கேங்ஸ்டர் vs போலீஸ்!
-நா. கதிர்வேலன்
‘‘நிஜமா சந்தோஷமா இருக்கோம். நிறைய அவகாசம் எடுத்து செய்த ஸ்கிரிப்ட். கொஞ்ச நாளா வேற எதையும் யோசிக்கல. ‘விக்ரம் வேதா’. நீங்களே சொன்ன மாதிரி மாதவன் - சேதுபதின்னு முதல் கட்டமே பரபரப்பு தந்தாலும், எங்களுக்கும் ஒரு சின்ன டென்ஷன் மனசுக்குள்ளே இருக்கு. முடிந்த அளவு வித்யாசப்படுத்தி தருவதில் பாடுபட்டிருக்கோம்...’’ தெளிவாகப் பேசுகிறார்கள் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இரட்டையர்.
டீஸர் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கு... உண்மையில் கதையை எழுதி முடிச்ச பிறகுதான் நடிகர்களைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சோம். அதுதானே நியாயம். அப்படி வந்ததில் மாதவன் - விஜய்சேதுபதியும் இருந்தா நல்லாயிருக்கும்னு பட்டது. இதில் இரண்டு பேருமே தன் ஆன்மாக்களைக் கொடுத்திருக்காங்க. கேரக்டர்களின் அடிநாதத்தில் நிறைய காட்சிகள் நடக்கும். படத்தில் நிறைய நிகழ்கிறது. இரண்டு பேரும் உண்மையாக உழைச்சிருக்கிற இடங்கள் அவ்வளவு அழகாக வந்திருக்கு.
இரண்டு பேரையும் சேர்த்து எப்படி பயன்படுத்தினீங்க..? ஒருத்தர் பேசுற டயலாக்குக்கு பதில் பேச இன்னொருத்தர் இடம் கொடுக்கணும். அதை இரண்டு பேரும் அருமையாக செய்தாங்க. இது அனுபவத்தால் மட்டுமே வரும். எப்படி கொடுத்த இடத்தை எடுத்து அதில் தன் நடிப்பை வைக்கிறதுங்கிறது ஒரு கலை. அதில் இரண்டு பேருமே கெட்டி. ஆரம்பத்தில ரெண்டு பேரையும் சேர்த்து செய்கிற சீன்கள் 10 ரிகர்சலாகும், இரண்டு மூணு டேக் போகும்னு நினைச்சிருந்தோம். அதுக்கு நாங்க தயாராக இருந்தோம்.
எங்களுக்கு அந்த விஷயத்தில் சரியான ஏமாற்றம். ஒரு காட்சியில் நடிக்கும்போது ஒருத்தர் மட்டும் டாமினேட் பண்ணணும்னு நினைச்சிட்டால், அவர் மட்டுமே ரீச் ஆவாங்க. இன்னொருத்தர்கிட்டே பார்வை போகாது. ஒருத்தரே ‘படபட’ன்னு வசனம் பேசிட்டா அது சீன் ஆகாது. இன்னொருத்தர் சொல்றதை கேட்டுட்டு, அதை பின்பற்றி பேசுவதுதான் காட்சிக்கு அழகு. அந்த விதத்தில் மாதவன், சேதுபதி இரண்டு பேருமே அவ்வளவு நேர்த்தி.
விட்டுக் கொடுத்து இடமும் கொடுத்தாங்க. ஒருத்தர் அழகா செய்யும்போது இன்னொருத்தர் பக்குவமாக இடம் கொடுத்து விலகி நின்னாங்க. இரண்டு பேரும் சேர்ந்த நாளிலிருந்து இது நடந்தது. அடுத்தடுத்த நாள் இன்னும் அருமையாக கைகூடியது. ஒரு டயலாக்கை சொன்னோமா, போனோமான்னு பண்ற நடிகர்களை வைச்சு பண்ணினால் நமக்கு தொந்தரவே இல்லை. அது வேற விஷயம். இரண்டு பேருக்கும் சினிமாவில் இருக்கிற அக்கறையைக் குறிப்பிட்டுச் சொல்லணும்.
அவர்களுக்குள் பாராட்டிக் கொள்வார்களா? அது அடிக்கடி நடக்கும். நாங்க ஒரு இடத்தை மனசில் போட்டு வைச்சிருப்போம். சரியா அதையே சொல்லிக்குவாங்க. இரண்டு பேருக்கும் ஸ்ட்ராங் கேரக்டர்ஸ். தனித்தனியே அதற்கு அடையாளம் இருக்கு. அவங்க இரண்டு பேருக்கும் முட்டல் மோதல் படத்தில் நடந்துகிட்டே இருக்கும். ‘இந்த இடத்தில் நீங்க செய்தது சூப்பர் மேடி சார்’னு சேது சொல்ல, ‘நீங்க என்ன சும்மாவா... அந்த கேப்ல ஒரு டயலாக் அடிச்சீங்களே... அது கிளாஸ்’னு மேடி சொல்லுவார்.
மாதவனுக்கு, மாதவனாகவே நடிக்கணும்ங்கிற எண்ணம் கிடையாது. அவர் எங்கோ, எப்படியோ, எந்தவிதத்திலோ மாறிட்டார். ஒரு சுவிட்ச் போட்ட மாதிரி கூட இது ‘டக்’னு நடந்திருக்கலாம். அவர் ‘அன்பே சிவத்’தில கமல் சாரை முன்னாடி வைச்சுக்கிட்டு நடிச்சதெல்லாம் சும்மாயில்லை. அதிலேயே நின்னார் மேடி... படத்தில் மேடியும், சேதுபதியும் அவங்கவங்க ரோலை அழகுபடுத்தினாங்க.
இவங்க இரண்டு பேரை வைச்சே படத்தை கவனிக்க வைச்சிட்டிங்களே... இது பிளான் பண்ணினதில்லை. ‘என்னப்பா டபுள் ஹீரோ சப்ஜெக்டா வைச்சிருக்கீங்க... கஷ்டப்படப் போறீங்க’ன்னு சொன்னவங்க அனேகம். கேரக்டர்கள் மேலே ஆர்வம் ஆகித்தான் இரண்டு பேருமே உள்ள வந்தாங்க இதனால் வியாபாரம், கவனம் பெறுவது கூடியிருக்கலாம். இரண்டு பெரிய நடிகர்களைக் கொண்டு வந்து சேர்க்கிறதில் அதில் இருக்கிற எதிர்பார்ப்பையும் நாங்க புரிஞ்சு வைச்சிருக்கோம். அது படத்திலும் தெளிவாகத் தெரியும்.
நரைச்ச தாடியோட விஜய் சேதுபதி... இப்ப களத்தில் நிற்கிற நடிகராச்சே... ஒற்றை வரியில் சொன்னால் இது போலீஸ் - கேங்ஸ்டர் ஸ்டோரி. விக்ரமாதித்தன் - வேதாளம் கதைன்னு இருக்குல்ல, அதையே பயன்படுத்தியிருக்கோம். கதைப்படி சேதுபதி வாழ்க்கையில் எல்லாம் பார்த்தவர், ஏராளமாக அடிபட்டவர். அதற்கு ஒரு மெச்சூரிட்டி வரணும். அது லுக்கிலும் வந்தால் ரொம்ப நல்லாயிருக்கும். இப்பதான் சினிமா ரொம்ப மாறிடுச்சே.
அஜித், விக்ரம், சேதுபதி எல்லாம் கேரக்டர் இழுத்த இழுப்புக்கு வர்றாங்க. ஹீரோவாகவே இருந்தது போய், கேரக்டருக்கு என்னவெல்லாம் செய்யலாம்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இது நல்ல ட்ரெண்ட். கேரக்டரை நம்ம லெவலுக்கு கொண்டு வரணும்னு நினைச்சது போய், கேரக்டருக்குள்ளே நாம் எந்த அளவுக்கு போகணும்னு நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்த இடத்தில் ஆரம்பத்திலிருந்தே இருக்கார் விஜய் சேதுபதி.
படங்களுக்கு நடுவில் இவ்வளவு இடைவெளி ஏன்? நாங்க ஒரு சப்ஜெக்ட் எழுதி முடிக்கவே இரண்டு வருஷம் ஆயிடும். ஸ்கிரிப்ட் முழுமையாக பைண்ட் ஆன பிறகே புரொடியூசரை தேடுகிற பணி. ஒன் லைன் சொல்லிட்டு, அட்வான்ஸ் வாங்கிக்கிட்டு என்ன பண்றதுன்னு முழிச்சிக்கிட்டு நிக்கிறது கிடையாது. பணம் வேணும்தான். ஆனா, அதை தேடிப் போறது கிடையாது. நல்ல உழைப்புக்குப் பின்னாடி அதுவே தேடிட்டு வருகிற இடங்கள் அமையும்னு நம்புறோம். Behind the scenes
* புஷ்கர், காயத்ரி இருவரும் லயோலா கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். பின்பு காதலித்து மணம் புரிந்தார்கள். * ‘ஓரம் ேபா,’ ‘வ குவாட்டர் கட்டிங்’ - இதற்கு முன்பு செய்த படங்கள். ‘ஓரம்போ...’ அதன் நவீனத்துவத்தில் பாராட்டுப் பெற்ற படம். * முழுப் படத்திலும் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொடுத்துவிட்டார். இன்னும் மாதவன் பகுதி மட்டும் பாக்கியிருக்கிறது. * வியாசர்பாடி, பெரம்பூர் மற்றும் சென்னையில்தான் ஷூட்டிங். * வியாசர்பாடியில் விஜய் சேதுபதியை வைத்து படப்பிடிப்பு நடத்தியபோது 15 ஆயிரத்துக்கும் மேலே கூட்டம் அவரை சூழ்ந்துகொள்ள... அவர்களோடு செல்ஃபி எடுத்து ஒன்றாகக் கலந்துவிட்டார் சேதுபதி. அடுத்த நாட்களில் ஷூட்டிங் அமைதியாக நடந்தது. * புஷ்கரோடு ஒன்றாகப் படித்தவர் விஜய் ஆண்டனி.
|