4 மாதங்களுக்கு சென்னை மாகாண முதல்வராக இருந்த வழக்கறிஞர்!
கோமல் அன்பரசன் - 15
பி.டி.ராஜன் வழக்கறிஞர் தொழிலுக்கும் அரசியலுக்கும் காலங்காலமாகவே நெருங்கிய தொடர்பு உண்டு. அரசியலில் ஆகப்பெரிய மாற்றங்களை விதைத்த பலர் வக்கீல்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களிலும் தனித்துவமான பண்பு நலன்களோடு வரலாற்றில் நிலைத்த புகழ் பெற்றிருப்பது சிலர்தான். அப்படியொரு பண்பாளராகத் திகழ்ந்தவரே பி.டி.ராஜன்.
பாரிஸ்டர் பட்டம் வாங்கிவிட்டு வக்கீல் தொழிலில் குதித்த வேகத்திலேயே அரசியலிலும் இறங்கி வெற்றிகளைக் குவித்தவர் பொன்னம்பலம் தியாகராஜன். இதுதான் பி.டி.ராஜனின் முழுப்பெயர். உத்தமபாளையம் முதலியார் குடும்பத்துக்கு தேனியிலும் மதுரையிலும் ஏக மரியாதை உண்டு. அக்குடும்பத்தில் பொன்னம்பல முதலியார் - மீனாட்சி அம்மாள் ஆகியோரின் மகனாக பிறந்த தியாகராஜன், 7 வயதில் தந்தையையும் 12 வயதில் தாயையும் இழந்தார். அவரை வளர்த்து ஆளாக்கியவர் சித்தப்பா சுப்ரமணிய முதலியார்.
பெற்றோர் இல்லையே என்று செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டதால் படிப்பில் அவ்வளவாக அக்கறை இல்லாமல் சுற்றி வந்தார் ராஜன். இதையடுத்து அவரை இங்கிலாந்து அனுப்பி படிக்க வைக்க முடிவு செய்தார் சுப்ரமணியன். அங்கே கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள பள்ளியில் கொண்டு போய் சேர்த்தார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கிய ராஜனை, ஒரு ஐசிஎஸ் அதிகாரியாக்கி விடவேண்டுமென்பது அவரது சித்தப்பாவின் கனவு.
ஆனால், யாரிடமும் பதில் சொல்லும் வேலைக்குப் போவதில் ராஜனுக்கு உடன்பாடில்லை. வக்கீல் தொழில்தான் கௌரவமும், கம்பீரமும் நிறைந்தது என நினைத்தார். ஒற்றைக்காலில் நின்று பாரீஸ்டர் பட்டம் பெற்றார். பாரீஸ்டர் பட்டம் பெறுவது அந்தக் காலத்தில் அவ்வளவு பெருமைமிக்கது. அதிகளவில் வெள்ளைக்காரர்களே பாரீஸ்டர்களாக இருந்தனர். நம்மவர்களில் அந்தப் பட்டம் பெற்றவர்கள் குறைவு. அப்படியொருவர் பட்டம் பெற்றிருக்கிறார் என்றால், அவர் பெரிய பணக்காரர் என முடிவு செய்து கொள்ளலாம்.
பாரீஸ்டர் பட்டப்படிப்பை இங்கிலாந்தில் சில குறிப்பிட்ட கல்லூரிகள் மட்டுமே நடத்திவந்தன. 8,000 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று, தங்கி படிக்க வீட்டில் பணம் கொட்டி கிடந்தால் மட்டுமே முடியும். அதனால் பாரீஸ்டர் பட்டம் வாங்கியவர்களுக்கு இங்கே தனி மரியாதை கிடைத்தது. அப்படித்தான் பாரீஸ்டர் பட்டம் பெற்ற ராஜனுக்கும்! பாரீஸ்டராகி கப்பலில் கொழும்பு வழியாக தாயகம் திரும்பி, தனுஷ்கோடியில் இருந்து ரயிலில் மதுரைக்கு வந்த ராஜனுக்கு ராமநாதபுரத்தில் அந்த ஊர் ராஜா அசத்தலான வரவேற்பு கொடுத்தார்.
இதனை ராஜனின் குடும்ப செல்வாக்கு என்பதைத் தாண்டி பாரீஸ்டருக்கான மரியாதையாகவும் பார்க்கலாம். 1919ல் மதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்த ராஜன், அதே சூட்டோடு ‘நீதிக்கட்சி’ எனப்பட்ட ‘ஜஸ்டிஸ் கட்சி’யில் சேர்ந்து அரசியலிலும் குதித்தார். ‘படித்து விட்டு வந்து வக்கீல் தொழில் பார்த்து பேரும் புகழும் சம்பாதிக்கச் சொன்னால், இப்படி அரசியலில் ஈடுபடுகிறானே’ என்று ராஜனின் சித்தப்பாவுக்கு வருத்தம்.
தொழிலில் வென்றுவிட்டு மக்கள் சேவை செய்யலாம் என்பது அவரது எண்ணம். ஏனென்றால் அன்றைக்கு அரசியல் என்பது கைப்பணத்தைச் செலவிட்டு, உண்மையாகவே சேவை செய்யுமிடமாக இருந்தது. இப்போதிருப்பதைப் போல பணம் கொட்டும் தொழிலாக இல்லை. இருந்தாலும் தொழில் தனி; அரசியல் தனி என்று தீவிரமாக செயல்பட்டார் ராஜன். ஆங்கிலேயர் ஆட்சியில், மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் படி, இந்தியாவில் முதன்முறையாக 1920ல் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது 28 வயதே ஆன ராஜன், நீதிக்கட்சியின் சார்பில் கம்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பிராமணரல்லாதோர் அமைப்பாக அப்போது அறியப்பட்ட நீதிக்கட்சியில் இருந்தவர்களில் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ராஜன் முக்கியமானவராக உருவெடுத்தார். அரசியலில் தீவிரமானாலும் வழக்கறிஞர் தொழிலை அவர் விட்டுவிடவில்லை. கட்சிப்பணிகளை எல்லாம் முடித்துவிட்டு, நள்ளிரவில் வழக்காட வந்த கட்சிக்காரர்களைப் பற்றி தன்னுடைய ஜூனியர்களோடு விவாதிப்பார்.
சட்டப்புத்தகங்களைப் படித்து வழக்கிற்கான குறிப்புகளை எடுப்பார். அவரது சுறுசுறுப்பைப் பார்த்து, ஜூனியர்களின் முகத்திலிருந்து தூக்கக் கலக்கமெல்லாம் தெறித்து ஓடும். அந்தளவுக்கு உற்சாகமாக உழைக்கக்கூடிய வக்கீலாகத் திகழ்ந்தார் ராஜன். அரசியலிலும் வளர்ச்சிப்பாதையில் அவரது பயணம் இருந்தது. நீதிக்கட்சியினர் மட்டுமின்றி, அனைத்துக் கட்சியினரும் மதித்து போற்றும் ஆளுமையாக ராஜன் விளங்கினார். அவரைப்பற்றி சொல்லும்போதெல்லாம் ‘பண்பாளர்’ என்ற அடைமொழியுடனே அறிஞர் அண்ணா அழைத்தார்.
1930 முதல் 1937 வரை சென்னை மாகாணத்தில் அமைந்த நீதிக்கட்சி அமைச்சரவைகளில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தார் ராஜன். வேளாண்மை, கால்நடை, கூட்டுறவு, பத்திரப்பதிவு உள்ளிட்ட துறைகளும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தன. அப்போது ராஜன் ஆற்றிய பணிகள் காலத்திற்கும் நினைவு கூறத்தக்கதாக அமைந்தன. கூட்டுறவு இயக்கத்திற்கு உயிரூட்டி அதற்கு மறு வாழ்வு கொடுத்தார். பிற்காலத்தில் கூட்டுறவு அமைப்புகள் மக்களுக்கு செய்த சேவைகளுக்கு இவரது பணியே அடித்தளமாக இருந்தது.
1936ல் முதலமைச்சராக இருந்த பொப்பிலி அரசர், ஐரோப்பிய சுற்றுப்பயணம் சென்றபோது 4 மாதங்களுக்கு மேல் சென்னை மாகாணத்தின் முதல்வராகவும் பி.டி.ராஜன், திறம்பட நிர்வாகம் செய்தார். முழு நேர வழக்கறிஞரான ஒருவர் முதன்முறையாக முதலமைச்சரானது அப்போதுதான். காங்கிரஸ் கட்சியின் எழுச்சியால் 1937ல் நீதிக்கட்சி சந்தித்த படுதோல்விக்குப் பின்னரும் வக்கீல் தொழிலையும் மக்கள் பணிகளையும் அதே வேகத்தில் ராஜன் தொடர்ந்தார்.
குறிப்பாக குற்றவியல் வழக்கறிஞராக ராஜனின் ஆற்றல் முழுதும் அப்போதுதான் வெளியில் வந்தது. சாட்சிகளை விசாரிப்பதில் திறமைமிக்கவர் என்ற பெயரெடுத்தார். இயல்பிலேயே தெய்வபக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்த ராஜன், ஆலயப்பணிகளில் அதிக ஈடுபாடு காட்டினார். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிதிலமடைந்திருந்த சென்னை வடபழனி முருகன் கோயிலை, ரூ.30 ஆயிரம் திரட்டி மறு நிர்மாணம் செய்ததில் இவரின் பங்கு முக்கியமானது. அதன்பிறகு அக்கோயிலின் புகழ் பரவத்தொடங்கியது.
இதே போல திருவாதவூர், மதுரை மீனாட்சியம்மன், அழகர் கோயில் உட்பட ஏராளமான கோயில்களின் திருப்பணியில் ராஜனின் பங்களிப்பு இருந்தது. தெய்வ பக்தியின் காரணமாக தந்தை பெரியாருடன் முரண்பட்ட ராஜன், திராவிடர் கழகத்தில் இணையாமல் நீதிக்கட்சியைத் தொடர்ந்து நடத்தினார். எல்லாவற்றையும் விட முக்கியமாக இன்று சபரிமலை கோயிலில் உள்ள அய்யப்பன் சிலை பி.டி.ராஜனின் முயற்சியில் உருவாகியதாகும். 1949ல் சபரிமலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அய்யப்பன் சிலை உருக்குலைந்தது.
புதிய சிலை அமைக்க ராஜனின் உதவியை நாடியது கோயில் நிர்வாகம். இதையடுத்து புதிய அய்யப்பன் சிலையை செய்து, தமிழகத்தின் பல பகுதிகளில் அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று, சபரிமலையில் வைத்திட ராஜன் ஏற்பாடு செய்தார். அதன்பிறகே தமிழ்நாட்டில் அய்யப்ப வழிபாடு பெருமளவு பழக்கத்திற்கு வந்தது. கடவுள் பக்தியில் மட்டுமின்றி தமிழ்ப்பணிகளிலும் தனி அக்கறை காட்டினார். மதுரை தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அவர், அச்சங்கத்தின் பொன்விழாவை சீரோடு நடத்தினார். முத்தமிழ் விழாவை 7 நாட்கள் நடத்தி தமிழுக்குச் சிறப்பு சேர்த்தார்.
மலேசியாவில் நடைபெற்ற முதல் உலகத்தமிழ் மாநாட்டில் மதுரை தமிழ்ச்சங்கத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட பெருமைக்குரியவர். தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக ‘தமிழவேள்’ என்ற பட்டம் பெற்றார். மற்ற பட்டங்களைவிட ‘தமிழவேள்’ பி.டி.ராஜன் என்று அழைக்கப்படுவதையே பெருமையாகக் கருதினார். கல்விப்பணியிலும் ராஜன் ஆர்வங்காட்டினார். ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திற்கும் ஒரே பல்கலைக்கழகமாக, சென்னைப் பல்கலைக்கழகம் இருந்த காலத்தில் தெலுங்கர்களுக்காக தனி பல்கலைக்கழகம் வேண்டுமென போராட்டம் வெடித்தது.
அதன்பிறகு உருவானதே ‘ஆந்திர பல்கலைக்கழகம்’. அதேபோல தமிழர்களுக்கும் தனி பல்கலைக்கழகம் வேண்டுமென ராமநாதபுரம் ராஜா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு செயலாளராக ராஜன் இருந்தார். அத்தகைய முயற்சியின் பயனாக உருவானதுதான் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.இந்தியா விடுதலை பெற்ற பிறகு தொடங்கப்பட்ட மதுரை பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்திலும் இவருக்கு பெரும் பங்குண்டு. அதன் அமைப்புக்குழுவில் முக்கியமானவராக இருந்து பணியாற்றினார்.
தேவிகுளம் - பீர்மேடு போராட்டக்குழுத் தலைவர், இரண்டாம் உலகப்போர் உதவிக்குழுத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயல்பட்ட ராஜனின் பணிகளைப் பாராட்டி ஆங்கிலேய அரசு அவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கியது. வெள்ளையர் நாட்டில் படித்து, வெள்ளையரோடு பழகினாலும் நாட்டுப்பற்று உடையவராக ராஜன் திகழ்ந்தார். சென்னையில் ஒரு முறை நடைபெற்ற ஆங்கிலேயர்களின் நிகழ்ச்சியொன்றில் ராஜனின் பேச்சு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
‘‘இந்தியா ஒரு சுதந்திர நாடாக பெருமையுடன் வாழ வேண்டும். மக்களாட்சி இங்கு வர வேண்டும். 6 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு சில வெள்ளைக்காரர்களின் விருப்பப்படி இந்தியா இயங்க முடியாது - இயங்கவும் கூடாது...’’ என்று வெள்ளையர்கள் மத்தியில் ராஜன் அதிரடியாகப் பேசினார். நீதிக்கட்சியினர் என்றாலே ஆங்கிலேயருக்கு வால் பிடிப்பவர்கள் என்ற கருத்து பரவலாக இருந்த அன்றைய சூழலில் ராஜனின் பேச்சு, பலரின் புருவங்களை உயர வைத்தது. அதேபோல தமக்கு அளிக்கப்பட்ட ‘சர்’ பட்டத்தையும் ஒரு கட்டத்தில் ராஜன் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
பி.டி.ராஜன், பிரபல வழக்கறிஞர் டி.வி.கோபாலசுவாமி முதலியாரின் மகள் கற்பகாம்பாளை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு 3 மகள்கள், 2 மகன்கள். இவர்களில் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், தந்தையைப் போலவே வழக்கறிஞராகவும் அரசியல்வாதியாகவும் புகழ் பெற்றார். தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்தார். தி.மு.க.வில் வெளிப்படையான ஆன்மீகவாதியாக செயல்பட்ட ஒரே நபர் என்ற சிறப்பைப் பெற்றார்.
அப்பாவைப்போன்றே பண்பாளர் என்ற பெயரும் பழனிவேல்ராஜனுக்கு கிடைத்தது. இவரது மகன் தியாகராஜன், இப்போது தி.மு.க. சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். பணம், புகழ் எல்லாவற்றுக்கும் அப்பால், பண்புதான் வாழ்ந்து முடித்த பிறகும் பெயரைச் சொல்லும் என்பதற்கு பி.டி.ராஜன் குடும்பமே சான்று!
(சரித்திரம் தொடரும்)
ஓவியம்: குணசேகர்
பாரீஸ்டர் பட்டம்
வழக்கறிஞர் தொழிலைப் பொறுத்தமட்டில் பாரீஸ்டர் பட்டத்திற்கு தனி மரியாதை இருந்தது. உயர்நீதிமன்றங்களில் பாரீஸ்டர்கள் மட்டுமே வாதாட முடியும் என்றிருந்த காலத்தில், அவர்கள் மட்டுமே வக்கீல்கள் என்பதைப் போல கொண்டாடப்பட்டனர். மதிக்கப்பட்டனர். உள்ளூர் வக்கீல்களுக்கு அந்தளவுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. பாரீஸ்டர்கள், அதுவும் வெள்ளைக்கார பாரீஸ்டர்கள் மட்டுமே உறுப்பினராக இருந்த ‘மெட்ராஸ் பார் அசோசியேசன்’ 1865ல் உருவாக்கப்பட்டது.
இந்திய பாரீஸ்டர்கள் அதில் உறுப்பினராவது பல ஆண்டுகளுக்குப் பிறகே சாத்தியமானது. பாரீஸ்டர் படிப்பைச் சொல்லித்தரும் 4 கல்லூரிகள் இங்கிலாந்தில் மட்டுமே இருந்தன. ‘இன்னர் டெம்பிள்’ (Inner Temple), மிடில் டெம்பிள் (Middle Temple), லிங்கன்ஸ் இன் (Lincoln’s Inn), கிரேஸ் இன் (Grays Inn) ஆகிய கல்லூரிகள்தான் அவை. பாரீஸ்டர் அட் லா (Barrister at Law) என்பதை பார் அட் லா (Bar at Law ) என்று சுருக்கமாகவும் சொல்வார்கள்.
|