நல்லாயிருந்தது’ என்பதைவிட அந்தப் புத்தகத்தையே தமிழில் கொடுத்துவிடுவது சிறப்புதானே! ஒரு புத்தகத்தை சரியாகப் புரிந்து கொள்வதற்கு மிகச் சரியான வழி... அதை மொழிபெயர்த்துச் சொல்வதுதான். ஆனாலும் அது சிரமமானது.

உங்க ‘வெலிங்டன்’ நாவலைப் படிக்கிறபோது கவிதைகளில் இருந்ததிற்கும், புனைவிற்கும் ரொம்ப மாற்றம் தெரியுது...
ஒரு கவிதைக்கும், இதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கு. கவிதையை அடுக்கி, சுருக்கி, படிமமா, ஒரு வழிக்குள்கூட கொண்டு வந்துவிடலாம். சமயங்களில் அது தேடல் முயற்சியாகக்கூட மாறும். சொல் பரிபூரணமா இருந்து, சொல்லுக்கும் பொருளுக்கும் இருக்கிற எல்லைக்கோடு கூட அழியும். சில சமயங்களில் அதை சாதிக்கலாம். தரிசனம்ங்கிறது ஒரு சில தடவை நடக்கும். அதற்கு தகவல்கள், தரவுகள், பின்னணிகள் தேவையில்லை. நேராகவே கூர்மையாக வந்துகூட அமைஞ்சிடும்.

புனைகதைக்கு பெரிய விரிவு வேண்டியிருக்கு. பின்னணி, காலம், மன உணர்வுகள், கதாபாத்திரங்கள், அவங்க பேசுகிற மொழினு விரிந்துவிடுகிறது. இதைச் சொல்லும்போது கவிஞனுக்கு வேலையில்லை. கதாபாத்திரங்கள் மட்டுமே பேசணும். அதில் போய் கவிஞன் நுழைவது புனைவைத் திரிச்சு விட்டுவிடும்னு பயம். அதுதான் அப்படி.

மலையாளத்தில வருகிற ஒவ்வொரு முக்கியமான படைப்பையும் அறிந்தவர் நீங்கள். இப்ப தமிழில் உங்களை பிரமிப்பு ஊட்டச் செய்கிறவர்கள் யார்..?
நான் எழுத்தாளன்னு சொல்றதைவிட மிகச் சிறந்த வாசகன்னு அறியப்படுவதை விரும்புவேன். நான் அவங்களைப் போல எழுதணும்னு நினைக்கலை. ஆனாலும் இவங்களைப் பார்த்து பிரமிக்கிறேன். மனுஷ்யபுத்திரன் நல்ல விதத்தில் இவ்வளவு கவிதைகளை எழுதிட்டு இருக்கிறார்னு ஆச்சர்யப்படுகிறேன். போகன்சங்கர், இசை, ஷங்கர் ராமசுப்ரமணியன், அனார் ேபான்றவர்கள் அசாதாரணமான வரிகளில் பிரமிப்பு ஊட்டுகிறார்கள். நான் சமகாலத்திலேயே இவர்களோடு போட்டியில் இருக்கேன்.

உங்களின் தனிப்பட்ட சமூகப் பார்வை என்ன..?
அடிப்படையில் மார்க்சியத்தின் மனிதாபிமானத்தில் நம்பிக்கை கொண்டவன். ஓரளவுக்கு இடது சாரியாக நல்ல சிந்தனைகளோடு வளர்ந்திருக்கேன். அதை கூடுமானவரை எங்காவது பிரதிபலிக்கிற மாதிரிதான் என் எழுத்துக்கள் அமைஞ்சு வந்திருக்கு. எவ்வளவுதான் மோசமானவனாக இருந்தாலும் மனிதன்தான் மகத்தானவன்னு இன்னமும் நான் நம்புகிறேன். இதிலிருந்துதான் என் பார்வைகள் வருது.

மகத்தானவன்னு பொன்மொழி மாதிரி சொல்லிட்டுப் போக விரும்பவில்லை. அதற்கு பல போராட்டங்கள் செய்ய வேண்டியிருக்கு. சில அவமானங்களைச் சகிக்க வேண்டியிருக்கு. பல இடங்களில் தன்னை மீறி எழவேண்டியிருக்கு. எழுத எழுத மனங்களைத் துருவித் துருவி ஆராய்ந்துகொண்டு இருக்கிறோம். நல்ல சிந்தனைகளோடு எழுத இன்னும் பக்குவமடைந்த மனிதனாக மாறியிருக்கிறேன்.

அறுபது வயது... டால்ஸ்டாய், தாகூர் போன்றவர்களின் உச்சபட்ச படைப்புகள் கொடுத்த வயது. இப்ப எழுத என்ன திட்டம் வச்சிருக்கீங்க?
எதையும் திட்டமிட்டு செய்வது இல்லை. 14 வயசிலயே முதல் கவிதை வந்திடுச்சு. அந்த சந்தோஷத்தில் மத்தவங்ககிட்டேயிருந்து வேறுபட்டவன்னு தோணுச்சு. எல்லோரும் என் மேல் கவனம் கொள்வதற்கான இன்னொரு புள்ளிதான் அது. ஒவ்வொரு வருஷமும் வயசு கூடும்னு நமக்குத் தெரியும். அது உடலுக்கு மட்டுமே.

வயசு, வயசு மட்டுமே இல்லை. அனுபவம், கற்ற பாடம், பெற்றதுன்னு எல்லாம் சேரும். ஓரளவு மனசு பக்குவமடைந்து மொழி கைவந்து பார்வை கூர்மைப்பட்டு இருக்கு. தாகூர், டால்ஸ்டாய் மாதிரி தகுதியும் மாண்பும் எனக்கு இல்லை. ஆனா இலக்கியம்னு ஒண்ணு இருக்கு. அதுகூட இருக்கிற பிரியம் என்கிட்டே எப்பவும் இருக்கு. இன்னும் மனிதனுடைய வாழ்க்கையில் இருக்கிற ஆனந்தம், புன்னகையோடு இணைந்தே அவ்வப்போது சீழும் ரத்தமுமாக வருகிற விஷயங்களையும் இலக்கியமாகவே உணர்கிறேன்.

இலக்கியத்தோடு இருப்பது என்பது மனிதனோடு இருப்பதுதான். எதையோ தொடுறோம், ஏதோ ஒண்ணு வருது. இதெல்லாம் எப்படின்னு ஆதி காரணம் சொல்ல முடியவில்லை. என் மனசுக்கும் வாசகனுடைய மனசுக்கும் ஒரு பரிவர்த்தனை நடக்கிறது இல்லையா... அதுதான் அங்கீகாரம்.

உங்க கவிதைகளில் இருக்கிற மௌனத்திற்கு, இசை மேல உங்களுக்கு இருக்கிற பிரியமும் ஒரு காரணமோ?
இசை எனக்கு சந்தோஷமான காதல். நல்ல பாடகனாக ஆகாமல் போயிட்டேனேன்னு இந்தக் கவிதையும் கை வராமல் போயிருந்தால் கண்டிப்பா நினைச்சிருப்பேன். சங்கீதத்தை கேட்டுக் கேட்டு பழகினாலும் அதில் எனக்கு நிபுணத்துவம் இல்லை. ஏதோ ஒன்று மனசுக்கு இனம் புரியாத ஒரு கொடையை பரிசளிப்பதாக எனக்கு இசை மேல் பிரியம் இருந்துகிட்டே இருக்கு.

அப்புறம் அந்த இசையின் உச்சிப்புள்ளி உங்களை மறந்த ஒரு நிலையில் கொண்டு போய் நிறுத்தும். அந்த நிலை முற்றிலும் சூழல் மறந்ததல்ல. நீங்க என்னவாக இருக்கீங்க என உணர வைக்கிற நிலை. எனக்கு இந்த வாழ்க்கையில் கிடைச்ச பெரிய விஷயமே இதுதான். தமிழில் இசைமை கூடிவருவது பெரிய அதிசயம் இல்லை. இசையோடு பின்னப்பட்ட மொழிதான் இது. கொஞ்சம் நீங்க தட்டிப் பார்த்தால் எந்தெந்த வார்த்தையில் இசை இருக்குன்னு கண்டுபிடிச்சிடலாம்.

இந்த வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடம்தான் என்ன?
வாழ்க்கை இனிது என்பதைவிட இந்த வாழ்க்கை என்ன கற்றுக் கொடுக்கும்?

படங்கள் : சீனிவாசன் நடராஜன்