பெண்கள் ஸ்பெஷலா?



-ரீடர்ஸ் வாய்ஸ்

சன் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற குக்கூ குழந்தைகளின் மினி பேட்டி இனிமை! ரிஹானா, லக்‌ஷனா, அதிதி புகழ்பெற்ற பாடகிகளாக வாழ்த்துகள்!
- த.சத்தியநாராயணன், சென்னை - 72.

இந்திய பாலியல் பிஸினஸ் மதிப்பு ரூ.23 லட்சம் கோடி என்பதைப் படித்ததும் திக்கென்று ஆகிவிட்டது. பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபடாதவகையில் சமூக பொறுப்புணர்வு ஏற்படுத்தப்படுவது அவசியம்!
- ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம். த.சத்தியநாராயணன், சென்னை - 72.

இயக்குநர் ஹரியின் படங்கள்தான் ஸ்பீடு என்றால் பேட்டியும் அப்படித்தான். படித்ததும் அசந்து போனேன். தமிழின் ஸ்பீடு பிக்சர் என்றால் அது டைரக்டர் ஹரியின் படம்தான். சூர்யாவிற்கு நடிப்பு சொல்லித்தரும் காட்சி அதி அற்புதம்.
- ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம். எஸ்.எம். மூர்த்தி, கடலூர்.

சொன்னாலே பலரும் முகம் சுளிக்கும் விஷயத்தை ஆவணப்படமாக்கிய திவ்யாவின் சமூக அக்கறைக்கு தலைவணங்குவோம். உபகரணங்களின்றி கழிவகற்றும் தொழிலாளர்களின் நிலை மேம்படுமா? ஏன் இக்காலத்திலும் இவர்கள் இதுபோல அருவருப்பிலேயே உழல வேண்டும் என்று தோன்றுகிறது!
- சிவமைந்தன், சென்னை - 78.

இயற்கை விவசாயத்துக்காக போராடும் ஐஐடி பட்டதாரி மன்னர் மன்னன் - தேவி தம்பதியினரை எப்படி பாராட்டினாலும் தகும். இயற்கை விவசாயத்தின் மீது பலரும் கவனம் குவித்து வரும் நிலையில் இப்படியொரு ஆக்கபூர்வ நிகழ்வை உலகறியச்செய்த குங்குமத்திற்கு சபாஷ்! மன்னர் மன்னன் - தேவி தம்பதியர் இருவருமே இயற்கை விவசாய சாதனை மனிதர்கள்தான் தலைவா!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி. சந்தானகோபாலகிருஷ்ணன், மஞ்சக்குப்பம்.

சென்னையை மிரளவைக்கும் பெண் பைக்ரேஸர்ஸ் செய்தி மலைக்க வைத்தது நிஜம். லீ சென்னின் சிலிக்கான் குழந்தைகள் பாச சிறுகதை. பொம்மைகளோடு குடும்பமாய் வாழும் பாங்கு நாம் அனைவரும் கற்க வேண்டிய பாடம்.
- மயிலை கோபி, சென்னை - 83.

சொல்லவே இல்லையே! இந்தவார குங்குமம் பெண்கள் ஸ்பெஷலா? திவ்யா, மீனா சேஷூ, டிமிபால், ஸ்வர்ணலதா, சவுந்திரி (எ) சிண்டி என பெண் சாதனையாளர்கள் பட்டியலாக இருக்கே பாஸ்!
- எஸ். பூதலிங்கம், நாகர்கோவில்.

அண்ணன் தம்பி ராமையா கடந்து வந்த பாதையை யுகபாரதி மூலம் அறிந்தபோது சாதனைக்கு தடைகள் பொருட்டல்ல என்பதை உணர்ந்தோம்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

பாதாள சாக்கடை என்றாலே மூக்கை மூடிக்கொள்ளும் நம்மை மூக்கின் மீது விரலை வைக்கச் செய்துவிட்டனர் கொலம்பிய நாட்டு மிகுலும் மரியாவும்.
- எஸ். அருண்ராஜ், சிதம்பரம் - 1.

ஜெயமோகனின் ‘வெண்முரசு’ குறித்த கட்டுரை ஜோர். நிறைவான வார்த்தைகளால் பாராட்டு மாலையை கழுத்தில் பவ்யமாய் போட்டுள்ளார். ஜெ.வின் சாதனைப் புதினம் ‘வெண்முரசினை’ வலைத்தளத்தில் படிப்பவர்களைவிட நூலாக வாங்கிப் படிப்பவர்கள் அதிகமாவதே அவரின் உழைப்புக்கு பயன். தமிழுக்கு பெருமையும் கூட.
- ராஜிராதா, பெங்களூரு. கே.எஸ்.குமார், விழுப்புரம்.