காதல் குடும்பத்தின் சப்தஸ்வரங்கள்...
-நா.கதிர்வேலன்
அவ்வளவு அன்போடு கரம் கொடுக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். எந்த வம்புதும்புக்கும் போகாத, யார் அணியிலும் சேராத எழுத்தாளர்களின் குட்புக்கில் இருக்கிற ஆச்சர்ய மனிதர். எழுதி ஒளியேற்றும் மகா கலைஞனோடு ‘ஒரு சிட்டிங் பேசலாமா’ என அழைக்க, மகன்கள் ஹரி பிரசாத், ஆகாஷ், பிரியசகி சந்திரபிரபா என ஒன்று சேர்ந்தபோது அந்த சந்திப்பே அழகானதாக மாறியது.
‘‘இதுதாங்க சொர்க்கம். நம்பிக்கை தருகிற குழந்தைகளும், மனதுக்கு இசைந்த மனைவியும்தான் உள்ளத்தைத் திறக்கிற இசைக்கருவி! நான் இவங்க எல்லோரோட கைப்பிடிக்குள்தான் இருக்கேன்...’’ ஆனந்தமாக சிரிக்கிறார் எஸ்.ரா. ‘வாங்க பேசுவோம்’ என அவர் ஆரம்பிக்க, விரிந்து சென்றது உரையாடல்.
‘‘இப்பப் பாருங்க ஹரிபிரசாத் ‘க்ளீன் போல்டு’ என்று ஒரு குறும்படம் எடுத்து அது பரவலாக கவனம் பெற்றிருக்கு. எக்ஸாம் எழுதிட்டு நிக்கிற ஸ்டூடண்ட் போல இருந்தவன், ரிசல்ட் தெரிஞ்சு சந்தோஷம் ஆயிட்டான். ஏ.ஆர்.முருகதாஸ் ‘உன் வயசில நான் படம் பார்த்திட்டு திரிஞ்சேன். நீ படமே எடுத்திட்ட. ஏழு நிமிஷத்திற்குள் ஒரு விஷயத்தை சொல்ல முடிவதே அருமையான விஷயம். உன்னால் இன்னும் முடியும்’னு சொல்லிவிட்டுப் போனார். நீங்க அவன் கிட்டே பேசினால் இதையே வேற கோணத்தில் சொல்வான்னு நினைக்கிறேன்...’’ என மகனைப் பார்க்கிறார் எஸ்.ரா.
‘‘ஒரு குறும்படப் போட்டிக்காக அப்பாகிட்டே கதைக்கு உட்கார்ந்தேன். ஏழு நிமிஷத்தில் சொல்லியாகணும். டோனிக்கு கூட ஒரு பொண்ணு இருக்கு. அவங்க கிரிக்ெகட்டரா வருவாங்களான்னு தெரியாது. டெண்டுல்கர்க்கு சாரான்னு ஒருத்தர் இருக்காங்க. ஏனோ தெரியலை, மகன்கள் மட்டுமே வர்றாங்க. கிரிக்ெகட்டை பசங்க விளையாட்டு மாதிரி ட்ரெண்ட் பண்ணிட்டீங்க. லேடி டெண்டுல்கர்னு சொல்லப்படுகிற பெண் கேப்டன் மித்தாலியை இங்கே எத்தனை பேருக்குத் தெரியும்? இங்கிலாந்தில் அடுத்த வருஷம் பெண்களையும் சேர்த்துக்க போறாங்க.
டென்னிஸ் கலப்பு இரட்டையர்னு ஆடும்போது கிரிக்கெட்டிலும் அப்படி வந்தால் நல்லாத்தானே இருக்கும். ஆனால், இங்கே பெண்களுக்கு பழக க்ரவுண்ட், கோச், வசதின்னு ஒண்ணும் கிடையாது. அப்பாதான், ‘என்ன வேண்டுமானாலும் எடுங்க. ஆனால், அது சமுதாயப் பார்வையில் வந்து நிக்கணும்’னு சொன்னார். வீட்டு வேலை செய்கிற ஒரு எளிய சிறுமியின் கனவாக வைத்து இந்தக் குறும்படத்தை உருவாக்கினேன். என்கூட படிச்சவங்களே எனக்கு உதவியா இருந்தாங்க.
தேசிய விருதுக்கும் இன்னும் சில போட்டிகளுக்கும் அனுப்பியிருக்கேன். ‘க்ளீன் போல்டு’ பார்த்திட்டு உலகம் என்ன சொல்லப் போகுதுன்னு வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குதுங்க...’’ மலர்ந்து சிரிக்கிற ஹரியிடம் தெரிவது சந்தோஷக் கூச்சம். ‘‘பெருமையா இருக்கு. பிள்ளைகளை நம்முடைய விருப்பங்களை செய்ய வைப்பதற்கான சேனல்களாக மாத்தக்கூடாது. வெளியே ஒரு மரம் வைச்சா தண்ணி ஊத்தி பராமரிக்க வேண்டியது நம்ம பொறுப்பே தவிர, எந்தப் பக்கம் திரும்பணும்னு கட்டளை இட முடியாது. அவங்க விருப்பம் நிறைவேற துணையாக இருக்கலாம்.
பெரியவன் செய்யற வேலையில் எப்பவும் பொறுப்பு தெரியும். எல்லாத்தையும் நறுவிசாக கத்துக்க விரும்புவான். சின்னவன் ஆகாஷ் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து பரபரன்னு திரிகிற ஆள். ஷெர்லாக் ஹோம்ஸின் அத்தனை டிவிடிகளையும் பார்த்து முடிச்சிட்டான். இசையின் நுணுக்கத்தில் கில்லாடி. எல்லாத்திலும் உள்ளே புகுந்து அறிவைச் சேர்த்துக்கிறது... எல்லாமே அவனே தேடி அடைஞ்சது. நாங்க புத்தகம் படிக்கிறோம். சேர்ந்து ம்யூசிக் கேட்கிறோம். குரோசவா படத்தை எல்லோரும் சேர்ந்துதான் உட்கார்ந்து பார்க்கிறோம்.
நான் எதையும் ரகசியமாய் செய்துக்கிறதில்லை. ‘எனக்கு எழுத, படிக்கப் பிடிக்கும் என்பதால் உங்களுக்கும் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை’ன்னு சொல்லியிருக்கேன். உங்களை பொருளாதாரமோ, காலமோ தீர்மானிக்கிறதில்லை. மாறாக உங்கள் எண்ணங்களே உங்களை தீர்மானிக்கின்றன. கதவைத் திறந்து விடுவது மட்டுமே நான். எழுந்து நடந்து வருவதெல்லாம் அவங்க திறமையில்தான். குடும்பம் என்பது மனப்பக்குவம்...’’ என்கிற எஸ்.ராவைப் பார்த்து மலர்கிறார்கள் மகன்களோடு சேர்ந்து மனைவி சந்திரபிரபாவும்.
‘‘ஆரம்பத்தில் இந்த கஷ்டங்களை பொருட்படுத்தியதில்லை. அவர் எழுதுவதற்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாதுன்னு நானே விரும்பி தோள் மாத்திக்கிட்டது. எந்த பிரச்னைகளையும் மனதில் வைத்துக் கொண்டு புழுங்கியதில்லை. தெளிவாக கூப்பிட்டு உட்கார வைச்சு, காரண காரியங்களை புரிய வைச்சிருக்கேன். அதனால் எப்பவும் எமோஷனல் ஆனதே இல்லை. அர்த்தமும், நிறைவும், கொஞ்சம் கனவும்கூட இல்லாத வாழ்க்கையின் சாரம்தான் என்ன? சுத்த போர். அப்படியில்லாத வாழ்க்கை எனக்கு அமைந்திருக்கிறது.
உணர்வு ரீதியாக துணையாக, தோழனாக இருக்கிற அன்பு எங்களின் இருவரின் புரிதலில் வந்தது. ஒரு நாளும் அவர் பொறுப்பற்று இருந்ததில்லை. என் பிள்ளைகளும் நான் வைத்திருந்த நம்பிக்கையில் கொஞ்சமும் குறைஞ்சதில்லை. சுயமரியாதைக்கு இழுக்கு வராமல் ஓர் உறவுமுறை, பகிர்வு. ஒரு கத்தல் இல்லை. கூச்சல் இல்லை, குற்றம் சாட்டும் மனோபாவம் இல்லை. ஒரு புகாரும் இல்லை.
ஆளுக்கு ஆள் என்னை நிறைவான மனநிலையில் வைத்திருக்கும்போது இவர்களுக்காக இந்த உலகத்தையே சுமந்துவிடுவது கூட எனக்கு சுலபமாகி விடுகிறது...’’ என்று சந்திரபிரபா சொல்லி முடிக்கிறபோது மொத்த சூழலே சில்லிடும் அமைதியில் நெகிழ்கிறது. ‘‘வேடிக்கை என்ன தெரியுமா... என்னோடு படித்தவர்கள் என்னைவிட நல்ல நிலைமையில் இருக்காங்க. பொருளாதாரத்தில் அவங்களை நெருங்கக்கூட முடியாது. ஆனால், அவங்ககிட்டே சந்தோஷம் இல்லை. யாராக இருந்தாலும் என்கிட்டேதான் ஆலோசனை கேட்கிறாங்க.
எங்க சொந்தபந்தத்தில இருக்கிற எல்லோருக்கும் நான்தான் பேர் வைக்கிறேன். எழுத ஆரம்பித்த காலத்தில் என்னை பரிகசித்த பலரும், இப்போது என்னை உறவினர்னு சொல்லிக்க ஆசைப்படுகிறார்கள். ‘இதெல்லாம் ஒரு வேலையா’ன்னு கேட்டவர்கள் ‘என் அண்ணன் பையன்தான்’னு சொல்லிக்கிறாங்க. கும்பகோணத்தில் ஆட்டோ வச்சிருக்கிற ஒரு வாசகர், ‘இங்கே எப்ப வந்தாலும் இந்த ஆட்டோ உங்களுக்கு ஃப்ரீ’ன்னு சொல்றார்.
பழனி கோயிலுக்குப் போனால் ‘என் பையன் உங்க புத்தகங்களையே படிச்சிட்டு திரிவான்’னு அந்த காலைப் பசிக்கு ஆறு இட்லிகளை எடுத்து எனக்குத் தருகிறார் முகம் தெரியாத ஒரு பெண்மணி. இந்த சமூகத்தை நான் மதிச்சேன். கொண்டாடினேன். இந்த சமூகமும் அதை திருப்பித் தருவதாக நினைக்கிறேன்...’’ என நம் முகம் பார்த்துச் சிரிக்கிறார் எஸ்.ரா.
‘‘எனக்கும் சரி, இவனுக்கும் சரி, எங்க முதல் ஸ்கூல் அப்பாதான்...’’ என புன்னகைக்கிற ஹரியின் கையைப் பிடிக்கிறார் சந்திரபிரபா. ‘‘சரி, சரி, புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா’’ என குரல் எழுப்பித்தான் அந்த நெகிழ்ச்சியை மாற்ற முடிந்தது. பிறகு ஆரம்பமாயிற்று ‘க்ளிக் செஷன்’.
படங்கள்: ஆ.வி்ன்சென்ட் பால்
|