கனவு வாரியம்



-குங்குமம் விமர்சனக்குழு

மின்வெட்டால் திணறுகிற தமிழகத்திற்கு வழி சொல்லும் இளைஞனின் கதையே ‘கனவு வாரியம்.’ மின்வெட்டால் கிராமமே சிக்கித் தவிக்கிறது. சிறுதொழில், பயிர்த்தொழில், வியாபாரம் எல்லாமே பாதியில் பரிதவிக்கிறது. இந்நிலையில் ஒரு சாதாரண செல்போன் ரிப்பேர் கடை வைத்திருக்கும் இளைஞர் தன் ஆராய்ச்சிகளின் வழியாக விடை தேடுகிறார்.

ஊரின் ஏளனப்பார்வை, கேலிப் பேச்சு, புரிந்துகொள்ளாத அம்மா, கை கொடுக்கும் அப்பா, நூலக வாத்தியார், காதலி என துணைகொண்டு மின்சார உற்பத்திக்கான விதையைக் கண்டுபிடிப்பதே மீதிக் கதை. அறிமுக முயற்சியிலேயே கமர்ஷியல் அம்சங்களை மனதில் கொள்ளாமல், நாட்டு நடப்பின் பரிதாப நிலையையும் அரசு அலுவலகங்களின் செயலற்ற தன்மையையும் அச்சு அசலாக படம் பிடித்த துணிச்சலுக்காகவே புதுமுக இயக்குநர் அருண் சிதம்பரம் ஃபர்ஸ்ட் கிளாஸ் பாஸ்!

குறைவாகவே படித்திருந்தாலும், நூலகங்களில் தேடி அறிவை வளர்த்துக் கொள்வது, விடா முயற்சியும், நம்பிக்கையும் ஒரு நல்ல இடத்திற்கு இட்டுப் போகும் என்பதை அழகாக நினைவுபடுத்துகிறார் அருண் சிதம்பரம். அப்பாவின் அன்பில் நனைவதும், தொடர்ந்து தன் முயற்சிகளில் பிடிவாதம் காட்டி மின்சாரத்தை எளிதில் கண்டுபிடிப்பதும் புதுசு.

மற்றபடி பார்த்துப் பார்த்து நாம் வளர்ந்த தமிழ் சினிமாவின் ஃபார்முலா இடங்களுக்கு எதிர்பார்த்துக் காத்திருந்தால் ஏமாற்றம் காத்திருக்கிறது. படு இயல்பில், அசல் கிராமத்தின் இடம் காட்டிய வகையில் அருணுக்கு வாழ்த்து! எளிய மனிதர்களின் வாழ்க்கையை சொன்ன விதத்திலும் அதிகமாக புதுமுகங்களை அறிமுகப்படுத்திய வகையிலும், எண்ணிக்கையில் நிறைந்த விருதுகளை இந்தியாவுக்கு சுமந்து வந்த வகையிலும் இளம் இயக்குநருக்கு பூங்கொத்து!

ஹீரோத்தனம் துளியும் இல்லாத, கிராமத்து இளைஞராக அருண் சிதம்பரமே சரியான ேதர்வு. வெள்ளைச் சிரிப்பிலும், மினுங்கும் கோபத்திலும், கிடைக்காத அங்கீகாரத்திற்கு ஏங்கும் இடத்திலும் அபாரம்! ஆனாலும் டாக்குமென்டரி வாசனை அவ்வப்போது வீசுவதைத் தவிர்த்திருக்கலாம்.

அந்தப் புதுமுகம் ஜியா... அருணுக்கு இதமாக கை கொடுக்கிறார். காதல் காட்சிகளில் கிடைக்கிற அப்பாவித்தனத்தை சினிமாவில் பார்த்து நாளாச்சு. அப்பாவாக இளவரசு பாந்தமான நடிப்பு. அருணை முடுக்கிவிடும் ஞானசம்பந்தன் நல்ல வார்ப்பு. நண்பன் பிளாக் பாண்டியும் சரியாக கை கொடுக்கிறார். ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் கேமரா நெருக்க உணர்வை அள்ளித்தருகிறது.

‘கல்லா மண்ணா’ பாடலும், அதில் காட்டியிருக்கும் மறந்துபோன 75 வகை தமிழ் விளையாட்டுகளும்... மாஸ்டர்பீஸ்! இசையமைப்பாளர் ஷ்யாம் பெஞ்சமின், பாடல் ஆசிரியர் அருணுக்கு ஸ்பெஷல் பாராட்டு! நாம் தொலைத்த வேர்களைத் தேடியதற்கே ரெமி விருது அளித்திருப்பார்கள் போல!