மனிதனின் எமன் வாகனப்புகைதான்!
ஒலிக்கும் அபாய மணி
-ஞானதேசிகன்
காலம் போகிற போக்கைப் பார்த்தால், ‘கஜினி’ சூர்யா மாதிரி உடலெல்லாம் பச்சை குத்திக்கொண்டு அலைய வேண்டி வரும் போலிருக்கிறது. ஆமாம்... ‘போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் வாழ்கிறவர்களுக்கு மறதிநோய் வரும் அபாயம் அதிகம்’ என்று அலாரம் அடித்திருக்கிறது நவீன ஆராய்ச்சி ஒன்று.
 கனடாவில் இருக்கும் Public Health Ontario மற்றும் Clinical Evaluative Sciences இணைந்து இந்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ‘நோபல் பரிசு கட்டுரைகளைப் பிரசுரிக்கும் ‘Lancet’ இதழில் ஆய்வு வெளியாகி இருப்பதால், உடனடியாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்னை இது’ என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
அப்படி என்னதான் சொல்கிறது ஆராய்ச்சி? ‘மறதி நோயால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 43 ஆயிரத்து 611 பேரை ஆராய்ந்தோம். அப்போது பார்க்கின்ஸன், மல்டிபிள் சிரோசிஸ் போன்ற நரம்பியல் பாதிப்புகள் இவர்களுக்கு வருவதற்கான சாத்தியங்கள் இருப்பதை அறிந்தோம். இவற்றுக்குக் காரணம், வாகனப்புகைதான்...’ என்கிறார் ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான டாக்டர் ஹாங் சேன்.
இதய நோய்கள், நீரிழிவு உள்ளிட்டவை உருவாவதற்கான அபாயமாகவும் வாகனப்புகை இருக்கிறது என்பது இன்னொரு கவலை தரும் செய்தி. 65 லட்சம் பொதுமக்களைத் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் கண்காணித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20 வயதிலிருந்து 85 வயதுள்ளவர்கள் வரை ஆராய்ச்சிக்காகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீனிவாசனிடம் இந்த எச்சரிக்கை பற்றிக் கேட்டோம்.
‘‘மறதி நோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில், இந்த ஆய்வு சரியான நேரத்தில் வெளிவந்திருக்கும் எச்சரிக்கை என்று நினைக்கிறேன். மூளையின் முக்கிய செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் நிலைதான் டிமென்ஷியா (Dementia) என்கிற மறதி நோய். பேசுவதில் தடுமாற்றம், வார்த்தைகளைப் புரிந்து கொள்வதில் குறைபாடு, பதற்றமாக உணர்வது, உறக்கமின்மை, பசியின்மை போன்ற பல அறிகுறிகள் டிமென்ஷியாவுக்கு இருக்கின்றன.
‘கஜினி’ படத்தில் சூர்யாவுக்கு வரும் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ், ‘ஓகே கண்மணி’யில் பிரகாஷ்ராஜின் மனைவிக்கு வரும் அல்ஸைமர் போன்றவை எல்லாம் இந்த டிமென்ஷியாவின் வேறு வேறு வகைகள்தான். இதற்கு முன்பு வாகனப்புகை காரணமாக ஆஸ்துமா, மாரடைப்பு போன்ற அபாயங்கள் வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
வாகனப் போக்குவரத்து மிக்க சாலையிலிருந்து 50 மீட்டர் தொலைவில் வசிப்பவர்கள், 100 மீட்டர் தொலைவில் வசிப்பவர்கள், 200 மீட்டர் தொலைவில் வசிப்பவர்கள், 300 மீட்டர் தொலைவில் வசிப்பவர்கள் என்று பல நிலைகளைக் கண்காணித்திருக்கிறார்கள். அதன் பிறகே, ‘போக்குவரத்து நெரிசல்மிக்க சாலையிலிருந்து 300 மீட்டர் தொலைவில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு இல்லை’ என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
எனவே, வாடகைக்குக் குடியிருப்பவர்களாக இருந்தாலும் சரி... புதிதாக வீடு கட்டுகிறவர்களாக இருந்தாலும் சரி... இந்த 300 மீட்டர் தொலைவைப் பின்பற்றுவது நல்லது. காற்று மாசுகளும், இரைச்சலும் நரம்புகள் வழியாக மூளை உள்ளிட்ட பல உறுப்புகளைப் பாதிப்பதுதான் இதன் அடிப்படைக் காரணம். நாம் சுவாசிக்கும் வாகனப்புகையில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற ரசாயனங்கள் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனைக் குறைத்துவிடுகின்றன.
இதன் பின்விளைவாக மூளையில் இருக்கும் Memory cells என்கிற நினைவுத்திறன் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேதப்படுகின்றன. அதன் எதிரொலியாகவேடிமென்ஷியா வந்து சேர்கிறது...’’ என்கிற மருத்துவர் ஸ்ரீனிவாசன், டிமென்ஷியாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகளையும் கூறுகிறார். ‘‘இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் முகம் முழுவதையும் மூடிக்கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். வாகனப்புகையில் இருந்து ஓரளவு பாதுகாத்துக் கொள்ள இதைத் தவிர வேறு எளிய வழி எதுவும் இல்லை.
புற்றுநோய், மாரடைப்பு போன்ற தீவிரமான உடல்பாதிப்பு கொண்டவர்களை, ‘மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுங்கள்’ என்றே மருத்துவர்களாகிய நாங்கள் எச்சரிக்கிறோம். அடுத்த வழி மரங்கள்! வாகனப்புகையில் இருக்கும் அசுத்த காற்றை உள்வாங்கி, நாம் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனை வழங்குபவை மரங்கள். எனவே, மரங்கள் வளர்ப்பது நீண்ட காலப் பலன் தரும்.
உடனடியாகப் பலன் கிடைக்க, வீடுகளில் சின்னச்சின்ன செடிகளை வளர்க்கலாம். முந்தைய காலத்தில் துளசி செடிகளை வீட்டில் வளர்த்ததன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் இதுதான். அதிகாலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யும்போது வளிமண்டலத்தில் அதிகம் இருக்கும் ஆக்சிஜனை சுவாசிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும். அதன்மூலமும் வாகனப்புகை தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.
டீசல் வாகனங்கள் அதிகம் புகையை உருவாக்குபவை என்பதால்தான் தில்லியில் தடை செய்திருக்கிறார்கள். டீசலைவிட பெட்ரோல் வாகனங்களில் ஆபத்து குறைவு. பேட்டரி கார்களில் புகை அபாயம் இல்லை. எனவே, டீசல் வாகனங்களைக் குறைத்து, பேட்டரி வாகனங்களை நோக்கிய வளர்ச்சிக்குச் செல்வது பற்றியும் நாம் இப்போது யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்...’’ என்கிறார் மருத்துவர் ஸ்ரீனிவாசன்.
மக்களே பீ அலர்ட்! செய்ய வேண்டியவை...
வாகனப் புகை விஷயத்தில் பொதுமக்களுக்குச் சில கடமைகளும், அரசாங்கத்துக்கு நிறைய கடமைகளும் இருக்கின்றன. நகரமயமாக கிராமங்களும் மாறி வரும் சூழலில் நகரத்தைக் கட்டமைப்பது குறித்த நம் பார்வையை மாற்றுவது அவசியம். எல்லோரும் ஒரே இடத்தில் வந்து குவிய வேண்டிய தேவையை நகரம் உருவாக்குகிறது. இந்த விஷயத்தை மாற்ற வேண்டும். உதாரணத்துக்கு, வேலை வாய்ப்புக்காக நகரங்கள் நோக்கி எல்லோரும் வந்து குவிவதைத் தவிர்க்க மாற்று வேலை வாய்ப்புகளை புறநகரங்களிலும், கிராமப்புறங்களிலும் உருவாக்க வேண்டும். விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்.
எத்தனை மரங்கள் வளர்க்கிறோமோ அத்தனையும் நமக்கு நல்லது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். புகை, இரைச்சல் போன்ற வாகனப் பயன்பாட்டைத் தடுப்பதில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். முடிந்தவரை வாகனப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். ‘100 ஆண்டுகளில் இல்லாத மழை’ என்று மிரளும் அளவு பேய் மழை நம்மைப் புரட்டிப் போடுவதற்கும், வர்தா புயல் வாரிச் சுருட்டுவதற்கும், பருவ மழை பொய்ப்பதற்கும், குளிர்காலங்களிலேயே அனல் கொளுத்துவதற்கும் பின்னால் இந்தத் தவறுகள் எல்லாம் மறைந்திருக்கின்றன.
|