பட்டையை கிளப்பும் கல்லூரி மாணவிகளின் FM
-திலீபன் புகழ்
பரபரப்பான அண்ணா சாலையில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வாகனத்தில் விரைந்து செல்பவர்கள் மொபைலில் ரேடியோவை ஆன் செய்யும்போது ‘நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது ‘107.8’ எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி சமுதாய வானொலி, ‘நமது வானொலி. நமது சமுதாயம்.
நமது பொறுப்பு...’’ என்று மென்மையான குரலில் மாணவிகள் உங்கள் காதுகளை இனிக்கச் செய்வார்கள். மட்டுமல்ல. ஆகச் சிறந்த தகவல்களுடன் பல சமூக கருத்துகளும் காற்றில் இதமாக வரும். ‘‘இது மாதிரி சமுதாய வானொலிக்கு 2005ல முதன் முதல்ல வைஷ்ணவா கல்லூரிக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் மட்டுமே தந்தாங்க. அந்த வகைல நாங்கதான் சீனியர். இது எங்களுக்கு 12வது ஆண்டு. போன வருஷம் சிறப்பாகச் செயல்பட்டதுக்குப் பல விருதுகளையும் வாங்கியிருக்கோம்...’’ உற்சாகத்துடன் பேசிவிட்டு மாணவிகளுக்கு வழிவிட்டார் பேராசிரியர் காயத்ரி.
‘‘எங்க காலேஜுக்கு சீஃப் கெஸ்ட்டா வர்ற எல்லாரையும் எஃப்.எம்ல பேச வச்சிடுவோம். சினிமா பாடல், கமர்ஷியல் விளம்பரம்னு எதுவும் இல்லை. வர்ற பிரபலங்கள் கிட்ட வழக்கமான கேள்விகளைக் கேட்கவே மாட்டோம். சிவகார்த்திகேயன் வந்தப்பகூட தன்னோட வாழ்க்கைல நடந்த, மனசுக்கு நெருக்கமான விஷயங்களைத்தான் பகிர்ந்துகிட்டார்...’’ என்று பரவசப்பட்ட ஜர்னலிசம் மாணவி கோபிகாவை கலாய்த்தவாறே பேசத் தொடங்கினார் பிரியா.
‘‘நுங்கம்பாக்கத்துல இருக்கிற எல்லாரும் எங்க லூட்டியைக் கேட்டுத்தான் ஆகணும். குறிப்பா ஜெமினி பிரிட்ஜ் சிக்னல்ல நிக்கறவங்க கிளியரா கேட்பாங்க. நாங்க எதார்த்தமா பேசறதைப் பாத்துட்டு பலபேர் காலேஜ் பக்கமா வந்து எங்களை பாராட்டிட்டு போயிருக்காங்க. பாராட்டுங்கிறது இப்ப கலாய்க்கிறதுக்குச் சமம்! அவங்க என்ன வார்த்தையெல்லாம் சொல்லி பாராட்டுனாங்களோ அதையே சொல்லி லைவ்ல பேசறப்ப நாங்க ஒருத்தரை ஒருத்தர் கலாய்ச்சுப்போம்...’’ என்கிற பிரியா பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
‘‘சென்னைல வெள்ளம் வந்தப்ப எங்க வானொலி மூலமா எவ்வளவு உதவ முடியுமோ அவ்வளவு உதவினோம். எல்லாப் பகுதிலயும் எங்க ஸ்டூடண்ட்ஸ் இருந்ததால எந்த ஏரியாவுல என்ன பிரச்னைனு தெளிவா சொன்னோம். இது பலருக்கு உதவியா இருந்தது. உணவு, மருந்து மாதிரியான அத்தியாவசிய பொருட்கள் தேவையான இடங்களுக்கு போய்ச் சேர மெனக்கெட்டோம்.
பொழுது போக்கு அம்சங்களான சினிமாவோ பாடல்களோ எங்க எஃப்.எம்.ல கிடையாது. ஆனாலும் தங்களோட திறமையை ஸ்டூடண்ட்ஸ் வெளிப்படுத்தறாங்க. இந்த ஏரியாவில வசிக்கிற ஏழை மக்கள் குடியிருப்புகளுக்கு வங்கி அதிகாரிகளை வரவைச்சு தொழில் செய்ய கடன் வாங்கிக் கொடுத்திருக்கோம். கார்ப்பரேஷன் பள்ளி மாணவர்கள் எங்களோட ரெகுலர் நேயர்கள். அவங்களுக்கு சம்மர் கேம்ப் நடத்தறோம். பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், உடல் நலம் சார்ந்த தகவல்கள்... இதையெல்லாம் சுவாரஸ்யமா சொல்றோம்.
பார்வையற்ற அதே நேரம் திறமையான மாற்றுத் திறனாளிகளை கூட்டிட்டு வந்து நிகழ்ச்சிகள் நடத்தறோம்...’’ என பட்டியலிடுகிறார் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் சிம்ரன். ‘‘போன வருஷம் ‘குடியை வெல்வோம்’னு ஒரு புரோகிராம் செய்தோம். இதுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதோட இந்திய அளவிலான சிறந்த சமுதாய வானொலிக்கான தேசிய விருதையும் இந்த நிகழ்ச்சி பெற்றுத் தந்தது.
எங்க கல்லூரில படிக்கிற எல்லா மாணவிகளும் ஒரு தடவையாவது இந்த வானொலில பேசியாகணும். அது பாடத்துலயும் இருக்கு. இப்படி செய்யறதால அவங்க கூச்சம் விலகுது. பின்னாடி அவங்க வேலைக்குப் போறப்ப இது உதவியாவும் இருக்கு...’’ என்கிறார் சமுதாய வானொலி பொறுப்பாளரான டாக்டர் அனுரேகா.
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|