கார்ப்பரேட் சாமியார்கள்-கே.என். சிவராமன்

தத்துவங்களைப் பற்றிய பேச்சு எப்போதும் அரசியல் சார்ந்தது. அரசியல் பற்றிய பேச்சு அறங்களின் தேர்ந்தெடுப்பு சார்ந்தது. அறங்களைப் பற்றிய பேச்சு எப்போதும் சிக்கலானது. ஏனெனில் அது மீண்டும் தத்துவங்களையும் அரசியலையும் தனது துணையாகக் கொள்கிறது. இந்தச் சூழல்களுக்கு நடுவே நாம் எந்தப் புள்ளியில் இருக்கிறோம்... எந்தத் திசையை நோக்கி நகர்கிறோம்? தெரிந்து கொள்ளும் முயற்சியில் வேறு வழியின்றி வரலாற்றில் சிக்கிக் கொள்கிறோம்.

சிக்குகிறோமா அல்லது வரலாற்றில்தான் விடுதலை அடைகிறோமா? முழுமையான பதிலை தர முடியாவிட்டாலும் வரலாற்றுடன் எப்போதும் வினை புரிந்துகொண்டே இருக்கிறோம். மனித சமூகத்தின் பழங்கால நிறுவனமே மதம். சிறு சிறு குழுக்களாக வாழ்ந்த மனிதர்களை ஒரு பெரும் சமூகமாக ஒருங்கிணைத்து வாழ்வியல் முறைகளை ஒழுங்குபடுத்தவே மத நிறுவனமும் அதற்கான தலைமையும் உருவானது.

இதன் தலைவர், கடவுள். அவரது கட்டளையை ஏற்றுச் செயல்படுத்துபவர் மத குரு. சமூக வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில் அரசும் அரசுத் தலைமையும் உருவாயின. காலப்போக்கில் கடவுள் - மத குரு - அரசன் ஒன்றிணைந்தனர். இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம்... என எந்த மதமாக இருந்தாலும் அவை அனைத்தும் நிறுவனங்கள்தான். இதை வழிநடத்த காலத்துக்கு ஏற்ப COO அல்லது GM அல்லது MD-க்கள் ‘மத குரு’ என்ற பெயரில் தோன்றுகிறார்கள்.

தங்கள் ‘நிறுவனத்துக்கு’ ஏற்ற ஊழியர்களை உருவாக்குகிறார்கள். வேத மறுப்பை முதன்மையாகக் கொண்ட பவுத்தமும் சமணமும் இல்லையேல் இந்தியா முழுக்க ஒரு நேர்கோட்டில் வணிகம் நிலைபெற்றிருக்காது. இதை எதிர்த்த வேளாளர்களின் எழுச்சியே சைவ, வைணவ பக்தி இயக்கங்கள். வயல்வெளிகள் சூழ்ந்த பகுதிகளில் ஆலயங்கள் அமைக்கப்பட்டது தற்செயலானதல்ல.

ஒவ்வொரு காலத்திலும் எந்த சாதி / சமூகம் Economic based அதிகாரத்துக்கு வருகிறதோ... அந்த சாதி / சமூகம் சார்ந்த MD அல்லது GM மத நிறுவனத்தை வழிநடத்துவார். இதன் நவீன வெர்ஷனே கார்ப்பரேட் சாமியார்கள். மனிதன் அனுபவிக்கும் அனைத்து பிரச்னைகளும் சமூக முரண்பாட்டின் விளைவே. இதை உணராத வரை சாமியார்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள்.