ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 16

வெங்கட்சாமிநாதன், கொள்கை சார்ந்து எழுதக்கூடியவர்களை ஒருபோதும் ஏற்காதவர். அதைவிட கொள்கை சார்ந்து எழுதுவதன் மூலம் அவர்கள் தங்கள் கோஷங்களை முன்வைக்கிறார்கள் என்பதுதான் அவர் கருத்தாக இருந்தது. அவர் எந்த இடத்திலும், தான் கொண்டிருந்த கருத்துகளுக்கான தர்க்க நியாயங்களை நிறுவாமல் இருந்ததில்லை. போகிற போக்கில் எழுத்தையும் எழுத்தாளர்களையும் அடித்து நொறுக்குவதாக தன் விமர்சனம் அமைந்துவிடக் கூடாது என்பதில் கறாராகவே இருந்திருக்கிறார்.

‘மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்’, ‘இலக்கிய ஊழல்கள்’ ஆகிய நூல்களில் அந்தக் கறார்த்தன்மையை கவனிக்கலாம். நீதியைப் பறைசாற்ற எழுதப்படும் இலக்கிய எழுத்துகள் அதே நீதியோடு இருக்கவேண்டும் என்றே அவர் எண்ணினார். ஆனால், அவருடைய நீதி என்பது ஆரிய நீதியாகவும் மார்க்சியத்துக்கு எதிரான நீதியாகவுமே புரிந்துகொள்ளப்பட்டன.

‘ஒரு நல்ல படைப்பைக்கூட எழுதாத வெங்கட் சாமிநாதனுக்கு படைப்பிலக்கியத்தைப் பற்றி கருத்து சொல்ல என்ன தகுதி இருக்கிறது’ என்றுதான் அவருக்கு எதிரானவர்கள் அவர்மீது விமர்சனம் வைத்தார்கள். விமர்சனத்தை எழுதக்கூடிய அவர் தன்மீது வைக்கப்பட்ட எந்த விமர்சனத்தாலும் காயப்படவில்லை என்பது முக்கியமானது. தன் கருத்துக்கு எதிரானவர்களை தன் நூலுக்கு முன்னுரை எழுதித்தரும்படி கேட்டு, அம்முன்னுரையை அட்சரம் பிசகாமல் பிரசுரிக்கும் துணிச்சல் அவருக்கிருந்தது.

‘தன்மீது விமர்சனம் வைப்பவர்களை, தான் எப்படி எடுத்துக்கொள்கிறேனோ அதுமாதிரியே தன்னையும் தன்னுடைய விமர்சனத்தையும் பிறர் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று அவர் விரும்பினார். ‘Poetic reality’ மற்றும் ‘analytical reality’ இரண்டின் ஊடாகவே அவர் தன் விமர்சனத்தை கட்டமைத்தார். கவித்துவ போஷாக்கு என்ற பதம் அவர் கட்டுரைகளில் இருந்து நான் தேர்ந்துகொண்டது.

அரைக்கால் டிராயரணிந்து இலக்கியக் கூட்டத்திற்குப் போய்வந்த நான், முழுக்கால் சட்டையணியும் பருவத்தில்தான் அவரை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அவருடைய விமர்சனக் கட்டுரைகளை ஊன்றிப் படித்ததன் விளைவாக நல்ல இலக்கியம் பிடிபட்டது. அவர் நல்ல இலக்கியம் என்று நிறுவ முயல்வது மக்களுக்கு எதிரானது என இடதுசாரிகள் கட்சி கட்டினாலும், மக்களைப் புறந்தள்ளியதே நல்ல இலக்கியம் என்று அவர் எங்கேயும் எழுதியதாகத் தெரியவில்லை.

ஒருவேளை அதைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு என் இலக்கிய அறிவு விசாலமடையவில்லையோ என்னவோ. அவர், ஒவ்வொரு கட்டுரையிலும் வெகுமக்களை இலக்கியம் என்ற பேரால் ஏமாற்றாதீர்கள் என்றுதான் எழுதியிருக்கிறார். சிறுகதை, கவிதை, நாவல், ஓவியம், நாடகம், இசை, சிற்பம், கூத்து, திரைப்படம் என அத்தனை துறைகள் சார்ந்தும் அவர் எழுதியிருக்கிறார்.

‘பாலையும் வாழையும்’ என்ற கட்டுரையில் வடிவமைத்த அதே சட்டகத்தை வைத்துத்தான் பின்வந்த ஐம்பது ஆண்டுகளும் இலக்கியத்தை அவர் அளந்தாரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கால ஓட்டத்திற்கு ஏற்ப அவருமே சில மனத்தடைகளைக் கடந்திருக்கிறார். தன்னுடைய கருத்துகளில் பார்க்கத் தவறிய பகுதிகளை மீளவும் எழுதி தன்னைப் புதுப்பித்திருக்கிறார்.

வெ.சா.வை வாசிக்கத் தொடங்கி அவரை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட சந்தர்ப்பத்தில்தான் ‘கணையாழி’யில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. அவர் எழுத்துகளை வாசித்து இருந்தாலும் அவருடனான அறிமுகமென்பது தாமதமாகத்தான் கிடைத்தது. அப்போது அவர் டில்லியில்தான் இருந்தார். ராணுவப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றியதாகக் கேள்வி. என்னுடைய ‘மனப்பத்தாயம்’,
 
‘பஞ்சாரம்’ ஆகிய நூல்களுக்கு அவர் எழுதிய விமர்சனக் கடிதம்தான் அவருக்கும் எனக்குமான அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷின் வாயிலாக நூல்களைப் பெற்றதாகவும், எழுதத் தோன்றியதால் விமர்சனம் எழுதியதாகவும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். அக்கடிதம் என் கைக்குக் கிடைக்கும்வரை அவர் என்னுடைய கவிதைகளை முற்றாக நிராகரிப்பார் என்றுதான் நினைத்திருந்தேன்.

அடர்த்தியும் ஆழமும் நிறைந்த அவருடைய விமர்சனக் கட்டுரைகளை வாசித்த யார் ஒருவரும் அப்படித்தான் கருதுவார்கள். இலக்கிய ஜாம்பவான்களாக அறியப்படும் பலரையும் கேலியும் கிண்டலுமாக விமர்சிக்கக் கூடிய வெங்கட் சாமிநாதன், என்னைப் பற்றியெல்லாம் எழுதுவார் என்று யூகிக்க வாய்ப்பில்லை. ஆனால், அவர் எழுதியிருந்தார். அந்த விமர்சனக் கடிதம் வியப்பு கலந்த பரவசத்தை என்னுள் பரவவிட்டது.

நான் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவருடைய விமர்சனம் அமைந்திருந்தது. ‘பல நேரங்களில் யுகபாரதி எனக்கு புதுமைப்பித்தனையும் பிச்சமூர்த்தியையும் நினைவுபடுத்துகிறார். ஒருவரிடத்தில் கேலியும் மற்றவரிடத்தில் விடம்பனமும். இரண்டிலும் சமூக விமர்சனம். இருவரிடமும் கவிதை யாப்பை, சந்தத்தை, முற்றாக ஒதுக்கியதாக சொல்ல முடியாது. அதற்காக அதையே கட்டியழுது, கருத்தையும் கவிதையையும் கோட்டை விட்டவர்களும் இல்லை’ என்று நீளும் அந்த விமர்சனக் கட்டுரை, ‘என் பார்வையில் கவிதைகள்’ என்னும் நூலில் இடம்பெற்றிருக்கிறது.

அந்நூலில் நான் உள்பட பல இளம் கவிஞர்களின் கவிதைகள் குறித்து வெ.சா. எழுதியிருக்கிறார். 1960ல் எழுதத் தொடங்கிய அவர் இரண்டாயிரத்தி சொச்சம்வரை வெளிவந்த படைப்புகளை விமர்சித்திருக்கிறார். ஒரு விமர்சகர், இவ்வளவு நீண்ட காலம் விமர்சனத் துறையில் பங்களிப்புச் செய்ததில்லை. எதிர்க் குரலாகவும் தனிக்குரலாகவும் அவர் சதா தன் வழியில் பயணப்பட்டிருக்கிறார்.

அந்தப் பயணத்தில் அவருக்கு எந்த ஆதாயமும் கிடைத்துவிடவில்லை. தமிழ், தன்னுடைய இலக்கியச் செழுமையை அவர் மூலம் கண்டடைந்தது. அவர் வெற்றுக் கூச்சலில் இருந்து நல்ல சங்கீதத்தைத் தரம் பிரித்தார். மோசமான சேஷ்டைகளில் இருந்து அரிய அபிநயங்களை நாடகங்களுக்குக் கடத்தினார். ‘அக்ரஹாரத்தில் கழுதை’ என்னும் ஜான் ஆபிரஹாமின் திரைப்படத்திற்கு மரியாதை செய்தார். நல்ல இலக்கியத்தை வரும் காலத்திற்கு காட்டிச்செல்வதே அவர் வாழ்வாக இருந்திருக்கிறது.

எனினும், கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு வழங்கிய இயல் விருதைத் தவிர அவர் எழுத்துகளுக்கு எவ்வித கெளரவமும் அந்தஸ்தும் அளிக்கப்படவில்லை. சிறு சிறு பத்திரிகைகளில் அவர் ஓயாமல் எழுதிக்கொண்டே இருந்தார். கண்ணில் படும் நல்ல சிறுகதையை, கவிதையை மெச்சினார். கவிதைபோல ஏமாற்று செய்தால் கண்டித்தார். ஒரு பத்திரிகை எத்தனை பிரதிகள் விற்கும் என்று கேட்டுக்கொண்டு அவர் எழுதியதில்லை.

பரவலாக அறியப்படாத பல சிற்றிதழ்களில் அவர் எழுதியிருக்கிறார். எதன்மூலமும் தன் விவாதத்திற்கு வலுசேர்க்க முடியும் என அவர் நம்பினார். அதிகாரமோ கூட்டமோ அவருடைய விமர்சனத்தைத் தீர்மானிக்கவில்லை. கடைசிவரை தன்னுடைய இருப்பு குறித்த இலட்சினை இல்லாமல்தான் அவர் செயல்பட்டிருக்கிறார். மார்க்சீய மறுப்பாளராகவும் திராவிட இயக்க எதிர்ப்பாளராகவும் புரிந்துகொள்ளப்பட்ட அவர், ஒரு சமயத்தில் கலைஞர் கருணாநிதியின் படைப்புகளையும் திராவிட இயக்க கருத்துக்களையும் விமர்சித்து காத்திரமாக எழுதுகிறார்.

அதே சமயத்தில் அவருடைய மகளான கனிமொழியின் கவிதைகளில் உள்ள உண்மையைத் தொட்டுக் காட்டுகிறார். இந்த முரணிலிருந்துதான் அவருடைய எழுத்து ஜீவிதத்தை அல்லது சத்தியத்தை சந்தேகிக்க முடியாமல் போகிறது. ஒரு பெருங்கூட்டம் தன்னுடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கக்கூடும் என அவர் அஞ்சியதில்லை. மனதில் பட்டதை எந்த முகமூடியும் அணியாமல் வெளிப்படுத்துபவராக இருந்திருக்கிறார்.

எத்தனைபேர் தன்னுடைய எழுத்துகளையும் கருத்துகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்னும் எதிர்பார்ப்பு அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஆற்றொழுக்காக அவர் எழுதிச்செல்லும் நடை, எதிரே இருப்பவருடன் உரையாடுவது போலிருக்கும். பெரிய பெரிய தர்க்கங்களைக்கூட வெகு எதார்த்தமான மொழியில்தான் எழுதிச்செல்கிறார். தன்னுடைய கருத்துக்கு வலுசேர்க்கும் மேற்கோள்கள் அவருடைய எழுத்து நடையின் இயல்பிலேயே வந்து சேர்ந்துகொள்கின்றன.

அங்கீகாரங்களுக்காகவோ கெளரவங்களுக்காகவோ அவர் எழுதியதில்லை. மாறாக, தங்கள் படைப்பு குறித்து அவர் எழுதினால் அதுவே இலக்கிய அங்கீகாரம் என்று எண்ணும் நிலையை அவர் ஏற்படுத்தினார். அப்படிப்பட்ட வெங்கட்சாமிநாதன் என் கவிதைகள் குறித்து எழுதியதும் எனக்குத் தலைகால் புரியவில்லை. என்னைச் சந்திக்க வருபவர்களிடமெல்லாம் அக்கடிதத்தைக் காட்டி பெருமிதப்பட்டுக்கொண்டேன்.

“வெ.சா.வே உன்னை புகழ்ந்திருக்கிறார் என்றால் நீ பெரிய ஆள்தான்” என்றார்கள். “புதுமைப்பித்தனும் பிச்சமூர்த்தியும் உன் கவிதைகள் மூலம் நினைவுக்கு வருகிறார்கள் என்றால், அது சாதாரண வார்த்தையில்லை. அவருக்கு நன்றிக் கடிதம் எழுது” என்றார்கள். எனக்கோ நன்றி சொல்லி எழுத மனமில்லை. ஆதலால், ‘கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி’ என்று மட்டும் பதினைந்து பைசா போஸ்ட் கார்டை அனுப்பிவைத்தேன்.

வரும் வாரம் சென்னை வர வாய்ப்பிருக்கிறது. முடிந்தால் சந்திக்கலாம் என்று அவரும் பதில் எழுதினார். சொன்னதுபோலவே சென்னை வந்ததும் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் தொடர்பு கொண்ட அன்று மேக்ஸ்முல்லரில் ஏதோ ஒரு நாடகம் அரங்கேற்றம் நிகழ்ந்ததாக நினைவு. அங்குதான் அவரைச் சந்தித்தேன். ஆரத்தழுவிக்கொண்டார்.

“நீர் இவ்ளோ சின்னப் பொடியன்னு நெனைக்கலேய்யா. நல்லா எழுதுறீர். இன்னும் நல்லா தொடர்ந்து எழுதும். என்ன செஞ்சிக்கிட்டு இருக்கிறீர்? பிரகாச பாத்தீங்களா?” என்று ஆரம்பித்த அந்த உரையாடல் மூன்று மணிநேரம் நீடித்தது. அவரிடமிருந்து வெளிப்பட்ட வாஞ்சை, அவர் எழுத்தில் வெளிப்படும் மூர்க்கத்திற்கு சம்பந்தமில்லாமல் இருந்தது. “ஒங்க எழுத்துக்கள படிச்சிருக்கேன். எல்லாத்தையும் அடிச்சி நொறுக்குறீங்களே” என்றேன். “அடிச்சி நொறுக்குற அளவுக்கு நம்மிடம் பலமில்லய்யா.. பட்டத சொல்றேன், அது உமக்கு அடிச்சி நொறுக்குறாப்புல இருக்குது” என்றார்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்