Yes, I’m a Gamer!
-மை.பாரதிராஜா
தென்னிந்திய சினிமாவின் ஸ்மார்ட் அண்ட் ஹேண்ட்சம் ஹீரோ அரவிந்த்சாமிதான். நடிக்கத் தொடங்கி இந்த வருடத்துடன் 25 ஆண்டுகளாகின்றன. ‘‘யெஸ் சில்வர் ஜூப்ளி. ஆனா, இடைல பத்து வருஷங்கள் படங்கள் பண்ணாம இருந்திருக்கேன். நடிக்கணும்னு எந்த ஐடியாவும் இல்லாம வந்தேன். வாய்ப்பு கிடைச்சப்ப கத்துக்க ஆரம்பிச்சேன். சினிமாவுக்குனு சில விஷயங்கள் இருக்கு. அதை எல்லாம் தெரிஞ்சுக்க முயற்சி செஞ்சேன்.
நடிப்பு போக டெக்னிக்கலாகவும் அப்டேட் ஆனேன். Still I’m learning. ஒரு படம் சக்சஸ் ஆனதும் அதே ரூட்ல போகாம வெரைட்டி தேடி அலைஞ்சேன். அதனாலதான் இந்த ஜெனரேஷன்லயும் ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க...’’ காஃபியை அருந்தியபடி நிதானமாக, தெளிவாகப் பேசுகிறார் அரவிந்த்சாமி.
நீங்களும் ஜெயம் ரவியும் சேர்ந்தா அந்த இடமே கலகலக்குதே..? ஃப்ரெண்ட்ஷிப்தான் காரணம். ‘தனி ஒருவன்’ல ஆரம்பிச்சது, ‘போகன்’ல தொடர்ந்திருக்கு. ரவியை எங்க வீட்ல எல்லாருக்கும் பிடிக்கும். எங்க ஃபேமிலில அவரும் ஒருத்தர். என் பையன் ரவியோட டான்ஸுக்கு ஃபேன். ‘போகன்’ல என்னை மாதிரியே அவரும் அவரை மாதிரியே நானும் செகண்ட் ஆஃப்ல நடிச்சிருக்கோம். அப்ளாஸ் அள்ளுது. சந்தோஷமா இருக்கு.
கார்ல நானும் ரவியும் ஜாலியா பேசி நடிக்கிறா மாதிரி நிறைய சீன்ஸ் எடுத்தாங்க. ஃபைனல் கட்ல சிலது மட்டும்தான் வந்திருக்கு. படத்துல என்னோட இன்ட்ரோ சீன், லக்ஷ்மணுக்கு ரொம்ப பிடிச்ச காட்சி. ‘கெட்டபழக்கம் உள்ள கோடீஸ்வரன். ஆனா, ஃபிட்னஸ் பண்ணி உடம்பையும் கவனிச்சுக்குவான்’னு சொன்னார். இதுக்காகவே ஜிம்ல ஒர்க் அவுட் செஞ்சேன். ‘மின்சாரக் கனவு’க்கு அப்புறம் பிரபுதேவா கூட தொடர்புல இல்ல. ‘போகனு’க்கு அவர்தான் தயாரிப்பாளர். திரும்பவும் அடிக்கடி சந்திக்க ஆரம்பிச்சுட்டோம். கேப்பே தெரியாத அளவுக்கு ஃப்ரெண்ட்ஸா இருக்கோம்.
இப்ப நடிக்கற படங்கள்..? தெலுங்கில் ராம் சரணோட நடிச்ச ‘துருவா’ நல்லா போகுது. ‘சதுரங்க வேட்டை’ எனக்குப் பிடிச்ச படம். கதை பிடிச்சிருந்ததால இப்ப ‘சதுரங்கவேட்டை 2’ பண்றேன். இது வேற ஜானர்ல இருக்கும். அடுத்து ஷெல்வா இயக்கத்துல ‘வணங்காமுடி’. ரித்திகா சிங் ஹீரோயின். அப்புறம் ‘ஃப்ரெண்ட்ஸ்’ சித்திக் இயக்கற படத்துல நடிக்கறேன்.
மம்முட்டி, நயன்தாரா நடிச்ச ‘பாஸ்கர் த ராஸ்கல்’ மலையாளப் படத்தோட ரீமேக் இது. சமீபத்துல ‘துருவங்கள் பதினாறு’ பார்த்து அசந்துட்டேன். யாருமே யோசிக்காத ஆங்கிள்ல ஸ்கிரிப்ட் பண்ணியிருந்தார் கார்த்திக் நரேன். அவரோட ஒரு படம் ஒர்க் பண்ண விரும்பினேன். ‘எனக்காக ஸ்கிரிப்ட் பண்ணாதீங்க. உங்க ஸ்டைல் ஆஃப் மேக்கிங்லயே பண்ணுங்க’னு அவர்கிட்ட சொல்லியிருக்கேன்.
நீங்க ஏன் வாட்ச் கட்டறதில்ல..? கவனிச்சுட்டீங்களா..? முன்னாடி எல்லாம் காஸ்ட்லி வாட்ச் வாங்குவேன். Only single use. இதுக்காக அதை ஏன் கட்டணும்னு ஒரு கட்டுரைல படிச்சேன். பொளேர்னு அறைஞ்சா மாதிரி இருந்தது. கேள்வி சரிதானே? அடுத்த நொடியே கட்டறதை நிறுத்திட்டேன். இப்பதான் நம்ம மொபைல்லயே டைம் தெரியுதே... எக்ஸ்ட்ரா லக்கேஜ் எதுக்கு? வாட்ச்சுனு இல்ல... கார், எலக்ட்ரானிக் அயிட்டம்ஸ்... இப்படி எதுலயும் ஆர்வம் இல்ல.
என் மொபைலை பாருங்க. ஐபோன் 6. ஆனா, ஸ்கிரீன்ல ஏகப்பட்ட கீறல்கள் இருக்கு. ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஏற்பட்ட ஸ்கிராட்ச். அதனால என்ன? மொபைல் நல்லா ஒர்க் ஆகுது. பிறகு ஏன் இதை மாத்தணும்? பட், நான் கஞ்சன் இல்ல. தேவையில்லாத செலவு எதுக்குனு யோசிக்கிற ஆளு. அவ்வளவுதான். மனைவி, பசங்களுக்கு பர்த்டே வர்றப்ப காஸ்ட்லியான கிஃப்ட் கொடுப்பேன். அதுவே என் பிறந்தநாளுக்கு என்ன பரிசு கொடுக்கறதுனு அவங்க திண்டாடுவாங்க. ஏன்னா... லக்சரி அயிட்டம்ஸ் மேல எனக்கு எப்பவும் இன்ட்ரஸ்ட் இருந்ததில்ல...
இப்பவும் வீடியோ கேம்ஸ் விளையாடுறீங்களா? ஆசைதான். என்ன செய்ய... டைம் கிடைக்கிறதில்ல. உடம்பு சரியில்லைனா கூட ஷூட்டிங்குக்கு லீவு போட முடியலை. சின்ன வயசுலேந்து வீடியோ கேம் விளையாடிட்டு இருக்கேன். சில வருஷங்களுக்கு முன்னாடி சர்வதேச அளவுல நிறைய ப்ளேயர்ஸோட ஒரே நேரத்துல விளையாடியிருக்கேன். கிரிக்கெட் மாதிரியே இதுலயும் இன்டர்நேஷனல் போட்டிகள் உண்டு. ஜெயிச்சு பரிசெல்லாம் வாங்கியிருக்கேன். You know one thing... உலக அளவுல டாப் 50 வீடியோ கேம் ப்ளேயர்ஸ்ல நானும் ஒருத்தன்! Yes, I’m a Gamer!
படங்கள்: ஜி. உதயகுமார்
வேலன்டைன்ஸ் டே
ஸ்கூல், காலேஜ்ல ரோஸ் கொடுக்கறது... கார்டு கொடுக்கறதுனு ட்ரை பண்ணியிருக்கேன். பிடிக்காத விஷயம்தான். ஃப்ரெண்ட்ஸ் கட்டாயப்படுத்தினாங்க. அந்த வயசுல குறுகுறுனு இருந்தது. செஞ்சு பார்த்தேன். ஆமா... இந்த நெட் உலகத்துலயும் ரோஸ், கார்ட்ஸ் கொடுக்கிற பழக்கம் இருக்கா?!
பிடித்த படங்கள்
1. Pulp fiction 2. Inception 3. The sixth sense 4. கர்ணன் 5. சூது கவ்வும் 6. Trainspotting 7. The imitation game 8. துருவங்கள் பதினாறு
சிரஞ்சீவி வீட்டு தோசை
‘துருவா’ ஷூட்டிங் சமயத்தில் தன் வீட்டுக்கு அரவிந்த்சாமியை அழைத்துச் சென்று தன் தந்தை சிரஞ்சீவியிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார் ராம் சரண். எப்படி அஜித் பிரியாணி ஸ்பெஷலிஸ்ட்டோ அப்படி சிரஞ்சீவி தோசை ஸ்பெஷலிஸ்ட். இவரது ‘சீரு தோசை’க்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் அடிமை. ‘‘நானும்தான். நான்ஸ்டிக்ல சுடாம அதேநேரம் ஒரு துளி எண்ணெய் கூட விடாம தோசை வார்த்து தந்தார் பாருங்க... மை காட். வாட் எ டேஸ்ட்.
இதுக்கு பொருத்தமான சட்னி வேற. கேக்கணுமா? ஒரு கை பார்த்துட்டேன்!’’ என்று சொல்லும் அரவிந்த்சாமியும் லேசுப் பட்டவர் அல்ல. தென்னிந்திய உணவு வகைகளை பிரமாதமாக சமைக்கக் கூடியவர். செய்முறை பார்க்காமல், டிஷ்ஷின் டேஸ்ட்டை வைத்தே அச்சு அசலாக சமைக்கும் திறமை பெற்றவர்.
|