எனக்கு வாய்த்த அடிமைகள்
குங்குமம் விமர்சனக்குழு
நான்கு நண்பர்களின் நட்புக்கதை.. காதலில் ஏமாற்றப்பட்ட ஜெய், தன் நண்பர்களிடம் தகவல் சொல்லிவிட்டு உயிரை விட தீர்மானிக்கிறார். பதறிய அவரது நட்புகள் அவரைத் தேடிக் கண்டுபிடிக்க முற்படுகிறார்கள். இறுதியில் மீட்டார்களா என்பதே படம். மெல்லியதான கதையில் மூன்று நட்புகளையும் முன்னிலைப்படுத்தி கலகலப்பூட்டிய வகையில் புதுமுக இயக்குநர் மகேந்திரன் ராஜாமணி வரவேற்புக்குரியவர். தொன்று தொட்ட காலம் தொட்டு அதே ஹஸ்கி வாய்சில் ஜெய் கொண்டு வருகிற அதே நடிப்புத்தான்.
அலுக்கவில்லை என்பது ப்ளஸ். ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு, மனைவியிடம் நெருங்க முடியாமல் இருக்கும் காளி வெங்கட், பேங்கில் வேலை பார்க்கிற கருணாகரன், நவீன் என மூன்றே கேரக்டர்களை வைத்துக்கொண்டு, பளீர் வசனங்களில் ரசிக்க வைப்பதுதான் மொத்த படத்தின் ரசனை அத்தியாயங்கள். ப்ரணிதாவுக்கு பாடல்களுக்கு வந்து போகும் வேடம்.
ஜெய்யை விட்டு விலகுவதற்கு சொல்லும் காரணம் நம்பும்படியாகவே இல்லை. கதை, மூன்று நட்புகளின் பார்வைக்கு வந்த பிறகுதான் சுவாரஸ்யமே தொடங்குகிறது. அஞ்சலியும் சந்தானமும் ஆச்சர்ய என்ட்ரி. ஜெய் - மொட்டை ராஜேந்திரன் காமெடி நீளமானாலும் நான் ஸ்டாப் நகைச்சுவை. சந்தோஷ் தயாநிதியின் பாடல்கள் பரவாயில்லை. ஒளிப்பதிவில் மகேஷ்முத்துசாமி துறுதுறு. காமெடியில் இம்ப்ெரஸ் செய்கிறார்கள் இந்த அடிமைகள்.
|