செவியை சுற்றிய பாம்பு!



-த.சக்திவேல்

அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது அந்த மருத்துவமனை. கடந்த வாரத்தின் ஒரு மாலைப்பொழுதில் மருத்துவமனையின் நுழைவாயிலில் ஆஸ்லே க்ளேவ் என்ற இளம் பெண் பதறியடித்து ஓடி வந்தார். அங்கிருந்த அனைவரும் அவரது காது மடலை பயத்துடன் உற்றுப் பார்த்தார்கள். ஏனெனில் அமெரிக்காவில் இதற்கு முன் இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை.

ஆஸ்லே ஒரு மாடல். வித விதமான காதணிகளை அணிவதில் தீராத ஆர்வம். ஸோ, தனது செவி மடலில் குண்டூசி முதல் ஐம்பது பைசா வரை நுழையக்கூடிய அளவுக்கு பல துளைகளைக் குத்தியிருக்கிறார். போலவே வீட்டில் விஷம் இல்லாத ஒரு மலைப்பாம்புக் குட்டியை ஆசையோடு வளர்த்து வருகிறார். அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக அந்த செல்லக்குட்டி ஆஸ்லேவின் வலது காது மடலில் இருக்கும் பெரிய துளைக்குள் நுழைந்து விட்டது.

எடுக்க முடியவில்லை. அதற்காகத்தான் மருத்துவமனைக்கு ஆஸ்லே வந்ததே! பல போராட்டங்களுக்குப் பிறகு ஒருவழியாக பாம்பை வெளியே எடுத்துவிட்டார்கள். இப்பொழுதெல்லாம் அவர் தன் செல்லக் குட்டியை நெருங்கி கொஞ்சுவதில்லை!