இரவின் பாடல்



-ஸ்டாலின் சரவணன்

அகலில் எண்ணெயிட்டு
திரி வேய்ந்து
தீபமேற்றுவதைப் போலல்ல
காய்ந்த சருகில்
விழுந்த நெருப்பென
சரசரத்து
அவளைப் பற்றி எரிகிறான்

இறுகப் புனைந்ததில்
வனம் அதிர்ந்து
மலை மீதேறி அமர்கிறது

மேடு பள்ளம் பார்க்காது
அடித்தோடுகிறது வெள்ளம்
அவள் அதில் குளித்து
கரையேறுகிறாள்
வெள்ளத்தின் மிச்சம்
கூந்தலில் சொட்டுச் சொட்டுகிறது

சாம்பல் உதிர்ந்திருக்கும்
காடென காய்ந்த மல்லிகள்
படுக்கையில் கிடக்கின்றன

அவன் சோம்பல் முறிக்கிறான்
வனத்தில் பறவைகள்
கிளையிலிருந்து சடசடத்து
பறக்கத் தொடங்கின.