விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 16

‘‘என்னடா செய்யற..?’’ திடுக்கிட்ட கிருஷ்ணன், சட்டென்று நிம்மதியானான். கேட்டவள் ஐஸ்வர்யாதான். ‘‘தூங்கலை..?’’ ‘‘இதை நான் கேட்கணும்...’’ கால்களை நீட்டியபடி அவனருகில் அமர்ந்தாள். ‘‘மணி மூணாகப் போகுது...’’ ‘‘அவ்வளவு நேரம் ஆகிடுச்சா..?’’ tabஐ மூடினான். ‘‘கும்பகர்ணன் மாதிரி கார்ல தூங்கினா இப்படித்தான்...’’ tabஐ பிடுங்கினாள். ‘‘என்ன படிச்சுட்டு இருந்த..?’’ ‘‘நாகர்களின் வரலாறு...’’

‘‘யூ மீன் பாம்புகளோட கதையா..?’’ ‘‘இல்ல... நாகர்கள் வேற... பாம்புகள் வேற...’’ ‘‘ஆரம்பிச்சுட்டியா...’’ tabஐ அவன் மடியில் தூக்கிப் போட்டுவிட்டு கைகளை உயர்த்தினாள். தலைமுடியை கொத்தாகப் பிடித்து கொண்டை போட்டாள். பிரம்ம முகூர்த்தம் வரவிருப்பதற்கான அறிகுறிகள் ரங்கநாதர் கோயிலில் தெரிய ஆரம்பித்தன. ‘‘நாகர்களின் வரலாறுக்கும் நாம இப்ப தேடி வந்ததுக்கும் தொடர்பிருக்கா..?’’

‘‘இருக்குனுதான் நினைக்கறேன்...’’ கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். ‘‘அப்ப நீ படிச்சதை சொல்லு...’’ அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளினாள். ‘‘ஆ... எதுக்குடி கிள்ளின..?’’ ‘‘தூக்கம் கலையத்தான்...’’ சிரித்துவிட்டான். ‘‘நாம தாராவை தேடி ஸ்ரீரங்கம் வந்திருக்கோம்...’’ ‘‘ஆமா...’’ ‘‘அவளோட டிராவல் ஆரம்பமானது ஒரு முட்டைலேந்து...’’ ‘‘யெஸ்...’’ ‘‘முட்டைக்கும் பாம்புக்கும் தொடர்பிருக்கு...

தவிர அவ சொன்ன கார்க்கோடகன் என்கிற பெயரும் பாம்போடதுதான். அதோட ஸ்ரீரங்கம் ப்ளூ ப்ரிண்ட் அவளுக்கு கிடைச்சிருக்கு. இங்க... அதாவது ஸ்ரீரங்கத்துல பெருமாள் ஆதிசேஷன் என்கிற பாம்பு மேல பள்ளி கொண்டிருக்கார். பை தி வே, நாம தேடறது ஒருவேளை அர்ஜுனனோட வில்லா இருந்தா, அதுக்கும் பாம்புகளுக்கும் கனெக்‌ஷன் இருக்கு...’’

‘‘நல்ல கற்பனை வளம். அருமையா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடற... எனி வே நாலா பக்கமும் யோசிக்கறது நல்ல விஷயம்தான். பட், இதுக்கும் நாகர்களோட வரலாறுக்கும் என்ன சம்பந்தம்..?’’ ‘‘இருக்கு ஐஸ்...’’ சொன்ன கிருஷ்ணன், சிகரெட்டை பற்ற வைத்தான். ‘‘ஆக்சுவலா நாகர்கள் ஓர் இனம்.

அதை பாம்புகளோட தொடர்புபடுத்தறது கிட்டத்தட்ட அவங்களை டீகிரேட் செய்யறா மாதிரி. ஆனா, அப்படித்தான் காலம் காலமா நாம செய்துட்டு இருக்கோம். கார்க்கோடகன், ஆதிசேஷன், அனந்தன், குளிகன், பத்மன், வாசுகி... இதெல்லாமே நாக இனத்தோட தலைவன், தலைவி பேரு. அதை பாம்புகளுக்கு சூட்டி அவங்களை கேவலப்படுத்தறோம்...’’

‘‘இன்னமும் நான் கேட்டதுக்கு பதில் வரலை...’’ ‘‘அதுக்குதானே வர்றேன்...’’ சிகரெட்டின் கனலை சில நொடிகள் உற்றுப் பார்த்தான். ‘‘நம்ம நாட்டோட பூர்வ குடிகள்னு நாகர்களை சொல்லலாம்...’’ ‘‘ம்...’’ ‘‘இனக்குழு சமுதாயமாதானே முதல்ல மனிதர்கள் இருந்தாங்க. அப்புறம்தானே ‘அரசு’ என்கிற ஸ்ட்ரக்சர் உருவாச்சு...’’ ‘‘சோஷியல் சயின்ஸ்ல இதைப் பத்தி படிச்சிருக்கேன்...’’

‘‘அதே. டிரைபிள்ஸ் Vs கிங்டம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்துல நாகர்களோட ஆட்சிதான் இந்த நிலத்துல நடந்தது...’’ ‘‘ம்...’’ ‘‘அரசுக்கான தேவை உருவானப்ப ஓர் இனக்குழு மத்த குழுக்களை அழிச்சு தலைமைப் பொறுப்புக்கு வந்தது...’’ ‘‘ஓகே...’’ ‘‘மத்த இனங்களோட நிலங்களை அபகரிச்சு அங்க தங்களோட ராஜ்ஜியத்தை நிலை நாட்டினாங்க...’’ ‘‘ம்...’’ ‘‘இந்தத் தலைமையை ஏற்காம முரண்டு பிடிச்சவங்களை கூட்டம் கூட்டமா எரிச்சு கொன்னாங்க. அடிச்சு கண்காணா தொலைவுக்கு விரட்டினாங்க...’’

‘‘ம்...’’ ‘‘இதுல அதிகம் பாதிக்கப்பட்டது நாகர்கள்தான். இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பாதியை உயிரோட எரிச்சு கொன்னாங்க. மறுபாதியை காட்டுக்கு துரத்தினாங்க...’’ ‘‘ஓ...’’ ‘‘மகாபாரதத்துல வர்ற அஸ்தினாபுரி நகரம் இப்படி நாகர்களை எரிச்சு உருவான நிலம்தான்...’’ ‘‘என்னடா கலர் கலரா ரீல் விடற...’’ ‘‘இல்ல ஐஸ்... இந்த கோணத்துலேந்தும் யோசிக்கணும்னு சொல்றேன். இதுக்கான ஆதாரங்கள் எல்லாம் அதே மகாபார தத்துல இருக்கு. என்ன... கதையா சொல்லப்பட்டிருக்கு. அதுக்குள்ள இருக்கிற குறியீடுகளை நாமதான் தேடிக் கண்டுபிடிக்கணும்...’’

‘‘எப்படி?’’ ‘‘ஃபார் எக்சாம்பிள், ஜனமே ஜயன் சர்ப்ப யாகம் செய்ததாகவும், தட்சனையும் அவனோட இனத்தைச் சேர்ந்த நாகங்களையும் அக்னில விழ வைக்க முயற்சி செஞ்சதாகவும் மகாபாரதத்தோட முதல் பர்வமான ஆதிபர்வம் தொடங்குது. ஆனா, இந்த சர்ப்ப யாகம் முழுமையா நடக்கலை. மாறா அஸ்வமேத யாகமா டைவர்ட் ஆகுது...’’ ‘‘இந்த புராணக் கதைகள் எல்லாம் நமக்குத் தேவையா..?’’

‘‘கண்டிப்பா. ஏன்னா க்ளியர் பிக்சர் இப்பதான் கிடைக்குது. அதுவும் எதுவா இருக்கலாம்னு நான் சந்தேகப்பட்டு சென்னைக்கு புறப்பட்டு வந்தேனோ அதுவாவே இருக்கலாம்னு இப்ப நூறு சதவிகிதம் உறுதியாகுது...’’ ‘‘டேய்...’’ வார்த்தைகள் வராமல் ஐஸ்வர்யா தடுமாறினாள். ‘‘யூ மீன்...’’ ‘‘ஐ மீன் வாட் ஐ ஸே... அர்ஜுனன் அலைஸ் விஜயனோட வில் இருக்கிற இடத்துக்கான ஸ்டார்ட்டிங் பாயிண்ட்தான் தாராவுக்கு கிடைச்சிருக்கு!’’

‘‘இரு. குதிக்காத. இது வெறும் சந்தேகம்தானே?’’ ‘‘ஊகங்கள்தானே ஐஸ் உலக கண்டுபிடிப்புகளுக்கே வேரா இருக்கு...’’ ‘‘சரிடா. பாம்புகளுக்கும்... சாரி, நாகர்களுக்கும் அர்ஜுனனோட வில்லுக்கும் ஏதோ கனெக்‌ஷன் இருக்கறதா சொன்னியே... அப்ப நம்மை மாதிரியே விஜயனோட வில்லை எடுக்க நாகர் இனத்தோட இன்றைய ஜெனரேஷனும் முயற்சி செய்யும்தானே?’’ ‘‘...’’ ‘‘தாராவுக்கு ஏன் லீட் கிடைக்கணும்?’’ ‘‘...’’

‘‘ஒருவேளை நாகர்களோட ரெப்ரசன்டேடிவ்வா அவ இருந்தா..?’’ ராஜகோபுரத்தை விட்டு இறங்கியதுமே அந்தப் பெண்ணை கார்க்கோடகர் பார்த்துவிட்டார். பரபரப்பு தொற்றிக் கொண்டது. மூவரையும் பார்த்தார். ‘‘அங்க பாருங்க...’’ ‘‘யாரு?’’ மனித உருவை அடைந்த அனந்தன் நெற்றியை சுருக்கினான். ‘‘தலைல மல்லிப்பூ இருக்கே...’’ ‘‘அரக்கு சுரிதாரை சொல்றீங்களா?’’ குளிகன் முணுமுணுத்தான். ‘‘ம்...’’ ‘‘அவதான் தாராவா கார்க்கோடகரே?’’ பத்மனின் குரலில் பதட்டம் தொற்றிக் கொண்டது.

‘‘ஆமா... நினைச்சா மாதிரியே ஸ்ரீரங்கம் வந்துட்டா... அவளை ஃபாலோ செய்யுங்க...’’ ‘‘எங்களால கோயிலுக்குள்ள போக முடியுமா..?’’ அனந்தனின் கேள்வி மற்ற இருவரையும் தடுத்து நிறுத்தியது. ‘‘பிராகாரத்தை தாண்டாதீங்க...’’ கார்க்கோடகருக்கு தலையசைத்து விட்டு மூவரும் தாராவை பின்தொடர்ந்தார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் அரங்கனை தரிசிக்க கூட்டம் நகர்ந்தபோது - சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு எதிர்திசையில் தாரா சென்றாள்.

மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘இங்க ராமானுஜர் சந்நிதிதானே இருக்கு..?’’ குளிகனின் கேள்வி மற்ற இருவரது மனதிலும் எதிரொலித்தது. ‘‘அதனால என்ன... பேசாம வா...’’ அனந்தனுக்கு கட்டுப்பட்டு மவுனமானார்கள். எதிர்பார்த்தது போல் ராமானுஜரின் சந்நிதிக்குள் தாரா நுழையவில்லை. அதைக் கடந்து மேலே நடந்தாள்.

ஆலயத்தை அப்பிரதட்சணமாக வலம் வருவது போல் தெரிந்தது. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘ஃபாலோ பண்றது மட்டும்தான் நம்ம வேலை... கேள்விகளை மூட்டை கட்டி வைங்க...’’ சீறிய பத்மன் முன்னோக்கி நடந்தான். தோளைக் குலுக்கிவிட்டு இருவரும் தொடர்ந்தார்கள். எதிர்ப்பட்ட கல் மண்டபத்தின் மேல் தாரா ஏறினாள்.

தன் பூஜைக் கூடையில் இருந்து ஒரு பொருளை எடுத்து அங்கிருந்த தூணில் சாய்த்து வைத்தாள். அந்தக் கருக்கல் வேளையிலும் அது என்ன பொருள் என மூவருக்கும் தெளிவாகத் தெரிந்தது. அவிச்ச முட்டை. அதன் மீது ‘KVQJUFS’ என எழுதப்பட்டிருந்தது.

(தொடரும்)

ஆண்மைக்கு குங்பூ!

சீனாவின் குங்பூ மாஸ்டர் வெய் யாபின் கண்டுபிடித்த இடுப்பு அடி குங்பூதான் இப்போதைய ஹாட். செங்கற்களால், கைகளால் ‘அந்த’ இடத்தில் அடிப்பதும் குத்துவதும் குருவின் கோட்டா. யாபினின் சிஷ்யர்கள் ஊஞ்சலில் எக்ஸ்எல் சைஸ் மரக்கட்டையால் மாணவரின் இடும்பு எலும்பை இடிப்பது அவர்களின் பகீர் பயிற்சி. எதற்கு இது? எல்லாம் ஆண்மை சுனாமிக்குத்தான்!

சிறுத்தை சிறுவன்!

‘நாய்க்குட்டி’ என்று நினைத்து சிறுத்தைக் குட்டியை வளர்க்க ஆரம்பித்திருக்கிறான் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன். அதுவும் டீயும் பன்னும் கொடுத்து! பெற்றோரும் அவனைத் தட்டிக் கொடுத்து ‘சபாஷ்...’ என ஊக்குவித்திருக்கிறார்கள். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள்தான் பயந்து வனத்துறைக்கு புகார் அளித்தார்கள். அதிகாரிகள் சிறுத்தைக் குட்டியை எடுத்துச் சென்றபிறகே நிம்மதியடைந்திருக்கிறார்கள்!