சாஷேவில் தீர்வு



கார்ப்பரேட் சாமியார்

-பேராச்சி கண்ணன்
 
‘‘நவீன வாழ்க்கை தரும் உள / உடல் சிக்கல்களால் இந்தியா முழுவதும் உளுத்துப் போன உடல்களாக மனிதர்கள் இருக்கிறார்கள். முன்பு அறுபது வயதில் நீரிழிவு நோய் வந்தது. இப்போது, முப்பது வயதில்! அதனால், எல்லோரும் ஒரு ‘மேஜிக்கல் க்யூரை’ எதிர்பார்க்கிறார்கள். மூச்சு / தியானப் பயிற்சி செய்து உடலை சரி பண்ண முயற்சிக்கிறார்கள். இதற்கு இந்த அமைப்புகள் உதவுகின்றன...’’ என்று அழுத்தமாகப் பேச ஆரம்பிக்கிறார் தேசிய நாட்டுப்புறவியல் உதவி மைய இயக்குனரான எம்.டி.முத்துக்குமாரசாமி.

‘‘இவர்கள் கொடுக்கும் யோகாவிலும், தியானத்திலும் நல்ல ரிசல்ட் கிடைப்பதாக உணர்கிறார்கள். உதாரணத்துக்கு, ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் பயிற்சியில் மூச்சு சீராகிறது. ஈஷாவில் சில பயிற்சிகள் உடலில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில், உடல் ஆரோக்கியத்துக்கு ஒழுங்கான உடற்பயிற்சியும், முறையான உணவுப் பழக்கமும் இருந்தாலே போதும்.

ஆனால், அதை செய்வதற்கு இங்கே யாரும் தயாராக இல்லை. நம்மிடம் பாரம்பரியமாக இருக்கும் பயிற்சிகள் நன்மை அளிக்கக் கூடியதுதான். அதையெல்லாம் ஒரு கடுமையான பயிற்சியின் மூலமே அடைய முடியும். இந்த அமைப்புகள் ஷார்ட் கட்டாக, சாஷே ஷாம்பு மாதிரி இந்தப் பயிற்சிகளைத் தந்து மக்களை கவர்கிறார்கள்...’’ என்கிறார் எம்.டி.முத்துக்குமாரசாமி.