திராவிட இயக்கத்தோட முதல் வழக்கறிஞர் எங்கப்பாதான்!



-மை. பாரதிராஜா

தேசிய விருதுகளைக் குவித்த ஆடுகளம் படத்தின் இயக்குநர்... ஆஸ்கருக்காக  விசாரணையை அனுப்பிய வித்தகர்... வெற்றி மாறனின் வெற்றிக்கு ஆணி வேராக இருப்பவர்  இவர்தான்.

‘‘அப்ப தென்னாற்காடு மாவட்டமா இருந்த கடலூர்லதான் பிறந்தேன்...’’ புன்னகையுடன் ஆரம்பிக்கிறார் மேகலா சித்ரவேல். இயக்குநர் வெற்றி மாறனின் அம்மா. ‘‘திராவிட இயக்கத்தோட முதல் வழக்கறிஞர் என்கிற பெருமை எங்கப்பா இ.ரெ.இளம்வழுதிக்கு உண்டு. ‘பகுத்தறிவுச் சிங்கம் Black prince’னு அறிஞர் அண்ணா செல்லமா அவரை கூப்பிடுவார். அண்ணா நடத்தின ‘திராவிட நாடு’ பத்திரிகையோட அட்டைல எங்கப்பா படம் பிரசுரமாகியிருக்கு. அந்தக் காலத்துல எம்.ஏ., பி.எல். படிப்பு பெரிய விஷயம்.

எங்க வீட்டுக்கு அண்ணா, கலைஞர்ல ஆரம்பிச்சு பல திராவிட தலைவர்கள் வந்திருக்காங்க. நாவலர் நெடுஞ்செழியன் எங்கப்பாவுக்கு சீனியர். மதியழகன் ஜூனியர். எங்கம்மா இளம்வழுதி, ஜமீன்தார் குடும்பத்தை சேர்ந்தவங்க. வீட்ல நான் மூத்த பொண்ணு. கலைஞர் ‘மேகலா பிக்சர்ஸ்’ ஆரம்பிச்சப்ப நான் பிறந்ததால எனக்கு ‘மேகலா’னு பெயர் வைச்சாங்க.

புகழேந்தி, பன்னீர்செல்வம்னு எனக்கு இரண்டு தம்பிங்க. உதயராணி, கலையரசி, மாலதினு மூணு தங்கைங்க. இதுல புகழேந்திக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் என்கிற பெருமை உண்டு..!’’ என்று சொல்லும் மேகலா சித்ரவேலின் குடும்பத்தில் அனைவருமே வழக்கறிஞர், டீச்சர் என பெரிய படிப்புகளை படித்தவர்கள். ‘‘ஸ்கூல்ல படிக்கிறப்ப எனக்கு படிப்புல விருப்பம் இல்ல.

‘என்னை என்ன வேலைக்கா அனுப்பப் போறீங்க... கட்டிக் கொடுக்கத்தானே போறீங்க’னு பாட்டிங்க கிட்ட கிண்டலா சொல்லுவேன். படிப்புல ஆர்வம் இல்லைனாலும் நிறைய கட்டுரைகள் எழுதுவேன். ஷேக்ஸ்பியரை மேற்கோள் காட்டி, நிறைய எழுதியிருக்கேன். மதுரை பாத்திமா காலேஜ்ல பியூசி படிக்கிறப்பதான் படிப்பு மேல ஈடுபாடே வந்தது...’’ என்று சிரிக்கும் மேகலா சித்ரவேலின் இன்றைய குவாலிஃபிகேஷன் எம்.ஏ., பி.எட்., எ.ஃபில், பி.எல். ‘‘இல்லப்பா... முதலாமாண்டு வரைதான் பி.எல். படிச்சிருக்கேன்.

ஆனா, ஒண்ணு. எங்கப்பா மாதிரியே நானும் மேடைப் பேச்சாளர். பட்டிமன்றங்கள்ல பேசியிருக்கேன்! ‘‘எங்க குடும்பத்துல பெண்களுக்கு 16, 17 வயசாச்சுன்னா திருமணம் செஞ்சு வைச்சுடுவாங்க. அதே மாதிரி எனக்கும் செஞ்சு வைக்க எங்க பாட்டிங்க முயற்சி செஞ்சாங்க. எங்கப்பா பாட்டிங்க பேச்சை கேட்கிறவர். அதனால எனக்கு மாப்பிள்ளை பார்த்தாரு.

கணவரோட பேரு, சித்ரவேல். தூத்துக்குடி பக்கம் அக்காசாலை என்கிற கிராமத்தைச் சேர்ந்தவரு. உண்மைல அந்த ஊரோட பேரு அக்கசாலைதான். கொற்கைப் பாண்டியர்கள் காலத்துல அந்த ஊர்லதான் நாணயம் அச்சடிச்சாங்க. காலப்போக்குல ஊர் பேரு அக்காசாலையா மாறிடுச்சு...’’ புன்னகையுடன் தன் புகுந்த ஊரின் பெருமைகளைப் பட்டியலிட்ட மேகலா சித்ரவேல், தன் கணவர் வெட்னரி டாக்டர் என்கிறார்.

‘‘பெரிய படிப்பாளி. என்னை விட அவரு ஒன்பது வயசு மூத்தவரு. ஸ்கூல் மாஸ்டர் மாதிரி ஜம்முனு இருப்பார். காமராஜர் காலத்து பக்கா காங்கிரஸ்காரர். பி.வி.எஸ்.சி.ல இரண்டு சப்ஜெக்டுல கோல்ட் மெடல் வாங்கியிருக்கார். எம்.வி.எஸ்.சி.யை ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணியிருக்கார். மனுஷங்களுக்கும் விலங்குகளுக்கும் வர்ற கேன்சர் பத்தி ஆராய்ச்சி செஞ்சு டாக்டரேட் முடிச்சார். மெடிக்கல் மைக்ரோ பயாலஜில பெஸ்ட் சயின்டிஸ்ட் அவார்ட் அவருக்கு கிடைச்சதுனா பார்த்துக்குங்க...

கலைஞர் முதல்வரா இருந்தப்ப அவர் தலைமைல எங்க கல்யாணம் நடந்தது. நாவலர் நெடுஞ்செழியன் முன்னிலை. கள்ளக்குறிச்சில எங்க குடித்தனத்தை தொடங்கினோம். சமையல்னா என்னனே தெரியாதவ அதுக்கு அப்புறம்தான் சமைக்கவே கத்துகிட்டேன். கிச்சன்ல கணவர்  உதவி செய்யறதெல்லாம்... I don’t like it. சினிமாவுல சும்மா ரொமான்ஸுக்காக அப்படி சீன் வைக்கிறாங்க. மத்தபடி நடைமுறைல அதெல்லாம் சரிப்பட்டு வராது. 

அப்ப i was a litte girl. பத்தொன்பது வயசுலேந்துதான் உலகமே தெரிய ஆரம்பிச்சது. இந்த நேரத்துல அவருக்கு அப்ப வடாற்காடு மாவட்டமா இருந்த இன்றைய வேலூருக்கு பக்கத்துல ராணிப்பேட்டைக்கு டிரான்ஸ்ஃபர் ஆச்சு. ஐ.வி.பி.எம்.ல உதவி ஆராய்ச்சியாளர் பணி. ராணிப்பேட்டைல இருந்தாலும் மகள் வந்தனா, கடலூர்லதான் பிறந்தா. அவ பிறந்த பிறகு என் கணவர் சென்னை வெட்னரி கல்லூரிக்கு எம்.வி.எஸ்.சி. படிக்க போனாரு. அதனால நானும் எங்க பொண்ணும் கடலூர்ல எங்கம்மா வீட்டுல இருந்தோம்.

டிகிரி படிக்கிற ஆசை அப்பதான் வந்தது. கரெஸ்பாண்டன்ஸ்ல பி.ஏ. சேர்ந்தேன். அவரு மாஸ்டர் டிகிரி வாங்கறப்ப நானும் டிகிரி வாங்கிட்டேன்! கடலூர்லதான் வெற்றி (மாறன்)யும் பிறந்தான். டாக்டரேட் படிக்கப் போறேன்னு அவரு சொன்னப்ப நான் தடுக்கலை. ஆனா, ‘திரும்பவும் அம்மா வீட்ல விடாதீங்க... உங்களோடயே கூட்டிட்டு போங்க’னு சொன்னேன். சரினு சொன்னார். மேற்கு அண்ணாநகர்ல ஒரு ப்ளாட்ல குடியிருந்தோம். அவர் வேலைல இருந்துகிட்டே படிச்சதால முழு சம்பளம் வராது.

உதவித் தொகைதான் கிடைக்கும். இதை வைச்சுதான் நாங்க சமாளிச்சோம். ஆனா, ஒரு விஷயத்துல மட்டும் நானும் அவரும் உறுதியா நின்னோம். நம்ம பசங்க என்ன படிக்க விரும்பறாங்களோ... அதை நாம படிக்க வைக்கணும்... வீட்ல சும்மா இருக்க பிடிக்கலை. மேற்கு அண்ணாநகர் தங்கம் காலனில இருந்த ஐசிஐ ஸ்கூல்ல டீச்சரா சேர்ந்தேன். இந்த சம்பளத்துலதான் எங்க பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுவோம். அவர் பிஎச்.டி. வாங்கினதும் ராணிப்பேட்டைக்கே திரும்பி வந்தோம்.

தம்பியும் (வெற்றி மாறனை அப்படித்தான் குறிப்பிடுகிறார்), லவ்லியும் (மகள் வந்தனாவை செல்லமாக இப்போதும் அப்படித்தான் அழைக்கிறார்) ராணிப்பேட்டைல படிப்பை தொடர்ந்தாங்க. டீச்சர் வேலை மேல எனக்கு அவ்வளவு க்ரேஸ். அதனால சொந்தமா ‘சத்யா ஸ்கூல்’ தொடங்கினேன். கொட்டகைலதான். அப்புறம் நிறைய பசங்க சேர ஆரம்பிச்சதும் கட்டிடத்துக்கு மாறினோம். பிறகு ‘வெற்றி மெட்ரிகுலேஷன் ஸ்கூல்’னு பெயரை மாத்தினோம்.

என் கண்வர் கிழிச்ச கோட்டை நான் தாண்டினதில்லை. பசங்களும் அப்பாவுக்கு மரியாதை கொடுத்தாங்க. அவர் ஒர்க் பண்ணின இன்ஸ்டிடியூட்லயே டைரக்டரா ஆனார். அப்ப வெற்றி லயோலால எம்.ஏ. செகண்ட் இயர். வந்தனா தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்ல எம்பிபிஎஸ் ஸ்டூடண்ட். வெற்றி மாறனுக்குள்ள இருந்த சினிமா ஆசையை கண்டுபிடிச்சு ஊக்குவிச்சவர் ராஜநாயகம் சார்தான். இப்படி வாழ்க்கை சந்தோஷமா போயிட்டிருந்தப்பதான் அந்த இடி எங்க தலைல இறங்கினது...’’ கணீரென்று பேசிக் கொண்டே வந்த மேகலா  சித்ரவேலின் குரல் சட்டென்று தழுதழுக்கத் தொடங்குகிறது.

சமாளித்தபடி தனது டிரேட் மார்க்கான கணீர் குரலில் தொடர்ந்தார். ‘‘திடீர்னு அவருக்கு மஞ்சள் காமாலை வந்தது. சென்னை கீழ்ப்பாக்கத்துல ஒரு தனியார் ஆஸ்பிடல்ல அட்மிட் செஞ்சோம். அவருக்கு சினிமாவே பிடிக்காது. அதனால, பாலு மகேந்திரா சார்கிட்ட உதவியாளரா வெற்றி சேரப் போறேன்னு சொன்னப்ப தயங்கினாரு. நான் ஓகே சொன்னதோட உதவியாளர் கார்ட் வாங்க பணத்தை எடுத்து என் கணவர் கைல வைச்சு, ‘பையன் கிட்ட கொடுங்க’னு சொன்னேன். ‘நீ நல்லா வருவப்பா’னு வெற்றி தலைல கைய வைச்சு ஆசீர்வதிச்சார்.

அப்புறம் அவரை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம். உடல்நிலை மோசமாச்சு. ராமச்சந்திரால சேர்த்தோம். அங்க இருந்த டாக்டர் அப்ப என்னைப் பார்த்து கேட்ட கேள்வி இன்னமும் நினைவுல இருக்கு. ‘நீங்க முதல் சம்சாரமா இல்ல இரண்டாவது சம்சாரமா..?’ ஏன்னா நான் பார்க்க சின்னப் பொண்ணு மாதிரி இருப்பேன்.

‘அவருக்கு நான் ஒரே சம்சாரம். எதுனாலும் மறைக்காம சொல்லுங்க’னு சொன்னேன். தயக்கத்தோட, அவர் பிழைக்க வழியே இல்லைனு டாக்டர் சொன்னார். அதே மாதிரி சில நாட்கள்லயே அவர் காலமாகிட்டாரு. நாங்க கடலூருக்கு போனோம். அங்க காரியம் செய்யணும்னு வீட்ல சொன்னாங்க. வெற்றிக்கு கோபம் வந்துடுச்சு. ‘அம்மா நெத்தில குங்குமத்தை அழிக்கறது... வெள்ளைப் புடவை கட்டச் சொல்றதுனு யாராவது ஏதாவது செய்தீங்க... வெட்டிடுவேன்’னு சத்தம் போட்டான். வந்தனாவும் தம்பிக்கு ஆதரவா நின்னா.

இப்படி பசங்க பிடிவாதமா இருந்ததால மெரூன் கலர்ல பச்சை பார்டர் போட்ட புடவை கொடுத்தாங்க. எப்பவுமே நான் கஷ்டங்களைப் பார்த்து துவள மாட்டேன். எப்படி இதை சமாளிக்கறதுனுதான் யோசிப்பேன். அப்படித்தான் கணவர் இழந்த துக்கத்தையும் சமாளிச்சேன். ‘இனி அம்மாதான்... அவங்களுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்கக் கூடாது’னு பசங்களும் என்னை தொந்தரவு செய்யாம இருந்தாங்க...’’ என்று பெருமையாகச் சொல்லும் மேகலா சித்ரவேல், தன் மருமகள் பற்றி பேசும்போது உற்சாகமாகிறார்.

‘‘காது ட்ரீட்மென்ட்டுக்காக ஆஸ்பிடல்ல நான் அட்மிட் ஆனப்ப ஆர்த்தி என்னை உள்ளங்கைல வைச்சு தாங்கினா. கேரளால இருக்கிற சக்குலத்தம்மா தரிசனம் ஆர்த்தி மூலமாதான் கிடைச்சது. ஆர்த்தியும் லவ்லியும் வீட்ல இருக்கிறப்ப அக்கா தங்கச்சிங்க இருக்கிறா மாதிரியே தெரியும். திடீர் திடீர்னு என் பொண்ணு வைரக் கம்மல், எல்.இ.டி.னு வாங்கிக் கொடு த்து அசத்துவா.

வெற்றிக்கு பொண்ணு பொறந்தப்ப அவ்வளவு சந்தோஷப்பட்டோம். பூந்தென்றல்னு பேரு. இப்ப ரெண்டாவது படிக்கிறா. என்னை அம்மும்மானு கூப்பிடறா. ஒரே பேரன் கதிரவன். அப்பாவுக்கும் அவனுக்கும் ஒரே Date of Birth. அதுல ஐயாவுக்கு ஒரே குஷி. இப்ப தன் அக்கா கூடவே அவரும் ஸ்கூலுக்கு போறார்!’’ மகிழ்ச்சியின் ரேகை முகமெல்லாம் படர சொல்கிறார் மேகலா சித்ரவேல்.           

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

உப்புமா!

திருமணமானதும் பார்த்த முதல் படம், ‘நம்நாடு’. சமையல் புத்தங்களைப் பார்த்தே, சமையல் செய்யக் கற்றுக் கொண்டிருக்கிறார். முதன்முதலில் கணவருக்கு சமைத்துக் கொடுத்தது உப்புமாதானாம்! ‘வெங்காயத்தை வெட்டவும்... ரவையை கிளறவும்...’ என்ற வரியை படித்துவிட்டு அதன்படியே செய்து கணவருக்கு பரிமாறியிருக்கிறார். அதை முழுவதுமாக சாப்பிட்டுவிட்டு ‘இதுக்கு என்ன பெயர் வச்சிருக்கே?’ என கேட்டிருக்கிறார். ‘உப்புமா’ என மேகலா சொன்னதும், ‘இதுல அதான் (உப்பு) இல்ல’ என அமைதியாக பதிலளித்தாராம்!  இப்படி இருந்த மேகலா, இன்று இரண்டு சமையல் நூல்களையும் ஒரு கோலப் புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்!

எழுத்தாளர்!

ஏராளமான சிறுகதைகளை எழுதியிருக்கும் மேகலா சித்ரவேல், இதுவரை 81 நாவல்களை எழுதியிருக்கிறார். நூறைத் தொட்டு விட வேண்டும் என முயன்று வருகிறார். இவரது 50வது நாவல் வெளியானபோது விழா நடத்தி கவுரவித்திருக்கிறார்கள். கணவர் இறந்த பிறகு நான்கு வருடங்கள் எதையுமே இவர் எழுதவில்லையாம். ஆறுதல் சொல்லி தேற்றி மீண்டும் எழுத வைத்தது வெற்றி மாறன்தானாம்.

கேரளாவில் உள்ள சக்குலத்தம்மா பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதற்காக மலையாளமும், கம்ப்யூட்டர் டைப்பிங்கும் கற்றிருக்கிறார். தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளையும் சரளமாகப் பேசுகிறார். இவரது நாவல்களை வைத்து தஞ்சை மாணவரும், சென்னை மாணவியும் பிஎச்.டி செய்திருக்கிறார்கள். இவரது இரு சிறுகதைகளை தனது ‘கதை நேரத்தில்’ பாலு மகேந்திரா இயக்கியிருக்கிறார்.

சிவாஜிக்கு பின் சிவாஜி!

மேகலாவின் அப்பா இளமவழுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். சட்டக் கல்லூரியில் படிக்கும் போது நாடகத்துறையிலும் சிறந்து விளங்கினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சினிமாவில் பிசியான பிறகு ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ நாடகத்தின் டைட்டில் ரோலில் நடித்தவர் இளம்வழுதிதான். இதன் பிறகே அந்த ரோலில் ஈ.வி.கே.சம்பத் நடித்தார்!

தனுஷின் நட்பு

வெற்றி மாறனின் வெற்றிப் பயணத்தில் தனுஷுக்கு பெரும் பங்குண்டு. ‘ஆடுகளம்’ பூஜையின் போது அருகில் நின்றிருந்த தனுஷின் கையையும், வெற்றியின் கையையும் ஒன்றாக பிடித்திருக்கிறார். அத்துடன் தனுஷைப் பார்த்து ‘நீ மிகப் பெரிய நடிகரா ஆனாலும் சரி...’  வெற்றியைப் பார்த்து, ‘நீ மிகப் பெரிய இயக்குநரா ஆனாலும் சரி... உங்க நட்பு எப்பவும் தொடரணும்...’ என்று சொல்லி இருவரது கரங்களையும் இணைத்தாராம். இன்று வரை இச்சம்பவத்தை தனுஷ் நினைவில் வைத்திருப்பதாக சொல்லி நெகிழ்கிறார் மேகலா.

பத்திரிகையில் உதவி ஆசிரியர்

பாலு மகேந்திராவிடம் உதவியாளராக வெற்றிமாறன் பணிபுரிந்தபோது வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் ‘குமுதம் சிநேகிதி’ மாதம் இருமுறை  பத்திரிகையில் உதவி ஆசிரியராக ஒன்றரை வருடங்கள் மேகலா சித்ரவேல் வேலை பார்த்திருக்கிறார். அப்போது ஆச்சி மனோரமா, சத்யராஜின் மனைவி, இயக்குநர் ஸ்ரீதரின் மனைவி உள்ளிட்ட பலரையும் பேட்டி கண்டிருக்கிறார்.

கலை ராணி

மேகலாவுக்கு வீணை வாசிக்கத் தெரியும். தையல், பூ வேலைப்பாடுகளிலும் ஆர்வம் அதிகம். ஆர்ட்டிஃபிஷியல் நகைகளையும் செய்வாராம்.

Pets lover

அப்பா வெட்னரி டாக்டராக இருந்தவர் என்பதாலோ என்னவோ, சின்ன வயதில் இருந்தே விலங்குகள் மீது வெற்றிமாறன் பிரியம் காட்டத் தொடங்கி விட்டார். பள்ளி நாட்களில் காட்டில் ஓடும் பாம்புக் குட்டிகளை தன் டவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வருவாராம். கிச்சனில் இருக்கும் அம்மாவிடம், ‘என் கைல என்ன இருக்குனு பாரு...’ என்று கேட்டு மிரள வைப்பாராம்.

இப்போது ‘அழகி’, ‘பைரவி’ என இரண்டு நாய்களைத் தவிர, வெளிநாட்டைச் சேர்ந்த பெரிய சைஸ் வெள்ளைக் கிளி ஒன்றையும் வெற்றிமாறன் வளர்க்கிறார். யார் வந்தாலும் ‘ஹலோ’ சொல்லி வரவேற்கிறது. ‘ஆடுகளம்’ நினைவாக அந்தக் கிளிக்கு ‘ஐரின்’ என பெயரிட்டிருக்கிறார். போலவே தன் அலுவலகத்தில் நிறைய புறாக்களையும் வளர்க்கிறார்.

ஊக்கப்படுத்தியவர் அ.மா.சாமி

மேகலா நாவல்கள் எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ‘ராணி’ எடிட்டர் அ.மா.சாமியை நேரில் சந்தித்து, ‘பெரிய எழுத்தாளரா இருந்தாலும் நாவல் நல்லா இல்லைனா போடாதீங்க. புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க...’ என வேண்டுகோள் வைத்திருக்கிறார். புன்னகையுடன் ‘புதியவர்கள் யார் இருக்காங்க?’ என அ.மா.சாமி கேட்டிருக்கிறார். ‘ஏன்... நானே எழுதுவேன்.

என் கதை நல்லா இல்லைனு வாசகர்கள் சொல்லிட்டா... அடுத்த நிமிஷமே எழுதறதை நிறுத்திடறேன்...’ என மேகலா சொல்லியிருக்கிறார். ‘அப்படியா... சரி ஒரு நாவல் எழுதிக் கொடுங்க...’ என அ.மா.சாமி கேட்க... இவரும் கொடுத்திருக்கிறார். அந்த நாவலைப் பாராட்டி ஒரு மூட்டை கடிதங்கள் வந்ததாம்! ‘ராணி’யில் உதவியாசிரியராக இருந்த அமல்தாஸ் தன்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார்.

வெற்றிமாறன் - ஆர்த்தி Love Secret!

ஆர்த்தியை பத்து வருடங்களாக காதலித்து வந்த வெற்றிமாறன், ‘சினிமாவில் சாதித்த பிறகே திருமணம்’ என உறுதியாக இருந்திருக்கிறார். இதனிடையே ஆர்த்திக்கு அவர்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ‘பத்து வருஷங்களா ஒரு பொண்ணு உன்னை லவ் பண்றா. இதுதான் உண்மையான காதல். இதுக்கு மேல கல்யாணத்தை தள்ளிப் போடாத... நிச்சயம் திருமணத்துக்குப் பிறகு உனக்கு ஏறுமுகம்தான்’ என மேகலா சொன்ன பிறகே ஆர்த்தியை மணந்திருக்கிறார் வெற்றிமாறன். இவர் சொன்னது போலவே திருமணமானதும்  ‘பொல்லாதவன்’ வாய்ப்பு வெற்றிக்கு கிடைத்திருக்கிறது.