பூ கோயம்பேடு மார்க்கெட்
அறிந்த இடம் அறியாத விஷயம்
-பேராச்சி கண்ணன்
‘‘ஒரு நிமிஷம்... ஒரே நிமிஷம்... வா... வா... வா...’’ உரிமையோடு கையைப் பற்றிக் கொண்டு, ‘‘எந்த மாலை வேணும்?’’ என அதிரடி காட்டும் வியாபாரிகளைப் பார்த்து எல்லோருமே சில விநாடிகள் மிரண்டுதான் போவார்கள்.
சென்னை கோயம்பேடு ‘பூ’ மார்க்கெட்டுக்குள் நுழையும் எவருக்கும் இந்த அனுபவம் கிடைத்திருக்கும். ஒரே நாளில் வாடிவிடும் பூக்களை, வேகமாக விற்றுவிட துடிக்கும் இந்த மார்க்கெட்டுக்குள்தான் எத்தனை சுவாரஸ்யங்கள், எத்தனை அனுபவங்கள்! உதிரும் அந்த பிங்க் நிற பன்னீர் ரோஜா இதழ்களை மென்று தின்ன சிறுவயதில் எவ்வளவு ஆசைப்பட்டிருப்போம். ஆனால், இப்போது ஆரஞ்சு, சிகப்பு, மெரூன் என ரோஜாப்பூவில் மட்டும் 28 வெரைட்டிகள்!
ஒரு காலைப் பொழுதில் உள்ளே நுழைந்தோம். அகண்ட வாசல். இடமும், வலமும், நேராகவும் நெளியும் பாதைகள். வெளிப்புறத்திலேயே பூக்களைக் கட்டிக் கொண்டு விற்பனையில் ஈடுபடும் பெண்கள்; தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு என கோயிலுக்குத் தேவையான ஐட்டங்களுடன் ஆண்கள்; கட்டு கட்டான பூக்கூடைகளுடன் சிறு வியாபாரிகள்... என அதிகாலை மூன்று மணிக்கே விழித்துக் கொள்கிறது கோயம்பேடு ‘பூ’ மார்க்கெட்!
‘மல்லி’யும், ‘முல்லை’யும் நகரவிடாமல் தடுக்கின்றன. அவ்வளவு வாசனை. அருகிலேயே, ‘அய்யா... என்னய்யா வேணும்’ என நெகிழ்வாக கேட்கும் வயதான பெண்மணியின் குரல் மனதை என்னவோ செய்கிறது. வாசலில் பத்து பதினைந்து ேபர்... சிறுவர்கள் உள்பட... கல்யாண ஜடைகளை வாடிக்கையாளர்களிடம் காட்டி விற்க படாதபாடு படுகிறார்கள். ‘‘எம்மா... எல்லாம் இன்னைக்கு போட்டதும்மா.
முகூர்த்த நேரத்துல பழைய மாலையை வைப்போமா? இந்த மாலை ரெண்டு நாளைக்குத் தாங்கும்...’’ என வியாபாரி ஒருவர் பேரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களிடம் விளக்கிக் கொண்டிருந்த சத்தம் கேட்கிறது. இடது பக்கமாக நடக்கிறோம். வரிசையாக பூக்கடைகள். மொத்தமாகவும், சில்லரையாகவும் பூக்களை விற்றபடி இருக்கின்றனர். ‘‘நெருப்பு பார்த்திருக்கீயா? நெருப்பு? பாரு...பாரு...’’ என ‘கனகாம்பரப் பூ’ குண்டு பல்பின் வெளிச்சத்தில் பளபளப்பதை வாடிக்கையாளர் ஒருவரிடம் காட்டி கடைப் பையன் ஒருவன் டயலாக் விட்டுக் கொண்டிருந்தான்.
சாப்பாட்டுப் பார்சல் போல் பேப்பரில் பார்சல் பார்சலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடையின் முன் நிற்கிறோம். ‘‘நல்லதா இருக்குமா?’’ எனக் கேட்கிறார் பெண் ஒருவர். அவர் கூட வந்த இன்னொரு பெண், ‘‘வாடாம இருக்கானு செக் பண்ணுக்கா...’’ என்கிறார். அதற்கு கடைக்காரர் அந்தப் பார்சலில் சின்னதாக ஓட்டை போட்டு, ‘‘பாருங்க... எல்லாமே நல்லதுதான்...’’ எனக் காட்டுகிறார். மல்லிகைப்பூவை இப்படி பார்சல்களாகக் கட்டி விற்பனை செய்கிறார்கள். பார்சல் ஐம்பது ரூபாய்! அவருக்கடுத்து சம்பங்கி பூக்களை குவித்து விற்பனைக்கு வைத்திருந்தார் ஒருவர். இதிலும் விதவிதமான நிறங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை.
‘‘கிலோ எவ்வளவு?’’ வெள்ளையும் மஞ்சளும் கலந்த சம்பங்கியை கைநீட்டி கேட்டோம். ‘‘120 ரூவா’’ என்றார். இதே பூ இன்னொரு இடத்தில் நூறு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. சில கடைகளில் வியாபாரத்தை முடித்துவிட்டு, தினசரிகளை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்தனர். அரளிப் பூக்களை நூறு கிராம் எடையிட்டு பாக்கெட்டில் அடைத்துக் கொண்டிருந்தார் ஒரு கடைக்காரர். ‘‘பாக்கெட் 12 ரூபாய். ஒரே விலை...’’ என்றவரைக் கடந்து நடக்கிறோம்.
‘‘இன்னாப்பா... ஜாதி இருக்கா?’’ எனக் கடைக்காரரிடம் ஒரு பெண்மணி கணீர் குரலில் கேட்பது காதில் விழுந்தது. ‘‘12 மணிக்குத்தான் வரும்!’’ என்கிறார் அந்தக் கடைக்காரர் பதிலுக்கு. ‘‘ஜாதியா?’’ எனக் குழம்பியபடி கடைக்காரரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தோம். ‘‘நீங்க எந்த ஊரு? தென் மாவட்டமா? அதான் தெரியலை உங்களுக்கு... ஊர் பக்கம் ‘பிச்சிப்பூ’னு சொல்வோம்ல... அதுதான் இங்க ஜாதிப் பூ... அததான் அந்தம்மா ‘ஜாதி’ இருக்கானு கேட்டுட்டுப் போறாங்க...’’ என விளக்கியவரிடம் சிரித்துவிட்டு நகர்ந்தோம்.
கட்டிடத்தின் இறுதியில் இயங்கும் சின்ன ஹோட்டல் ஒன்றில் பத்து பேர் கைலி, முண்டா பனியனோடு இட்லி, வடை, பூரி என காலை உணவை அவசரமாக உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர். வியாபாரிகளாக இருப்பார்கள் போல! இதே போல் அந்தக் கட்டிடத்தின் இன்னொரு மூலையிலும், மார்க்கெட்டின் நடுவிலும் இரண்டு ஹோட்டல்கள். அங்கேயும் கூட்டம். புரோட்டாவும், ஆம்லெட்டும் கல்லில் வெந்து கொண்டிருந்ததைப் பார்த்தபடி நடந்தோம்.
ஒரு கடையில் ரோஸ் கொட்டிக் கிடந்தது. ஃபங்ஷனில் கொடுப்பதற்கு ஈஸியாக பேப்பர் அட்டையில் மடித்து வைத்திருந்தனர். இன்னொருபுறம், மலர்கள் எல்லாம் ‘பொக்கே’களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன்அருகே பேப்பர் பூக்கள் கடைகளும் இருக்கின்றன. அங்கிருந்து மேல் நோக்கி மார்க்கெட்டின் மையப் பகுதிக்குச் சென்றோம்.
அழகான குளம் போல வட்ட நீரூற்று. மார்க்கெட்டை அழகூட்ட வைத்திருப்பார்கள் போல! ஆனால், இப்போது அதில் நீர் இல்ைல. அந்த நீரூற்றைச் சுற்றிலும் சிறுவியாபாரிகள். அருகம்புல், வில்வ இலை, துளசி, தாமரை என வரிசைகட்டி உட்கார்ந்திருக்கிறார்கள். வட்ட நீரூற்றுக்குள் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் வெயிலில் இருந்து தப்பிக்க குடைக்குள் உட்கார்ந்து பூ கட்டிக் கொண்டிருக்கின்றனர். சிலர், அப்படியே ஒரு பதினைந்து நிமிடம் படுத்துறங்கி விட்டு மீண்டும் ‘பூ’ கட்டுகின்றனர்.
இவர்களோடு, பத்து நாய்களும் ஓரமாகப் படுத்து உறங்குகின்றன. ‘‘சார்... மல்லி எந்தப் பக்கம்?’’ என்கிறார் ஒருவர். ‘‘அப்படியே கீழ இறங்கி அந்தப் பக்கமா நடங்க...’’ என்கிறார் கடைக்காரர். ‘‘கலக்காம எடும்மா...’’ என குரல் வந்த திசையை நோக்கினோம். தாமரைப் பூவை பார்த்துப் பார்த்து எடுத்த ஒரு பெண்மணியிடம் கடுகடுத்துக் கொண்டிருந்தார் அதனை விற்ற பெண். அன்று ஒரு தாமரை விலை 20 ரூபாய். அதற்கு நேர் எதிரில் பன்னீர், குங்குமம், திருநீறு, உலர் பழங்கள் என விற்கிறார்கள்.
கோயிலுக்குப் பூக்கள் வாங்க வருபவர்கள் அப்படியே மற்ற பொருட்களையும் செட்டாக இங்கேயே வாங்கிக் கொள்ளலாம். அங்கிருந்து படிகளில் இறங்கி வெளியே வருகிறோம். வரிசையாக தொங்கவிடப்பட்டிருக்கும் மாலைகளை விற்றபடி வியாபாரிகள். அதற்குள் ஆறேழு பேர் மாலை தொடுக்கும் பணியில்! ‘‘மாலை எவ்வளவு?’’ ‘‘250 ரூபாய்ப்பா...’’ ‘‘நூறு ரூபாய்க்கு தர்றீயா?’’ என்கிறார் வாடிக்கையாளர்.
‘‘இன்னைக்கு சம்பங்கியே கிலோ நூறு ரூபா!’’ என மறுக்கிறார். விசேஷ நாட்களில் என்றுமே பூக்களின் விலை ஏற்றம்தான். அங்கிருந்து வெளியேற எத்தனிக்கிறோம். அப்போதும் ‘வாண்ணா, வாண்ணா...’ என பூ மாலை வாங்க கையை வாஞ்சையோடு இழுக்கிறார்கள்.
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
பூ உற்பத்தி
* 2014 - 15 கணக்குப்படி, இந்தியாவில் 2 லட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேரில் மலர் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், சுமார் 17 லட்சம் டன்கள் மல்லி, சம்பங்கி போன்ற உதிரிப் பூக்கள்; 5 லட்சம் டன்கள் ‘கட் ஃப்ளவர்ஸ்’ (அழகுப் பொருட்களில் பயன்படும் ரோஸ் உள்ளிட்டவை) எனப்படும் பூக்களின் உற்பத்தி.
* அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற முக்கிய நாடுகளுக்கு இந்தியா பூக்களை ஏற்றுமதி செய்கிறது.
* கடந்த 2015 - 16ல் மட்டும் இந்தியாவில் இருந்து 22 ஆயிரத்து 518 மெட்ரிக் டன் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 479 கோடி ரூபாய்!
மார்க்கெட் நிலவரம்
* கோயம்பேடு ‘பூ’ மார்க்கெட்டில் 446 கடைகள் இருக்கின்றன. சுமார் 600 வணிகர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களோடு சுமை தூக்கும் தொழிலாளர்கள் உட்பட மூன்றாயிரம் பேர் கைகோர்த்து வேலை பார்க்கிறார்கள்.
* பூக்களின் விலை தினந்தோறும் மாறுபடும் என்பதால் ஒரு வருடத்திற்கான வருமானத்தை கணக்கிட முடியாதாம். ‘‘இன்னைக்கு அரளிப் பூ நூறு கிராம் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாய் வரை விற்கிறோம். இதுவே போன வாரம் 2 ரூபாய்க்கு போச்சு. சில நேரங்கள்ல விலை கிடைக்காம கீழ கொட்டுற நிலையும் வரும்...’’ என்கிறார் பூ மார்க்கெட்டின் மொத்த வியாபாரிகள் சங்கச் செயலாளர் மூக்கையா.
* வரலட்சுமி நோன்பு, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் ‘சாமந்திப் பூ’ நூறு லாரிகளில் வந்திறங்குமாம். மற்ற நாட்களில் 30 லாரிகள். ‘ரோஜாப் பூ’ தினமும் 12 லாரிகளில் வருகின்றன. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மல்லி 20 வேன்களிலும், அரசு பஸ்களிலும் வருகின்றன.
* பூ வியாபாரத்தை, ‘அழியும் பொருள், அழியாத தொழில்’ என்கிறார்கள். காரணம், பூ அதிகபட்சம் இரண்டு நாள் மட்டுமே தாங்குமாம். அதனால், லாபத்தைவிட நஷ்டம் அதிகம். இதனாலேயே இவர்களின் வாரிசுகள் இந்தத் தொழிலுக்கு வருவதில் சுணக்கம் காட்டுவதாக சொல்கிறார்கள்.
* வறட்சி அதிகரிக்கும்போது பூ வரத்து அதிகம் இருக்குமாம். காரணம், நிறைய பூக்களுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது என்பதால்!
என்ன பிரச்னை?
குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்கிறார்கள். குப்பைகளும் சரியாக அள்ளப்படுவதில்லை. போக்குவரத்து நெரிசலும் அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள்.
எங்கிருந்தெல்லாம் வருகின்றன?
* ஒவ்வொரு பூவுக்கும் ஒரு சீசன் இருக்கிறது. எனவே கிடைக்கும் இடங்களில் இருந்து தருவிப்பதாக சொல்கிறார் பூ மார்க்கெட்டின் மொத்த வயாபாரிகள் சங்கச் செயலாளர் மூக்கையா. அவர் தரும் தகவல்கள்:
* சாமந்திப் பூ மே மாசம் கடைசியிலிருந்து வர ஆரம்பிக்கும். முதல்ல ஓசூர் பகுதி. அடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை. பிறகு ஆந்திராவுல உள்ள குப்பம் பகுதி, சேலம் பொம்மிடி, ஓமலூர், கொப்பூர்ல இருந்தும், அடுத்ததா, ஆந்திராவின் கடப்பாவுல இருந்தும், அப்புறம் திண்டுக்கல்ல இருந்தும் வந்திட்டே இருக்கும்.
* மல்லியைப் பொறுத்தவரை பிப்ரவரி முதல் வாரத்துல இருந்து சீசன் ஆரம்பம். அக்டோபர் வரைதான் வரும். பிறகு, நிலக்கோட்டை பகுதியில் பதப்படுத்தி கொண்டு வருவாங்க. இப்போ, மல்லி வருஷம் முழுவதும் கிடைக்குது. முன்னாடி எல்லாம் மதுரையில இருந்துதான் வரும். கடந்த முப்பது வருஷமா சென்னைக்குப் பக்கத்துலயே விளைவிக்கிறாங்க.
* ஜாதிப்பூவும், முல்லையும் வேலூர் மாவட்டத்துல இருந்தும், சம்பங்கி அறுபது கி.மீ சுற்றளவுல இருந்தும் வருது. சம்பங்கி வரத்து குறையும் போது திருத்தணி, திண்டிவனம், திருவண்ணாமலை பகுதியிலிருந்து வந்திடும்.
* கனகாம்பரம் ஆந்திர மாநிலம் கடப்பா, மதனப்பள்ளி பகுதியிலிருந்து அதிகம் வருது. முன்னாடி திண்டுக்கல், வாணியம்பாடியில இருந்து வந்துச்சு. இப்போ, குறைஞ்சு போச்சு.
* மருகு, தவணம் (மரிக்கொழுந்து) வருஷம் முழுவதும் திண்டுக்கல் பகுதியிலிருந்து வந்திடும். இடைக்காலத்துல சேலம் பகுதியிலிருந்தும், ஆந்திரா பகுதியிலிருந்தும் வரும். அரளிப்பூவும் திண்டுக்கல், சேலம் பகுதியிலிருந்தே வருது.
* ரோஸ் ஓசூர், கர்நாடகா பார்டரில் இருந்து நிறைய வருது.
* தாமரை நாகர்கோயில் மற்றும் சென்னையின் லோக்கல் பகுதியில இருந்தும், வில்வ இலை சுற்றிலும் இருக்கிற மலைப் பகுதியிலிருந்தும் கொண்டு வர்றாங்க.
|