வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!கார்ப்பரேட் சாமியார்

-ஷாலினி நியூட்டன்

யோகா, ஆசிரமம் என எத்தனை காரணங்களை அடுக்கினாலும் இந்த கார்ப்பரேட் சாமியார்களின் சிறப்பே அவர்களது பேச்சுதான். வாய்தான் முதல் மூலதனம். சரி, அரசியல்வாதிகள், பண்பலை அறிவிப்பாளர்கள், பேச்சாளர்கள் இவர்களும் சுவாரஸ்யமாகத்தானே பேசுகிறார்கள்... இவர்களுக்கு ஏன் கூட்டமோ, வருமானமோ இல்லை?

அபிலாஷா (உளவியல் மருத்துவர்): இந்த கலாசாரம் ஆதி காலம் முதலே இருப்பதுதான். மனிதர்களுக்கு முக்கிய தேவையே ஆறுதல்தான். அவன் அல்லது அவளோட பிரச்னையை சரியா டார்கெட் பண்ணி ஆறுதல் சொன்னா ஒரு நம்பிக்கை வரும். அந்த நம்பிக்கையை உடைக்கவே முடியாது. இது மாஸ் ஹிப்நாடிஸம். தவிர, இதுல கண்கவர் கமர்ஷியல் யுக்தி வேற இருக்கு.

நல்லா நோட் பண்ணீங்கன்னா, அவங்க எல்லாரும் பொதுவாதான் பேசுவாங்க. அதாவது டென்ஷன் ரிலீஃப். டென்ஷன் இல்லாத மனுஷன் எங்க இருக்கான் சொல்லுங்க. இவங்க பொதுவா சொல்ற கருத்து ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா பொருந்திப் போயிடுது. அப்புறம் என்ன... பணம்தான். புகழ்தான்.

தீனதயாளன் நடராஜன் (RJ, குரல் பயிற்சியாளர்): நான் இந்த குருக்களுக்கு ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை. ஆனா, இவங்க பேசுற விஷயங்கள், தொனி மேல ஒரு பெரிய ஈடுபாடு உண்டு. யோசிச்சுப் பாருங்க... அரசியல்வாதிகள் உணர்ச்சிவசப்படுவாங்க. ஆர்ஜே, விஜேக்கள் பொழுதுபோக்கா, உற்சாகமா பேசுவாங்க. அதாவது தங்களுடைய தலைப்புக்குள்ள மட்டும்தான் பேசுவாங்க.

ஆனா, இந்த குருக்கள்கிட்ட ஒரு நிதானமும் அமைதியும் இருக்கு. தங்களுக்கு முன்னாடி உட்கார்ந்திருக்கிற ஒவ்வொருத்தரும் தங்களுக்கு ஸ்பெஷல் மாதிரி பேசுவாங்க. எல்லாத்துக்கும் மேல இன்னொண்ணு  இருக்கு. புரஃபஷனல்ஸ் செக்ஸ் பத்தி பேசினாலே கேஸ்தான். ஆனா, சாமியார்களுக்கு அந்த கட்டுப்பாடெல்லாம் இல்ல. இப்படி என்ன விளக்கம் சொன்னாலும் பேச்சால ஈர்க்கறத தாண்டிய திறமை அவங்ககிட்ட இருக்கு. அத நாம ஏத்துக்கிட்டுதான் ஆகணும்.

சாராவதி (Speech Therapist): நானும் இவங்களோட வீடியோக்களை பார்த்திருக்கேன். சாதாரண மனிதர்களுக்கு தெரியாத விஷயங்கள் இவங்க பேச்சுல இருக்கும். ஏன், நீங்களும் நானும் கூட படிச்சவங்கதான். ஆனா, நமக்கே இவங்க சொல்ற சில விஷயங்கள் புதுசா தோணும். கண்ணை மூடி கேட்டா இவங்க பேசறது ஏதோ அசரீரி மாதிரியோ இல்ல கடவுளோட குரல் மாதிரியோ ஒலிக்கும்.

கடவுள் பேசி யாரும் கேட்டதில்லை. ஒருவேளை கடவுள் பேசினா இப்படித்தான் அவர் குரல் இருக்கும்னு நம்மை நம்ப வைச்சுடுவாங்க. அப்புறம் யோகா. ரெண்டு நாள் நாம வீட்ல யோகா செய்தாலே மனசு லேசாகிடும். அப்படியிருக்கிறப்ப காட்டுக்கு நடுவுல அமைதியா செய்தா கேக்கணுமா..?