பாம்புக்கும் பேய்க்கும் நடக்கிற பிரச்னைதான் நந்தினி-மை.பாரதிராஜா

‘‘திருநெல்வேலி பக்கம் கல்லிடைக்குறிச்சில ஷூட்டிங். நடக்கறது ‘நந்தினி’ சீரியல் படப்பிடிப்புனு தெரிஞ்சதும் மக்கள் கூடிட்டாங்க. ‘சீரியல் பாக்குற உணர்வே வரலை. ஷங்கர் சார் படம் மாதிரி பிரமாண்ட சினிமாவா தெரியுது’னு பரவசத்தோட சொன்னாங்க. இதுல துளிக்கூட மிகையில்லை. வேணும்னா ஸ்பாட்டுக்கு நீங்களே வந்து பாருங்க. அசத்தலான அரண்மனை செட், ஏழெட்டு கேரவன்ஸ், லைவ் சவுண்ட், லைட்டிங்ஸ், அகிலா கிரைன், பத்து இருபது ஆர்ட்டிஸ்ட்னு அச்சு அசல் சினிமா மாதிரியே இருக்கும்...’’ பிரமிப்பு விலகாமல் பேசுகிறார்  இயக்குநர் ராஜ்கபூர். சன்டிவிக்காக சுந்தர்சி. தயாரிக்கும் ‘நந்தினி’ மெகா தொடருக்காக பெரிய திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.

‘‘திடீர்னு ஒருநாள் சுந்தர்.சி. கூப்பிட்டார். அவர் தயாரிக்கிற படத்துல கேரக்டர் கொடுக்க கூப்பிடறார் போலனு கேஷுவலா போனேன். பார்த்தா சர்ப்ரைஸை ஓபன் பண்றார். ‘சன் டிவிக்காக ஒரு தொடர் தயாரிக்கறேன். இது நமக்குக் கிடைச்ச ஜாக்பாட். இதுவரை சீரியல்ல  வராத பிரமாண்டத்தோட சினிமா மாதிரி எடுக்கலாம். கதை எழுதிட்டேன். நீங்க டைரக்ட் பண்ணுங்க. என்னுடைய டெக்னீஷியன்ஸை பயன்படுத்திக்குங்க’னு படபடனு சொன்னார்.

கேட்கக் கேட்க எனக்கு மயக்கமே வந்துடுச்சு. கனவா நினைவானு குழம்பிட்டேன். உண்மையாவே ஜாக்பாட்தான். உற்சாகத்தோட ஸ்கிரிப்ட் வேலைல இறங்கிட்டோம்...’’ மலர்ச்சியுடன் சொல்லும் ராஜ்கபூரிடம் ‘நந்தினி’யின் கதை என்னவென்று கேட்டோம். ‘‘சினிமா மாதிரி இதுதான் கதைனு பொசுக்குனு சொல்லிட முடியாது. ஒரு பாம்புக்கும் ஒரு பேய்க்கும் நடக்கிற விஷயங்கள்தான் கான்செப்ட். ஆனா, இந்த  லைனுக்கு பின்னாடி ஏகப்பட்ட லேயர்ஸ் இருக்கு. கிராஃபிக்ஸுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கோம்.

இது வழக்கமான சீரியல் கிடையாது. ஒரு எபிசோடை மிஸ் பண்ணினாலும் அடுத்து என்ன நடக்குதுனு புரியாது. அந்தளவுக்கு டிவிஸ்ட் ஒவ்வொரு எபிசோட்லயும் இருக்கு. மெயின் ரோல் விஜயகுமார் சார் பண்றார். சச்சு, விஜயலட்சுமி, ஹீரோயின்கள் காயத்ரி ரகுராம், நித்யாராம், மாளவிகா, ராகுல், நரசிம்மராஜு, பானுபிரகாஷ், சூப்பர்குட் பாவா, பேபி அதித்ரினு ஏகப்பட்ட நட்சத்திரங்கள். நாலு மொழிகள்ல ‘நந்தினி’ வர்றதால, எல்லா மொழிகளுக்கும் தெரிந்த முகங்களா ஆர்டிஸ்ட் அமைஞ்சிருக்கறது பெரிய பலம்.

‘அரண்மனை’, ‘அரண்மனை2’ படங்களோட ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார் கேமராவை கவனிக்கறார். சுந்தர்.சியின் ஃபேவரிட் கேமராமேன் அவர். ‘ஆரண்ய காண்டத்’துக்காக எடிட்டிங்கில் தேசிய விருது பெற்ற என்.பி.ஸ்ரீகாந்த், படத்தொகுப்பை கவனிக்கிறார்...’’ என  பட்டியலிடுகிறார் ராஜ்கபூர். அழகழகான ஹீரோயின்ஸ் நிறைய இருக்காங்க..

இதுல யார் ‘நந்தினி’?
அது சஸ்பென்ஸ். நித்யாராம், மாளவிகா, காயத்ரி ஜெயராம்னு எல்லாருக்கும் முக்கியத்துவம் இருக்கும். 12வது எபிசோட்ல இருந்து தேவசேனா கேரக்டர் என்ட்ரி ஆகுது. பேபி அதித்ரி வந்தபிறகு எக்ஸ்பிரஸ் வேகம் எடுக்கும். அமானுஷ்யமும் ஆன்மிகமும் கலந்த தொடர். அதனால தேடித் தேடி லொகேஷன்ஸ் பிடிச்சிருக்கோம். கல்லிடைக்குறிச்சி ஷூட்ல இருந்து அனகோண்டா சைஸ் பாம்பு காட்சிகள் மிரட்டப்  போகுது.

கதைக்கு பிரமாண்டமான ஒரு சிவன் கோயில் தேவைப்பட்டுச்சு. இதுவரை யாரும் பார்க்காத கோயிலா வேணும்னு இந்தியா முழுக்க அலசி கர்நாடக மாநிலத்துல இருக்கிற முருதீஸ்வரர் ஆலயத்தை ஓகே செய்தோம். ஆர்ட் டைரக்டர் பொன்ராஜ் நிறைய இடங்கள்ல ஸ்கோர் பண்ணியிருக்கார். சின்னச்சின்ன விஷயங்கள்லேயும் நுட்பமா உழைப்பார். நிறைய காட்சிகள் நைட்ஷூட் பண்ணினோம். அரண்மனைல ராத்திரி லைட்டிங் செய்து ஷூட் பண்ணினப்ப ஆர்டிஸ்ட்டே பயந்துட்டாங்க. அடுத்த ஷெட்யூலுக்கு கோவை போகறோம். அங்கயும் ஒரு  மிரட்டலான செட் தயாராகிட்டு இருக்கு!’’    

Behind the scenes

* லேட்டஸ்ட் டெக்னாலஜியான 4Kயில் படமாக்கப்பட்டு, பின்னர் 5.1 ஒலித் தரத்துடன் உருவாக்கப்படுகிறது. சென்னை, குற்றாலம், கல்லிடைக்குறிச்சி, கர்னாடகா என பல இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
* ‘நந்தினி’யின் ஸ்கிரிப்ட்டில் 8 இயக்குநர்களின் பங்களிப்பு உள்ளதால், ஒவ்வொரு எபிசோடையும் விறுவிறுப்புடன் செதுக்கியுள்ளனர்.
* கர்நாடகா - கோவா சாலையில் உள்ள முருதீஸ்வரர் கோயில் தொடர்பான காட்சிகளை ஹெலிகேமில் படமாக்கியுள்ளனர். இதுவரை சினிமாவில் மட்டும்தான் ஹெலிகேம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
* அரண்மனை செட் அமைக்க மட்டும் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
* சண்டைக்காட்சிகளை தளபதி தினேஷ் அமைத்துள்ளார்.
* தொடருக்கு தினா இசையமைக்கிறார். டைட்டில் இசை ஹிப்ஹாப் தமிழா.