மரபு பயிர்களின் காவலன்!



-ச.அன்பரசு

ஒடிஷாவின் கெரன்டிகுடாவில் நியமகிரி மலையை ஒட்டிய பகுதி. மண்ணும் கற்களும் நிறைந்த வைக்கோல் கூரை வீடு. இதுதான் டாக்டர் டெப்பின் சூழல் செயல்பாட்டுக்கு நடைமுறை சாட்சி. யார் இந்த டெபல் டெப்? இந்தியாவில் அழியும் நிலையிலிருந்த 1,200 அரிசி வகைகளை பசுதா என்ற தம் பண்ணை நிலத்தில் விளைவித்து காப்பாற்றி வரும் காவலர். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சூழலியல் முனைவர் பட்டம் பெற்றவர், பின் பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் மையத்தில் கடல் சூழலியல் குறித்தும், கலிஃபோர்னியா பல்கலையில் சூழல் பொருளாதாரமும் படித்தார்.

‘‘1960ல் பசுமைப் புரட்சிக்கு முன்னதாக இந்தியாவில் புழக்கத்திலிருந்த அரிசி வகைகளின் எண்ணிக்கை 70 ஆயிரம். ஆனால், இன்று பயிரிடப்படும்  75% அரிசி வகைகளின் எண்ணிக்கை வெறும் 10தான். விவசாயிகளிடம் நான் விதைகளைப் பெறச் சென்றபோது அந்த அதிர்ச்சியை நேருக்கு நேர் சந்தித்தேன்.

விவசாயிகளின் பிள்ளைகள் மரபான அரிசி வகைகளை பயிரிடுவதையே கைவிட்டிருந்தார்கள்...’’ ஆதங்கத்தோடு சொல்லும் டாக்டர் டெப் இதனைத் தொடர்ந்தே ரிகி என்ற உள்நாட்டு மரபு விதை வங்கியின் மூலம் விவசாயிகளிடையே விதை பரிமாற்றத்தை தொடங்கி வைத்திருக்கிறார். இவரது வயலில் 2க்கு 2 என்ற அளவில் பல்வேறு வகையான நெற்பயிர்கள் விளைகின்றன. ‘‘எல்லாமே வெவ்வேறு அறுவடைக் காலம்.

சரியான இடைவெளியில் இவை விதைக்கப்பட்டிருப்பதால் அயல் மகரந்தச்சேர்க்கைக்கு வாய்ப்பில்லை...’’ என அறிவியல்பூர்வமாக சொல்கிறார். இதுவரை இவர் சேகரித்த எல்லா விதைகளையும் சிறிய மண் பானைகளில் பெயர், ரகம், அதன் சிறப்பு, பருவம் ஆகியவற்றை எல்லாம் எழுதி ஒட்டியிருக்கிறார். இவை எல்லாம் விதை பரிமாற்றத் திட்டத்தின்படி சேமிக்கப்பட்டவை.

ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு வழங்கப்படுபவை. டாக்டர் டெப்பின் ‘பசுதா’, சோதனைச் செய்முறை நிலம் என்பதால் இங்கு உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் விவசாயிகள் வந்து பயிற்சி பெறுகிறார்கள். ‘‘இதில் எந்தப் பயிற்சியும் விவசாயிகளுக்கு தெரியாததல்ல. இதையெல்லாம் நான் கற்றுக் கொண்டதே அவர்களிடம்தான். என்ன... இன்றைய தலைமுறை அதை மறந்துவிட்டது.

அவற்றை நான் நினைவூட்டுகிறேன். அவ்வளவுதான்...’’ தன்னடக்கத்தோடு சொல்லும் டாக்டர் டெபல் டெப், தேசிய பல்லுயிர் அமைப்பில் (NBA) உறுப்பினராக இருக்கிறார். எனவே விவசாயம் தொழிலாக எப்போது மாறியதோ அப்போது மரபான விதைகளை நாம் மறக்கத் தொடங்கினோம் என புள்ளிவிபரங்களுடன் பட்டியலிடுகிறார்.

தாவரங்களுக்கும் விலங்கு களுக்குமான உறவு குறித்து மணிக்கணக்கில் பேசுகிறார். அரிசி வகைகளுக்கான பாதுகாப்பு மையத்தை முதன் முதலில் 1990ம் ஆண்டு மேற்கு வங்கத்திலுள்ள பாங்குரா மாவட்டத்தில் தொடங்கியிருக்கிறார். பாங்குராவின் தேவத்ரா வனப்பகுதியை ஒட்டிய நிலம், தேவாலய பாதிரியார் ஒருவருக்கு சொந்தமானது. அதில் அவர் நட்டிருந்த 300 தேக்கு மரங்களையும் சில அரிய மரங்களையும் உரிமையாளர் அனுமதியின்றி வனத்துறை வெட்டியிருக்கிறது.

கொதித்துப் போன டெப், கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். ஊடகங்களும் இந்த விஷயத்தை ஹைலைட் செய்தன. இதனால் மாநில அரசுக்கு நெருக்கடி முற்றியிருக்கிறது. உடனே சட்டத்துக்குப் புறம்பாக காட்டில் நுழைந்தார்கள் என்று சொல்லி டாக்டர் டெப் மற்றும் அவரது உதவியாளர் மீது வழக்குப் பதிவு செய்தது.

11 ஆண்டுகளுக்கும் மேல் தொடரும் இந்த வழக்குக்காக வாரம்தோறும் பிஷ்னுபூர் கோர்ட்டுக்கு விசாரணைக்காக சென்று வருகிறார். இதுதவிர பன்னாட்டு விதை நிறுவனங்களின் மிரட்டல், அரசு புலனாய்வுத்துறையின் ரெய்டு என மறைமுக அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. என்றாலும் இதுகுறித்தெல்லாம் டாக்டர் டெப் கவலைப்படுவதில்லை. அமெரிக்க / ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் இயற்கை விவசாய வகுப்புகள், விவசாயிகளுக்கான பயிற்சிப் பட்டறைகள், விதை தேடல், மரபணு மாற்றப்பட்ட பயிர்களை எதிர்ப்பது... என தன் களப்பணியை தொடர்கிறார்.

2011ம் ஆண்டு ஒடிஷாவுக்கு இவர் இடம்மாறினார். காரணம், பருவச்சூழல் இங்குதான் ஏதுவாக இருக்கிறதாம். டெப்பின் ஈடுபாட்டைப் பார்த்து அரிசி வகைகளை ஆராய்ச்சி செய்வதற்கான ஆய்வுக்கூடம் ஒன்றை கொல்கத்தாவில் கட்டிக் கொடுத்திருக்கிறார் இயற்கை ஆர்வலர் ஒருவர். ‘‘அரசு மற்றும் தனியார் குடோனில் ஏராளமான அரிசிகள் தூங்குகின்றன. இதைப் பார்க்கும்போது மார்ச்சுவரியில் உறங்கும் சடலங்கள்தான் நினைவுக்கு வருகிறது.

40 ஆண்டுகள் கழித்து இப்பயிர்களை விளைவித்தால் அதில் நோய் எதிர்ப்பு சக்தி எப்படி இருக்கும்? விதைகள் இருக்கவேண்டிய இடம் நிலம்தான். வெள்ளத்தை தாங்கும், உவர் நில நெற்பயிர்கள், வெவ்வேறு பருவநிலைகளுக்கான நெற்பயிர்கள் என பிரித்து பயிரிட்ட நம் தேசத்து விவசாயிகள்தான் அறியப்படாத அசல் நாயகர்கள். குடும்பத்தின் கவுரவமாக விளங்கும் ஒரு சின்னத்தை சந்தையில் விற்போமா? அப்படித்தான் உள்நாட்டு அரிசிகளும் நம் கவுரவச் சின்னங்கள்...’’ அழுத்தமாக சொல்கிறார் டாக்டர் டெபல் டெப்.                                    

பசுதா பண்ணை

ஒடிஷாவின் தென்பகுதியில் இருக்கிறது ராயகடா. இங்குள்ள பிஸாம் மலைப்பகுதியில் கம்பீரமாக நிற்கிறது ‘பசுதா’ பண்ணை. ‘பசுதா’ என்றால் அன்னை பூமி என்று அர்த்தம். மேற்குவங்கத்தின் பாங்குராவில் பல்துறை ஆய்வு மையத்தின் (cintdis) களப்பணிக்கான இடமாக உருவான ‘பசுதா’, 2010ல் அறக்கட்டளையாக மாறியது. டெப், ததாகதா, மிதா, டெப்துலால், அவிக் ஆகியோர் இதன் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

களிமண், கற்கள், எலுமிச்சை, வைக்கோல் கூரைகள் கொண்டு கட்டப்பட்ட சூழல் கட்டிடமே இதன் தலைமையகம். ஆண்டுதோறும் விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பங்கேற்கும் இயற்கை விவசாய மாநாடு இங்கு நடைபெறுகிறது. மரபு விதைகளை பாதுகாப்பதும், இயற்கை விவசாயத்தை காப்பதும் இப்பண்ணையின் லட்சியம்.

ரிகி (Vrihi) விதை வங்கி

1997ம் ஆண்டு பல்துறை ஆய்வு மையத்தில் தொடங்கப்பட்ட ‘ரிகி’ வங்கி, உள்நாட்டு அரிசி வகைகளை பிரசாரம் செய்வதோடு, வணிக நோக்கமற்ற அரிசி வகைகளை விளைவிக்க ஊக்கமளிக்கிறது. கிழக்கிந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விதை வங்கி என இதைச் சொல்லலாம். 2009ம் ஆண்டு ரிகி விதை வங்கிக்கு இந்திய அரசின் தேசிய தாவர மரபணு காவலர் விருது வழங்கப்பட்டது.

இதில் இணைந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை (2016) - 3,600 பங்கேற்ற மாநிலங்கள் - 10 பரிமாற்றமான அரிசி வகைகள் - 410