சர்க்கரை நோயாளிகளை மையமாக வைத்து ஒரு மெடிக்கல் க்ரைம்!



-மை. பாரதிராஜா

‘‘அறிமுக இயக்குநர்களோட சின்ன பட்ஜெட் படங்கள் எவ்வளவு தரமா இருந்தாலும் அதை வாங்கி வெளியிட விநியோகஸ்தர்கள் தயாரா இல்லை. தியேட்டர்கள் கிடைக்கிறதும் குதிரைக் கொம்பு. அதனாலயே சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரோ இல்ல இயக்குநரோ இல்ல அதுல நடிக்கிற நடிகர்களோ சொந்தமா ரிலீஸ் பண்ணி ரிஸ்க் எடுக்கறாங்க. நல்லவேளையா என் படத்துக்கு அப்படி எந்த சிரமமும் ஏற்படலை...’’ உண்மையை உணர்ந்து நிதானமாகப் பேசுகிறார் ரமணி. ‘ஒளடதம்’ படத்தின் இயக்குநர்.

‘‘ஆத்திச்சூடில ‘ஒளடதம் தவிர்’னு அவ்வையார் சொல்லியிருப்பாங்க. அதாவது மருந்துகளை தவிர்னு இதுக்கு அர்த்தம். என் கதைக்கு இது பொருத்தமா இருந்துச்சு. இந்தியாவுல மொத்தம் 60 மில்லியன் பேர் நீரிழிவு நோயால பாதிக்கப்பட்டிருக்கறதா புள்ளி விபரம் சொல்லுது. சென்னைல மட்டுமே 40% ஆண்கள் டயாபடீஸால அவதிப்படறாங்க.

இவங்க குறிப்பிட்ட ஒரு மாத்திரையை தொடர்ந்து சாப்பிடணும். அந்த மாத்திரையை 2013ம் வருஷம் திடீர்னு மத்திய அரசு தடை பண்ணிட்டாங்க. மக்களோட எதிர்ப்பை பார்த்துட்டு சில வாரங்கள்லயே அந்த அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டது. இது நடந்த விஷயம். இதுக்குள்ள சில கற்பனைகளை கலந்திருக்கேன் திடீர்னு அந்த மாத்திரையை ஏன் மத்திய அரசு தடை செய்துச்சு? இதனால என்னென்ன பாதிப்புகள் நிகழ்ந்தன?

இதற்கான பதில்களை விறுவிறுப்பா சொல்லியிருக்கேன்...’’ என்ற ரமணி, ‘ஒளடதம்’ குறித்து பேசத் தொடங்கினார். ‘‘படத்தோட தயாரிப்பாளரான நேதாஜிபிரபுதான் ஹீரோ. டெல்லி மாடல் சமைரா, ஹீரோயின். மத்த எல்லாருமே புதுமுகங்கள்தான். மெடிக்கல் சப்ஜெக்ட் தவிர, திருநங்கை பத்தின ஒரு முக்கியமான தகவலும் படத்துல இருக்கு. தஷி இசையமைக்கிறார்.

ஒரிஜினலா மாத்திரை தயாரிக்கிற இடத்துக்கே போய் ஷூட் செய்திருக்கோம். ரொம்ப ஹைஜீனிக்கான இடம். அவ்வளவு சுலபத்துல பர்மிஷன் கிடைச்சிடாது. கஷ்டப்பட்டு நாங்க வாங்கினோம். பட டிரெய்லரை பார்த்துட்டு கீழக்கரை அஜ்மல்கான், நானே ரிலீஸ் பண்ணறேன்னு முன்வந்தார். படத்தோட ஒளிப்பதிவாளர் ரஞ்சன்ராவ், ஒரிய மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யறவர்...’’ என்கிறார் ரமணி.        

behind the scenes

* சேரன் நடித்த ‘ஆடும் கூத்து’ இயக்குநர் டி.வி.சந்திரனிடம் இணை இயக்குநராக இருந்தவர் ரமணி. இப்போது ‘டியூப்லைட்’ படத்திலும் பணியாற்றி வருகிறார்.
* 35 நாட்களில் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. சென்னையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும்தான் லொகேஷன்ஸ். 
* போஸ்ட் புரொடக்‌ஷனையும் சேர்த்து படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.50 லட்சம்தானாம்.