ஊஞ்சல் தேநீர்



-யுகபாரதி

தோழர் இளவேனில் பேரன்பும் பெருங்கோபமும் உடையவர். அதனால்தான், தொழிற்சங்க முன்னோடிகளில் ஒருவரான தோழர் வி.பி. சிந்தன் தன் எழுத்தாள நண்பர் கேசவதேவிடம், ‘இவனிடம் எனக்குப் பிடித்தது கோபம்’ என்று இளவேனிலை அறிமுகப்படுத்தியிருக்கிறார். தன்னை விமர்சிப்பவனின் நேர்மையை அல்லது தகுதியை பறைசாற்ற இம்மாதிரியான வேடிக்கைகளிலும் விளையாட்டுகளிலும் அவ்வப்போது இளவேனில் ஈடுபடத் தயங்கியதில்லை.

மக்களை ஏமாற்றும் சக்தி எந்த ரூபத்தில் வந்தாலும் அதை அரூப சொரூபனாக நின்று எதிர்க்கும் திறனும் ஆற்றலும் எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. சுய தேவைகளைச் சுருக்கிக்கொண்டு, பொது வாழ்வுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் ஒருசிலரே அத்திறனையும் ஆற்றலையும் பெறுகிறார்கள். எழுத்தில் அரசியலையோ அரசியலை எழுத்திலோ கொண்டுவரக் கூடாதென சிலர் எண்ணுகிறார்கள். நுட்பமான இலக்கிய வடிவங்களில் அரசியல் நுழைவதால் கலைத்தன்மை கெட்டுவிடும் என அவர்கள் நம்புகிறார்கள்.

அதுவுமே அரசியல்தான். அரசியலுக்கு இடமளிக்காத படைப்புகள் கால ஓட்டத்தில் கரைந்துவிடும் என்பவர்களே இளவேனிலைப் போன்றோர். ஒருவர் அரசியல் அறிவைப் பெற்றிருப்பதாலேயே அரசியல் கட்டுரைகளை எழுதிவிட முடிவதில்லை. அதற்குமேல் அது, யாருடைய அரசியல் என்று தெரிந்திருக்க வேண்டும். மேலும், ஆளும் தரப்புக்கோ அதிகார அச்சுறுத்தலுக்கோ அஞ்சக்கூடிய ஒருவர், அரசியல் கட்டுரைகளில் சோபிப்பதில்லை.

தோழர் இளவேனில், அரசியல் கட்டுரைகளின் வாயிலாகவே தன்னை நிறுவியவர். ‘இளவேனில் கவிதைகள்’ என்ற தலைப்பில் அவருடைய கவிதைகள் வெளிவந்துள்ளன. என்றாலும், அவர் வெகுவாகக் கொண்டாடப்படுவது அரசியல் கட்டுரைகளால்தான். ஒருமுறை அவருடைய கட்டுரையை வாசித்துவிட்டால் அதன்பின் அவரே வேண்டாம் என்றாலும் அவருடைய எழுத்துகளுக்கு நாம் தீவிர தோழனாகிவிடுவோம்.

‘ஆத்மா என்றொரு தெருப்பாடகனை’ கீழே வைக்கமுடியாத அனுபவத்தை வாசிக்குந்தோறும் பெற்றுவருகிறேன். ‘இதற்குமுன் இப்படியொரு நூலை வாசித்திருக்கிறீர்களா’ என நண்பர்களிடம் சவால்விட்டு சிபாரிசும் செய்திருக்கிறேன். கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள், ஓவியங்கள், அரசியல் விமர்சனங்கள் என பல முகங்களில் இளவேனில் தென்பட்டாலும், பொதுவெளியில் அவரை சினிமா இயக்குநராகப் புரிந்துகொண்டவர்களே அதிகம்.

கலைஞர் எழுதிய ‘சாரப் பள்ளம் சாமுண்டி’ என்னும் நூலைத் தழுவி, அவர் இயக்கிய ‘உளியின் ஓசை’ திரைப்படத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிடமாட்டார்கள். இளவேனில் தன் எழுத்தில் கொண்டிருந்த அடர்வை அத்திரைப்படம் சிலருக்குக் கொடுக்கவில்லை. மூலக்கதை இன்னொருவருடையது என்பதால் முழு ஆளுமை வெளிப்படாமல் போயிருக்கலாம். ஆனாலும், அத்திரைப்படம் வெளிவந்த சமயத்தில் எழுதப்பட்ட எந்தக் கட்டுரையிலும் இளவேனிலின் முந்தைய எழுத்து சாதனைகள் குறிக்கப்படவில்லை.

காத்திரமான அவருடைய எத்தனையோ கட்டுரைகளில் ஒன்றைக்கூட வாசிக்காதவர்களே அவர் திரைப்படத்தை விமர்சிப்பவர்களாக இருந்தார்கள். அவரை வெறுமனே ஒரு சினிமாவை இயக்கிய இயக்குநர் என்றுதான் என் கவனத்துக்கு வந்த எல்லாப் பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டன. அச்சு கோர்க்கப்பட்டு புத்தகங்கள் வெளிவந்த அந்தக் காலத்திலேயே எழிலான எழுத்துருக்களை உருவாக்கும் பணியில் இளவேனில் ஈடுபட்டிருக்கிறார்.

அவருடைய அட்டை வடிவமைப்பில் எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. இளவேனில் என அவரே அவர் கைப்பட எழுதிய வடிவத்தில்தான் அவர் பெயர் இன்றும் அச்சாகிக்கொண்டிருக்கின்றன. பத்திரிகையாளராகவும் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் நூலின் பக்க வடிவமைப்பிலும் அட்டை வடிவமைப்பிலும் அக்கறை செலுத்தக்கூடியவராக அவர் இருந்துவருகிறார். ‘மலையூர் மம்பட்டியான்’ என்னும் திரைப்படத்தின் எழுத்துருவை உருவாக்கியவர் அவர்தான்.

அப்படத்தின் கதை விவாதத்தில் அவருக்கிருந்த பங்கு குறித்து பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். எழுபதுகளின் இறுதியில் இருந்தே அவர் சினிமாவோடு தொடர்பு கொண்டிருக்கிறார். ‘நூறு பூக்கள் மலரும்,’ ‘வீரவணக்கம்’ ஆகிய தலைப்புகளில் அவரால் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படங்கள் என்ன காரணத்தினாலோ தொடரமுடியாமல் போயின. அதை அடுத்து, ‘நெஞ்சில் ஓர் தாஜ்மஹால்’ என்னும் தலைப்பில் அவர் தொடங்கிய திரைப்படமும் பாடல் பதிவோடு நின்றது.

சிவாஜி ராஜா என்பவரால் இசையமைக்கப்பட்ட அத்திரைப்படத்தின் பாடல்களை இளவேனிலே எழுதியதாக குறிப்பு இருக்கிறது. என்றாலும், அப்பாடல்களை கேட்கும் கொடுப்பினை நமக்கு வாய்க்கவில்லை. ‘உளியின் ஓசை’யைத் தொடர்ந்து அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட ‘நீயின்றி நானில்லை’ திரைப்படமும் தொடங்கிய நிலையிலேயே துவண்ட காரணத்தை தேடிக்கொண்டிருப்பதில் நியாயமில்லை.

சினிமாவுக்குத் தேவையான சமரசங்களை ஒருவர் செய்துகொள்ளத் துணியாதபோது, அவருக்கான வாய்ப்புகள்  கை   நழுவிப்போவது தவிர்க்கமுடியாதது. கிடைத்த வாய்ப்பைக் கயிறாகப் பயன்படுத்தி மேலே ஏறுகிறவர்களும் உண்டுதான். என்றாலும், அது கயிறா பாம்பா என சந்தேகிக்க வேண்டியது அவசியம். தோழர் இளவேனில் மனதில் பட்டதை சட்டென்று சொல்லிவிடுபவர். அன்பை அதிர்ந்து வெளிப்படுத்தத் தெரியாத அவருடைய பண்புகளை எழுத்திலிருந்து உணர்ந்துகொள்ளலாம்.

இடதுசாரி தோழர்கள் ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்டவர்கள் அல்ல என்று வலதுசாரிகளால் பரப்பப்படும் வதந்திகளுக்கு பதில் சொல்லக்கூடியவராக இளவேனில் இருந்து வருகிறார். அவருடைய ‘காருவகி’ நாவல், சரித்திரத் தரவுகளைக் கொண்டு எழுதப்பட்ட மிக அற்புதமான வரலாற்றுப் புதினம். அந்நூலில், கலிங்கத்திற்கும் தமிழகத்திற்குமுள்ள தொடர்புகள் விவரிக்கப்பட்டுள்ளன.

கலிங்கப்போரில் அசோகனுடன் போரிட்ட மன்னன் யார் என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு சரியான விடையை சான்றுகளுடன் தந்திருக்கிறார். ஒரு வரலாற்றுப் புதினத்தில் ஆய்வுக்குரிய பகுதிகள் கொஞ்சமாவது இருக்கும். ‘காருவகி’ நாவலிலும் அப்படி விவாதிக்கவும் ஆய்வை மேற்கொள்ளவும் நிறைய உள்ளன.

அசோகனின் இறுதிப்போரில் அவனுடன் போரிட்ட மன்னன் ஆரியனாக இருக்க வாய்ப்பு குறைவு என வரலாற்று ஆய்வாளர் சுனிதிகுமார் சாட்டர்ஜி கூறியதற்கும் ‘காருவகி’யில் இளவேனில் காட்டிய சான்றுகளுக்கும் தொடர்பு இருப்பதை ஆய்வாளர்களே சொல்லவேண்டும். கொடுங்கோலனாக ஆட்சியில் அமர்ந்த அசோகன், மெல்ல மெல்ல பெளத்தத்தைத் தழுவவும் உயிர்களை அருளோடு அணுகவும் காருவகியின் நட்பே காரணம் என்ற கருத்தும் நிலவுகிறது.

காருவகி என்பவள் தமிழ்ப்பெண் என்றும் அவளது நட்பினால்தான் கலிங்கப்போர் முடிவுக்கு வந்தது எனவும் இந்நாவல் நிறுவுகிறது. பெளத்த துறவியான காருவகியின் அன்பைப் பெற்ற பிறகே அசோகனுக்கு போர் குறித்த எண்ணம் மாறியிருக்கிறது. போரிட்டு வெல்வதைவிட அன்பினால் உலகை வெல்வதே உயர்ந்ததென அவன் எண்ணியதாகவும், இளஞ்சேட் சென்னி என்றழைக்கப்பட்ட சோழ மன்னனே கலிங்கப்போரில் அசோகனுடன் போரிட்ட மன்னன் எனவும் நாவல் பேசுகிறது.

புனைவை மிக விரிந்த தளத்தில் மேற்கொண்டுள்ள இளவேனில், சங்கப்பாடலில் இருந்து அதற்கான சான்றுகளைக் காட்டியிருப்பது விசேஷம். அசோகனின் மனத்தைமாற்றிய காருவகியை கதை நாயகியாகக் கொண்டு எழுதப்பட்ட அந்நாவல், ஏனைய வரலாற்றுப் புதினங்களைவிட ஆய்வுக்கான ஊற்றுக்கண்ணை திறந்துவைக்கிறது. சாண்டில்யனோ ஜெகசிற்பியனோ இந்நாவலை எழுதியிருந்தால் காருவகி என்பதற்கு பதில் மழைமோகினி என்றோ மயில் என்றோ கவர்ச்சிகரமான பெயரை இட்டிருப்பார்கள்.

ஆனால், இளவேனிலோ காருவகி என்னும் தமிழ்ப் பெயரை சூட்டியிருக்கிறார் என திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு நூல் வெளியீட்டு விழாவில் பேசியது குறிப்பிடத்தக்கது. உலக ஊடகங்களால் மைக்கேல் ஜாக்சன் கொண்டாடப்பட்ட பொழுதும் சரி, அதற்குப்பின் அதே அளவுக்கு விமர்சிக்கப்பட்ட பொழுதும் சரி, அதை வெறுமனே பார்த்துக்கொண்டிராமல், மைக்கேல் ஜாக்சனுக்குப் பின்னே நிகழ்த்தப்பட்ட பன்னாட்டு வணிக நிறுவனங்களின் அரசியலை ஆவேசத்தோடு முன்வைத்தவர் இளவேனில் ஒருவரே.

இசையிலும் கடைப்பிடிக்கப்பட்ட இனவெறிக்கு எதிராக அவர் தீட்டிய கட்டுரைகள் போற்றிப் பாதுகாக்கத்தக்க ஆவணங்கள். தமிழ் நிலத்தில், இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக பத்மா சுப்ரமணியம் பரப்பிய அவதூறுகளையும்கூட அவர் சுட்டிக்காட்டத் தவறியதில்லை. நாட்டுப்புற இசையைத் தனதென்று வாதிட்ட பத்மாசுப்ரமணியத்தின் அப்பட்டமான புளுகு மூட்டையை அவிழ்த்துக் கொட்டிய எழுத்து அவருடையது.

பாவலர் வரதராஜன் தன் அண்ணன் என்று இளையராஜா சொன்னதை பொய் என்று சொன்னவர் பத்மா சுப்ரமணியம். இல்லாத ஒருவரை தன் அண்ணனாக இளையராஜா சொல்வாரென்று பத்மா சுப்ரமணியம் எப்படித்தான் யோசித்தாரோ தெரியவில்லை. எழுத்தில் இவ்வளவு நெகிழ்வாக தன்னைப் பிரகடனப்படுத்தும் இளவேனில், நிஜத்திலும் அப்படியா? என்று வித்யாஷங்கரைக் கேட்டேன். ‘எதார்த்தத்திலிருந்து எழுத்தை சமைக்கிற ஒருவர், எதார்த்தத்திற்கு எப்படி முரண்படுவார்’ என்றார்.

தோழர் இளவேனில், பொதுவாக உணவகங்களில் வைக்கப்படும் டிப்ஸ் தொகைக்கு எதிரானவர். சம்பளம் போதவில்லை என்றால் சங்கம் வைத்து முதலாளியிடம் முறையிட்டுப் பெற வேண்டுமே தவிர, தட்டிலிடும் சில்லறைகளை தொழிலாளர்கள் பொறுக்கக்கூடாது என்பவர். ஊழியத்துக்கான கூலியை முதலாளியிடம் போராடிப் பெறுவதுதான் உரிமை. அதைவிடுத்து, யார் யாரோ வைத்துவிட்டுப் போகும் இனாம்களுக்காக கையேந்திக் காத்திருக்கக்கூடாது எனச் சொல்லியிருக்கிறார்.

மீதத்தை எடுத்துக்கொள்ள எண்ணுபவன், தன்னையும் மீதமாகவே கருதநேரும் என்றிருக்கிறார். இப்பவும் இந்தியன் காபி ஹவுசில் பணியாற்றும் தொழிலாளர்கள் டிப்ஸ் பெறுவதில்லை என்றே கேள்விப்படுகிறேன். சகமனிதனை சமமாகப் பாவிக்கும் பக்குவமுடையவராக அவர் இருப்பதால்தான், இன்றைய தலைமுறையும் அவருடைய எழுத்துகளை உச்சிமோந்து உச்சரிக்கிறது.

நவீன ஓவியத்தின் தந்தை பிகாசோ, தனது இறுதிக் காலத்தில் தன் ஓவியங்களில் ரசிப்பதற்கு ஒன்றுமே இல்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததைக் குறிப்பிட்டு, பாதல் சர்க்காரின் நாடகங்களைக் கட்டுடைத்திருக்கிறார். பாதல் சர்க்காரின் நாடகங்களையே கட்டுடைத்தவர் என்றால் உடனே, அவர் ஏதோ நவீனங்களுக்கு எதிரானவர் என கருத வேண்டியதில்லை.

இளவேனில், நவீனங்களுக்கு எதிரானவர் அல்ல. நவீன பொய்மைகளுக்கே எதிரானவர். மரபு என்பது மதவகைப்பட்ட ஆசாரமல்ல. அது, கட்டுத்தளையும் அல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்திய, ஒரு குறிப்பிட்ட மக்களது அனுபவங்களின் முதிர்ச்சியே மரபு. மரபு என்பது இலக்கணம். அது ஒரு விஞ்ஞானம். விஞ்ஞானம் அறிவுக்கோ கலைக்கோ எதிரானதல்ல என்று சொல்லுவார்.

இடதுசாரி இலக்கியங்களில் எதுவுமே இல்லை. இலக்கியங்கள் என்னும் பேரில் அவர்கள் சோஷலிச போஸ்டர்களை அடித்துக்கொண்டிருக்கிறார்கள் என இப்போதும் பிரச்சாரம் செய்பவர்கள் இல்லாமல் இல்லை. எந்தப் பிரச்சாரத்தினாலும் மக்கள் கலை இலக்கியத்தின் மகத்துவத்தை மறுக்கமுடியாது. அதையும் தாண்டி, சோஷலிச போஸ்டர் அடிப்பது ஒன்றும் ரசக்குறைவான காரியமில்லை. அது, வாணி ஒழுகும் குழந்தையின் வாயைத் துடைத்துவிடும் தாயின் செயலுக்கு ஒப்பானது.

தோழர் இளவேனில் “என் எழுத்திலுள்ள பிழைகளைப் பொறுத்துக்கொள்ளுங்கள்” எனச் சொல்பவரை அங்கீகரிப்பதில்லை. ‘உனக்கே பிழையென்று தெரிந்தபின் அதையேன் அச்சிட்டு எனக்குக் கொடுக்கிறாய்’ என்றுதான் கேட்பார். எழுத்தை ஆளவேண்டும் எனவும் வாக்கியங்களுக்கு இடையே வாழ்க்கை இருக்கவேண்டும் எனவும் அவர் சொல்லியிருக்கிறார். ‘இரண்டாம் உலகைத் தேடி’ எனும் நூலின் எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷின் புகழ்பெற்ற முதல் சிறுகதை கார்க்கி இதழில்தான் பிரசுரமானது.

ஒரு படைப்பாளரை அடையாளங்கண்டு அவரைத் தொடர்ந்து எழுத வைப்பதில் அக்கறையோடு இருந்திருக்கிறார். இன்குலாப்பின் அநேக கவிதைகள் அவருடைய கார்க்கி இதழில்தான் வெளிவந்தன. “இளவேனில் எழுத்தில்” என்னும் தலைப்பில் அவருடைய எழுத்துக்கள் யாவும் தொகை நூலாக இப்போது வரத் தொடங்கியுள்ளன. இதுவரை அவரை வாசித்தவர்களும் புதிதாக வாசிக்கப் போகிறவர்களும் மீண்டும் தோழர் எனும் சொல் தரும் இன்பத்தில் லயிக்கக்கூடும்.

மேலும், தோழர் என்ற சொல்லின் ஜீவனுள்ள அர்த்தத்தை உணர காவல்துறை உயரதிகாரிகளும் அவர் நூல்களை வாசிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் காபி ஹவுசில் தோழர் இனிவேனிலைச் சந்தித்தேன். அன்றுமுதல் இன்றுவரை உருமாறாமல் அந்த நினைவு அப்படியே இருக்கிறது.

இப்பொழுதும் அந்தக்காபி ஹவுசைக் கடக்கையில் அனிச்சையாக என்தலை திரும்பி சாளரத்தை எட்டிப்பார்க்கிறது. அச்சாளரத்தின் வழியே தோழர் தென்பட்டால், யாரோபோல் அருகிருந்து அவர் விவாதிப்பதைக் கேட்டுவிட்டு அமைதியாகத் திரும்புகிறேன். நானும் தொழிலாளர்களைத் தோழர்களாக ஏந்திக்கொள்ள எண்ணுவதால், உணவு மேசையில் வைக்கப்படும் மீதிச் சில்லறைகளை மறக்காமல் எடுத்துக்கொள்கிறேன். ஆமாம், தோழர்கள் என்பவர்கள் அன்பைக்கூட பிச்சையாக இட விரும்புவதில்லை.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்