கெட்ட பையன் சார் இந்த கார்த்தி



-மை.பாரதிராஜா

‘‘ஸ்விம்மிங் காஸ்ட்யூம்ல அங்கனா ராய் இருக்கிற ஸ்டில்லை டைட்டிலுக்கு ரைட்ல வச்சுக்குங்க. ருஹானி ஷர்மா க்ளோசப் ஸ்டில்லை பெருசு பண்ணிக்குங்க...’’ டிசைனர் கம்பம் சங்கரிடம் போஸ்டர் கரெக்‌ஷன்ஸ் சொல்லிக் கொண்டிருந்தார் ரவி பார்கவன். பரத் நடிக்கும் ‘கடைசி பென்ச் கார்த்தி’ படத்தின் இயக்குநர் இவர்.

‘‘என்ன பிரதர் அப்படி பாக்குறீங்க? ஸ்டில்ஸ் கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியாதான் இருக்கும். ஆனா, படத்துல கிளாமர் இல்லை. சினிமாவையும் காதலையும் அவ்வளவு லேசுல பிரிக்க முடியாது. பொண்ணுங்களுக்கு பாவாடை - தாவணி போய் சல்வார், லெக்கின்ஸ்னு டிரெஸ்ஸிங் டிரெண்ட் எங்கியோ போய்க்கிட்டிருக்கு.

அதே மாதிரி காதலும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு தாவிப்போய் தடதடக்குது. ‘இதயம்’ முரளி காலத்து காதல் இப்ப ஒர்க் அவுட் ஆகுமா?’’ கேள்வியை வீசிவிட்டு நம்மைப்  பார்க்கிறார் பார்கவன். இதற்கு முன் ‘காதல் செய்ய விரும்பு’, ‘ஒரு காதல் செய்வீர்’, ‘வெல்டன்’, ‘திரு ரங்கா’ படங்களை இயக்கியவர்.

கடைசி பென்ச்சுக்கும் லவ்வுக்கும் என்ன சம்பந்தம்?
முன் பென்ச்சுல இருக்கறவங்க படிக்கற பசங்க மாதிரியும் கடைசி பென்ச்சுல இருக்கறவங்க கெட்ட பசங்க மாதிரியும் ஓர் எண்ணம் நமக்குள்ள இருக்கு. ‘கெட்ட பய சார் இந்த கார்த்தி’னு சொல்லத் தோணும். ஆனா, அது நிஜம் இல்லை. இப்ப உள்ள காதல் டிரெண்டை உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கேன். முகம் சுளிக்கற மாதிரி எந்த சீனும் வைக்கலை. வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கேன். எந்தளவுக்குனா... படத்துல வர்ற ஒரு டயலாக்குக்கு சென்சார்ல கட் கொடுத்தாங்க. அது இருந்தே ஆகணும்னு சொன்னேன். அப்படின்னா
‘ஏ’ சர்டிபிகேட்தான்னு சொல்லி அதையே கொடுத்திருக்காங்க.

அப்படி என்ன டயலாக் அது?
இப்பவே சொன்னா சஸ்பென்ஸ் உடைஞ்சிடும். ‘வெச்சு செஞ்சிடுவேன்’னு வசனம் வைச்ச படத்துக்கெல்லாம் ‘யு’ சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க. எங்க வசனம் இது மாதிரி இல்ல. ரொம்ப சாதாரணம். ஆனா, அதுக்கு ‘ஏ’. இருபது வருஷங்களுக்கு முன்னாடி இருந்த ரூல்ஸை இப்பவும் சென்சார்ல ஃபாலோ செய்யறாங்க. அவங்க அப்டேட் ஆகாம, ‘தமிழ் சினிமா பின்தங்கியே இருக்கு’னு புலம்பறாங்க. ஒண்ணு தெரியுமா? சென்ஸார் சர்டிபிகேட் கொடுத்துட்டு அந்த ஆபீசர், ‘‘கடைசி பென்ச் கார்த்தி’ ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டார்’னு சொன்னார்!

படத்தோட ஒன்லைன் என்ன..?
காதலுக்கும் லவ்வுக்கும் இருக்கற வித்தியாசம்தான் படமே. தமிழ்ல காதல்னு சொல்லும் போது ஒரு மரியாதை இருந்துச்சு. அதுவே லவ்வா மாறினதும் அந்தக் காதல் என்னாச்சு? இதுதான் கதை. காலேஜ் ஸ்டூடன்ட்ஸா பரத், ருஹானி ஷர்மா நடிச்சிருக்காங்க. மாடர்ன் பெண்ணா அங்கனா ராய். ருஹானியோட அப்பாவா ஞானசம்பந்தன். லவ்வாலஜி கன்சல்டன்ட்டா ரவிமரியா. இவங்க எல்லாருமே ஸ்கோர் பண்ணியிருக்காங்க.

படத்தோட கதையைக் கேட்டதும் பரத் உற்சாகமாகிட்டார். ஸ்கிரிப்ட்ல இருந்து ஷூட்டிங் ஸ்பாட் வரைக்கும் தன்னால் முடிஞ்ச அளவுக்கு சின்னச் சின்ன ஒர்க்கைக் கூட இழுத்துப் போட்டு செஞ்சார். கோதாவரி நதில ஒரு பாட்டை ஷூட் பண்ணியிருக்கோம். அந்த டைம்ல அங்க வெள்ளம் கரை புரண்டு ஓடுச்சு. செம்மண் கலர்ல சேறும் சகதியுமா தண்ணீர் ஓடிக்கிட்டிருந்தது. அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்து பாடலை முடிச்சு கொடுத்திருக்கார் பரத்.

என்ன சொல்றாங்க ஹீரோயின்ஸ்?
ருஹானி ஷர்மா பஞ்சாபி பொண்ணு. அங்க நிறைய மியூசிக் ஆல்பம் பண்ணியிருக்காங்க. அதைப் பார்த்துதான் கமிட் பண்ணினோம். ‘கிளாமர் பண்ண வேண்டியிருக்கும்’னு சொல்லியிருந்தோம். ஆனா, படத்துல அதுக்கான சூழல் அவங்களுக்கு இல்லை. அதே மாதிரி அங்கனாராய். தன்னோட கேரக்டரை கேட்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆனாங்க. ஸ்டார்ட்டிங்கே இப்படி இருக்கேனு தோணுச்சு. ஆனா, கதாபாத்திரம் பிடிச்சு நடிச்சுக் கொடுத்தாங்க.

ஒரு பாடல் சீனை நீச்சல்குளத்துல மதியம் ஷூட் பண்ண வேண்டியிருந்தது. சில காரணங்களால நைட்தான் படமாக்கினோம். நவம்பர் பனி கொட்டுது. நமக்கே வெடவெடத்தது. ஆனா, அதை பொருட்படுத்தாம நடிச்சுக் கொடுத்தாங்க. தயாரிப்பாளர்கள் சுதிர், கிரண் தெலுங்கிலும் படங்கள் பண்றவங்க. அதனால ஆடியோவை ‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி சார் கையால வெளியிட வச்சாங்க. படத்தோட ஒளிப்பதிவை முஜிர் மாலிக் கவனிக்கறார். பாடகர் மனோவோட உறவினர் இவர். அன்பு ராஜேஷ் இசையமைக்கிறார். இவங்க ரெண்டு பேருக்குமே இது முதல் படம். போட்டி போட்டு வேலைப் பார்த்திருக்காங்க!              

Behind the scenes

* பிரபுசாலமனின் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ படத்துக்கு ரவிபார்கவன் வசனம் எழுதியிருக்கிறார்.
* 45 நாட்கள் திட்டமிட்டு, 35 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளனர்.
* பாடல்களை நா.அண்ணாமலை, கலைக்குமார், பத்திரிகையாளர் இரா.ரவிஷங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.
* ‘ஃபேஸ்புக் லவ்’ என்ற பாடல் எழுதிய பிறகே மெட்டு அமைத்திருக்கிறார்கள். குத்தாட்ட பாடலுக்கு சுரேகா வாணி ஆடியிருக்கிறார்.
* சென்னை, ஹைதராபாத், அமலாபுரம், கோதாவரி நதி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
* கல்லூரி போர்ஷன்களை சென்னை, ஹைதராபாத்தில் எடுத்துள்ளனர்.