நாடோடிகளின் தடங்கள் வழியே கலையைத் தேடும் அற்புத மனிதர்!



-நா.கதிர்வேலன்

ஓவியர் சீனிவாசன் நடராஜன் ஒரு  பக்கம் வேரூன்றி நிற்கிறார். இன்னொரு பக்கம் கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிறார். அரூப சித்திரமாய் வெளிப்படும் அவரது படைப்புகள் யாதொன்றின் பாதிப்பும், சாயலும் இல்லாதவை. காலையில் இருட்டும் வெளிச்சமும் மோதி மோதி உடைந்து கொண்டிருந்தபொழுது, ஆரம்பித்தது எங்களிடையேயான உரையாடல்.

படைப்பில் தனித்துவ அழகைப் பெற்றுக் கொண்டு, இதுவரை இல்லாத புது வகையில் ‘விடம்பனம்’ நாவலைக் கொடுத்துவிட்டு, இமயமலையின் உச்சி வரை போய் ஏழெட்டு நாட்கள் இருந்துவிட்டு வந்தவரைப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ‘‘சின்ன வயசுல பள்ளிக்கூடம் போன நேரம் போக கோயிலுக்கு வர்ணம் பூசுகிறவர்களோடு வேலைக்குப் போயிருக்கேன். அந்த வயசுல பசங்க விளையாடிக்கிட்டு இருப்பாங்க. சூர்யமூர்த்தின்னு ஒரு ஓவியர் இருந்தார். என்னை சின்னப்பையன்னு தள்ளிவைச்சதில்லை.

அவர்தான் என்னை முன்னெடுத்து கூட்டிட்டு போனவர்னு சொல்லணும். தந்தையார் நீ இப்படித்தான் போகணும்னு ‘தள்ளிவிடாத’ மனிதர். ஒன்றை அடைவது எப்படி என்றறிவது அதில் மகிழ்ச்சி அடைவது எப்படி என்றறிவதாகும். ஆரம்பத்திலேயே வாழ்க்கையில் வெகுதூரம் கடந்தபிறகு, கடந்த தினங்களை நினைத்து வருந்தக்கூடாதுன்னு நினைச்சிக்கிட்டேன். அறிவுக்கும் தேட்டத்திற்கும் ஒரு சமநிலை தேவைப்படுகிறது.

‘வாழ்வியலே கலை, கலையே வாழ்வியல்’னு எனக்குப்பட்டது. அதில் பிசகாமல் இருந்திருக்கேன். யாரையும் பின்பற்றிப் போகலை. ஞாபகத்திற்கும், மறதிக்கும் இடையில் இருக்கிற ஸ்டேட் ஆஃப் மைண்ட் எனக்குப் பிடிச்சது. அதில் நடக்கக்கூடியதை தீவிரமான அறிதல் பயிற்சியில் வழிக்குக் கொண்டு வந்தேன். இதையே காட்சிக் கலையாக உருவாக்கிவிட முடியுமா என்று யோசித்துப் பார்த்ததின் விளைவுதான் ‘விடம்பனம்’ நாவல். இப்படி காட்சியில் கிடைத்தது புனைவாகவும் வந்திருக்கு... அதுவே வண்ணக்கலவையாகவும் மாறியிருக்கு.

இந்த ஞாபகம் இழத்தலை ‘வெற்றிடம்’னு சொல்றேன். இதுதான் என்னுடைய படைப்புக்கும், மனநிலை சார்ந்த முறைமைக்குமான தொடர்ச்சி. இதைச் ெசய்யப் போய்த்தான் அஞ்சலி சர்க்கார் மாதிரியான  விமர்சகர்கள் ‘விதிகளை உடைத்தவர்’னு என்னைக் குறிப்பிட்டாங்க...’’ கண்கள் சிரிக்க சொல்கிறார் சீனிவாசன்.

அதிகமாக நீங்கள் பயணங்களை விரும்பிக்கொண்டே இருக்கிறீர்கள்... வாழ்வு நம்மீது செலுத்துகிற வன்முறையால், அபூர்வமான தொடுகையால் உந்தப்பட்டே நாம் கலைகளில் ஈடுபடுகிறோம். படைப்புக்குள் போகும் முன்னாலோ, பின்னாலோ மனதில் இருப்பது ஆழமான துயரம் அல்லது மகிழ்ச்சி. இந்தக் கொந்தளிப்பைத்தான் நான் மொழி பெயர்க்கிறேன்.

ஒவ்வொரு படைப்பும் தன் கால, இட பிரச்னைகளுக்கேற்ப தன்னைத்தானே கட்டமைத்துக் கொள்கிறது. நான் அடிக்கடி இப்படித்தான் வெளியே புறப்பட்டுவிடுகிறேன். கடினமான ஒரு சாதனை என்பது நமக்கு விருப்பமானதை விட்டு விலகி இருப்பதுதான். இதுதான் துறவு பற்றிய பொதுப்புத்தி. ஆனால், துறவு பற்றிய சரியான சிந்தனை அல்ல அது.

மெய்யான துறவு அல்லது பெரும் பயணம் எவ்வித இழப்புணர்வும் இல்லாத ஒரு பெருநிலை. மெய்மையை நோக்கியவாறு பொய்மைகளைக் களைதல். பயணச்சீட்டு பெறாமல் கூட நாடெங்கும் சுற்றியிருக்கிறேன். கையில் பொருள் இல்லாத நிலை கையறு நிலை அல்ல. சொல்லப் போனால் ‘நான் யார்?’ என்ற விசாரமே விடுதலைக்கான அறிவை அவனுக்குக் கொடுக்கிறது. சௌகர்யமான இருக்கைகளில் அமர்ந்துகொண்டு நீங்கள் எதையும் அறிய முடியாது. அதற்கு நீங்கள் பயணம் செய்தாக வேண்டும்.

இந்த பூமியில் மனிதர்களின் பேராசை படாத இடங்கள் இருக்கவே செய்கின்றன. கடவுளின் பூமி இங்கே ‘இன்னும்  கறைபடியாமலே’ இருக்கிறது. பயணங்களில் இடத்தோடு மனமும் மாறுதல் அடைகிறது. கடந்தோடும் வெளியோடு மனமும் பயணிக்கிறது. ஒவ்வொரு திரும்புதலின்போதும் சுத்திகரிக்கப்பட்டே வந்திருக்கிறேன். நெடுக தொடரும் இயற்கை, மனிதர்கள், அவர்களின் வாழ்வாதாரம், விழாக்கள், சடங்குகள் என கற்றுத் தருதல் நடந்துகொண்டே இருக்கிறது.

புதிய வாழ்க்கையொன்றை, புரிதலை அறிமுகம் ெசய்துகொண்டே இருக்கின்றன. பணத்திற்கு மதிப்பே இல்லாத, அதை பொருட்டாக எடுத்துக் கொள்ளாத என் பயணங்கள் அருமையானவை. அப்போதுதான் நம் சந்தோஷத்தையோ துக்கத்தையோ காசு தீர்மானிப்பது இல்லைெயனப் புரியும். வீடு, வேலை, தேவைகள்னு உழலும் நம் ஒவ்வொருத்தருக்குள்ளேயும் சிலுப்பிக்கிட்டு பறக்கத்துடிக்கிற ஒரு மனுஷனுக்கு வேலை கொடுக்கிற இடம்தான் எனக்கான இந்தப் பயணங்கள்.

இப்படி அடையாளமே இல்லாமல் திரியும்போதுதான், ஆயுசு முழுக்க வீடு, அறை இல்லாமல் ெதரு ஓரத்தில கிடந்து செத்துப்போற ஆயிரமாயிரம் ஜனங்களைக் கடந்துதான் நம்ம வீட்டுக்குப் போறோம்னு புரியுது. எது ஒன்றையும் வேண்டாமல் ேபாகிற பயணங்கள் முக்கியமானவை. இமயமலைக்கு சீனாவின் வழியாக மானசரோவர் போயிருந்தேன். மூச்சிரைக்க, மூச்சிரைக்க ஏறும் பயணம் அநித்தியமானது. இங்கே மரணத்தை உணரும் பக்குவ இடங்கள் அநேகம்.

எனது நினைவிற்கும், நிஜத்திற்கும் இடையே மறையாது இருக்கிறது கரையே காண முடியாத ஏரி. மிகுந்த சூட்சுமமும், மர்மமும் நிறைந்தது. அமைதியின், அதிகாலை தொடுவானத்தின் நிலவு மிதக்கும் தொலை ஏரியின் முன் நிற்பதே ‘நான்’ என்ற அடையாளம் தொலைத்துதான். இயற்கையின் தீராத மௌனத்தைச் சுமந்திருக்கும் அந்த ஏரியும், நடு இரவு இரண்டரை மணிக்கு மேல் நடக்கிற ஆச்சர்யங்களும்  ஒளி விளையாட்டு.

பால்வெளிக்கும், அந்த ஏரியின் பெரும் படைப்பிற்குமான தொடர்பு இன்னமும் அதிசயமும், மர்மங்களும் நிறைந்ததே. ரகசியங்களின் கிடங்கு அது. அந்த ஏரியின் மேல் அன்பு பொழியும் பால்வெளி எங்கேயும் காணக் கிடைக்காது. ஏழெட்டு இரவுகள் உன்மத்தனாகி அங்கேயே அசைவற்றுக் கிடந்தேன். யாராலும் அதன் வேடிக்கையைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதன் விஞ்ஞானமும் மனதுக்கு எட்டவில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு அங்கேயே அந்த ஒளி விளையாட்டின் விசித்திரங்களோடு ஒன்ற வேண்டியதுதான். ஏரியில் நட்சத்திரங்களோடு மொத்த பால்வெளியும் விழுந்திருந்தது. அந்த அழகை நான் சொல்லித் தீர்க்கவும் முடியாது. நீங்கள் எழுதிப் பார்க்கவும் முடியாது.

இந்த இயற்கையும், இந்தப் பயணங்களும் போகுமிடமெல்லாம் எல்லையில்லாத அன்பைத் தருகின்றன. மலையைக் கடந்து நீண்ட பாலைவனங்களின் வெகுநாளைய தனிமை, வெயிலும், பனியும், குளிரும் கருகி உருகுவதில் இந்த சிறு வாழ்வின் எல்லா அர்த்தங்களையும் கொண்டு வந்து சேர்த்துவிடுகின்றன. பயணங்களில், எப்பொழுதும் நிராகரிக்கப்பட்ட, வறுமையிலும் வாழ்வைக் கொண்டாடும் எளிய மனிதர்களே ஆச்சர்யப்படுத்துகிறார்கள். வாழ்வில் ஒரு முறையாவது  நாடோடியாக, பயணப்படுகிறவனாகவும், கொஞ்சம் லெளகீகத்தை மறக்கவும் நாம் விழைவோம். மானுட தரிசனமே உண்மையானது. மனித நேசத்தையே பயணங்கள் தேடுகின்றன. இருக்கிற ஒரே உண்மையும் அதுதான்...’’ தீர்க்கமாகச் சொல்கிறார் சீனிவாசன்.