ஆங்கிலேயர்களுக்கு சமமாக கிரிமினல் வழக்குகளில் வாதாடிய தமிழர்!



தமிழ்நாட்டு நீதிமான்கள் - 18

-கோமல் அன்பரசன்

ஆர்.சடகோபாச்சாரியார்


சடகோபாச்சாரியார் வாதாட வருகிறார் என்றாலே அந்த நீதிமன்றம் நிரம்பி வழியும். இந்தியர்களை வெறுத்த வெள்ளைக்கார பாரீஸ்டர்களும் நீதிபதிகளும் கூட சொக்குப்பொடி போட்டது போல அவரது வாயைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ‘ஓர் இந்தியனால் எப்படி நம்மைவிட சிறப்பாக, நம்முடைய தாய்மொழியைப் பேசமுடிகிறது’ என்று ஆங்கிலேயர்கள் வியந்து நிற்பார்கள். அதிலும் சித்தூர் ஜில்லா நீதிமன்ற நீதிபதியாக இருந்த செவல் (Sewell ) என்பவருக்கு சடகோபாச்சாரியார் வாதம் என்றால் வெல்லக்கட்டி.

சடகோபாச்சாரியார் வாதாட வருகிறார் என்றாலே அந்த நீதிமன்றம் நிரம்பி வழியும். இந்தியர்களை வெறுத்த வெள்ளைக்கார பாரிஸ்டர்களும் நீதிபதிகளும் கூட சொக்குப்பொடி போட்டது போல அவரது வாயைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ‘ஓர் இந்தியனால் எப்படி நம்மைவிட சிறப்பாக, நம்முடைய தாய்மொழியை பேச முடிகிறது’ என்று ஆங்கிலேயர்கள் வியந்து நிற்பார்கள்.

அதிலும் சித்தூர் ஜில்லா நீதிமன்ற நீதிபதியாக இருந்த செவல் (Sewell ) என்பவருக்கு சடகோபாச்சாரியார் வாதம் என்றால் வெல்லக்கட்டி. அருவி போல அவர் ஆங்கிலம் பேசும் அழகைக் கண்கொட்டாமல் பார்த்து ரசிக்க தன் மனைவியையும் நீதிமன்றத்திற்கு கூப்பிட்டு வந்துவிடுவார். சடகோபாச்சாரியாரின் ஆங்கில பேச்சழகிற்கு அந்த காலத்தில் அவ்வளவு பெருமை இருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டுமல்ல, அன்றைக்கு பரந்து விரிந்திருந்த மெட்ராஸ் மாகாணத்தின் 26 ஜில்லாக்களிலும் வாதாடுவதற்கு இவர் போய்விட்டால் நீதிமன்றங்கள் களைகட்டிவிடும். சென்னையிலிருந்து சடகோபாச்சாரியார் வாதாட வருவதே உள்ளூரில் முக்கிய செய்தியாகிவிடும். அந்தக்காலத்தில் மட்டுமின்றி, 150 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் ஆங்கிலப் பேச்சுத் திறமை என்பது வக்கீல்களுக்கு அவசியமான திறன்.

அத்தனை சட்ட நுணுக்கங்களும் அறிந்திருந்தும் அந்த ஓர் ஆற்றல் இல்லாததால் வழக்கறிஞர் தொழிலில் தோற்றுப்போனவர்கள் உண்டு. வேறெதும் பெரிதாக இல்லாமல் ஆங்கிலப் பேச்சை மட்டும் வைத்து வென்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால், சடகோபாச்சாரியாருக்கு அசாத்தியமான உழைப்பு, அற்புதமான சட்ட அறிவு ஆகியவற்றுடன் ஆங்கிலப் பேச்சும் சேர்ந்து வெற்றிக்கு கைகொடுத்தது.

ஆங்கிலேயர்களையும் மதிக்க வைத்தது. நட்பு பாராட்டச் செய்தது. இவற்றைத் தாண்டி இன்னொரு துணிவும் அவருக்கு கைகொடுத்தது. 19ம் நூற்றாண்டின் அந்திப்பொழுதில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை உடைத்துக்கொண்டு, நம்மவர்களும் மெல்ல வழக்கறிஞர் தொழிலில் மேலே எழுந்து வந்தனர். அவர்களில் 95 சதவீதம் பேருக்கு கிரிமினல் வழக்குகளைக் கண்டால் ஒரு வித அச்சம் அல்லது தயக்கம்.

சொத்து தகராறு போன்ற சிவில் வழக்குகளில் வாதிட மட்டுமே அவர்கள் விரும்பினார்கள். இது வெள்ளைக்கார பாரீஸ்டர்களுக்கு ரொம்பவும் வசதியாகிப் போனது. கிரிமினல் வழக்குகளில் அவர்கள் வெளுத்து வாங்கினார்கள். இச்சூழலில் கிரிமினல் வழக்குகளைக் கையிலெடுத்த ஒன்றிரண்டு பேரில் சடகோபாச்சாரியாரும் ஒருவர். அதன் மூலம் ஆங்கிலேயர்களோடு சேர்த்து நம்மவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

அடுத்தடுத்த வழக்குகளில் வாங்கிய பெயரால், சிறந்த குற்றவியல் வழக்கறிஞர்கள் பட்டியலில் சடகோபாச்சாரியாருக்கும் இடம் கிடைத்தது. அன்றைக்கு முன்னணியில் இருந்த எர்ட்லி நார்ட்டன் என்ற பாரீஸ்டருக்கு இணையாக இவரும் பேசப்பட்டார். குறுக்கு விசாரணை செய்வதில் கில்லாடி எனப் புகழப்பட்டார். பல வழக்குகளில் நார்ட்டனுடன் நேருக்கு நேர் மோதுபவராக சடகோபாச்சாரியார் உருவானார்.

நீதிமன்றத்தில் இரண்டு பேருக்கும் இடையில் நெருப்புப் பொறி பறந்தாலும், ஒரு கட்டத்தில் இவர்கள் அணுக்க நண்பர்களாயினர். பிற்காலத்தில் கொடைக்கானலில் வசிக்கச் சென்றுவிட்ட நார்ட்டன், முக்கிய வழக்குகளில் மட்டும் வாதாடுவதற்கு சென்னை வந்து போனார். அத்தகைய சூழலில் ‘டியர் சடகோபா…’ என்று அழைத்து சடகோபாச்சாரியாருக்கு நார்ட்டன் எழுதிய கடிதம் இன்றளவும் சட்ட உலகத்தில் போற்றப்படுகிறது.

கும்பகோணத்தில் ஏழை பிராமணரான ராகவாச்சாரியின் மகனாக 1853ல் பிறந்த சடகோபாச்சாரியார், இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். கும்பகோணம் எஸ்.பி.ஜி. பள்ளியில் 1869ல் மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்றாலும் எல்லோரையும் போல கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியில்லை. சடகோபாச்சாரியாரின் தாய் கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர்.

இருந்தாலும் பிராமண குடும்பத்துப் பெண்கள் மேடை ஏறி கச்சேரி நடத்துவதெல்லாம் அபச்சாரம் என்று நினைத்த காலம் அது. எனவே மகனின் கல்விக்காக அந்த தாய், குழந்தைகளுக்கு சங்கீத வகுப்புகளை எடுத்து சம்பாதித்தார். அந்த வருமானத்தில் வாழ்க்கையையும் ஓட்டிக்கொண்டு, பிள்ளைக்கும் உற்சாகமூட்டி படிக்க வைத்தார். தனி படிப்பு வழியாக எஃப்.ஏ முடித்தார்.

பின்னர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ. முதல் வகுப்பில் தேறினார். ஏழைத்தாய்க்கு தன் மகனை எப்படியாவது வக்கீலாக்கிப் பார்த்துவிட வேண்டும் என்பது தணியாத ஆசை. அதற்காக கூடுதல் வேலைகளைச் செய்து குருவியைப் போல பணம் சேர்த்தார். சட்டப்படிப்புக்காக சென்னைக்கு வந்த சடகோபாச்சாரி, மாநிலக்கல்லூரியில் மாலை நேரத்தில் பயிற்றுவிக்கப்பட்ட பி.எல். சட்டப்படிப்பில் சேர்ந்தார்.

சென்னையில் தங்கி படிப்பது அவருக்கு அவ்வளவு எளிதானதாக இல்லை. அம்மாவின் கனவு அவர் கண்முன்னே வந்து நின்றது. அதனை நனவாக்கியே தீருவது என்ற உறுதி பிறந்தது. பணத்திற்கு ஒரு வழி கண்டுபிடித்தார். பச்சையப்பன் கல்லூரியில் பகுதி நேரமாக விரிவுரையாளர் வேலைக்குச் சேர்ந்தார். காலையில் ‘பச்சையப்பாஸ்’ மாணவர்களுக்கு பாடம் நடத்துவார். மாலையில் சட்ட வகுப்பில், தானே ஒரு மாணவராக பாடம் படிப்பார்.

அப்போது ஜார்ஜ் டவுன் பகுதியிலிருந்த பச்சையப்பன் கல்லூரியில் பணி முடிந்ததும், விறு விறுவென நடந்து வியர்வை வழிந்தோட தினமும் மாநிலக்கல்லூரிக்குச் செல்வார். அந்தளவுக்கு வறுமை வாட்டி எடுத்தாலும் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் நூலகங்களில் உட்கார்ந்து ஆங்கில இலக்கியங்களைப் படிப்பார். அற்புதமான கவிதைகளையும் கட்டுரைகளையும் முழுதுமாக உள்வாங்கிக் கொண்டு திரும்பச் சொல்லிப் பார்ப்பார்.

ஆலிவர் கோல்ட்ஸ்மித், சாமுவேல் ஜான்சன் போன்ற மேதைகளின் எழுத்துகளை விரும்பி மனதில் ஏற்றிக்கொள்வார். அவர்களைப் போல ஆங்கிலத்தில் எழுதிப் பழகுவார். அந்த எழுத்துகளை அதே ஏற்ற இறக்கத்தோடு பேசியும் பார்ப்பார். இவையெல்லாம் பிற்காலத்தில் அற்புதமாக அமைந்த அவரது ஆங்கிலப் பேச்சாற்றலுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. ஆங்கிலத்தோடு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகியவற்றிலும் சிறப்பு பெற்றவராக விளங்கினார்.

நாள்தோறும் பசியைப்போக்கும் பணிக்காகவும் அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் படிப்புக்காகவும் ஓடிக் கொண்டிருந்தவர், சிறிது காலத்தில் மாநிலக்கல்லூரியிலேயே ஆசிரியர் பணி வாங்கிக்கொண்டு, அங்கேயே வக்கீல் படிப்பைத் தொடர்ந்தார். 1878ல் பி.எல். பட்டம் பெற்ற ராகவாச்சாரி, வக்கீல் ஏ.ராமச்சந்திர அய்யரிடம் தொழில் பழகுநராகச் சேர்ந்தார். பிற்காலத்தில் மைசூர் மற்றும் திருவாங்கூர் சமஸ்தானங்களில் தலைமை நீதிபதியாகப் பணிபுரிந்த ராமச்சந்திர அய்யர், அப்போது சென்னையின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒரு
வராகத் திகழ்ந்தார்.

அவரிடம் சட்டத் தொழில் குறித்து சடகோபாச்சாரியார் படித்த பால பாடம் சிறப்பானதாக அமைந்தது. விரைவிலேயே தனியாக தொழில் நடத்தத் தொடங்கியவர், எல்லாரையும் போல ஆரம்பத்தில் சிவில் வழக்குகளையே எடுத்து நடத்தினார். அதன் மூலம் மெட்ராஸ் மாகாணத்தின் செல்வந்தர்கள், ஜமீன்கள், மடாதிபதிகள் போன்றவர்களின் பழக்கம் சடகோபாச்சாரிக்கு கிடைத்தது.

இருந்தாலும் கிரிமினல் வழக்குகளையும் நடத்துவது என்று அவர் எடுத்த முடிவு, வாழ்வில் திருப்புமுனையானது. அதிலும் ‘நீதியும் நீதிமன்றங்களும்’ ஒன்றுதான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஜில்லா நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளுக்கும் சென்று வாதிட்டார். இதன் மூலம் அவரது பெயர் தென்னகமெங்கும் பரவியது.

சேலம் கலவர வழக்கு, விழுப்புரம் கலவர வழக்கு போன்றவற்றில் சடகோபாச்சாரியாரின் வாதத்திறன் பேசப்பட்டது. நாடுகடத்தும் தீர்ப்புக்கு எதிரான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம் பிள்ளையின் மேல்முறையீட்டு வழக்கில் சடகோபாச்சாரியின் வாதங்கள் முக்கியமானவை. எல்லாவற்றையும் விட ‘தி போட்டோகிராஃபர் மர்டர் கேஸ்’ என்ற பெயரில் சட்டப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள சூலூர் சுப்பாராவ் வழக்கில் சடகோபாச்சாரியும் அவரது நண்பர் எர்ட்லி நார்ட்டனும் இணைந்து கலக்கினர்.

அவ்வழக்கில் கோவை மாவட்ட நீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இருவரும் முன்வைத்த வாதங்கள், கிரிமினல் வழக்குகளில் குற்றவாளியின் தரப்பில் நின்று எப்படியெல்லாம் வாதாட முடியும் என்பதற்கு வழிகாட்டும் வகையில் அமைந்தவை. குற்றவியல் வழக்குகளில் கொடி நாட்ட நினைக்கும் வக்கீல்கள் அவசியம் படித்துப்பார்க்கத் தகுந்தவை. சிவில், கிரிமினல் என எல்லா வழக்குகளையும் எடுத்து வாதாடிய சடகோபாச்சாரியாருக்கு புகழோடு பணமும் குவிந்தது.

சென்னையில் மாளிகை  போன்ற வீடு கட்டி வாழ்ந்தார். சிறுவயதில் தான்பட்ட துன்பங்களை மனதில் வைத்து, இல்லையென்று வந்தவர்களுக்கு மறுக்காமல் உதவி செய்தார். ஏழைகள், பணியாளர்கள் மீது பெரும் இரக்கம் காட்டினார். கர்நாடக சங்கீதத்தில் பாடும் திறன் கொண்டிருந்தார். கஷ்டப்படுகிற சங்கீதக் கலைஞர்களுக்கு உதவினார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபாவின் தலைவராக சில ஆண்டுகள் சேவையாற்றினார். அப்போது மக்களுக்கு நன்னெறிகளைச் சொல்லித்தரும் வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்தார். சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் மக்கள் பணி செய்தார். 1912 முதல் 1915 வரை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தலைவராகவும் இருந்தார்.

எல்லாவற்றையும் விட தன்னுடைய ஜூனியர்கள் மீது சடகோபாச்சாரியார் காட்டிய அன்பும் அக்கறையும் நீதித்துறை வட்டாரத்தில் பெயர் பெற்றது. வழக்குகளில் வாதிடுவதைப் பற்றி மிகவும் வெளிப்படையாக ஜூனியர்களோடு விவாதிப்பார். சாட்சியங்களையும் முக்கிய புள்ளிவிவரங்களையும் எப்படி வரிசைப்படுத்த வேண்டுமென அழகுற சொல்லித்தருவார். அவர்களுக்கு பொருளாதார உதவிகளைச் செய்வதிலும் தாராளமாக நடந்து கொள்வார்.

இன்னொரு பக்கம், இளகிய மனம் கொண்டு கேட்போருக்கெல்லாம் வாரிக்கொடுத்ததினால், வாழ்வின் கடைசிக்காலத்தில் பணக்கஷ்டத்திற்கு ஆளானார் என்பதும் நமக்கு ஒரு பாடம்தான்! சடகோபாச்சாரியார் மறைந்தபோது, உயர் நீதிமன்றத்தில் புகழஞ்சலி செய்யப்பட்டது. அதில் பேசிய அப்போதைய தலைமை நீதிபதி சர்.விக்டர் மர்ரே கூட்ஸ்ட்ராட்டர் சொன்ன இந்த வார்த்தைகள் காலத்திற்கும் அவர் புகழ் பாடும்… ‘‘கள்ளங்கபடமற்ற பேச்சு உள்ளிட்ட உயரிய பண்புநலன்களும் ஜூனியர்கள் மீது காட்டிய அளப்பரிய அக்கறையும் சடகோபாச்சாரியாரின் சிறப்பை நமக்கு எப்போதும் நினைவூட்டும்!’’

(சரித்திரம் தொடரும்)

ஓவியம்: குணசேகர்