விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 13

‘‘இப்ப முதல் கேள்விக்கு விடை கிடைச்சுடுச்சு...’’ கைகளை உயர்த்தி கிருஷ்ணன் சோம்பல் முறித்தான். ‘‘எதை சொல்ற?’’ கேட்ட ஐஸ்வர்யாவின் முகத்தில் துளி குழப்பமும் இல்லை. ‘‘தாராவோட வீட்டுக்குள்ள புகுந்து யார் அவிச்ச முட்டைல ‘KVQJUFS’னு எழுதினாங்கனு...’’ ‘‘யூ மீன் கரிக்கட்டையா மார்ச்சுவரில இருக்கிறவங்களா..?’’ ‘‘ம்... அவங்க ஏலியன்ஸா இல்ல சோலார் செல்ஸ் பொருத்தப்பட்ட உடலைக் கொண்டவங்களானு இப்போதைக்கு தெரியலை. பொறுமையா அதை கண்டுபிடிப்போம்.

பட், பூட்டியிருந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சது அவங்கதான்...’’ ஐஸ்வர்யா தன்னிடம் கொடுத்த நீளமான சாவியை க்ருஷ் ஆராய்ந்தான். ‘‘எதுக்காக அப்படி செய்யணும்..?’’ ‘‘...’’ ‘‘தாராவுக்கு என்ன உணர்த்த வர்றாங்க..?’’ ‘‘...’’ ‘‘டேய்... உன்னத்தான்டா... ஏதாவது சொல்லு...’’  ‘‘தெரியாததை எப்படி சொல்ல?’’ ‘‘க்ருஷ்..?’’

‘‘லுக் ஐஸ்... இப்பதான் வாசல் திறந்திருக்கு. முதல்ல நுழைவோம். அதுக்கு அப்புறம் உள்ள என்ன இருக்குனு ஆராய்வோம்...’’ ‘‘ஒருவேளை தாராவும் அவங்கள்ல ஒருத்தியா... ஏலியனாகவோ அல்லது சோலார் செல்ஸ் கொண்டவளாகவோ இருந்தா..?’’ சட்டென்று ஐஸ்வர்யாவின் தலைமுடியை கொத்தாகப் பிடித்தான். ‘‘கம் அகெய்ன்...’’ ‘‘இப்ப புரியுதா ஆதி..?’’ மாஸ்டரின் குரல் வழக்கம் போல்  அன்பாகத்தான் ஒலித்தது. என்றாலும் அதற்குள் ஒரு வறட்சியை உணர்ந்தான்.

‘‘மாஸ்டர்...’’ ‘‘நாம ஆபத்துல இருக்கோம் ஆதி. நம்ம நாட்டோட பொக்கிஷத்தை களவாட முகம் தெரியாத யார் யாரோ முயற்சி செய்யறாங்க. இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு Intelligent Design அமைப்பைச் சேர்ந்த நமக்கு இருக்கு. எதை குறி வைக்கிறாங்கனு தெரியலை. ஆனா, பெருசா ஏதோ ப்ளான் நடக்குது. இதுவரை மனுஷங்க மட்டுமே களத்துல இறங்கியிருக்காங்கனு நினைச்சோம்.

ஆனா, வேற்றுகிரக வாசிகளும் இதுல சம்பந்தப்பட்டிருக்காங்கனு இப்பதான் தெரியுது...’’ இயர் போனில் மாஸ்டர் பேசப் பேச ஆதிக்கு சப்தநாடிகளும் ஒடுங்கின. ‘‘இந்த விஷயம் கார்க்கோடகருக்கு தெரியாதா மாஸ்டர்..?’’ ‘‘தெரியும்னுதான் நினைக்கறேன் ஆதி. இல்லைனா நம்ம அமைப்புக்கு சொந்தமான ஸ்ரீரங்கம் கோயிலோட வரைபடத்தை தாராகிட்ட கொடுப்பாரா..? அதுவும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ப்ளூ ப்ரிண்டோட இணைச்சு...’’ ‘‘மாஸ்டர்... மாஸ்டர்... அப்படீன்னா கார்க்கோடகரை நாம சந்தேகப்படறோமா..?’’ ‘‘ஏன் பதட்டப்படற  ஐஸ்... அப்படி ஏன் இருக்கக் கூடாது..?’’

கேட்ட க்ருஷ் கார் கண்ணாடி வழியே 360 டிகிரியில் அலசினான். மார்ச்சுவரி பக்கம், டாக்டரின் அறை என எல்லா இடங்களிலும் மனிதத் தலைகள். பத்திரிகையாளர்களும் செய்தி சேனல் நிருபர்களும் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். ‘‘அப்படீன்னா கார்க்கோடகரும் தாராவும் கூட்டா..?’’ நம்ப முடியாமல் ஒலித்த ஐஸ்வர்யாவின் குரலை உள்வாங்கியபடியே தன் பார்வையை மீண்டும் காருக்குள் திருப்பினான்.

‘‘ஏன், இருக்கக் கூடாதா..?’’ ‘‘க்ருஷ்..?’’ ‘‘இங்க பார் ஐஸ்... இறக்கறதுக்கு முன்னாடி எதையோ தாராகிட்ட சொல்ல கார்க்கோடகர் முயற்சி செஞ்சிருக்கார். ‘KVQJUFS’னு முட்டைல எழுதப்பட்டது அதனாலதான். அது என்னன்னு அவளுக்கு தெரியலை. க்ரிப்டாலஜிஸ்ட்டான உன் உதவியை அதனாலதான் தாரா நாடியிருக்கா...’’ ‘‘அப்ப... அப்ப...’’ ‘‘எதுக்கு விழுங்கற..? கார்க்கோடகரும் ஏலியனா அல்லது சோலார் செல்ஸ் பொருத்தப்பட்டவரா இருக்கலாம். ஏதோ ஒரு அஜென்டா இருக்கு. அதை நிறைவேற்றத்தான் சாதாரண மனுஷங்க மாதிரி  நடமாடியிருக்காங்க.

இந்தக் கோணத்துல யோசிக்கிறப்ப லேசா பயம் வருது...’’ ‘‘என்னடா சொல்ற...’’ ‘‘உண்மையை ஆதி... கார்க்கோடகருக்கும் மேல ஒரு தலைவனும் கூட்டமும் இருக்கணும்... யாருக்கும் எந்த சந்தேகமும் வராதபடி அவங்க பூமில நடமாடியிருக்காங்க... நடமாடவும் செய்யறாங்க...’’ ‘‘மாஸ்டர்..?’’ ‘‘அவங்களுக்கு நம்ம ID அமைப்பைப் பத்தி கூட தெரிஞ்சிருக்கு. கார்க்கோடகரை உறுப்பினரா நுழைய விட்டிருக்காங்க. நம்ம ரகசியங்களை தெரிஞ்சு வைச்சிருக்காங்க.

நமக்கு விசுவாசியா இருந்தப்பவும் கார்க்கோடகர் தனியாதானே இருந்தாரு? அப்ப அவரு விலகி நின்னது பெரிசா தெரியலை. ஆனா, இப்ப யோசிக்கிறப்ப எல்லாமே புரியறா மாதிரி இருக்கு...’’ ‘‘இதோ இந்த கூட்டத்தைப் பாரு...’’ கார் கண்ணாடி வழியே தெரிந்த மனிதத் தலைகளை கிருஷ்ணன் சுட்டிக் காட்டினான். ‘‘இதுல எத்தனை பேரு மனுஷங்க... எத்தனை பேர் ஏலியன்ஸ் அல்லது சோலார் செல்ஸ் பொருத்தப்பட்டவங்கனு கண்டுபிடிக்க முடியுமா..?’’

ஐஸ்வர்யாவிடம் கேட்டவன் பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்தான். ‘‘சத்தியமா முடியாது. ஆனா, பெருங்கூட்டமா ஏலியன்ஸ் அல்லது சோலார் செல்ஸ் பொருத்தப்பட்டவங்க நடமாடறாங்க. அது மட்டும் நிஜம். ஏன்? தெரியலை. வேற்றுகிரகவாசிகள்னா எதுக்காக பூமிக்கு வந்திருக்காங்க..? ஒருவேளை சோலார் செல்ஸ் பொருத்தப்பட்டவங்கனா... யார் இந்த வேலையை எதுக்காக செய்யறாங்க..? அவங்க நோக்கம் என்ன..?’’

‘‘அர்ஜுனனோட வில்...’’ குரலே எழும்பாமல் ஐஸ்வர்யா முணுமுணுத்தாள். ‘‘அது நம்ம டார்கெட். ஆனா, அதைத்தான் இந்த கும்பலும், ஐ மீன் ஏலியன்ஸ் ஆர் சோலார் செல்ஸ் பொருத்தப்பட்ட மனிதர்களும் தேடறாங்களானு கன்ஃபார்ம் பண்ண வேண்டாமா..?’’ ‘‘இந்த இரண்டுல எதை முதல்ல செய்யப் போறோம்..?’’ ‘‘ரெண்டுக்குமான ஆரம்பப் புள்ளி எதுவோ அதை பின்தொடரப் போறோம்..!’’ ‘‘இப்ப என்ன செய்யறது மாஸ்டர்..?’’

‘‘நம்ம அமைப்பை சேர்ந்தவங்க அங்க இருக்காங்களா ஆதி..?’’ ‘‘இருக்காங்க மாஸ்டர். யாருக்கும் எந்த சந்தேகமும் வராதபடி பரவி இருக்காங்க...’’ ‘‘குட். இனி அவங்க பார்த்துப்பாங்க. ஆஸ்பிடல்ல என்ன நடக்குதுனு இன்ச் பை இன்ச்சா உனக்கு அப்டேட் பண்ணச் சொல்றேன். நீ கிளம்பு...’’ ‘‘எங்க மாஸ்டர்?’’ ‘‘ஸ்ரீரங்கம் போகப் போறோம்...’’ ‘‘போயி..?’’ ‘‘தாராவை தேடப் போறோம். எல்லா கேள்விகளுக்குமான விடை அவ கிட்டதான் இருக்கு...’’ ‘‘ஆனா, அவ ஸ்ரீரங்கத்துலதான் இருப்பானு என்ன நிச்சயம்?’’

‘‘ப்ளூ ப்ரி ண்ட்!’’ ‘‘க்ருஷ்...’’ ‘‘அந்த வரைபடத்துல ஏதோ மர்மம் இருக்கு. அதை தெரிஞ்சுக்க நிச்சயம் அவ முயற்சி செய்வா...’’ ‘‘அப்ப இங்க என்ன நடக்கறதுன்னு நமக்கு தெரிய வேண்டாமா க்ருஷ்..?’’ ‘‘தெரிஞ்சு என்ன செய்யப் போறோம் ஐஸ்..?’’ ‘‘டேய்...’’ ‘‘அலட்டிக்காத. கரிக்கட்டையா இருக்கிற ரெண்டு பிணத்தை வைச்சு நாம எதுவும் செய்ய முடியாது. இந்த விஷயம் தாராவுக்கும் தெரிஞ்சதாலதான் இங்கேந்து தலைமறைவாகிட்டா.

இந்நேரம் திருச்சியை நோக்கி போயிகிட்டிருப்பா. காரை கிளப்பு...’’ எதுவும் சொல்லாமல் சீட் பெல்ட்டை மாட்டிய ஐஸ்வர்யா மாருதியை ஸ்டார்ட் செய்தாள். ‘‘சரி மாஸ்டர்...’’ செல்போன் அணையும் வரை காத்திருந்த ஆதி, இயர் போனை காதிலிருந்து எடுத்தான். தன் பைக் இருக்கும் இடம் நோக்கி வந்தான். அறிமுகமாகி இருந்த தன் ஆட்களுக்கு கண்களால் செய்தி சொல்லிவிட்டு ஹெல்மெட்டை மாட்டினான். சாவியால் வலப்பக்கம் திருப்பி விட்டு ஸ்டார்ட்டர் பட்டனை அழுத்தினான். சாலைக்கு வந்தான்.

ஸ்ரீரங்கம் கோயிலின் உள்ளே - சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு எதிரில் ஸ்பேஸ் ஷிப் வட்டமிட்டது. அங்கிருந்த பக்தர்களின் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. அரங்கநாதரை தரிசிக்க நுழைந்து கொண்டிருந்தார்கள். ஸ்பேஸ் ஷிப்பிலிருந்து மூன்று பேர் குதித்தார்கள். புலக் கண்களுக்கு புலப்படாத அவர்கள் நிதானமாக நுழைவாயிலுக்கு எதிரில் ஆலயத்தை பார்த்தபடி நின்றார்கள். இடது பக்கம் சக்கரத்தாழ்வார் சந்நிதி. நேராக சென்றால் அரங்கநாதர்.

இந்த இரு பாதைகளையும் தவிர்த்துவிட்டு வலப்பக்கம் நகர்ந்தார்கள். ஸ்ரீராமானுஜரின் சந்நிதி வரவேற்றது. ‘‘இங்கதான் அவர் சமாதி அடைஞ்சிருக்காரா..?’’ கேட்டவனைப் பார்த்து மற்றவன் புன்னகைத்தான். ‘‘மனுஷங்களுக்குதான் சமாதி. ராமானுஜர் மாதிரியானவங்களுக்கு அது சந்நிதி. பேசாம வா. நாம தேடி வந்தது இங்கதான் இருக்கு!’’ மூவரும் நுழைந்தார்கள். அவர்களை புன்னகையுடன் வரவேற்றார் அமர்ந்த நிலையில் காணப்பட்ட ஸ்ரீராமானுஜர்!

(தொடரும்)  

ஓவியம்: ஸ்யாம்