கல்யாண் ஜுவல்லர்ஸின் கொள்ளுத் தாத்தா!



தமிழ்நாட்டு நீதிமான்கள் - 20

கோமல் அன்பரசன்

டி.ஆர்.ராமச்சந்திர அய்யர் ‘நீடூழி சிறப்பாக வாழ்க!’ பார்ப்பவர்களை எல்லாம் இப்படி மனசு நிறைய வாழ்த்தும் ராமச்சந்திர அய்யரின் சிரித்த முகமும், கனிவான பார்வையும் ஒரு காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மிகவும் பிரபலம். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் சக வக்கீல்களுக்கு மட்டுமின்றி, சென்னை மக்களுக்கும் பிடித்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார். மற்ற வக்கீல்களைப் போல் அல்லாமல், எல்லாவற்றிலும் தனி பாணி வைத்திருந்தார்.

அவற்றில் அசாத்தியமான துணிச்சலும், அபாரமான நகைச்சுவைப் பேச்சும் என்றைக்கும் அவரது பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. நீதிமன்றத்தில் வாதாடுவதற்கே துணிச்சல் தேவைப்பட்ட காலம் அது. எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் இந்திய வக்கீல்களை ஆங்கிலேய நீதிபதிகள் கிள்ளுக்கீரைகளாகவே நினைப்பார்கள். பாரீஸ்டர்களுக்கு மட்டுமே மரியாதை கிடைக்கும். அதிலும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சிலர் வெள்ளை இனவெறியோடு நம்மவர்களைப் பார்ப்பார்கள்.

அத்தகைய நீதிபதிகளுக்கு முன்பு வழக்கறிஞர்கள் பயப்படுவார்கள். ஆனால், இதற்கெல்லாம் அஞ்சாமல் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாதங்களை முன்வைத்த வெகு சில வக்கீல்களில் ராமச்சந்திர அய்யர் முக்கியமானவர். சர்.ஜான் வாலிஸ் என்ற நீதிபதி முன்பு ஒரு வழக்கு. வாதாட வந்த ராமச்சந்திர அய்யர், உயர்நீதிமன்றத்தின் ஆரம்ப காலத்தில் அளிக்கப்பட்ட பழைய தீர்ப்பு ஒன்றை மேற்கோள் காட்டி பேசத்தொடங்கினார்.

உடனே முகம் சுளித்த நீதிபதி, ‘என்ன மிஸ்டர் ராமச்சந்திர அய்யர், அரதப் பழசான வழக்கின் தீர்ப்பு அது. அதைப்போய் எடுத்துப் படிக்கிறீர்களே’ என்று அலுத்துக்கொண்டார். நீதிபதியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே அய்யர் பதில் சொன்னார். ‘மை லார்ட்… நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இந்தத் தீர்ப்பு ரொம்பவும் பழசுதான். அதற்கு ரொம்ப வயசாச்சுதான். ஒத்துக்கிறேன். இப்ப என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன்… எனக்கு ரொம்ப வயசாச்சு.

ஏன் உங்களையே எடுத்துக்கோங்க... நீங்க என்ன இளம் வயசா? உங்களுக்கும் வயசாச்சு. அவ்வளவு ஏன்? இந்த ஐகோர்ட் நம்ம எல்லோரையும் விட ரொம்ப பழசு. இதற்காக என்னை, உங்களை, இந்த கோர்ட்டை பழசுன்னு தூக்கி எறிஞ்சிட முடியுமா? பழசுங்கிறதாலே பயனில்லைன்னு சொல்லிட முடியுமா, மை லார்ட்?’ ராமச்சந்திர அய்யர் புன்னகை தவழ இதனைப் பேசி முடித்தவுடன் நீதிபதி ஜான் வாலிஸ் முகத்தில் ஈயாடவில்லை.

சுதந்திரம் வாங்கி, நம்மவர்களே நீதிபதிகளாக இருக்கும் இன்றைக்குக் கூட இப்படி துணிச்சலான வாதங்களை முன் வைப்பது அரிதிலும் அரிதானது. அடிமைப்பட்டுக் கிடந்த அன்றைக்கு ஆங்கிலேய நீதிபதியிடம் பேசுவதற்கு எத்தகைய நெஞ்சுறுதி வேண்டும்? இதில் வியப்பு என்ன தெரியுமா? ராமச்சந்திர அய்யர் பேசி முடித்தவுடன் தனது கருத்துக்காக அவரிடம் வருத்தம் தெரிவித்த நீதிபதி, அதில் இருந்த நியாயத்தைப் பார்த்து அய்யரின் கட்சிக்காரருக்குச் சாதகமாகவே தீர்ப்பும் எழுதியதுதான்.

துணிச்சலைப்போலவே நீதிமன்றத்தைச் சிரிப்பால் குலுங்க வைப்பதும் ராமச்சந்திர அய்யருக்குக் கை வந்த கலை. புதிதாக இந்தியாவுக்கு வந்த நீதிபதி ஒருவருக்கு இந்து குடும்ப சொத்து பாகப்பிரிவினை சட்டங்களைப் பற்றி பெரிதாகத் தெரியவில்லை. அத்தகைய வழக்கு விசாரணையின் போது ஏற்பட்ட சந்தேகத்தை ராமச்சந்திர அய்யரிடம் கேட்டார்.

‘மிஸ்டர் அய்யர், இந்து சட்டப்படி மாப்பிள்ளைக்கு சொத்தில் எவ்வளவு பங்கு கிடைக்கும்?’ கொஞ்சமும் யோசிக்காமல் பதில் வந்து விழுந்தது. ‘மை லார்ட்… அது மாப்பிள்ளையின் கெட்டிக்காரத்தனத்தைப் பொறுத்தது. சாமார்த்தியக்காரனா இருந்தா கிடைச்சதை எல்லாம் சுத்திக்குவான். அதான் அவன் பங்கு. அசடாயிருந்தா பெண்டாட்டியும் புள்ள குட்டிகளும்தான் மிஞ்சும். போதாக்குறைக்கு மாமனாரோட திவச செலவையும் இவன் ஏத்துக்கணும்!’ என்று ராமச்சந்திர அய்யர் சொல்ல நீதிமன்றம் சிரிப்பால் அதிர்ந்தது.

வழக்கமான வக்கீல்களைப் போல மணிக்கணக்கில் ‘கேஸ் கட்டு’களைப் புரட்டி மண்டையை உடைத்துக்கொள்ள மாட்டார். சட்டப்புத்தகங்களின் இண்டு இடுக்குகளைத் தோண்டித் துழாவிக்கொண்டிருக்க மாட்டார். படு சுட்டியான ஜூனியர்களைப் பக்கத்தில் வைத்திருப்பார். அவர்களில் மிக நம்பிக்கையான ஒருவர்தான் என்.ஏ.கிருஷ்ண அய்யர்.

இந்த வேலை எல்லாம் அவர்கள் செய்து அய்யருக்குத் தேவையான வழக்கின் அம்சங்களைப் பட்டியலிட்டுக் கொடுத்து விடுவார்கள். அலட்டிக்கொள்ளாமல், அதே நேரத்தில் வழக்கை வெற்றிகரமாக்கும் கலை அய்யரிடம் இருந்தது. சில நேரங்களில் இது சிக்கலையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதையும் புத்திசாலித்தனமாகச் சமாளிக்கும் திறனையும் அவர் பெற்றிருந்தார். இப்படித்தான் ஜூனியர்கள் தயார் செய்ததை வைத்து ஒரு முறை வாதாடினார்.

எத்தனை முறை கேட்டும் எதிர்த்தரப்பில் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கவில்லை என்று ராமச்சந்திர அய்யர் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது துள்ளி எழுந்த எதிர்க்கட்சியின் இளம் வக்கீல், ‘அய்யர் சொல்வது தவறானது. ஏற்கனவே ரூ.35 ஆயிரம் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று படபடவென பொரிந்தார். தவறு நடந்துவிட்டதை உணர்ந்த அய்யர், கண நேரத்தில் அதனைச் சமாளித்தார்.

‘மை லார்ட்.. எதிர்க்கட்சியின் வக்கீல் ஓர் இளைஞர். எனவே பொறுமையில்லாத அவசரக்காரராக இருக்கிறார். அரை நிமிடம் பொறுமையாக இருந்து அவர் கேட்டிருந்தால், நான் என்ன சொல்ல வந்தேன் என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். நான் சொல்ல வந்தது என்னவென்றால், எதிர்க்கட்சிக்காரர்கள் எந்தப் பணத்தையும் கொடுக்கவில்லை, இந்த ரூ.35 ஆயிரத்தைத் தவிர என்பதுதான்!’

நீதிபதியும் ‘அதானே!’ என்பது போல் கேட்டுக்கொண்டு, தேவையின்றி குறுக்கிடக்கூடாது என எதிர்க்கட்சி வக்கீலையும் கண்டித்தார். வெளியில் வந்ததும் தனிப்பட்ட முறையில், அந்த இளம் வழக்கறிஞரை அழைத்த ராமச்சந்திர அய்யர், அவரது முதுகில் தட்டிக்கொடுத்தார். தாமே தவறு செய்து சமாளித்ததை ஒப்புக்கொண்டு, ‘இதெல்லாம் சகஜமப்பா’ என்று சொல்லி அனுப்பினார்.

கட்சிக்காரர்களிடம் அய்யரின் அணுகுமுறையும் மாறுபட்டது. தன் கட்சிக்காரன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனை முழுமையாக ஆதரிப்பார். எதிர்க்கட்சிக்காரன் எத்தனை யோக்கியனாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார். ஊதியத்தைப் பற்றி பேசும் போதும் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார். வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக இவ்வளவு தொகை வேண்டுமென்று எப்போதும் அவர் கேட்டதில்லை. ஊதிய விஷயத்திலும் வழக்கமான கனிவுடனே கட்சிக்காரர்களை நடத்துவார்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட சிலர், வழக்கு வென்ற பிறகும் ஊதியத்தைக் கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறார்கள். தொழிலில் இத்தகைய யதார்த்தத்தோடு இருந்த அய்யர், சிறந்த பக்திமானாகத் திகழ்ந்தார். மயிலாப்பூரில் இப்போதைய அமிர்தாஞ்ஜன் நிறுவனத்திற்கு எதிரே ‘மகாலிங்க விலாஸ்’ என்ற பெயரில் அவரது பெரிய வீடு இருந்தது.

காலையில் பூஜைகளை முடித்துவிட்டு நெற்றி நிறைய பளிச்சென விபூதிப் பட்டையும், அதன் நடுவே கறுப்பு பொட்டும் மிளிர 9 மணிக்குத்தான் அலுவலகத்திற்கு வருவார். மற்ற வக்கீல்களைப் போல அடித்துப்பிடித்து ஆறேழு மணிக்கெல்லாம் அலுவலகத்திற்கு வரமாட்டார். இதைப்போல பணிகள் முடிந்ததும் மாலை நேரத்தில் நாள் தவறாமல் கோயில்களுக்குச் செல்வார்.

கார் வசதி இருந்தும் கோயிலுக்குச் செல்லும் போது மட்டும் நடந்துதான் போவார். பெரிய துறவிகளையும், ஞானிகளையும் அழைப்பது போல ‘ஹிஸ் ஹோலினஸ்’ என்று நீதித்துறை வட்டாரம் அழைத்திருக்கிறது என்பதிலிருந்து இவரின் தெய்வீகப் பணிகளை அறியலாம். வாழ்க்கையைப் போகிற போக்கில் எடுத்துக்கொண்ட டி.ஆர்.ராமச்சந்திர அய்யரின் இளமைக்காலம் அத்தனை எளிதானதாக இருக்கவில்லை.

பழைய கொச்சி சமஸ்தானத்தில் திருச்சூர் - பூங்குன்னத்திற்கு அருகிலுள்ள புஷ்பகிரி என்ற கிராமத்தில் ராம சாஸ்திரி - லட்சுமி தம்பதியரின் மகனாக ஜனவரி 4, 1860ம் ஆண்டு பிறந்தார். சீர்காழிக்குப் பக்கத்தில் இருக்கிற சித்தவல்லி என்கிற கிராமம்தான் சாஸ்திரியின் பூர்வீகம். இளம் வயதிலேயே தாயை இழந்தவர் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார்.

ஆரம்பக் கல்வியை திருக்கூர் மற்றும் திருச்சூரில் கற்ற அய்யர், மலபார் மாவட்டத்திலேயே முதல் மாணவராக வந்து கல்வி உதவித்தொகை பெற்றார். பின்னர் மேற்படிப்புக்காக சென்னை வந்து மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். சட்டக் கல்லூரியில் சேர்ந்த போது வி.கிருஷ்ணசாமி அய்யர், பி.எஸ்.சிவசாமி அய்யர் உள்ளிட்ட சக மாணவர்கள் நண்பர்களாயினர். இவர்களில் அன்றைய சென்னையில் பணக்காரர்களான வெம்பாக்கம் குடும்பத்தைச் சேர்ந்த வி.சி.தேசிகாச்சாரியுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது.

தேசிகாச்சாரி, ராமச்சந்திர அய்யர் மீது அளப்பரிய அன்பைப் பொழிந்தார். சட்டப் படிப்புக்குத் தேவையான பணம், புத்தகங்களோடு உணவு, உடைகளுக்கும் கூட ஏற்பாடு செய்து தந்து உதவினார். நண்பனின் ஆதரவோடு 1884ல் பி.எல். பட்டம் பெற்றவர், மெட்ராஸ் நகர பாரீஸ்டரான ஹெச்.ஜி.வெட்டர்பர்ன் (H.G.Wedderburn) என்பவரிடம் தொழில்  பழகுநராகச்  சேர்ந்தார்.

பின்னர் திருச்சூரில் சில காலம் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிவிட்டு, 1902ல் சென்னைக்குத் திரும்பி, வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார். சொந்த ஊரில் இவர் எழுப்பிய சீதா ராமசாமி கோயில் இப்போதும் பெயர் விளங்க நிற்கிறது. அதோடு இவர் தொடங்கிய சீதாராம் ஸ்பின்னிங் மில், தலைமுறைகளைக் கடந்து இப்போது கேரள அரசால் நடத்தப்படுகிறது.

தொலைநோக்குப் பார்வையோடு ராமச்சந்திர அய்யர் திருச்சூரில் தொடங்கிய ஆயுர்வேதா பார்மசி, இப்போதும் அவரின் வம்சாவளியினரால் நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சமூகப்பணிகளுக்காக ‘திவான் பகதூர்’ உள்ளிட்ட பட்டங்கள் அய்யரைத் தேடி வந்தன. இந்தியன் வங்கி உருவாக்கத்தில் பங்கு வகித்தார். மயிலாப்பூர் பி.எஸ்.ஹைஸ்கூல் அறங்காவலராக 30 ஆண்டுகள் இருந்தார்.

மெட்ராஸ் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவராக, எந்தப் போட்டியும் இன்றி தொடர்ந்து 14 ஆண்டுகள் செயல்பட்டார். அன்றைய தமிழ் பேசும் மாவட்ட நில உரிமையாளர்கள் தொகுதியிலிருந்து மெட்ராஸ் சட்ட மேலவைக்கு (எம்.எல்.சி) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தைலாம்பாள் என்பவரை மணமுடித்த ராமச்சந்திர அய்யருக்கு டி.ஆர்.அனந்தராம அய்யர், டி.ஆர். ராஜகோபாலன் உட்பட 10 பேர் வாரிசுகள். 1935ல் தொழிலில் இருந்து ஓய்வு பெற்று, சொந்த கிராமத்திற்குச் சென்ற அய்யர், அதே ஆண்டில் மறைந்து போனார்.

(சரித்திரம் தொடரும்...)

ஓவியம்: குணசேகர்

அபூர்வ நட்பு

வி.சி. தேசிகாச்சாரியார் - டி.ஆர்.ராமச்சந்திர அய்யர் நட்பு அபூர்வமானது. எந்தளவுக்கு நெருங்கிய பழக்கம் இருந்தாலும் ஒருவரின் வழக்கில் மற்றொருவர் முன்னிலையாவது வழக்கறிஞர் தொழிலில் அரிதானது. ஆனால், தேசிகாச்சாரியாரும், ராமச்சந்திர அய்யரும் இதனை உடைத்தனர். ஒருவருக்காக மற்றொருவர் நீதிமன்றத்திற்குச் செல்வதை இவர்கள் இருவரும் வெகு இயல்பாகச் செய்து வந்தனர். 1919ல் தேசிகாச்சாரி மறையும் வரை இருவரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தனர்.

பெயர் சொல்லும் கொள்ளுப்பேரன்!

டி.ஆர்.ராமச்சந்திர அய்யரின் வாரிசுகளில் மூத்த மகனின் வழி வந்த பேரன் டி.ஆர்.ராமச்சந்திரன் மட்டுமே தாத்தாவைப் போல வழக்கறிஞராகி, சென்னையில் தொழில் நடத்தினார். அவரது மகன்களான டி.ஆர்.ராஜகோபாலன், டி.ஆர்.ராஜாராமன் ஆகியோர் இப்போது சென்னையில் மூத்த வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள்.

இவர்களில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய டி.ஆர்.ராஜகோபாலன், தன்னுடைய கொள்ளுத்தாத்தாவைப் போலவே தெய்வீக சிந்தனையுடன் பல்வேறு முக்கிய ஆலயங்களின் நிர்வாக பொறுப்புகளிலும் உள்ளார். டி.ஆர்.ராமச்சந்திர அய்யரின் சகோதரரான டி.ஆர்.கல்யாணராம அய்யரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஜவுளி, நகைத்தொழிலில் புகழ் பெற்று விளங்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தினர்.