நெருப்பா நிக்கிறவன்... நினைச்சதை முடிக்கிறவன்!
-நா. கதிர்வேலன்
இது மொட்ட சிவா கெட்ட சிவா மாஸ்
‘‘சன் டிவியில ‘மொட்ட சிவா கெட்ட சிவா’னு பரபரப்பா அல்லு கிளப்பின வசனம். இதுவரைக்கும் ஏழெட்டு போலீஸ் ஆபீஸர்ஸ் தமிழ் சினிமால மறக்க முடியாமல் இன்னும் நினைவில் நிற்கிறாங்க. ‘தங்கப்பதக்கம்’ சிவாஜி, ‘மூன்று முகம்’ ரஜினி, ‘சத்ரியன்’ விஜயகாந்த், ‘வால்டர் வெற்றிவேல்’ சத்யராஜ், ‘காக்க காக்க’ சூர்யா, ‘சாமி’ விக்ரம் இவர்கள் எல்லாரும் இன்னிக்கும் ஹாட் ஃபேவரிட்ஸ். அந்த வரிசையில் நிச்சயம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ லாரன்ஸும் வந்து சேருவார்.
இந்தப் படம் அவருக்கு ராயல் சல்யூட்! அவருக்கு முதலில் இந்த கேரக்டர் செய்ய முடியுமான்னு சந்தேகம் இருந்தது. அவருடைய கெட்அப் மாற்றம், ஆர்ம்ஸ இறுக்கி உடம்பை கொண்டு வந்தது, மொட்டை எல்லாம் சேர்ந்து ஒரு அசால்ட் முரட்டு போலீஸ்க்கு லாரன்ஸ் சார் பக்கா! இப்ப டிரைலர் வேற வந்து அள்ளுது. ரஜினி, விஜய் எல்லாம் மாஸ்டர்கிட்டே பேசி, ‘பிரமாதம், ரொம்ப நல்லாயிருக்கு. பார்க்க ஆசையாயிருக்கு’னு சொல்லியிருக்காங்க. எந்தவித சந்தேகமும் இல்லாமல் வெற்றிக்கான நாளை எதிர்பார்த்து காத்திருக்கேன்...’’ அழுத்தம்திருத்தமாகப் பேசுகிறார் இயக்குநர் சாய்ரமணி.
டிரைலர், லாரன்ஸ் கெட்அப் எல்லாமே அமளிதுமளியா இருக்கு! இருக்கும். கொஞ்சம் கரெப்ட் போலீஸ்தான். நெருப்பா நிக்கிறவன்... நினைச்சதை முடிக்கிறவன்... தனக்கான மனிதர்களை அள்ளி அணைச்சு தூக்கிச் சுமக்கிற மனுஷன். அப்படியொரு பிரமாதமான கேரக்டர் அவருக்கு. சிவா எப்படிப்பட்டவன்னு அவ்வளவு சுலபமா நீங்க நிர்ணயிக்க முடியாது. ‘இது சரி இது தப்புன்னு உலகம் எதை எதையோ சொல்லும். எதைப் பத்தியும் கவலைப்படாதே! உனக்கு எது சரின்னு தோணுதோ, அதைச் செய்’னு வாழ்கிறவன் சிவா. ஒரு ரோஜா செடியா மொட்டு விட ஆரம்பிச்ச கதை, லாரன்ஸ் மாஸ்டரோட அதிக அக்கறையால இப்ப ஒரு பூந்தோட்டம் மாதிரி மலர்ந்து நிக்குது.
இவ்வளவு போலீஸ் படம் வந்தாச்சு. இதில் என்னடா ஸ்பெஷல்னு உங்களுக்கு மனசு ஓரத்துல தோணியிருக்கலாம். ஆனால், ஆரம்பிச்ச அஞ்சு நிமிஷத்தில படம் உங்களை உள்ளே இழுத்துப் போட்டுடும். யூனிஃபார்ம், ஸ்டைல், ஆட்டம் பாட்டம் இதையெல்லாம் தாண்டி சிவா பத்தின தனிக் கதை ஒண்ணு இருக்கு. இது அஜித், விஜய், விக்ரம், சூர்யா இவங்களுக்குன்னு உள்ள கதை. ஆனால், இதில் லாரன்ஸ் அளவெடுத்தது மாதிரி பொருந்தியதுதான் படு மாஸ். லாரன்ஸ் சாரை இதுவரைக்கும் மாஸ்டர்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்தோம். இனி ஃபைட் மாஸ்டரா உருவெடுப்பார். அப்படி பின்னியிருக்கிறார். இனி அவர் மாஸ் ஹீரோ. குறிச்சுக்கங்க பிரதர்!
நிக்கி கல்ராணி, ராய் லட்சுமின்னு கிளாமர் பின்னுதே! இருக்கட்டும். சந்தோஷமா படம் பார்த்திட்டு திரும்பிப் போகட்டும். ஹோட்டலுக்கு போனா ‘என்னய்யா சாப்பாடு’ன்னு திட்டிட்டு காசு கொடுக்காம கோவிச்சிட்டு வரலாம். துணி பிடிக்கலைன்னா ஜவுளிக்கடையில வேற துணி மாத்திக்கிடலாம். ஆனால், தியேட்டர்ல போய் உட்கார்ந்திட்டு படம் பிடிக்கலைன்னா, திருப்பி காசை கொடுக்க மாட்டாங்க. அப்படிப்பட்ட இடத்தில ஜனங்களை சந்தோஷப்படுத்துவதுதான் என் வேலை. அதை 100% இதில் செய்திருக்கேன்.
நிக்கி கல்ராணி இதுவரைக்கும் எப்படின்னு எனக்குத் தெரியாது. இதில் வரும்போதே அதிகமா டேட்ஸ் வாங்கினோம். இவ்வளவு நாளான்னு கேட்டாங்க. டான்ஸ் ரிகர்சலுக்கும் சேர்த்துன்னு சொன்னோம். மாஸ்டரோட ஆடுறது வேடிக்கையில்லை. ஓர் அசைவில ஆயிரம் வித்தை காட்டிட்டு அசால்டா ஒண்ணும் தெரியாத புள்ளை மாதிரி நிப்பார். இதில அவங்க முதல் தடவையாக ஈடு கொடுத்து ஆடியிருக்காங்க. முன்னணி ஹீரோயினாக இன்னும் மேல வர்றதுக்கு நிறைய இடங்கள் இருக்கு.
ராய் லட்சுமி ஒரு பாட்டுக்கு ஆடியிருக்காங்க. அந்த உயரத்துக்கு, இடுப்பு சுளுக்கு விழுகிற அளவுக்கு ஆடியிருக்காங்க. அந்தப் பாட்டுக்கு தியேட்டரே ஆடும். பாட்டு அப்படி... ஆட்டம் அப்படி. அதோட தம்பி ராமைய்யா, சதீஷ், சுகன்யா, மனோபாலா, கோவை சரளான்னு நடிகர்கள் நிறைய. இதில் மாஸ்டருக்கு எதிரா நேர்மையான போலீஸா சத்யராஜ் வருகிறார். இரண்டு பேருக்குமான மோதலில், உள்ளே நுழைந்து வேட்டையாடுகிற வில்லன்... அதை பின்னாடி உணர்கிற சிவா எப்படி வேற திசைக்கு திரும்புறார்ங்கிறது தான் அதிரடி பரபரப்பு நிமிடங்கள்.
படத்தில் அஷுதோஷ் ராணாதான் வில்லன்ங்கிறாங்க... அருமையான மனுஷன். தங்கம். அவருடைய அறிமுகக் காட்சியை எடுத்திட்டு இருந்தேன். முகம் மட்டும் ‘டல்’லா இருந்தது. அன்னிக்குப் பார்த்து செட்ல 700 பேருக்கு மேலே இருக்கும். மாஸ் சீன். ஆக் ஷன்னு சொன்னதும் பின்றவர் உட்காரும்போது டல்லாகிவிடுகிறார். பார்த்தா அவரோட மானேஜர் என் காதில் ‘அவங்க அப்பா இறந்துட்டார்’னு செய்தி சொல்றார். ‘என்ன சார் புறப்படுங்க’னு நான் பதறினால், ‘இத்தனை பேர் இருக்கீங்க. ஊரிலிருந்து புறப்படும்போது அப்பாகிட்டே லாரன்ஸ் பட ஷூட்டிங் போறேன். இரண்டு நாள் இருந்திட்டு போகவா’னு கேட்டேன். ‘உடனே போ, நான் நல்லபடியா இருக்கேன்.
போய் நடிச்சிட்டு வா’னு ெசான்னார். அப்பா சொன்னதை கேட்கிறதுன்னு முடிவு எடுத்திட்டு இப்ப இருக்கேன். ‘இன்னிக்கு நடிச்சு கொடுத்திட்டு நாளைக்குப் போறேன்’னு சொன்னார். அப்படியொரு தொழில் பக்தி. எனக்கு சிலிர்த்துப் போச்சு. அவ்வளவு துயரத்தையும் மென்னு முழுங்கிட்டு முகத்தில் அவர் காட்டின நடிப்பு... அடடா! ‘செட்’டுக்கு வந்து நீங்க பார்த்திருக்கணும்.
எம்ஜிஆர் கிட்டே கால்ஷீட் கேட்டு போனால், முதலில் வில்லன் யாருன்னு கேட்டுட்டு, காமெடியன் யாருப்பான்னு கேட்ட பிறகுதான் கால்ஷீட் தருவாராம். அவருக்குத் தெரியாத கமர்ஷியலா, சினிமாவா... அதனால் படத்திற்கு வில்லனும் ஹீரோவுக்கு போட்டியா வேணும். அப்படி இருக்கார் ராணா. ஜெயசித்ரா மகன் அம்ரிஷ் 5 பாடல்களில் விளையாடியிருக்கார்.
மாஸ்டரை வைச்சுக்கிட்டு எப்படி பாட்டு வேணும்னு பார்த்துக்குங்க... அப்படி வந்திருக்கு. அருமையான கலைஞன் அம்ரிஷ். இசையை ஒரு ரசிகன் மாதிரி உணர்வுபூர்வமாக செய்யணும்னு ஆசைப்படுகிறார். அவரோட வெற்றிக்கும் அந்த உணர்வுதான் காரணம். சர்வேஷ் முராரிதான் கேமரா. ராஜமௌலிக்கு படம் பண்ணறவர். நான்தான் இங்க கூட்டிட்டு வந்தேன்.
அழகழகா ஃப்ரேம் வச்சிருக்கிறார். ‘சிறுத்தை’ ரமேஷ் ஃபைட் எல்லாம் அமளிதுமளிதான். கடைசி வரைக்கும் புன்னகையைக் கைவிடாத ஐயா ‘சூப்பர் குட்’ ஆர்.பி.செளத்ரிக்கு என் நன்றி. ஒரு மாஸ் ஆக்க்ஷன், இருக்கிற நிமிஷமெல்லாம் சீட் நுனியில் வைத்திருக்கிற விறுவிறுப்பை பார்க்க தியேட்டருக்கு நீங்க நம்பி வரலாம்!
|