கடலில் விளையாடலாம்!-ஷாலினி நியூட்டன்

ஆறோ அறுபதோ, கடல் அலைகளில் கால் நனைத்து விளையாட வயது தடையே இல்லை. மனதில் எவ்வளவு கவலைகள் சூழ்ந்திருந்தாலும் சில நிமிடங்கள் கடல் அலையைப் பார்த்தால் போதும். மனம் லேசாகிவிடும். அப்படிப்பட்ட அலைகளில் குதித்து விளையாடி பயணம் செய்தால் எப்படி இருக்கும்?

‘நல்லாதான் இருக்கும். ஆனா, சாத்தியமா? நாட்டை சுத்தி மூணு பக்கமும் கடல். என்ன பயன்? நீர் சறுக்கு, ஸ்கூபா டைவ்... அது இதுனு ஏதேதோ சொல்றாங்க. இதெல்லாம் நமக்கு எட்டாக் கனியாதானே இருக்கு..?’ இனியும் இப்படி அலுத்துக் கொள்ள வேண்டாம். யெஸ். ‘‘கடல்ல என்ன மாதிரி விளையாடணும்னு சொல்லுங்க. நாங்க பயிற்சி தர ரெடியா இருக்கோம்...’’ உற்சாகமாக சொல்கிறார் மூர்த்தி மேகவன்.

“பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோவளம் மீனவ கிராமத்துல. எனக்கு ஒரு அக்கா, ஒரு தங்கச்சி. நான் சின்னப் பையனா இருக்கறப்ப பிரச்னை காரணமா அப்பாவும் அம்மாவும் பிரிஞ்சுட்டாங்க. பாட்டிதான் என்னை வளர்த்தாங்க. நினைவு தெரிஞ்சப்பலேந்து மரப்பலகையை வைச்சுகிட்டு அலைகள்ல விளையாடிட்டு இருப்பேன். படிப்பு வரலை. மீன் பிடிக்க போயிட்டேன்.

மரப்பலகைல நான் விளையாடறதுதான் ‘சர்ஃபிங்’. இதை முறைப்படி விளையாடலாம்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஒருநாள் எங்க ஏரியாவுல ஜேக் ஆப்னர் என்கிற வெளிநாட்டுக்காரர் தன் ஃப்ரெண்ட்ஸோட சர்ஃபிங் ஆடினாங்க. என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு அவங்க கிட்டேந்து சர்ஃபிங் போர்ட் வாங்கி நானும் விளையாடினேன். பத்து நிமிஷங்கள்தான். ஆனா, வாழ்க்கைல மறக்க முடியாத சந்தோஷத்தை அப்ப அனுபவிச்சேன்.

நான் போர்ட் மேல அசால்ட்டா நிக்கிறதை பார்த்துட்டு தன்னோட போன் நம்பரை ஜேக் கொடுத்தார். அப்ப மொபைல் இல்ல. அவருக்கு பிசிஓ வழியா போன் செஞ்சேன். எனக்கு பெருசா பேசத் தெரியல. இந்த நேரத்துல ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருத்தர், எங்க கிராமத்துல இருந்த ஒரு பையனுக்கு சர்ஃபிங் போர்டை பரிசா கொடுத்தார். அவனுக்கு இதுல ஆர்வம் இல்ல. வீட்டுல சும்மா வைச்சிருந்தான். அவன்கிட்டேந்து அந்த போர்டை ரூ.1500க்கு வாங்கி நானே கத்துக்க ஆரம்பிச்சேன்.

அக்கால ஆரம்பிச்சு சுத்தி இருந்த எல்லாரும் என்னை கிண்டல் செஞ்சாங்க. எதைப்பத்தியும் நான் கவலைப்படலை. இஷ்டத்துக்கு ஆடி நுணுக்கங்களை அனுபவம் வழியா கத்துக்கிட்டேன்...’’ கடலைப் பார்த்து பரவசப்பட்டபடியே சர்ஃபிங்குக்கு தான் வந்த பாதையை விவரித்தார் மூர்த்தி மேகவன். இப்படி இவர் விளையாடுவதைப் பார்த்த யோதப் என்கிற வெளிநாட்டுக்காரர் தன்னிடம் இருந்த ஒண்ணரை லட்ச ரூபாய் மதிப்புள்ள சர்ஃபிங் போர்டை பரிசாக மூர்த்தியிடம் 2008ல் கொடுத்திருக்கிறார்.

‘‘இதுக்கு அப்புறம் என் பழைய போர்டை வைச்சு கிராமத்து பசங்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். சில மாசங்களுக்குப் பிறகு திரும்பவும் யோதப் என்னைப் பார்க்க வந்தப்ப, பத்துக்கும் மேற்பட்ட பசங்க என்னுடைய டிரைனிங்கால சர்ஃபிங் பண்ணிட்டு இருந்தாங்க. சந்தோஷப்பட்ட யோதப், தன் நண்பர்களோட சேர்ந்து என்னைப் பத்தி டாக்குமென்ட்ரி எடுத்தார்.

இந்த ஆவணப்படத்தை பார்த்துட்டு ஆஸ்திரேலியாவுல இருந்த மியூசிக் டீம் எங்களுக்கு 30 போர்ட் அனுப்பினாங்க. அதை வைச்சு சின்ன அளவுல ஸ்கூல் ஆரம்பிச்சோம். இதுக்கு இடைல இந்திய அளவுல சர்ஃபிங் போட்டி மகாபலிபுரத்துல நடந்துச்சு. அதுல நானும் என்கிட்ட கத்துக்கிட்ட ரெண்டு பசங்களும் கலந்துகிட்டோம். அங்க பத்து வருஷம் கழிச்சு ‘சர்ஃபிங் சுவாமி’யை சந்திச்சேன்.

என்ன அப்படி பார்க்கறீங்க... எனக்கு முதன் முதல்ல சர்ஃபிங் போர்ட் கொடுத்தாரே ஜேக் ஆப்னர், அவர்தான் ‘சர்ஃபிங் சுவாமி’. அதுமட்டுமில்ல... அந்தப் போட்டில அவர் டிரெயினிங் கொடுத்த பசங்களையும் நாங்க ஜெயிச்சோம். இதுக்கு அப்புறம் டிடி குரூப் அருண் சார் எங்களுக்கு ஸ்பான்சர் செய்தாரு. இப்ப ஒரு ரெஸ்டாரண்ட், ரிசார்ட்டோட சேர்ந்து சர்ஃபிங் தவிர எல்லா நீர் விளையாட்டையும் கத்துக் கொடுக்கறோம்.

இதெல்லாமே அருண் சாரால சாத்தியமாச்சு...’’ என்று நெகிழும் மூர்த்தி, தங்கள் விடுதியில் தங்குபவர்கள் குடிக்கக் கூடாது என்கிறார். ‘‘விடுதில வேலை செய்யற எல்லாருமே இந்த கிராமத்தை சேர்ந்தவங்கதான். எங்க பசங்க இப்ப ஆஸ்திரேலியா, இலங்கை, அபுதாபில நடக்கிற போட்டிகள்ல இந்தியா சார்பா கலந்துகிட்டு கலக்கறாங்க.

வெறும் பயிற்சி மட்டும் நாங்க செய்யறதில்லை. கடற்கரையை சுத்தம் செய்யறோம். சென்னை பெருவெள்ளத்தப்ப மீட்புக் குழுவா போய் உதவினோம். ஏழைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கறோம். சர்ஃபிங் பணக்காரங்க விளையாட்டு இல்ல. அது எல்லோருக்குமானது. 10 பேரோட இந்த ஸ்கூலை ஆரம்பிச்சேன். இப்ப 3500 பேர் பயிற்சி எடுக்கறாங்க. அடிப்படை நீச்சல் தெரிஞ்சா போதும். சர்ஃபிங், கயாக்கிங், ஸ்டேண்டப் பெடல், விண்ட் சர்ஃபிங், பாடி போர்டிங், ஸ்கூபா டைவிங்... எல்லாம் கத்துக்கலாம்...’’ என்கிறார் மூர்த்தி மேகவன்.                    
    
என்னென்ன விளையாடலாம்?

சர்ஃபிங் (Surfing): நமக்குத் தெரிந்த நீர் சறுக்கு விளையாட்டுதான். கயாக்கிங் (Kayaking): சின்ன போட்டு. அத துடுப்புத் தள்ளி நீங்களே போகணும். இதுல லைஃப் ஜாக்கெட் வரும். நீச்சல் தெரியணும்னு அவசியம் இல்ல. ஆனா, பயம் இருக்கக் கூடாது.

ஸ்டேண்டப் போர்ட் (Stand up Board): சர்ஃபிங் போர்ட் மாடல்ல ஒரு பெரிய போர்ட். அதுல நின்னுகிட்டே துடுப்பு போட்டு போறது. ஆற்று நீரிலும் இதை விளையாடலாம்.

கைட் சர்ஃபிங் (Kite Surfing): ஒரு பெரிய பட்டத்தோட இணைச்சு போர்ட் கொடுத்துடுவோம். பட்டத்த ஹேண்டில் பண்ணி போர்டை மூவ் பண்ணி அலைல விளையாடலாம்.
 
விண்ட் சர்ஃபிங் (Wind Surfing): பெரிய படகுல பாய்மரம் மாதிரி இணைச்சு அதுல விளையாடற விளையாட்டு.

பாடி போர்டிங் (Body Boarding): சர்ஃபிங் போர்ட் மாதிரியே சின்ன போர்ட். அதுல படுத்துக்கிட்டே நகர்ந்து அலைல விளையாடறது.