வாசகர் கடிதங்களை படிச்சாதானே தங்களோட வாசகர் யார்னு ஒரு பத்திரிகைக்கு புரியும்



கேட்கிறார் அயன்புரம் த.சத்தியநாராயணன்

-டி.ரஞ்சித்

மன்னார்குடி மாஃபியா’ எனும் வார்த்தையை உருவாக்கியவர். ‘அந்நியன்’ படத்தில் வரும் பிரகாஷ் ராஜின் பத்திரிகையாளர் கதாபாத்திரத்துக்குப் பெயரானவர். இந்திய அஞ்சல் அட்டைக்கு மொத்த குத்தகைதாரர் என பல்வேறு பட்டங்களுக்குச் சொந்தக்காரர் அயன்புரம் த.சத்தியநாராயணன். தினசரி, மாத, வார இதழ்கள் கடைகளுக்கு வந்த அடுத்த நிமிடமே இவரது வாசகர் கடிதம்தான் பத்திரிகை அலுவலகங்களை முதலில் முத்தமிடும். நல்லது நடந்தால் பாராட்டவும், தீயது நடந்தால் தட்டிக்கேட்கவும் இவரது எழுத்து என்றும்  தயங்கியதில்லை.

திருவல்லிக்கேணியில் பிறந்து எஸ்.எஸ்.எல்.சி வரை படித்த இவருக்கு பள்ளிப் படிப்பில் நாட்டமில்லை. தந்தைக்கு பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் ரயில்வே தொழிற்சாலையில் வேலை. அதனால் குடும்பமும் அதற்கு அருகாமையில் இருந்த அயனாவரத்துக்கு  குடிபெயர்ந்திருக்கிறது. இந்த நிகழ்வு நடந்த காலத்தில் பத்திரிகைகளில் எழுதுபவர்கள் தங்கள் பெயருக்கு முன்னே தங்கள் ஊர் பெயரையும் இணைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

அந்த வகையில் இவரும் தன் பெயருக்கு முன்பாக ‘அயன்புரம்’ என சேர்த்துக்கொண்டு முழுவீச்சில் அஞ்சல் அஸ்திரம் பாய்ச்சியிருக்கிறார். அன்றைக்கு பிரபலமாக இருந்த அரசு வானொலி, தூர்தர்ஷன் நேயர் விருப்பம் நிகழ்ச்சி பற்றிய கடிதங்கள்... என தன் ‘பத்திரிகை’  வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார். தந்தை வேலை செய்த அதே ரயில்வேயில் இவருக்கும் வேலை கிடைக்க திருமணம், குடும்பம் என செட்டிலானாலும் வாசகர் கடிதம் எழுதுவதை மட்டும் கடந்த 40 வருடங்களாக இவர் நிறுத்தவில்லை.

மனைவி ஜோதி, மகன்கள் ராஜேஷ்குமார், தினேஷ் பாபு, மகள் கீதா சூழ மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவரை சந்தித்தோம். ‘‘பாடப்புத்தகங்கள்ல எனக்கு பெருசா ஆர்வம் இல்ல. ஆனா, உலக விஷயங்களை தேடித் தேடிப் படிப்பேன். என் அறிவுப் பசியை பத்திரிகைகள்தான் தீர்த்து வைச்சது. அன்னிக்கி மட்டுமில்ல... இன்னிக்கும்தான். இப்ப அறிவை விட கவர்ச்சிக்கு பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்குது...’’ என்ற த.சத்தியநாராயணன், பத்திரிகைகளில் வரும் கேள்வி - பதில் பகுதிக்கு நையாண்டியாக வினா  தொடுப்பதில் வல்லவர்.

‘‘எல்லா நடிகைகளுமே ‘அந்த ரோல்ல நடிக்க ஆசை... இந்த ரோல் கனவு ரோல்’னு பேட்டி தர்றாங்க. உண்மைல அந்த கதாபாத்திரத்துக்கு அவங்க பொருத்தமானவங்களானு அவங்களுக்கே தெரியாது! இதை மனசுல வைச்சு ஒரு பிரபல பத்திரிகைக்கு ‘நம் நடிகைகளில் யாருக்கு மொட்டை போட்டால் அழகாக இருக்கும்?’னு கேள்வி அனுப்பியிருந்தேன். இதுக்கு பதிலா அப்ப இருந்த எல்லா நடிகைகளுக்கும் லே அவுட்ல மொட்டை போட்டு காட்டியிருந்தாங்க!

சமீபத்துல அமெரிக்க அதிபர் தேர்தல்ல ஒபாமா கட்சி தோத்துப் போச்சு. அதே சமயத்துல தமிழகத்துல ஓ.பி.எஸ்.ஸுக்கு திரும்பவும் லக் அடிச்சது. இந்த சரடை மையமா வைச்சு ‘ஒபாமாவையும் ஓ.பி.எஸ்ஸையும் ஒப்பிடுங்க’னு கேட்டிருந்தேன். இந்தக் கேள்விக்குப் பின்னாடி .பி.எஸ் எப்படி மறுபடியும் சி.எம் சீட்டுலேந்து வெளியேறுவார் என்கிற துணைக் கேள்வியும் மறைஞ்சிருக்கு!

இப்படி பல அர்த்தங்களுள்ள கேள்விகளைத்தான் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவேன்...’’ என்று சொல்லும் சத்தியநாராயணனிடம் ஒரு நாளைக்கு எத்தனை பத்திரிகைகள் படிப்பீர்கள்... எத்தனை வாசகர் கடிதம் எழுதுவீர்கள்... எவ்வளவு அஞ்சல் அட்டைகளை பயன்படுத்துகிறீர்கள்... எத்தனை நேரம் இதற்காக செல்வாகிறது... என்று கேட்டோம்.

இவர் பதில் சொல்வதற்கு முன் இவரது மனைவியும் பிள்ளைகளும் முந்திக் கொண்டார்கள்! ‘‘இவரோட ஒரு நாள் வாழ்க்கையை சொன்னா உங்களுக்கு எல்லாமே புரிஞ்சுடும்...’’ என்றபடி ஆரம்பித்தார் மனைவி ஜோதி. ‘‘காலைல எழுந்ததும் தன் ரூம்ல இருக்கிற பழைய ரேடியோவுல பாட்டு கேட்பார். அப்புறம் சின்னச் சின்ன வேலைகள் செஞ்சுட்டு ஆபீஸ் கிளம்புவார். மாலை வீடு திரும்பறப்ப அன்னிக்கி வந்த எல்லா பத்திரிகைகளையும் கொண்டு வருவார். ஒவ்வொண்ணா படிக்க ஆரம்பிப்பார்.

ரேடியோவுல பாட்டு ஒலிச்சுகிட்டே இருக்கும். சுருக்கமா சொல்லணும்னா பாட்டு கேட்கறதும் பத்திரிகை படிக்கறதும்தான் இவரோட வேலையே. மத்தபடி வீட்டுக்காக ஒரேயொரு வெங்காயம் கூட வாங்க போக மாட்டார்...’’ புன்னகையுடன் ஜோதி சொல்ல மகள் கீதா குறுக்கிட்டார். ‘‘வீட்டு வேலை செய்யறதுல அப்பாக்கு விருப்பமில்லைனு இதுக்கு அர்த்தமில்லை. இவருக்கு பிடிச்சது பத்திரிகைகள்  படிக்கறதும் வாசகர் கடிதம் எழுதறதும்.

அதனால விருப்பமானதையே செய்யட்டும்னு விட்டுட்டோம். ஒண்ணு தெரியுமா? இவரை மாதிரி ஓர் அப்பா கிடைக்க நாங்க கொடுத்து வைச்சிருக்கணும். எப்படி தனக்குப் பிடிச்சதை இவர் செய்யறாரோ... அப்படி எங்களுக்கு விருப்பமானதை நாங்க செய்ய முழு மனசோட அனுமதிக்கறார். அதனாலதான் என்னால எம்.காம் படிக்க முடிஞ்சது. அண்ணனும் நல்லா படிச்சுட்டு இப்ப கவர்மெண்ட் வேலைல  இருக்கார்...’’

மகள் பேசுவதை மலர்ச்சியுடன் கேட்ட சத்தியநாராயணன் நம் பக்கம் திரும்பினார். ‘‘எப்பவும் எதிர்மறையான விமர்சனங்களை நான் செய்ய மாட்டேன். அதே மாதிரி பாராட்ட வேண்டியதை பாராட்டவும் தயங்க மாட்டேன். கேள்வியும் நாசுக்காதான் கேட்பேன். யார் மனசையும் புண்படுத்த மாட்டேன். புது பத்திரிகை எப்ப வந்தாலும் உடனே அதை வாங்கி அவங்களுக்கு வாழ்த்து தெரிவிச்சு கடிதம் எழுதுவேன்.

பணத்தை போட்டு பத்திரிகை நடத்தறாங்க. விமர்சனம் என்கிற பெயர்ல அதுல ஏன் மண்ணள்ளிப் போடணும்? நல்ல விஷயங்களை தொடர்ச்சியா நாம பாராட்டி ஊக்கப்படுத்தறப்ப சம்பந்தப்பட்ட பத்திரிகைகளும் தொடர்ச்சியா நல்ல விஷயங்களையே பிரசுரிக்கும். இதை அனுபவபூர்வமா நான் பார்த்திருக்கேன்...’’ நிதானமாக அதே நேரம் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். 40 வருட அனுபவம் கொடுத்த தெளிவு வார்த்தைகளில் கொப்பளிக்கிறது.

அதனால்தான் ஒவ்வொரு பத்திரிகையின் வடிவம், குணத்துக்கு ஏற்ப கடிதங்கள் எழுத வேண்டும் என்கிறார். ‘‘‘பாபா’ படத்துக்கு பன்ச் டயலாக் போட்டியை ஒரு பத்திரிகை நடத்துச்சு. அதுல நானும் கலந்துகிட்டேன். தேர்வானவங்கள்ல நானும் ஒருத்தன். ‘பகவானைக் கும்பிடு... என்னை நம்பிடு!’ இதுதான் நான் எழுதினது. படத்துல இந்த டயலாக் இடம்பெறலை. ஆனா, இந்த டயலாக்கையும் வேறு சிலர் எழுதினதையும் ரசிச்சு பாராட்டி அந்த பத்திரிகை மூலமா எங்க ஒவ்வொருத்தருக்கும் ரஜினி ரூ.10 ஆயிரம் கொடுத்தார்!

தொடர்ந்து படிக்கறதுனால ஒவ்வொரு பத்திரிகையோட ஸ்டைலும் என்னென்னனு எனக்கு தெரியும். கடிதம் எழுதறப்ப அதே ஸ்டைல்ல எழுதுவேன். கவர்ச்சிப் பத்திரிகைல கவர்ச்சியான கேள்விகளைத்தான் கேட்பேன். இப்படி பல்ஸ் தெரிஞ்சு எழுதறதால என் கேள்விக்கு எல்லா பத்திரிகைகளும் பதில் சொல்றாங்க...’’ என்ற சத்தியநாராயணனிடம் இன்றைய வாசகர் கடிதம் பகுதி தொடர்பான குறையும் இருக்கிறது.

‘‘அப்ப எல்லா பத்திரிகைகளும் வாசகர் கடிதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. பாராட்டை மட்டுமில்ல... விமர்சனத்தையும் காது கொடுத்து கேட்டாங்க. தங்களோட தவறுகளையும் திருத்திக்கிட்டாங்க. இப்ப அப்படியில்ல. பல பத்திரிகைகள் வாசகர் கடிதம் பகுதியை வெளியிடறதே இல்ல. சொல்லப் போனா நாங்க முன் வைக்கிற விமர்சனங்களை காது கொடுத்து கேட்கறாங்களானே தெரியலை.

அதனாலயே தங்கள் பத்திரிகையோட வாசகர்கள் யார் யார்... எதை எதை அவங்க விரும்பிப் படிக்கிறாங்க... எதை விமர்சிக்கறாங்கனு தெரிஞ்சுக்காமயே இருக்காங்க. இதனால நஷ்டம் வாசகர்களுக்கு இல்ல... சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுக்குத்தான்...’’ தன் ஆற்றாமையை அக்கறையுடன் வெளிப்படுத்துகிறார் சத்தியநாராயணன், தவறு, ‘அயன்புரம்’ த.சத்தியநாராயணன்!

‘சத்தியநாராயணனுக்கு ஏன் இன்னும் கின்னஸ் கொடுக்கவில்லை?’ இது இயக்குநர் ஷங்கர் பத்திரிகை ஒன்றின் கேள்விக்கு அளித்த பதில். நமது வினாவும் அதேதான்! 

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்