ஊஞ்சல் தேநீர்
யுகபாரதி - 9
‘நாயகன்’, ‘தளபதி’ ஆகிய திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற மணிரத்னம், ‘பம்பாய்’ திரைப்படத்தை அடுத்து இயக்கிய திரைப்படம் ‘இருவர்.’ திராவிட அரசியலை முன்வைத்து எடுப்பதாகச் சொல்லப்பட்ட ‘இருவர்’ திரைப்படம் எப்படி இருக்குமோ? என்னும் ஆவலை எல்லோருமே கொண்டிருந்தார்கள். பேசிப் பேசியே வளர்ந்த திராவிட இயக்கத்தை ஒரு வரிக்குமேல் வசனங்களை அனுமதிக்காத மணிரத்னம் எடுக்கிறார் என்றால் சாதாரண விஷயமா என்ன?
 ‘இருவர்’ திரைப்படத்தைப் பொறுத்தவரை அது ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே விசேஷ கவனிப்புக்கு உள்ளானது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக பொது வெளியிலும் அரசியல் களத்திலும் தவிர்க்க முடியாத சக்திகளாக வளர்ந்திருந்த இருவரைப் பற்றிய படம் என்பதால், அனைத்துத் தரப்பு மக்களும் அத்திரைப்படத்தை கூர்ந்து கவனித்து அதன் வருகைக்காக காத்துக்கிடந்தார்கள். படம் வெளிவந்த அன்று அதை உடனே பார்த்துவிட கூடிய கூட்டம், அதற்குமுன் வெளிவந்த அவருடைய எந்தப் படங்களுக்கும் நிகழாத ஆச்சர்யம்.
இரண்டு பெரும் ஆளுமைகளை சித்திரிக்கும் படம் என்பதால் அரசியல் நோக்கர்களும் திரை விமர்சகர்களும்கூட இருவரை மற்ற படங்களைப்போல எளிதாகக் கடந்துவிட எண்ணவில்லை. ‘இருவர்’ என்று தலைப்பிடப்பட்டிருப்பதால் அது பெரியார், அண்ணா என்ற இருவரா? இல்லை கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்ற இருவரா? என்னும் சந்தேகமிருந்தது. ஒருவழியாக படமும் வெளிவந்து பலராலும் பார்க்கப்பட்டது. ஆனால், அதீதமாக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களுக்கு என்ன கதி நேருமோ அதுதான் ‘இருவர்’ திரைப்படத்திற்கும் நேர்ந்தது.
இரண்டு பெரும் ஆளுமைகளில் யாரைப் பிரதானப்படுத்துவது என்னும் சிக்கலில் இரண்டு பேரையுமே மணிரத்னத்தால் சரியாக வடிவமைக்க முடியவில்லை. அதைவிட, அத்திரைப்படம் திராவிட அரசியலைத் துளிகூட சொல்லவில்லை. இரண்டு ஆளுமைகளின் போட்டிகளையும் பொறாமைகளையும் திராவிட அரசியலாக அவர் புரிந்துகொண்டவிதம் சர்ச்சையை மட்டுமே கிளப்பியது. நானறிய ஒரு திரைப்பட இயக்குநர், அதற்கு முன்பும் சரி அதற்குப் பின்பும் சரி அது மாதிரியான கண்டனங்களை எதிர்கொள்ளவில்லை எனலாம்.
திராவிட இயக்க வரலாறு யாருடைய கண்களால் பார்க்கப்பட வேண்டும் என்பதிலும் யாருடைய உதடுகளால் சொல்லப்பட வேண்டுமென்பதிலும் மணிரத்னம் தோல்வியைத் தழுவினார். நான் தோல்வி என்று சொல்வது வணிகரீதியிலான தோல்வியை அல்ல. ‘இருவர்’ திரைப்படத்தை விமர்சித்து பத்திரிகைகள் பலவும் பத்திகளை வெளியிட்டன. திராவிட சிந்தனையில் ஊறித் திளைத்த கழகத் தோழர்கள் அத்திரைப்படத்தை முற்று முழுதாக நிராகரித்தனர்.
இன்னும் சிலர் ஒருபடி மேலேபோய் மணிரத்னத்தின் சிந்தனைகள் முழுக்கவும் திராவிட சமூகத்திற்கு எதிரானவை என வாதிட்டார்கள். மணிரத்னத்திற்கு எதற்கிந்த வேலை என்றும், அரசியல் போதாமையோடு திராவிட அரசியலைப் பார்த்திருக்கிறார் என்றும் கூக்குரலிட்டார்கள். அதற்குமுன் அவர் வாங்கிக் குவித்திருந்த பாராட்டுகள் மறுபரிசீலனைக்கு உள்ளாகின. அச்சமயத்தில் நான், ‘ராஜரிஷி’ என்னும் அரசியல் வார ஏட்டில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
எல்லா மட்டத்திலும் ‘இருவர்’ திரைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பை ஒட்டி, ‘ராஜரிஷி’ பத்திரிகையிலும் ‘இருவர்’ குறித்து எழுதவேண்டும் என ஆசிரியர் துரை விரும்பினார். பத்திரிகையையோ சினிமாவையோ சாராத ஒருவர் அத்திரைப்படம் குறித்து எழுதினால் சிறப்பாக இருக்கும் என அவர் எண்ணியதற்கு ஏற்ப, மக்கள் கவிஞராக அறியப்பட்ட ‘இன்குலாப்பிடம் கட்டுரை கேளுங்களேன்’ என்றார். திராவிட அரசியல் மீது மாற்றுக் கருத்து உள்ளவர்கள் எப்படி அத்திரைப்படத்தை அணுகுகிறார்கள் என்பதை அறியும் திட்டமாகவும் அது இருந்தது.
நக்சல்பாரி இயக்க செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த இன்குலாப், அதற்கு முன் ‘தராசு’ இதழிலும் ‘உங்கள் விசிட்டர்’ இதழிலும் திரைப்படங்கள் குறித்து எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. இன்குலாப்பை சந்தித்து கட்டுரை வாங்கிவர வேண்டிய பொறுப்பு எனக்களிக்கப்பட்டது. இன்குலாப்பின் கவிதைகள் மீதும் இன்குலாப் என்ற கவிஞர் மீதும் நான் கொண்டிருந்த அளவில்லாத அன்பின் பரிசாகவே அவ்வாய்ப்பைப் பெற்றதாகக் கருதுகிறேன். அப்போது இன்குலாப் புதுக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இன்குலாப் என்ற கவிஞர், எந்த நேரத்திலும் கொண்ட கொள்கையிலிருந்து வழுவாதவர். சொல்லுக்கும் செயலுக்கும் முனையளவு கூட வித்தியாசமில்லாதவர். எளிய மக்களின் துயரங்களை எழுத்துக்கள் வாயிலாகவும் களப் போராட்டங்கள் வாயிலாகவும் எதிர்க்க வேண்டுமென்னும் எண்ணமுடையவர். அரசுக்கும் அதிகார மையத்திற்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். எத்தனையோ நள்ளிரவுக் கைதுகளால் அவரும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் ஆளும் வர்க்கத்தால் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
பாரதிக்குப் பிறகு கவிதையின் தீவிரத்தை சமூக வெளிக்குக் கடத்தியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அதுவரை அவரை நான் நேரில் சந்தித்ததில்லை. ஆனால், அவரைப் பற்றி என்னுடைய பள்ளிப் பருவத்திலிருந்து தொடர்ச்சியாகக் கேட்டு வந்திருக்கிறேன். அவருடைய ‘வெள்ளை இருட்டு’ம், ‘சூரியனைச் சுமப்பவர்களு’ம் அவரை மகாகவி என்றே சொல்ல வைத்தன. தமிழர்கள் தங்கள் பெருமைக்குரிய அரசனாக சொல்லிக் கொள்ளும் ராஜராஜ சோழனை அவர்போல தோலுரித்துக் காட்டியவர்கள் எவருமில்லை.
சோழ ஆட்சியில் மக்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதையும் அதைக் கொண்டாடத் துடிக்கும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எத்தகையது என்பதையும் எந்த தாட்சண்யமும் இல்லாமல் அவர் எழுதியிருக்கிறார். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூரில் ராஜராஜசோழனுக்கு சிலை நிறுவும் பணி தொடங்கப்பட்ட சூழலில் தோழர் அ.மார்க்ஸ் போன்றோர் கவிஞர் இன்குலாப்பின் ‘ராஜராஜேஸ்வரியம்’ கவிதையை துண்டுப் பிரசுரமாக வெளியிட்டார்கள். சோழ ஆட்சியின் கேடுகளையும் எளிய மக்கள் அவ்வாட்சியில் எவ்வாறெல்லாம் துன்பப்பட்டார்கள் என்பதையும் மேடைதோறும் விளக்கினார்கள்.
அரைக்கால் டவுசரணிந்த பள்ளி மாணவனாக இருந்த நான், அவர்கள் கருத்துக்களை உள்வாங்கும் தி ராணியைப் பெற்றிருக்கவில்லை. ஏதோ சொல்கிறார்கள், எதற்கோ எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றுமட்டுமே புரிந்துகொண்டேன். ஆனால், அதற்குச் சான்றாக அவர்கள் வெளியிட்ட கவிதையை எழுதியவர் இன்குலாப் என்பதையும் அவர் வீரம்மிக்க கவிதைக்காரர் என்பதையும் விளங்கிக்கொள்ள முடிந்தது. சிறு பொறியாக என்னுள் விழுந்த இன்குலாப் என்னும் பெயர் அதன்பின் தீப்பந்தமாக கொழுந்துவிட்டெரிந்தது.
சமகாலத்தில் ஆவேச நெருப்புடைய கவிஞராக அவரை நான் உணர்ந்திருந்தேன். சமரசங்களுக்கோ சகாயங்களுக்கோ ஆட்படாத இன்குலாப்பும் அவருடைய கவிதைகளும் என்னைப் பற்றிக்கொண்டது அப்படித்தான். அதே காலகட்டத்தில்தான் அவருடைய கவிதை நூல் ஒன்று, சட்டமன்றத்தில் சர்ச்சையைக் கிளப்பி பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்க அவையில், மக்கள் கவிஞராக அறியப்படும் ஒருவருடைய கவிதை நூலை பாடத் திட்டத்திலிருந்து நீக்கிய காரியம் விநோதமாயிருந்தது.
எல்லா நினைவுகளையும் உட்செறித்துக்கொண்டு 1998ம் ஆண்டு ஒரு மதிய வேளையில், புதுக்கல்லூரிக்குப் போயிருந்தேன், இன்குலாப்பை சந்தித்து, ‘இருவர்’ திரைப்படம் குறித்து எழுதச் சொல்வதற்காக. அதுவரை அரசுக்கு சவால்விடக் கூடிய ஒரு கவிஞர் எப்படி இருப்பாரென்று நான் கற்பனை செய்துவைத்திருந்தேனோ அதற்கு நேர் மாறாக அவர் இருந்தார். மிக முக்கியமாக, ஆவேச நெருப்புடைய இன்குலாப், குழந்தை போலச் சிரித்து என்னை வரவேற்றார்.
புஜபலமிக்கவராக நான் கருதியிருந்ததற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் பூஞ்சையான தேகத்தோடு அவர் இருந்தார். வார்த்தைக்கு வார்த்தை அன்பும் கனிவும் வெளிப்பட்டன. மதிய வேளை என்பதால் ‘‘உணவு அருந்தினார்களா?’’ என்றுதான் உரையாடலை ஆரம்பித்தார். வந்த விஷயத்தைச் சொல்வதற்கு முன்பாக அவரைப்பற்றி புகழத் தொடங்கியதும் தீட்சண்யம் மிக்க கண்களால் அதை விரும்பாத தொனியை வெளிப்படுத்தினார். ‘சிறுவயது முதலே உங்களை பார்க்கவேண்டும் என்றிருந்தேன். இப்போதுதான் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது’ என்றதும் மெல்லிய புன்முறுவலால் குழைவாகப் பேசத் தொடங்கினார்.
இவருக்கெல்லாம் கோபமே வராது என்பது போல்தான் அவர் குரலிருந்தது. மெதுவாக நான் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டபின், நானும் ‘இருவர்’ படம் குறித்து கேள்விப்பட்டேன். ஆனாலும், இன்னும் அப்படத்தைப் பார்க்கவில்லை. பார்த்ததற்குப் பின்புதான் கருத்து சொல்ல முடியும் என்றார். இந்த வாரம் முழுக்க வெளியூர் பயணமிருக்கிறது. எனவே, ‘இருவர்’ திரைப்படம் குறித்து தற்போது எழுதும் வாய்ப்பில்லையே. தர்மபுரியை அடுத்த சிற்றூரில் கூட்டமிருப்பதால் உடனடியாக படத்தைப் பார்த்து, கட்டுரை எழுதித்தர இயலாதே என்று வருத்தப்பட்டார்.
இல்லை, நீங்கள் எழுதியே ஆகவேண்டும் என அடம்பிடித்ததற்கு, ‘கட்டுரையைவிட களப்பணி முக்கியமில்லையா?’ என்றார். சுளீரென்றிருந்தது. கவிஞனுடைய சமூகச் செயல்பாடு எழுத்து மட்டுமல்லை. அதைத்தாண்டியும் அவன் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன என்பதை இதைவிட எப்படிச் சொல்ல முடியும்? அதன்பின் பல சந்தர்ப்பங்களில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தன்னை பிரதானப்படுத்துவதைவிட தன்னுடைய படைப்புகள் பிரதானப்பட வேண்டுமென அவர் விரும்பினார். தனக்குக் கிடைத்திருக்கும் பெயரையோ புகழையோ அவர் எந்த நேரத்திலும் சொந்தங் கொண்டாட விரும்பியதில்லை. ‘சாட்சி சொல்ல ஒரு மரம்’ என்ற நூலில் ஆய்வியல் அறிஞர் எஸ்.வி.ராஜதுரை சொல்வதைப்போல நெஞ்சுரம் மிக்க இன்குலாப்பின் புன்னகை வெறும் புன்னகையல்ல, அவருக்குப் பின்னே எழுத வந்த அத்தனைபேருக்குமான மோகனப்புன்னகை.
விசாரணை என்னும் பேரில் தன்னை கைதுசெய்து, காவல்துறை படுத்தியபாட்டை அக்கட்டுரையில் விவரித்திருக்கும் எஸ்.வி.ஆர்., இதே மாதிரியான அடக்குமுறைக்கும் நெருக்கடிக்கும் ஆளான இன்குலாப்பின் கண்களிலிருந்தும் புன்னகையிலிருந்தும் சக்தியைப் பெற்றேன், என்கிறார். ஒருமுறை அவரைச் சந்திக்க வீட்டுக்குப் போயிருந்தபோது, இன்குலாப் சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தார் என பேராசிரியர் சரஸ்வதி சொல்லுவார். மனைவிக்கு உதவியாக மாவு பிசைந்து தரக்கூடிய ஒருவர்தான் மகாகவியாகவும் இருக்க முடிந்திருக்கிறது.
மனைவி இரவலாக வாங்கி வந்த அரிசியை காக்கைக்கு வாரி இறைத்த பாரதி மகாகவி என்றால் மனைவிக்கு உதவி புரிய யோசிக்காத இன்குலாப்பும் மகாகவிதான். சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியில்லாமல் அவர் இயங்க முடிந்ததால்தான் கீழக்கரை சாகுல் ஹமீது மக்கள் கவிஞராக போற்றப்படுகிறார். இடதுசாரி தமிழ்த் தேசியம் என்பதில் இறுதிவரை இன்குலாப் கவனமாயிருந்தார்.
இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தில் மாணவராக இருந்த இன்குலாப், அதில் ஈடுபட்டு சிறைவாழ்வை மேற்கொண்டிருந்தாலும் கால ஓட்டத்தில் தன்னை ஒரு மார்க்சிய கவியாகவே அறிவித்துக்கொண்டார். ஈழப் போராட்டம் உச்சம்பெற்றிருந்த வேளையில், தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை ஏற்க மனமில்லையென்று திருப்பி அனுப்பினார். விருது பெறுவதற்காகவே ஆட்சியையும் ஆட்சியாளர்களையும் புகழக்கூடிய எழுத்தாளர்கள் மிகுந்துவிட்ட இதே சமூகத்தில்தான் விருதைத் திருப்பி அனுப்பும் இன்குலாப்பும் வாழ்ந்தார்.
(பேசலாம்...)
ஓவியங்கள்: மனோகர்
|