COFFEE TABLE



-குங்குமம் டீம்

ரீடிங் கார்னர்

நகலிசைக் கலைஞன் ஜான் சுந்தர்
(காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629 001. விலை. ரூ. 130/- தொடர்புக்கு: 9677778862) அனுபவக் கட்டுரைகளின் உண்மையும், ஆழமும் எப்போதும் சுவாரஸ்யமானவை. கற்பனையின் எல்லைக் கோட்டைக் கூட தொட்டுவிடாத அழகில் ஜான் சுந்தர் நகலிசைக் கலைஞர்களின் அனுபவங்களை, உடனிருப்பை ரத்தமும் சதையுமாக எழுதியிருக்கிறார். மெய் மறப்பதும், கவலை துறப்பதும் அனேகமாக திரைப் பாடல்களை கேட்கும்போது மட்டுமே நடக்கிறது.

நகலிசைக் கலைஞர்களின் வாழ்க்கையின் சில பக்கங்களை துளி மிகையில்லாமல் செங்கல் சூளையின் வரிசை போல் கச்சிதமான அடுக்கில் கட்டுரைகள். இசையைப் புரிந்து கொள்வதும், அனுபவிப்பதும் ஜானின் எழுத்துகளில் தங்கு தடையின்றி நடக்கிறது. உண்மையிலேயே விளக்க முடியாத இடத்தில் இருக்கிற இசையை கவனம் ஈர்க்கும்படியாக எழுத முடிவதே பெரும் காரியம். மிகச் சிறிய புத்தகம்; ஆனால், நிறைவில் மனம் பெருகி நிற்கிறது.

தேடல்

‘‘பணம், புகழ், ஆன்மிகம் இவற்றில் எது வேண்டும் என என்னிடம் கேட்டால்... ஆன்மிகம்தான் வேண்டும் என்பேன். அதில்தான் அதிக சக்தி கிடைக்கும். ஆன்மிகத்தைப் பின்பற்ற பிடிக்கும்...’’ தமிழ்நாட்டில் பரபர அரசியல் ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் ஆன்மிகத்தைப் பற்றி பேசியிருக்கிறார் ரஜினி. பரமஹம்ஸ யோகானந்தரின் ‘தெய்வீகக் காதல்’ நூல் வெளியீட்டு விழா ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது. விழாவில், ‘‘நான் குழப்பவாதி இல்லை, ஆன்மிகப் பாதையில் என் முதல் குரு அண்ணன் சத்யநாராயணா. அதன்பிறகு ஆன்மிகத்  தேடல் தொடர்ந்து கொண்டே உள்ளது...’’ என மனம் திறந்திருக்கிறார்.

குறைந்து வரும் பெண் அரசியல்வாதிகள்!

‘இந்திய சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை முன்பைவிட இப்போது குறைந்து வருகிறது...’ என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது. இப்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலிலும் பெண்களின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை. பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 401 இடங்களில் போட்டிபோடும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் பார்ட்டியில் 18 பெண்களே போட்டியிடுகிறார்கள். 324 இடங்களில் போட்டிபோடும் அகிலேஷின் சமாஜ்வாடி பார்ட்டியின் சார்பாக  போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை வெறும் 24. ‘பெண்கள் அரசியல் களங்களில் அதிகபட்சமாக இடம்பெற்று வந்தாலும் தேர்தல் என்று வரும்போது ஏன் அவர்கள் போட்டிக் களத்தில் இறங்குவதில்லை?’ எனும் அதி முக்கியமான கேள்வியை இந்த தேர்தல் எழுப்பியிருக்கிறது

ஒரே ரிமோட்!

இப்போது டிவி, டிவிடி, ஏசி, ஆடியோ சிஸ்டத்துக்கு தனித்தனியாக ரிமோட்களை பயன்படுத்துகிறோம். இனி எல்லா கேட்ஜெட்களும் இன்டர்நெட் மூலம் இணைக்கப்படும். ஸ்மார்ட் போன்களைப் போல ஸ்மார்ட் ஹோம் வந்துவிடும். பிறகு வீட்டின் கதவில் இருந்து ஃபேன், கார், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கேஸ் அடுப்பு வரை எல்லாவற்றையும் கன்ட்ரோல் செய்ய ஒரெயொரு ரிமோட் போதும்!

குமுதா ஹேப்பி!

‘அனேகன்’ ஹீரோயின் அமைரா தஸ்தூரை நினைவிருக்கிறதா? உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுடன் நடித்த ‘குங்ஃபூ யோகா’வில் கிடைத்த வரவேற்பில் பூரித்து புன்னகைக்கிறார் அமைரா. ஹீரோ ஜாக்கி சான் என்பதால் உலகம் முழுவதும் இப்போது அதன் புரொமோஷன்களுக்காக பறந்து கொண்டிருக்கிறார். அதில் ஒன்றை ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவாக அப்லோட் செய்ய... வைரலாகி இருக்கிறது. ஸோ, அமைரா ஹேப்பி!

சைலன்ட் கார்னர்

பெண் எனும் பொருள்
விற்பனைக்கு: பெண்கள், குழந்தைகள் லிடியா காச்சோ / தமிழில் விஜயசாய் [விடியல் பதிப்பகம், 23/5, ஏ.ேக.ஜி. நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் - 641 015. விலை ரூ.350/- தொடர்புக்கு: 9443468758]

இது நாம் அறியாத உலகம். புலப்படாத புதிர். இடைவிடாது நடக்கும் பயங்கரம். நாளொன்றுக்கு உலகமெங்கும் பெண்களும், குழந்தைகளுமாக, இருக்கும் இடத்திலிருந்து அவர்கள் உணர்ந்து அறியாத மாய உலகிற்கு கடத்தப்படுகிறார்கள். படு பயங்கரமான வலைப்பின்னல் கொண்ட தொடர்ச்சி இது. இந்த பயங்கரங்களைக் கேட்டு உணர்ந்ததோடு நின்றுவிடாமல், தொடர்ந்து பயணித்து, துணிச்சலாக தகவல் சேகரித்து எழுதியிருக்கிறார் லிடியா.

பெண்களைக் கடத்திச் செல்வது, விலைக்கு வாங்குவது, பாலியல் தொழிலுக்கு மூளைச்சலவை செய்து பயன்படுத்துவது எல்லாம் கண்ணியத்தின் எந்த சாயலும் இல்லாத நிகழ்வுகள். இந்தப் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் கற்பனை இல்லை. பதற வைக்கும் உண்மைகள். மாஃபியாக்கள் கொள்ளை இலாபத்தை கொட்டிக் குவிக்கும் அறக் கொடுமை. ஆயுதமும், போதைப் பொருளும் தரும் லாபத்தைவிட பாலியல் வர்த்தகம் தரும் லாபக் கணக்கைப் பார்த்தால் துணுக்குறுகிறது. இந்தப் பின்னலில் சிக்கிக் கொண்டவர்கள், மீண்டவர்கள்,  துவண்டவர்கள், துயரத்தின் கடைசி துளியை அருந்தியவர்கள் வரைக்கும் எல்லாமே நெஞ்சு துடிக்கும், இரத்தம் உறைய வைக்கும் பதிவுகள்.