ஹோம் ஒர்க் செய்த போலீஸ்!



-த.சக்திவேல்

அமெரிக்காவின் மேரியன் நகர காவல்துறை இதுவரைக்கும் சந்தித்திராத ஒரு விநோதமான பிரச்னையை சமீபத்தில் சந்தித்தது. ‘எந்த சிக்கலா இருந்தாலும் போலீஸிடம் போனால் அதைத் தீர்த்து வைப்பார்கள்’ என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறாள் பத்து வயதான லேனா. டீச்சர் கொடுத்த கணக்கு வீட்டுப்பாடத்துக்கு விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவள், ‘நாம ஏன் இந்த மேத்ஸ் ப்ராப்ளத்தை போலீஸ்கிட்ட கொண்டுபோகக் கூடாது’ என்று யோசித்தாள்.

செயல்படுத்தியும் விட்டாள். எப்படித் தெரியுமா? ‘ஹோம் ஒர்க்கில் கொஞ்சம் பிரச்னை; தீர்த்து வையுங்கள்...’ என்று மேரியன் நகர காவல்துறைக்கு ஃபேஸ்புக்கில் மெசேஜ் தட்டிவிட்டாள். போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கோபப்படாமல் கேள்வியை அனுப்பச் சொல்லியிருக்கிறார். விடையையும் தாமதிக்காமல் உடனே அனுப்பியிருக்கிறார்.

பதில் கிடைத்ததில் குஷியான லேனா அடுத்த கேள்வியையும் அனுப்ப, அதற்கும் விடை கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். நடந்த சம்பவத்தை தன் அம்மாவிடம் லேனா சொல்ல, உடனே அவர், இதை அப்படியே தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிவிட்டார். மேரியன் நகர காவல்துறைக்கு இப்போது வாழ்த்துகள் குவிகின்றன!