கார்ப்பரேட் சாமியார் - பிசினஸும் சர்ச்சையும்- டி.ரஞ்சித்

பாபா ராம்தேவ்: ஐஐஎம் மாணவர்களைவிட அசத்தலாக வியாபார உத்திகளை வகுத்து பிசினஸில் விளையாடுகிறார் ராம்தேவ். பதஞ்சலி நூடுல்சில் புழு, ரசாயனம் இருப்பதாக அவ்வப்போது ஆரோக்கியம் பற்றி சில அமைப்புகள் கிலி கிளப்புகின்றன. மட்டுமல்ல, பாபாவின் மருந்துப் பொருட்களில் விலங்குகள் எச்சங்களையும் பயன்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஜக்கி வாசுதேவ்: பசுமை இயக்கம் எனும் பெயரில் மரம் நடுவதும், கிராம அபிவிருத்தி எனும் பெயரில் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தப்போவதாகவும் சொல்லிக்கொண்டாலும் வேர்ல்ட் டூர் அடித்து யோகாவையும், தியானத்தின் மகிமையையும் பேசி பயிற்சி கொடுப்பதே ஜக்கியின் ஸ்பெஷாலிட்டி.

இவரது படம் பதிந்த பிஸ்கட், வேட்டி, சோப்பு, மூலிகை தேயிலை, ஊறுகாய், நகைகள், பனியன், லிங்கம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்துவருகிறார். இந்த சாமியாரின் கடையில் ஒரு தோசை மட்டுமே ரூ.150க்கு விற்பதாக சிலர் புலம்பி வருகின்றனர். இதுபோலவே மற்ற பொருட்களும் அநியாய விலையில் விற்கப்படுகின்றன.

பைரவி என்று எழுதப்பட்ட ஒரு வால்போஸ்டரில் வெறும் 2 கண்கள் மட்டுமே இருக்கும். இது 1000 ரூபாய்க்கும் அதிகமாக விலைபோகிறது. ஆன்லைனிலும் கைவினைப் பொருட்கள், உடைகள், இரவு அணியக்கூடிய பேன்ட், உணவு, ஆரோக்கிய மற்றும் அழகுப் பொருட்களையும் இந்த சாமியாரின் நிறுவனம் விற்று லட்சங்களை அள்ளுகிறது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிஷங்கரின் மூலதனம் பேச்சுதான். பெங்களூரில் மட்டுமே பள்ளி, கல்லூரி, மீடியா ஆய்வு நிறுவனம் என்று இவர் நடத்திவருகிறார். ‘மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி’, ‘மூச்சுப் பயிற்சிக் கலை’ என்று இவரின் பயிற்சி வகுப்புகள் ஒரு மெகா ஈவென்ட் மாதிரியே கொண்டாடப்படுகிறது. ராயல்டி, முதலீடுகள், கட்டிட வாடகை மூலமும் இந்த நிறுவனத்துக்கு வருமானம் குவிகிறது.

ஓஷோ : ஓஷோ இறந்தபிறகு புனே நகரில் உள்ள ரூ.1000 கோடி மதிப்புடைய ஓஷோ இன்டர்நேஷனல் பவுண்டேஷனை அபகரிக்க அந்த அமைப்புக்குள்ளேயே போட்டி நிலவுகிறது. இதுதவிர ஓஷோவுடன் இருந்தபோது அவருடன் பழகியவர்கள் தொடர்ந்து அவரின் உரையை புத்தகங்களாகப்  பதிப்பித்து வருவதன் மூலமும் இந்த அமைப்புக்கு பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஆனால், பணம் யாருக்குச் செல்கிறது
என்பதுதான் கேள்விக்குறி.

அமிர்தானந்தமயி: இந்த அம்மா தன் கட்டிப்பிடி வைத்தியத்தால் மட்டுமே இவ்வளவு புகழ் அடைந்திருக்கிறார். இந்தியாவில் என்னவிதமான பேரிழப்பு ஏற்பட்டாலும். அதை நீக்க உதவிக்கரம் நீட்டுவார். இதற்காக இவருக்கு வரும் ஓராண்டு நன்கொடை மட்டுமே சுமார் ரூ.80 கோடி. அம்மா பஜன் பாடல்கள் கேசட்டுகளாக, டிவிடிகளாக, சிடிகளாக விற்பனையில் கனஜோர். அம்மா மாதிரியான பொம்மையின் விலையை வைத்தே அம்மாவின் பிசினசைக் கணித்துவிடலாம். விலை சுமார் ரூ.3000 முதல் ரூ.10000 வரை.