ஊஞ்சல் தேநீர்
யுகபாரதி - 11
அவர் அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்துவாரா... என்னும் தயக்கம், என்னுள்பட எல்லோருக்கும் இருந்தது. தேசிய விருது பெறத்தக்க ஒரு நடிகர்மீது ஆரம்பத்தில் இப்படியொரு தயக்கம் இருந்தது என்பது இன்றைக்கு நகைச்சுவையாகப் பார்க்கப்படலாம். ஆனால், அதுதான் உண்மை. நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளில் அவ்வப்போது துண்டு பாத்திரங்களில் தலைகாட்டிக் கொண்டிருந்த ஒருவர், படம் நெடுக வரக்கூடிய பாத்திரத்திற்குப் பொருந்துவார் என எதை வைத்துச் சொல்லமுடியும்?
‘மைனா’ திரைப்படத்தால் நிகழ்ந்த பல ஆச்சர்யங்களில் ஒன்றுதான், தம்பி ராமையாவும். அதுவரை அவருக்குள்ளிருந்த நடிகன் வெளிப்பட வாய்ப்பில்லாமல் இருந்தது. ‘மனுநீதி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய திரைப்படங்களின் இயக்குநராக மட்டுமே அறியப்பட்டிருந்த தம்பி ராமையா, ‘மைனா’வின் பெரு வெற்றிக்குப் பின் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.
‘மைனா’ திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமல்ல. பட்ஜெட்டே இல்லாமல் எடுக்கப்பட்ட படம். அதாவது, பணமே இல்லாமல் எடுக்கப்பட்ட படமென்றும் சொல்லலாம். காலம் தனக்கு வழங்கிய ஐந்து வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்த விரும்பிய பிரபு சாலமன், ஐந்து முறையும் வெற்றியை நூலிழையில் தவற விட்டிருந்தார். ஆக்கத்திலும் தொழில்நுட்பத்திலும் மிகச்சிறப்பாக இருந்த அவருடைய திரைப்படங்கள் ஏன் ஐந்துமுறையும் பெரிய கவனத்தைப் பெறவில்லை என்பதை போகிறபோக்கில் புரிந்துகொள்ள இயலாது.
ஏதோ ஒருகுறை. அந்தக் குறையை எப்படி நிவர்த்தி செய்வது என அவருமே அறிந்திருக்கவில்லை. கலைப்படைப்புகளிலுள்ள சுவாரஸ்யமே அதுதான். படைத்தவனை பார்வையாளனும், பார்வையாளனைப் படைப்பாளனும் நேர்க்கோட்டில் சந்தித்து திருப்தியுறுவது அவ்வளவு எளிதல்ல. பிரபு சாலமன் உழைக்கத் தயங்காதவர். எதையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளக் கூடியவரும்கூட. ஒரு தோல்வியில் கிடைக்கும் பாடங்களை அடுத்த படைப்புகளின் வாயிலாக சரிசெய்ய எண்ணுபவர்.
நானறிந்தவரையில் அவர் சோர்ந்து சுருங்கிய சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்பதால் தடைகளைக் கடந்துவிடுவதில் அவருக்குச் சிரமமில்லை. ‘கொக்கி’ திரைப்படத்தில் அவருக்குக் கிடைத்த படிப்பினையை ‘லீ’ மற்றும் ‘லாடம்’ திரைப்படங்களில் பயன்படுத்தினார். ஆனாலும், தோல்விதான். என்ன செய்வதென்றே புரியாத நிலையில், சொந்தப்படம் எடுக்கப்போவதாக அவர் எங்களிடம் பகிர்ந்துகொண்டபோது நானும் இமானும் மெளனத்தை மட்டுமே பதிலாகத் தந்தோம்.
தன்னை நம்பக்கூடிய ஒருவர், மெளனங்களை சம்மதம் என்றே அர்த்தப்படுத்திக் கொள்வார். பிரபு சாலமனும் அவ்விதமே அர்த்தப்படுத்திக்கொண்டு ‘மைனா’ திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். கதை முழுமையடையவில்லை. என்றாலும், கதையின் போக்கு ஓரளவு பிடிபட்டிருந்ததால் நடிகர்களை தேர்வு செய்யும் பணி ஆரம்பமானது. கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் நான்கு. சுருளி, மைனா, சேது, ராமையா.
இந்த நால்வருக்குள் மட்டுமே சுழலும் கதை என்பதால் இந்தப் பாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்கள் அனுபவம்மிக்க நடிகர்களாக இருந்தால் தேவலாம் என்று தோன்றியது. அனுபவம்மிக்க நடிகர்கள் என்றால் அவர்கள் கேட்கக்கூடிய சம்பளத்தை தரவேண்டுமே... அதற்கு வழியில்லை. ஆசை ஆகாயத்தை நோக்கியும் எதார்த்தம் தரைக்குக் கீழேயும் இருக்கும்பட்சத்தில் அதை சாமர்த்தியமாக சமாளிப்பதில்தான் வாழ்க்கை இருக்கிறது. ‘நாடோடிகளி’ல் நடித்திருந்த பரணியும் ‘சிந்து சமவெளி’யில் ஒப்பந்தமாகியிருந்த அமலா பாலும் பிரதான பாத்திரங்களில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இதில், பரணியின் போதாத காலம். அவரால் மைனாவின் நாயகனாக மாற முடியாமல் போனது. ரமேஷ் என்ற இயற்பெயரையுடைய விதார்த் அகஸ்மாத்தாக அந்த வாய்ப்பை பெற்றுக்கொண்டார். ராமையா கதாபாத்திரத்திற்கு ஆதவன் அழைக்கப்பட்டிருந்தார். ஏதேதோ காரணங்களால் அவரும் விலகிக் கொள்ள, அண்ணன் தம்பி ராமையா வந்து சேர்ந்தார். ஐந்துமுறை எண்ணியிருந்த இலக்கை எட்டமுடியாதபோதும் அதே உற்சாகத்தோடு அடுத்த முயற்சியை ஒருவர் தொடங்க முடியுமா?
முடியும் என்ற நம்பிக்கையில் பிரபு சாலமன், ‘மைனா’ திரைப்படத்தின் கதை குறித்தும் பாடல் குறித்தும் பேச அலுவலகத்திற்கு அழைத்திருந்தார். அலுவலகம் அமைந்திருந்த இடம் கண்ணம்மாபேட்டை. கண்ணம்மாபேட்டை என்றதும் சுடுகாடு நினைவுக்கு வருவதால் அலுவலகப் பையன் தொலைபேசியில் அலுவலக முகவரியைக் கேட்பவர்க்கு, தி.நகருக்குப் பக்கத்தில் என்றோ நந்தனத்திற்கு அருகில் என்றோ சொல்லிக் கொண்டிருப்பான்.
ஷாலோம் ஸ்டுடியோஸ் என்று வெள்ளைக் காகிதத்தில் பென்சிலால் கிறுக்கி, கதவில் ஒட்டியிருந்தார்கள். அலுவலகம் விலாசமாயிருந்தது. அங்கேயே சமைத்துக் கொள்ளவும் உதவி இயக்குநர்கள் தங்கிக் கொள்ளவும் ஏற்பாடாகியிருந்தன. பிரபு சாலமனின் பால்ய கால நண்பர் ஜான்மேக்ஸ் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றிருந்தார். நிர்வாகம் என்றால் வேறு ஒன்றும் இல்லை. எங்கேயாவது பணத்தைப் புரட்டிவந்து அலுவலக வாடகையைக் கொடுக்கும் பொறுப்பு என்று வைத்துக் கொள்ளலாம்.
முதல்முறை அலுவலகத்திற்கு வந்துவிட்டுப் போகிறவர்கள் நிச்சயம் இந்தப்படம் எடுக்கப்படாது என்று சொல்லும்விதமாக சூழல் இருந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் தம்பி ராமையாவை பிரபு சாலமன் எனக்கு அறிமுகப்படுத்தினார். அதற்குமுன் அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நேரடி அறிமுகம் இல்லை என்றாலும் அவ்வப்போது அவருடைய முகம் பரிச்சயப்பட்டிருந்தது. சட்டென்று இதயத்தைக் கவ்விக் கொள்ளும் அவருடைய பேச்சும் உடல்மொழியும் யாரையும் முதல் சந்திப்பிலேயே கவரக் கூடியன.
ராமையா பாத்திரத்திற்கு இவரா? என்று எனக்குள்ளிருந்த தயக்கத்தை ஒரு மணிநேர உரையாடலில் இவரைத் தவிர வேறு யாரும் அந்தப் பாத்திரத்திற்கு பொருந்தமாட்டார் எனச் சொல்லவைத்தார். ஒருவிதத்தில் எங்களுக்கு இருந்த தயக்கம், அண்ணன் ராமையாவுக்கும் இருந்ததன் விளைவே அவர் அப்பாத்திரத்தை சிறப்பாகச் செய்ய முனைந்தார் எனவும் கொள்ளலாம். தன்னை நிலைநிறுத்த காலம் அவருக்கு வழங்கிய எத்தனையோ சந்தர்ப்பங்களில் ‘மைனா’ முக்கியமானது; முதன்மையானது.
தீர்க்கமாக இதுதான், இப்படித்தான் நானென்று உலகிற்கு தன்னுடைய முகத்தைக்காட்டி, அந்த முகத்தை பிரகாசப்படுத்துவது இயல்பு. ஆனால், அண்ணன் தம்பி ராமையாவுக்கோ இதற்குமுன் நீங்கள் பார்த்த முகம் என்னுடையதில்லை என சொல்லவேண்டியிருந்தது. தன்னால் வரையப்பட்ட ஓவியத்தின் கோடுகளை, தானே அழித்து, புதிய கோடுகளைப் போடவேண்டிய கட்டாயம் அவருக்கு நேர்ந்தது. சினிமா என்னும் பெருங்கோட்டையை வசப்படுத்த அவர் நிகழ்த்திய தாக்குதலில் எத்தனையோ முறை அவரே காயப்பட்டு கீழே சரிந்த கதைகள் ஒன்றிரண்டு அல்ல.
காரைக்குடியை அடுத்த சிற்றூரில் பிறந்த ஒருவர் தேசிய அளவில் புகழப்பட, பாதைகளை பருவங்களை மட்டும் கடந்தால் போதாது. அதற்கு மேலேயும் கடக்க வேண்டிய காரியங்கள் அநேகமுண்டு. ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் போன்றோர் தேசிய விருது பெறுகிறபோது கிடைக்கிற ஊடக கைதட்டும் கவனமும் தம்பி ராமையா, அப்புக்குட்டி, சமுத்திரக்கனி போன்றோர்க்குக் கிடைப்பதில்லை.
உண்மையில், முதல் வரிசையைவிட இரண்டாவது வரிசை நடிகர்களுக்கே கைதட்டல்களும் கெளரவங்களும் அவசியம். மிகச்சிறிய புள்ளியிலிருந்து தங்கள் கோலத்தை ஆரம்பித்த இவர்கள் வந்து சேர்ந்திருக்கும் இடம் பாராட்டுக்குரியது. தம்பி ராமையாவை பிரபு சாலமன் அறிமுகம் செய்து வைத்தபோது நானுமே கூட அவருடைய தகுதி குறித்து குறைத்தே மதிப்பிட்டிருந்தேன். அந்த மதிப்பு அவருடனான உரையாடலை தொடங்கும்வரைதான்.
சினிமாவில் பாட்டெழுதவும் இசையமைக்கவும் பிரியப்பட்டே சென்னைக்கு வந்ததாக அவர் தொடங்கிய அந்த உரையாடலில் அதுவரை அவர் பட்டுவந்த பாடுகளைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். எழும்பூரில் புகழ்பெற்றிருந்த ஒரு ஹோட்டலில் மேலாளராக அவருடைய வாழ்க்கை தொடங்கியிருக்கிறது. இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாக கடமையாற்றவேண்டிய பொறுப்பிருந்தும் அது பற்றியெல்லாம் அக்கறையில்லாமல் அவர் சினிமாவிற்கு முயற்சிக்கவில்லை.
எந்த நேரத்திலும் குடும்பத்தைத் தவிக்கவிட்டுவிட்டு சினிமா வாய்ப்புகளைத் தேடக்கூடாது என்றே எண்ணியிருக்கிறார். ஒரு பக்கம் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டே சினிமாவையும் சிநேகித்திருக்கிறார். பல உதவி இயக்குநர்கள் அந்தக் காலத்தில் அவருக்கு உதவுவதாக வாக்களித்து ஏமாற்றியிருக்கிறார்கள். ஏமாற்று என்ற சொல் கடுமையாயிருக்கலாம். ஆனால், அண்ணன் ராமையா அதை சிரித்துபடியே விவரிக்கையில் அவர் கண்கள் கசிந்ததை என்னால் கவனிக்க முடிந்தது.
எல்லோரையும் சிரிக்க வைத்து சந்தோசத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அவர் உடைந்தழுத பொழுதுகள் எண்ணிலடங்காதவை. ‘மைனா’ அவர் வாழ்வு முற்றிலும் மாறுவதற்கு உதவியிருக்கிறது. அதேபோல ‘மைனா’வும் அவர் வருகைக்குப் பின்னர் அடைந்த நல்ல மாற்றங்களை நான் அறிவேன். அதுவரை அந்தக் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு அடர்த்தி சேர்க்கப்படவில்லை. மேலெழுந்தவாரியாக ஒரு காவலர் என்பதாகவே இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயங்கள் தனித்துத் தெரிய அவரும் ஒரு காரணம்.
அவரிடம் பெறத்தக்க அம்சங்கள் எவையவை உள்ளனவோ அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள பிரபுசாலமன் விரும்பினார். இயல்பாக ஒருவருக்கு ஒருவர் கதைபற்றியும் கதாபாத்திரங்கள் பற்றியும் விவாதித்துக் கொண்டோம். பொருளாதார சிக்கலால் அவ்வப்போது படத்தைத் தொடர முடியாமல் இடைவெளிகள் ஏற்பட்டதுகூட, படம் செழுமையாக வெளிவர உதவின. கதை நால்வரைச் சுற்றி. அந்த நால்வரில் அண்ணன் ராமையா மட்டுமே மூத்தவர்.
‘மைனா’ திரைப்படத்தைப் பொறுத்தவரை அது வளர வளர அருகிருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. போலவே அண்ணன், தம்பி ராமையாவின் வளர்ச்சியும். அந்தக் காலத்தில் ‘மைனா’ படக்குழுவினர் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வேட்கைகள் இருந்தன. அப்படத்தில் பணிபுரிந்த அனைவருமே போதிய வெளிச்சமில்லாமல் திரைத்துறையில் இயங்கிக் கொண்டிருந்தோம். குறிப்பாக, நானும் இமானும் பத்து வருடங்களுக்கு மேல் அசராமல் பணியாற்றி வந்தாலும் தனி அடையாளத்தோடு காணப்படவில்லை.
வெற்றிப் பாடல்களை இருவருமே தந்திருக்கிறோம். என்றாலும், குறிப்பிட்டு எங்கள் பெயரைகளை யாருமே சொல்லவில்லை. எல்லோருமே வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்தோம். வெற்றி என்பது சொல்லிக்கொண்டு வருவதில்லை. எங்களுக்கோ சொல்லிக் கொண்டு வந்தாலும் அது வெற்றியாக அமையவில்லை. ஒளிப்பதிவாளர் சுகுமார், கலை இயக்குநர் வைரபாலன், படத்தொகுப்பாளர் எல்.வி.கே.தாஸ், தம்பி ராமையா, விதார்த் என ஒவ்வொருவரும் ‘மைனா’வை இதயக்கூட்டில் அடைகாக்க ஆரம்பித்தோம்.
கதையில் செய்திருக்கும் மாற்றங்களை அவ்வப்போது பிரபுசாலமன் எங்களுடன் பகிர்ந்து விவாதங்களை ஏற்றுக்கொள்வார். அப்படத்தின் வெற்றிக்காக உழைத்தவர்களில் உணவு பரிமாறிய பையனும் சேர்ந்திருக்கிறான் என்பதுதான் செய்தி. ஒரு படைப்பாளன், காதுகளை திறந்து வைக்கத் துணியும் அந்தக் கணத்திலிருந்து வெற்றியின் வாசல் அவனுக்குத் திறந்து கொள்கிறது.
(பேசலாம்...)
ஓவியங்கள்: மனோகர்
|