பத்ம நாயகர்கள்!



-ச.அன்பரசு

சமீபத்தில் ‘பத்ம’ விருதுகளை இந்திய அரசு அறிவித்திருக்கிறது. பல தெரிந்த முகங்களுடன் தெரியாத பல பர்சனாலிட்டிஸும் இதில் இடம்பெற்றிருக்கிறார்கள். அறியப்படாத அவர்களை அறிவோமா?

* தரம்பள்ளி ராமையா

இப்போதைய தெலுங்கானாவின் ரெட்டிபள்ளி கிராமத்தில் 1937ல் பிறந்த இயற்கை திருமகன். செல்லமாக சேட்லா ராமையா என்றழைக்கப்படும் இவர், தெலுங்கானாவைச் சுற்றிலும் நட்டு வளர்த்த மரங்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் மேல்! நிழல், கனி, எரிபொருளுக்கு என பலவகை மரங்களை 50 ஆண்டுகளாக விதைத்து வருகிறார். சட்டைப் பையில் விதைகளுடன் சைக்கிளில் புறப்படுபவர், தரிசு நிலங்களில் எல்லாம் தூவுவாராம். அந்த வகையில் தெலுங்கானாவின் பசுமைப்பரப்பை 24%லிருந்து 33% ஆக உயர்த்தியது இவரது சாதனை.

* கிரிஷ் பரத்வாஜ்

கர்நாடகாவின் சுலியா கிராமத்தில் பிறந்த கிரிஷ், கற்ற மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்பு மூலம் விவசாய கருவிகளை முதலில் உருவாக்கிக் கொண்டிருந்தார். ஆரம்பூரில் உள்ள பாயஸ்வினி ஆற்றின் குறுக்கே கட்டிய தொங்கு பாலத்திலிருந்து கிரிஷின் சமூகப்பணி தொடங்குகிறது. 1975ம் ஆண்டு தொடங்கிய ஆயஸ் சில்பா நிறுவனத்தின் மூலம் பல்வேறு தொலைதூர கிராமங்களை பாலங்கள் மூலம் நகரங்களோடு இணைக்கத் தொடங்கினார் இந்த ‘பால’ மனிதன்! அந்த வகையில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில்  ஆற்றுப்படுகைகளின் இடையேயுள்ள கிராமங்களை நகரங்களோடு இணைக்க இதுவரை 127 பாலங்களைக் கட்டியிருக்கிறார்.

* கரிமுல் ஹக்

மேற்கு வங்கத்தின் ஜல்பய்குரி மாவட்டத்திலுள்ள தலாபரி கிராமத்தின் ‘ஆம்புலன்ஸ் தாதா’ கரிமுல் ஹக்கின் வயது 52. இவரது அர்ப்பணிப்பான 10 ஆண்டுப்பணிக்கான பரிசே மரியாதைக்குரிய பத்மஸ்ரீ விருது. தேயிலைத் தோட்டத்தில் 5 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரியும் கரிமுல், அதில் 25 சதவிகிதத்தை நோயாளிகளுக்காக செலவழிக்கிறார். அரசு பஸ்கள் கூட இல்லாத இக்கிராமத்தில் பருவகாலங்களில் நோயாளிகளைக் காப்பது கரிமுல்லின் பைக் ஆம்புலன்ஸ்தான்.

* அனுராதா கொய்ராலா

நேபாளத்தைச் சேர்ந்த அனுராதா கொய்ராலா, 1949 ஏப்ரல் 14 அன்று பிறந்தவர். பாலியல் தொழிலுக்காக பெண்கள் கடத்தப்படுவதை தடுக்கும் மைதி நேபாள் இயக்கத்தின் களப்பணியாளர். விபச்சாரத்திலிருந்து 27 ஆயிரம் பெண்களை (1993-2012) மீட்டுள்ளார். இவரது பணிகளைப் பாராட்டி 2010ல் சிஎன்என் ஹீரோ விருது அளிக்கப்பட்டுள்ளது.

* சுக்ரி பொம்மா கௌடா

கர்நாடக மாநிலத்திலுள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் வசிக்கும் ஹலக்கி ஒக்கலிக பழங்குடி பெண்ணான சுக்ரி பொம்மாவுக்கு வயது 78. எழுத்து வடிவமற்ற தம் கலாசாரத்தை காற்றெங்கும் பாடி அடுத்த தலைமுறைக்கு கடத்திவரும் நாட்டுப்புற பாடகி. 16 வயதில் மணமுடித்து கணவரை இழந்து விவசாய வேலைகளில் ஈடுபட்ட சுக்ரிக்கு இப்பாடல்களே ஆறுதலும் தேறுதலும். காதல் டூ கல்யாணம், மதுவிற்கு எதிரான போராட்டம் என அனைத்திலும் இவரது பாடல்கள் அரவணைக்கின்ற தாயின் கரங்கள்!