போகன்



குங்குமம் விமர்சனக்குழு

கூடு விட்டு கூடு பாய்ந்தால் என்ன நடக்கும்? அதுவே போலீஸ் அதிகாரியும், கொள்ளை அடிப்பவரும் மாறி உடலில் புகுந்து கொண்டால் என்ன ஆகும் என்ற ஃபேன்டசி கற்பனையே ‘போகன்’. ‘ஃபேஸ் ஆஃபி’ன் தழுவல் என்றாலும் குட்டி குட்டி டுவிஸ்ட்கள், சுவாரஸ்யங்கள் மூலம் ரசிக்க வைக்க முயன்றிருக்கிறார் டைரக்டர் லக்ஷ்மண்.

அந்த ஆகிருதிக்கும், உயரத்திற்கும் அற்புதமாகப் பொருந்துகிறார் ஜெயம் ரவி. இரண்டு பேரும் மாறி மாறி அணிந்து கொள்ளும் நடை உடை பாவனைகளில் ரவி நன்றாக முயன்று பார்த்திருக்கிறார். பாடி லாங்வேஜ், நடிப்பு, அசால்ட் போன்றவற்றில் அரவிந்த்சாமி படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் அவருக்கு சவாலாக இருக்கிறார். பிற்பாடு திரைக்கதை திணறினாலும், சாமியின் நடிப்பு உட்கார்த்தி வைப்பது நிஜம். ஹன்சிகா? நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இமானின் இசையில் பாடல்கள் ஓகே. செளந்தர்ராஜனின் ஒளிப்பதிவு, பாடல் காட்சிகளில்  எக்ஸ்ட்ரா ரம்மியம்.

சும்மா ஒரு பார்வையில் கூடுவிட்டு கூடு பாய்கிற மாயத்தை நம்ப முடியவில்லை! இன்னும் உழைத்திருக்கலாம். மொத்த பாவனையும் மாறிப் போகும்போது கமிஷனர் அலுவலகத்திலேயே ஜெயம் ரவியை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதெல்லாம் ஆச்சர்யம்! ஜெயம் ரவி தன் உடம்பிற்குள்ளே திரும்பி வருகிற நேரம் உண்டாகும் திடீர் டுவிஸ்ட், இறுதியில் சாமியை செயல் இழக்கும் யுக்தி என ஆங்காங்கே தீப்பிடிக்கிறது திரைக்கதை. நம்பகத்தன்மையை உருவாக்கியிருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்!