எமன்



குங்குமம் விமர்சனக்குழு

சுறுசுறுப்பாக காய் நகர்த்தி வெற்றி பெறும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், தனக்கும் இடம் தேடுபவனே ‘எமன்!’ தாத்தாவின் உயர் சிகிச்சைக்காக அவசரமாக விஜய் ஆண்டனிக்கு பணம் தேவைப்படுகிறது. அதற்காக ெசய்யாத குற்றத்திற்காக சிறைவாசமும் அனுபவிக்கிறார். சிறையில் இன்னொரு ஏரியா கேங் லீடரும் சந்திப்பிற்குள் நுழைய, ஒரு அரசியல்வாதி, இரண்டு கேங் லீடர்களுக்கு இடையில் சித்து விளையாட்டு ஆடுகிறார் ஆண்டனி.

தாத்தாவிற்கு சாவு நேர, பொங்கி எழுகிறார்... புது சரித்திரம் படைக்கிறார். இறுதியில் விஜய் ஆண்டனிக்கு என்ன அடையாளம் கிடைக்கிறது என்பதே ‘எமன்!’ ஆக்‌ஷன் ஹீரோவாக ஆச்சர்யப்பட வைக்கிறார் ஆண்டனி. ஆரம்பத்தில் தாத்தாவின் உடல்நிலையின் பொருட்டு வருந்தும்போதும், சிறையில் ஆதங்கத்தில் தவிக்கும்போதும் கச்சிதம். இரண்டு வில்லன்களுக்கு மத்தியில் விளையாட்டு காட்டும்போது ‘அட’ போட வைக்கிறார்.

ஆனால் எல்லாமே பார்த்துப் பார்த்து பழகிப்போன கதையில் இடம் பெறுகிறது. அரசியல் பரமபதத்தில் சுவாரஸ்யமே சிக்கவில்லை. ஆரம்பக் காட்சிகளில் பின்பாதிக்கான  முடிச்சுகளைப் புதைத்து வைத்திருக்கும் ஜீவா சங்கரின் இயக்கம்தான் படத்தின் பெரிய பலம். பழைய படம் பார்ப்பது போன்ற ஃபீலிங் காணக் கிடைப்பதுதான் பலவீனம். சிறையில் விஜய் ஆண்டனியோடு இருக்கும் கேங்ஸ்டரை தாக்க வரும் எதிரிகளை ஒரே ஸ்ட்ரோக்கில் அவர் சமாளிக்கும் அந்த ஃபைட்... மாஸ்டர் ஃபைட்!

மியா ஜார்ஜ் அழகுச் சித்திரம்தான். ஆனாலும் வழக்கம்போல் படத்திற்கான இடைவெளிகளை நிரப்பத்தான் அவரைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்குள் வருகிற நட்பில் மெலிதான யதார்த்தம் காணப்படுவது சிறப்பு. அந்த தாடி வைத்த வில்லன் அற்புதம். எரியும் பார்வை, குளிரும் பேச்சு என தேர்ந்தெடுத்து உணர்ச்சிகளைக் காட்டியதில் அடுத்தடுத்த படங்களில் வில்லனாகவே இனி தல, தளபதிகளை எதிர்பார் என எதிர்பார்க்கலாம்.

ஆச்சர்ய என்ட்ரி மம்பட்டியான் தியாகராஜன்! பகடை உருட்டியே பதட்டம் காட்டுகிறார். சாணக்கியத்தனம் டிமாண்ட் செய்யும் பின் பாதியில் அவரது நிதானம் நறுவிசு. சார்லி நேர்த்தியாக குணச்சித்திரத்தை தொடுகிறார். பின்னணி இசை சுமாரென்றால் பாடல்களில் ‘என் மேல கை வச்சா காலி’ மட்டுமே அதிரடி. டைரக்டரின் ஒளிப்பதிவில் அந்த ஃபாரின் லொகேஷன் பாட்டு, ஸ்கிரீன் சேவராக மனம் மயக்குகிறது. சண்டைக்காட்சிகளில் மோதல் அனல் கலந்த காக்டெய்ல். திரைக்கதையை இழுத்துப் பிடித்து திருத்தியிருந்தால், இன்னும் ரசித்திருக்கலாம்!